விவாகரத்துக்குப் பிறகான வாழ்க்கையை யோசிச்சுப் பார்த்தீங்களா?

சென்னையில் இருக்கிறது வழக்கறிஞர் ஆதிலட்சுமியின் அலுவலகம். அவரது இருக்கையின் எதிரே ஒரு சோபா. விவாகரத்து வழக்குக்காக வருகிற தம்பதி பெரும்பாலும் இடது ஓரம் ஒருவரும், வலது ஓரம் இன்னொருவருமாக எதிரிகளைப் போல அமர்கிறார்கள். கோபமும் சீற்றமும் குற்றச்சாட்டுமாக ஆரம்பிக்கிறது அவர்களது பேச்சு. எப்படியாவது அறுத்து விட்டால் போதுமென்கிற அத்தனை வெறுப்பும் சற்று நேரத்தில் நிதானத்துக்கு வருகிறது. அவர்கள் கொட்டித் தீர்த்ததும், இருவரிடமும் சேர்ந்தும், தனித்தனியேவும் பேசுகிறார் வழக்கறிஞர் ஆதிலட்சுமி. ஒரே நாளில் அல்லது அடுத்தடுத்த நச்திப்புகளில், எலியும் பூனையுமாக இருந்த அந்த தம்பதி சோபாவில் நெருங்கி, ஒட்டி, உரசியபடி உட்கார்கிறார்கள், விவாகரத்து வேண்டாம் என்கிற மன மாற்றத்தோடு!

DSC_0010

இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல… நூற்றுக்கணக்கான தம்பதியருக்கு கவுன்சலிங் செய்து, மணமுறிவு என்கிற முடிவை மாற்றி, மீண்டும் இணையச் செய்து உறவைச் சேர்த்து வைத்துப் புண்ணியம் கட்டிக் கொண்டிருக்கிறார் ஆதிலட்சுமி. இதற்காக மேனேஜ்மென்ட் லேபர் அகடமியின் ஒரு அங்கமாக ‘ஸ்ரீரக்ஷா ஆலோசனை மற்றும் மத்தியஸ்த மைய’த்தையும் தொடங்கியிருக்கிறார். உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மோகன் இந்த அமைப்பின் கவுரவ் ஆலோசகர். விவாகரத்து என அணுகும் தம்பதிகளிடம், இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு, வழக்கைப் பதிவு செய்து, முடிந்த வரை இழுத்து காசு பார்க்கும் வழக்கறிஞர்களுக்கு மத்தியில் வித்தியாசமானவர் ஆதிலட்சுமி.

“சட்டம் முடிச்சதும், ’குடும்ப நல வழக்குகளை, குறிப்பாக விவாகரத்து வழக்குகளை எடுக்கவே மாட்டேன்’னு வைராக்கியமா இருந்தேன். உறவுகளைப் பிரிக்கிறது எனக்கு மிகப்பெரிய பாவமா பட்டது. என் கணவர் ஒரு டாக்டர். ஆபரேஷன்ல கால் வெட்டப்பட்டு படுக்கைல கிடந்த ஒரு பேஷன்ட்கிட்ட என்னைக் கூட்டிட்டுப் போனார். கால் போயிட்ட நிலையும் அந்த நபர் முகத்துல சந்தோஷம், விசாரிச்சப்ப, ‘கால் போனாலும், என் மகள் கல்யாணத்தைப் பார்க்க உயிர் இருக்கே’ன்னார். விவாகரத்து மூலமாதான் ஒருத்தர் வாழ்க்கைல நல்லது நடக்கும்னா, அதை வாங்கிக் கொடுக்கிறதுல தப்பே இல்லைன்னு எனக்குப் புரிய வச்சார் என் கணவர்.அப்புறம்தான் அந்த வழக்குகளை எடுக்க ஆரம்பிச்சேன், அப்பவும் எனக்குள்ள ஒரு கொள்கையை வச்சுக்கிட்டேன். அடிப்படைல நான் ஒரு கவுன்சலரும் (மனநல ஆலோசகர்) கூட. அதனால முடிஞ்சளவு தம்பதிகிட்ட தனித்தனியாவும், சேர்த்து வச்சும் பேசி, கவுன்சலிங் கொடுப்பேன். தேவைப்பட்டா அவங்க பெற்றோர், நண்பர்கள், குழந்தைகளையும் வரவழைச்சு கவுன்சலிங் தருவேன்” என்கிறவர், தான் சந்தித்த வழக்குகளில் ஒன்றை மட்டும் உதாரணம் காட்டுகிறார்.

“எவ்வளவோ கவுன்சலிங் கொடுத்தும் விவாகரத்துங்கிற முடிவை மாத்திக்க விரும்பலை அந்த தம்பதி. பிரிஞ்சிட்டாங்க. குழந்தை இருந்ததால, குறிப்பிட்ட நாட்களுக்கொரு முறை குழந்தை அம்மாகிட்டயும், அப்பாக்கிட்டயும் மாறி, மாறி இருக்கிறதா பேச்சு. ஒரு முறை அந்த அம்மாவுக்கு உடமம்பு சரியில்லாததால பார்த்துக்க முடியலை, இந்த ஒரு முறை நீங்க பார்த்துக்கறீங்களானு முன்னாள் கணவர்கிட்ட கேட்டிருக்காங்க. குழந்தையைக் கூப்பிடற சாக்குல வீட்டுக்கு வந்தவர், மனைவிக்கு உடம்பு சரியில்லைன்னதும் கொஞ்சம் உடைஞ்சு போயிருக்கார். அந்த சந்திப்பு, அப்படியே வளர, மறுபடி அவங்களுக்குள்ள நெருக்கம் உண்டாகி, என்கிட்ட வந்து நின்னாங்க. உறவுகளோட முக்கியத்துவத்தைப் புரிய வச்சு, குழந்தையோட எதிர்காலத்தை எடுத்துச் சொல்லி, மறுபடி அவங்களுக்குக் கல்யாணம் பண்ணி வச்சேன். இப்படி எத்தனையோ கேஸ்…” என்கிற ஆதிலட்சுமி விவாகரத்துக்குப் பிறகான கவுன்சலிங்கும் செய்கிறார்.
“விவாகரத்து வேணும்னு வந்தாலே, முதல்ல அவங்களுக்கு நான் சொல்ற அட்வைஸ், ’விவாகரத்துக்குப் பிறகான வாழ்க்கையை யோசிச்சுப் பார்த்தீங்களா’ங்கிற கேள்விதான். குழந்தையைப் பத்தி, சமூகத்தோட பார்வையைப் பத்தி இன்னும் எல்லாத்தையும் யோசிச்சிட்டு வாங்கனு சொல்லியனுப்புவேன்.’ விவாகரத்துங்கிறது பிரச்னைகளுக்கான முடிவில்லை, புதுப்பிரச்னைகளுக்கான தொடக்கம்’னு சொல்வேன். சில வழக்குகள்ல விவாகரத்து வாங்கிக் கொடுத்தாதான் சம்பந்தப்பட்ட ரெண்டு பேருக்குமே நிம்மதினு தெரிஞ்சா, அதுக்கான ஏற்பாடுகளைச் செய்வேன்.
ஒரு விவாகரத்து கேஸை எடுத்துக்கிட்டா லட்சக்கணக்குல காசு பார்க்க முடியும். பணம் முக்கியம்னு நினைச்சா, நான் தினம் பத்து பேரைப் பிரிச்சு வச்சு சம்பாதிக்கலாம். வாழ்க்கைல உறவுகள் ரொம்ப முக்கியம். கல்யாணங்கிற அமைப்போட கண்ணியத்தைக் காப்பாத்தணுங்கிறதுதான் ஸ்ரீரக்ஷாவோட நோக்கம்” என்கிற ஆதிலட்சுமி, சுயஉதவிக் குழுக்கள், பெண்கள் அதிகம் பணிபுரிகிற தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் வருடத்துக்கு 4 முறை இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்துகிறார்.

(தொடர்புக்கு: 98410 14926)
– ஆர்.வைதேகி

Advertisements

One thought on “விவாகரத்துக்குப் பிறகான வாழ்க்கையை யோசிச்சுப் பார்த்தீங்களா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s