சக்தி ஜோதி கவிதை
போர் முடிந்து பலகாலம் கழிந்த பின்னரே
இங்கு வருகிறேன்.
எதிரி நாட்டினர் புகுவதற்குமுன்
நாமே தூர்ந்து போட்ட
குளமொன்றின் கரையோரம் அமர்ந்திருக்கிறேன்.
நாம் தாகம் தீர பருகிய குளம் அது.
மழைக்குப் பழுதான கோட்டைச் சுவர்கள் கட்டியெழுப்பி
போருக்குத் தயார்படுத்திய நாட்களும்
பயன்படுத்தாமல் துரு ஏறியிருந்த ஆயுதங்களைப்
பயிற்சிக்கு உட்படுத்தியதும்
புதிய ஆயுதங்களைச் செய்து குவித்ததும்
குதிரைகளை யானைகளை போர்வீரர்களை
ரத்தம் பார்க்க உருவேற்றியதும்
போர்க்காலத்தின் உணவுத் தேவைக்குத்
தானியக் கிடங்கை நிரப்பி வைத்ததும்
என
எல்லாம் நினைவிலாடுகின்றன.
வாளை மீன்கள் துள்ளி விளையாடிய
நீர்நிலையருகே
நீலநிறத்தில் கொத்தாய் பூத்துக்குலுங்கிய காஞ்சிப் பூக்களை
மாலையாக்கிச் சூட்டி
கோட்டையையும் மக்களையும் காக்கவேண்டி
என்னை அனுப்பிய
அந்த நாட்களையும் நினைக்கிறேன்.
வலிமையான எருதுகள் பூட்டி
உழவு செய்த வயல் வெளிகளில்
கழுதையைக் கொண்டு உழுது
வெள்ளெருக்குச் செடிகளின்
விதைகளைத் தூவிச் சென்றிருக்கிறது
நாம் கடந்து முடித்திருக்கும்
இந்தப் போர்க்காலம்.
நிலத்தை
நீர்நிலைகளைப் பாழ்படுத்தி
நின்று கொண்டிருக்கிறோம்.
தகப்பனை
தாயை
உறவுகளை இழந்து
தனித்திருக்கும் குழந்தைகள்
பசித்து அலைகின்றனர்
வெளியெங்கும்.
ஆண்கள் அற்றுப்போய்
ஒப்பாரி இட்டபடி இருக்கும்
மனம் பிறழ்ந்த பெண்களின்
குரல் ஒலித்துக் தெறிக்கிறது
காலத்தின் வீதியில்
துர்கனவுகளைச் சுமந்து திரிபவர்கள்
மீதமிருக்கும் வாழ்வை எப்படிக் கடந்து முடிப்பார்களோ
நம் நிலத்தைக் காப்பாற்றி விட்டோம் தான்.
Photograph by Lewis W. Hine
(சக்தி ஜோதியின் ’தீ உறங்கும் காடு’ கவிதைத் தொகுப்பிலிருந்து…
முதல் பதிப்பு: டிசம்பர் 2012. வெளியீடு: உயிர் எழுத்து பதிப்பகம், 9, முதல் தளம், தீபம் வணிக வளாகம், கருமண்டபம், திருச்சி -1. தொலைபேசி: 91-431-6523099, 9942764229. பக்கம் 112. விலை ரூ.90)
வலிமையான எருதுகள் பூட்டி
உழவு செய்த வயல் வெளிகளில்
கழுதையைக் கொண்டு உழுது
வெள்ளெருக்குச் செடிகளின்
விதைகளைத் தூவிச் சென்றிருக்கிறது
நாம் கடந்து முடித்திருக்கும்
இந்தப் போர்க்காலம்.”
#கவிதைகளைப் புரிந்து கொள்ள கவிஞர்களின் மனது வேண்டும்; வெற்றறிவைக் கொண்டு சில முறை படித்தேன்…
உங்கள் மனத்தைக் கொஞ்சம் இரவல் தாருங்கள் நான், இந்த வரிகளைப் புரிந்து கொள்ள..
இவை தவிர்த்து யார் நீங்கள் என்று ஈர்த்திருக்கிறது கவிதை!