உலக சுற்றுச்சூழல் தினம் – ஜுன் 5
Think Eat Save!
‘சாதத்தை எறியாத கண்ணு!’ இலையில் மீதம் வைத்துவிட்டால் கிராமத்தில் பெரியவர்கள் முணுமுணுக்கும் வார்த்தைகள். வீட்டில் மட்டுமல்ல… திருமணப் பந்தியிலும், பெரிய விருந்துகளிலும், நட்சத்திர ஓட்டல்களிலும், உணவு விடுதிகளிலும் அண்டா கணக்கில் வீணாகும்போது அதற்காக வருத்தப்படுகிறவர்களும் உண்டு. குழந்தைக்கு அம்மா சாப்பாடு ஊட்டும் போது ‘பூச்சாண்டி வந்துடுவான்… உம்மாச்சி கண்ணைக் குத்திடும்’ என்றெல்லாம் பயமுறுத்துவதும்கூட குழந்தை சாப்பிட வேண்டும் என்கிற நேசத்தையும் தாண்டி உணவு வீணாகிவிடக்கூடாது என்கிற அக்கறையால்தான். அம்மா மட்டுமல்ல, அன்னை பூமியை நேசிக்கிற யாரும் உணவை வீணாக்க மாட்டார்கள்.
அந்தக் காலத்தில் மீதமாகும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைப்பார்கள். குழம்பை சூடாக்கி வைப்பார்கள். அந்தப் பழைய சாதமும் குழம்பும் அடுத்த நாள் காலை டிபனாகிவிடும். உணவின் அருமையை உணர்ந்தவர்கள் செய்த காரியம் அது!
நம் அன்றாட உணவை உற்பத்தி செய்ய ஆகும் நேரம், சக்தி, வள ஆதாரம் – இவற்றைப் பற்றி யோசிப்பதற்கு பலருக்கு கொஞ்சம் கூட அவகாசம் இருப்பதில்லை. அந்த சிந்தனையே இல்லாமல் மிகப்பெரிய அளவில் உணவை வீணடித்துக் கொண்டிருக்கிறோம். உலக அளவில் உற்பத்தி செய்யப்படும் உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணடிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட வருடத்துக்கு 13 லட்சம் டன்கள். இதைத் தடுக்கவும் ஒவ்வொருவரிடமும் உணவின் அருமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடிவு செய்திருக்கிறது ‘ஐக்கிய நாடுகள் சபை சுற்றுச்சூழல் திட்டம்’ (United Nations Environment Programme – UNEP). அதற்காக இன்றைய சுற்றுச்சூழல் தினத்தை ‘சிந்திப்பீர்! உண்பீர்! பாதுகாப்பீர்!’ (Think Eat Save) என்ற அறைகூவலுடன் கொண்டாடுகிறது.
உணவு எப்படி வீணடிக்கப்படுகிறது? அதை எவ்வாறெல்லாம் தடுப்பது?
பதில் சொல்கிறார் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் ஜி.சிவராமன்…
‘‘இந்த சுற்றுப்புறச்சூழல் தினத்தை நாம் ஏன் ‘சிந்திப்பீர்! உண்பீர்! பாதுகாப்பீர்!’ என்ற அறைகூவலுடன் கொண்டாடுகிறோம்? உணவு தயாரிப்பிலும் அதை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்வதிலும், அதைப் பாதுகாப்பதிலும் சுற்றுச்சூழலுக்கு முக்கிய பங்கு உண்டு. அதன் காரணமாக சுற்றுச்சுழல் பாதிப்படையவும் செய்கிறது. உண்மையில் உலக அளவில் உணவு உற்பத்தி போதுமானதாக இருக்கிறது. பற்றாக்குறை என்பதே கிடையாது.
‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை’ என்று திருவள்ளுவர் கூறியது போல இருப்பதை எல்லோரும் பகிர்ந்து உண்டு வாழாததே பற்றாக்குறைக்குக் காரணம். ஓரிடத்தில் கன்னாபின்னாவென உணவு அதிகமாக இருப்பதற்கும் மற்றொரு இடத்தில் உணவுப் பற்றாக்குறை நிலவுவதும் இதனால்தான். ஆப்பிரிக்காவில் ஓர் ஆண்டுக்கு உணவு உற்பத்தி 22 கோடி டன். ஐரோப்பாவில் சாப்பாட்டு மேசையில் வீணடிக்கப்படும் உணவு வருடத்துக்கு 222 கோடி டன். வளர்ந்த நாடுகள் பலவற்றில் உணவு வீணடிக்கப்படுவதும், பல ஏழை நாடுகளில் பலர் பட்டினி கிடப்பதும் இப்படித்தான் நிகழ்கிறது. மிகச்சாதாரணமான உதாரணம் என்றால் ஒரு கல்யாண வீட்டில் ஒரு சாப்பாட்டின் விலை 500 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், விருந்தினர் சாப்பிடுவது 100 ரூபாய் பெறுமானமுள்ள உணவைத்தான். ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பில் உணவு வீணாக்கப்படுகிறது. இதைத் தடுக்க வேண்டியது நம் முக்கியமான கடமை.
உள்ளூரில் கிடைக்கும் உணவுப் பொருள்களை பயன்படுத்த வேண்டும். அதை ஊக்கப்படுத்த வேண்டும். அது நம் உள்ளூர் விவசாயிகளுக்கு ஆதரவு தருவதாக இருக்கும். நியூசிலாந்தில் இருந்து வரும் ஓர் ஆப்பிளையோ, அமெரிக்காவில் இருந்து வரும் ஆரஞ்சையோ வாங்கி சாப்பிடலாம்தான். ஆனால், அது அவசியமா? அந்த நாட்டில் இருந்து இங்கே நுகர்வோரிடம் வந்து சேருவதற்கு போக்குவரத்து, பாதுகாப்பு வசதி என்று ஏகப்பட்ட வேலைகளை, முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. உணவைப் பதப்படுத்திப் பாதுகாக்க குளிர்சாதன வசதி தேவைப்படும். போக்குவரத்தில் எரிபொருள் வீணாகும். இவையெல்லாம் சுற்றுச்சூழலை பாதிப்பவை. அதனால்தான் உள்ளூரில் விளையும் உணவுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்கிறோம்.
வளரும் நாடுகளில் உணவு உற்பத்தியான பிறகு சரியான முறையில் (Post Harvest) பாதுகாக்கப்படுவதில்லை. அதனாலேயே நிறைய உணவு வீணாகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் உணவு தானியங்களில் 20% எலிகளாலும், விநியோகம் செய்யப்படாமல் சேமிப்புக் கிடங்கில் கிடந்தே பாழாகியும் வீணாகிறது. இதைத் தடுத்து உணவை சேமிக்கத் தொடங்கினால் சக்தி சேமிக்கப்படும். ஏற்கனவே நிலக்கரி பற்றாக்குறையில் தவிக்கும் நமக்கு கரி மிச்சமாகும். பிளாஸ்டிக், பாலிதீன் போன்றவற்றைப் பயன்படுத்தும் தேவை குறையும்.
அடுத்து உணவு உற்பத்தியில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது ரசாயனங்கள். விவசாயத்தில் உரம், பூச்சி கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவது பல்லுயிர்களுக்கு (Bio Diversity) கேடானது. இவற்றைப் பயன்படுத்துவதற்கு பதிலாக கம்பு, கேழ்வரகு, சாமை போன்ற சிறுதானியங்களை விளைவிக்கலாம். அதிகம் தண்ணீர் செலவாகாது. உதாரணமாக ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்ய 2,500 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். சிறுதானியங்களுக்கு 5லிருந்து 10 லிட்டர் தண்ணீர்தான் செலவாகும். இதற்கு உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு பக்கம் உணவுப்பொருள் வீணாவது, அதனால் சுற்றுப்புறச்சூழல் கெட்டு, மக்களும் பாதிப்படைவது… இவற்றையெல்லாம் தடுக்க வேண்டும் என்பதுதான் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் நோக்கம். அதனால்தான் ‘சிந்திப்பீர்! உண்பீர்! பாதுகாப்பீர்!’ என்ற அறைகூவலுடன் இந்தத் தினத்தைக் கொண்டாடுகிறோம். நம் முந்தைய தலைமுறை உணவைப் பாதுகாத்து வந்ததால்தான் நமக்கு நல்ல உணவு கிடைக்கிறது. அடுத்த தலைமுறைக்கு உணவைப் பாதுகாத்துத் தர வேண்டிய கடமை நமக்கும் இருக்கிறது அல்லவா?’’ – அழுத்தம் திருத்தமாகப் பேசும் சிவராமனின் வார்த்தைகளில் இருக்கும் உண்மை புரிகிறது.
சென்னை போன்ற நகரங்களில் காலையில் துப்புரவுத் தொழிலாளர் இழுத்து வரும் வண்டியில் பெரிய பெரிய பிளாஸ்டிக் கவர்களில் வீணான உணவு, பழங்கள், காய்கறிகள் கொட்டப்படுவதை இன்றும் பார்க்கலாம். அவர்களில் பலரும் நடுத்தரப் பிரிவைச் சேர்ந்தவர்கள். மிகக்குறைந்த வருவாய் உள்ளவர்கள் பெரும்பாலும் உணவை வீணாக்குவதில்லை.
‘உணவு வீணாவதைத் தடுக்க எளிமையான வழி, அளவாக சமைப்பதுதான்’ என்கிறார் சிவராமன். அரிசியிலிருந்து காய்கறி வரை எகிறிப் பறக்கும் விலைவாசியில் அதுதான் எல்லோருக்கும் சாத்தியமான வழி. அதோடு சுற்றுச்சூழலுக்கும் நாம் செய்கிற உதவி!
– பாலு சத்யா
மீதமாகும் உணவை மறுபடி பயன்படுத்த சமையல்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத் அளிக்கும் ஆலோசனைகள்…
- மீதமிருக்கும் சாம்பாரையோ, ரசத்தையோ சுண்டக் காய்ச்சவும். அதில் சிறிது கோதுமை மாவைச் சேர்த்து மசாலா சப்பாத்தி செய்யலாம்.
- பொங்கலை கூழ் போல ஆக்கி, அதில் கொஞ்சம் அரிசி மாவு, வேக வைத்த காய்கறிகள், புதினா, தேவையான உப்புச் சேர்க்கவும். இந்தக் கலவையில் ரொட்டி அல்லது அடை செய்யலாம்.
- மீந்த பொரியலில் வெங்காயத்தையும் தக்காளியையும் நறுக்கிச் சேர்க்கவும். இந்தக் கலவையை பிரெட் துண்டுகளுக்கு நடுவே வைத்து ‘பொரியல் சாண்ட்விட்ச்’ஆகச் சாப்பிடலாம்.
- சப்பாத்தி மீந்து விட்டால், மிக ஒல்லியான குச்சிகளைப் போல நறுக்கவும். அதை வேக வைத்த காய்கறிகள், சோயா சாஸ், தக்காளி சாஸுடன் சமைத்தால் ‘சப்பாத்தி நூடுல்ஸ்’ தயார்.
- மோர்க்குழம்பு மீந்துவிட்டதா? அதில் தேவையான அளவு அரிசிமாவு கரைத்து ஊற்றவும். கொஞ்சம் உப்பு, சர்க்கரை, சமையல் சோடா சேர்க்கவும். அடுத்த நாள் அதில் ஊத்தப்பம் செய்தால் செம ருசி!