திரைவானின் நட்சத்திரங்கள்! – 2

உள்ளும் புறமும்

Image

அவர் ஒரு பெண் இயக்குநர். ஒரு மாதத்துக்கு முன்புதான் அவருடைய படம் ரிலீசாகியிருந்தது. எதிர்பாராத நபர்களிடம் இருந்தெல்லாம் விமர்சனங்கள் வந்தன. அத்தனையும் பாராட்டு மழை! அன்றைக்கு நான்கு பேர் அவர் வீட்டுக்கு வந்தார்கள். விசாரித்தார்கள், பரபரவென்று எதையோ தேடினார்கள். அவர் கைப்பட எழுதிய அந்தப் படத்தின் ஸ்க்ரிப்டை பறிமுதல் செய்தார்கள். ‘உங்களைக் கைது செய்கிறோம்’ என்றார்கள். அதிர்ந்து போனார் அவர்.

அடுத்த பதினைந்தாவது நிமிடம் அவர் ஒரு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். பொதுவாக இது போன்ற சந்தர்ப்பங்களில் யாராவது ஜாமீன் கொடுத்தால் கைது செய்யப்பட்டவர் விடுவிக்கப்பட்டுவிடுவார். அன்றைக்கு கணவர் உடனிருந்தும் அந்தப் பெண் இயக்குநருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. காரணம், நீதிமன்றத்தில் நீதிபதி இல்லை. அவர் தனிச்சிறையில் அடைக்கப்பட்டார். மற்ற பெண் கைதிகளுடன் இருக்க இரண்டு நாட்களுக்கு அவர் அனுமதிக்கப்படவில்லை. மற்ற பெண் கைதிகளோடு அவர் இணைந்த போது, அவர்கள் அவருடைய பாதுகாப்புக்காக அணி திரண்டார்கள். தங்களிடமிருந்த தூய ஆடைகளை அவரிடம் கொடுத்து அணியச் சொன்னார்கள். தாங்கள் குளிக்கும் நேரத்தை அவருக்காக ஒதுக்கித் தந்தார்கள். தங்களிடமிருந்த உணவுப்பொருட்களை அவருக்கு சாப்பிடத் தந்தார்கள். பிரதிபலனாக சக பெண்கைதிகள் அவரிடம் கேட்டது ஒன்றைத்தான்… ‘‘எங்கள் கஷ்டமும் நிலையும் வெளியே தெரியும்படி ஒரு படம் எடுங்கள்!’’

இது ஏதோ சினிமா கதை அல்ல! ஈரானிய பெண் இயக்குநர் தமீனே மிலானியின் (Tahmineh Milani) வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம். அவர் இயக்கியிருந்த ‘தி ஹிட்டன் ஹாஃப்’ (The Hidden Half) என்ற திரைப்படத்துக்காகத்தான் அவருக்கு இந்த தண்டனை.

‘‘ஒரு நாளைக்கு 5 மணி நேரம் கேள்விகளால் என்னைத் துளைத்தெடுத்தார்கள். தேசியப் பாதுகாப்புக்கு எதிராகச் செயல்பட்டதாகவும், ஈரானுக்கு வெளியே இருக்கும் புரட்சிகர அமைப்புகளுடன் கூட்டுச் சேர்ந்து சதி செய்ததாகவும் என் மேல் குற்றம் சாட்டப்பட்டது. இது என்மீது சுமத்தப்பட்ட பெரிய குற்றச்சாட்டு. அதன் காரணமாக எனக்குக் கிடைக்க இருந்தது மரண தண்டனை!’’ என்று ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் தமீனே மிலானி.

ஒரு பிரபலம் கைதானால் அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுவது சகஜம். தமீனே மிலானி விஷயத்திலும் அது நடந்தது. ஈரானின் அதிபரும் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவருமான முகமது கட்டாமி (Mohammad Khatami) இரண்டு பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டங்களில் தமீனேவுக்கு ஆதரவாக கருத்துக் கூறியிருந்தார். அதோடு, ‘‘தமீனே மிலானி கைது செய்யப்பட்டது எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது’’ என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும், பிரச்னைக்குத் தீர்வு உடனே கிடைத்துவிடவில்லை. தொடர்ந்து மேல் முறையீடு செய்ததில் 7 நாட்களுக்குப் பின் விடுதலையானார் தமீனே.

அதோடு விஷயம் முடிந்துவிடவில்லை. அவர் விடுதலையான இரண்டு மணி நேரத்தில் மேலும் சில விசாரணை அதிகாரிகள் தமீனேவின் வீட்டுக்கு வந்தார்கள். வீடியோ டேப், புகைப்படங்கள், சினிமா புத்தகங்கள், குறிப்புகள், திரைக்கதைகள் என்று கையில் கிடைத்ததை எல்லாம் வாரிக்கொண்டு போனார்கள்.

தமீனேவும் அவர் கணவர் முகமது நிக்பின்னும் வழக்கை முடித்துவிடவும், இழந்த பொருட்களை மீட்கவும் எவ்வளவோ முயற்சி செய்தார்கள். ஆனாலும், முடியவில்லை. நிக்பின் ‘டைம்ஸ்’ பத்திரிகைக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘‘நாங்கள் இழந்த பொருட்கள் எப்போது திரும்பக் கிடைக்கும், தமீனேவுக்கு என்ன நடக்கும் என்பதை யாரும் கடைசி வரை எங்கள் முகத்துக்கு நேராகச் சொல்லவே இல்லை’’ என்றார்.

வேறு வழியே இல்லாமல் சக திரைப்பட சமூகத்தினரிடம் ஆதரவு திரட்ட களத்தில் இறங்கினார் தமீனே. அறிந்த, அறிமுகமாகாத திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களுக்கெல்லாம் இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். ஆதரவு குவிந்தது. சீன் பென், ஸ்டீவன் சோடெர்பெர்க், ஆங் லீ, கிறிஸ் மார்க்கர், பிரான்ஸிஸ் ஃபோர்டு கொப்போலா என்று பல திரையுலக பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தார்கள். ஈரானில் மட்டுமல்லாமல், உலகெங்கிலும் அவருக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தன. வழக்கு திரும்பப் பெறப்பட்டது.

Image

இத்தனைக்கும் ‘தி ஹிட்டன் ஹாஃப்’ திரைப்படம் ஒரு காதல் கதை. ஃபெரிஷ்டா என்கிற பெண். அவளுடைய கணவன் ஒரு நீதிபதி. ஒரு வழக்கில் தீர்ப்புச் சொல்வதற்காக வெளியூர் கிளம்புகிறான். அவனை வழியனுப்பி வைக்கும் ஃபெரிஷ்டா, அவனுக்குத் தெரியாமல் அவனுடைய பையில் ஒரு டைரியை வைத்து விடுகிறாள். வெளியூர் சென்ற கணவன், டைரியைப் பார்க்கிறான். எடுத்துப் படிக்கிறான். ஃபெரிஷ்டா அந்த டைரிக் குறிப்பில் தன் இளம் வயது கல்லூரி நாட்களையும், வயதான ஒரு நபருடன் அவளுக்கு இருந்த காதலையும் பதிவு செய்திருக்கிறாள். அதோடு, அந்த நாட்களில் சில இடதுசாரிகளுடன் அவளுக்கு இருந்த தொடர்பையும் எழுதி வைத்திருக்கிறாள். கணவன், தீர்ப்புச் சொல்லப் போவது ஒரு பெண்ணுக்கு. அவளும் ஃபெரிஷ்டாவைப் போலவே அரசை எதிர்க்கும் ஒரு குழுவோடு தொடர்பில் இருந்தவள். இதுதான் அந்தத் திரைப்படத்தின் மையக்கரு.

1979ல் ஈரானில் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக, பெண்களுக்கு சம உரிமை கேட்டு ஏற்பட்ட புரட்சிக்குக் காரணமான விஷயங்களை அந்தத் திரைப்படத்தில் சில காட்சிகளில் அழுத்தமாக முன் வைத்திருந்தார் தமீனே. சென்சார் போர்டு அனுமதித்த பிறகு, திரையரங்குகளில் திரையிட்ட பிறகு, சிலரின் கண்களில் இந்த விஷயங்கள் உறுத்தியதுதான் அவர் கைதுக்குக் காரணம்.

Image

1960ல் ஈரானில் உள்ள தப்ரிஸில் பிறந்த தமீனே, டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் ஆர்கிடெக்ச்சர் பட்டம் பெற்றவர். தேர்ந்தெடுத்ததோ அதற்கு சம்பந்தமில்லாத துறை. 1979ல் ஒரு திரைப்பட பயிற்சி முகாமில் கலந்துகொண்டவர், திரைப்படத்துறையால் ஈர்க்கப்பட்டு, திரைக்கதைக்கு உதவும் பெண்ணாக, உதவி இயக்குநராக பணியாற்ற ஆரம்பித்தார். 1989ல் அவருடைய முதல் திரைப்படம் ‘சில்ரன் ஆஃப் டைவர்ஸ்’ வெளியானது. அதற்குப் பிறகு ஒரே பாய்ச்சல்தான். 2011ல் ‘ஒன் ஆஃப் அவர் டூ’ உள்பட 12 அற்புதமான படைப்புகளை திரை உலகத்துக்குத் தந்திருக்கிறார் தமீனே. எல்லாமே ஈரான் பெண்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மையமாகக் கொண்டவை. இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் என்று திரைத்துறையில் பல தளங்களில் இயங்கினார் தமீனே. கணவரோடு இணைந்து அவ்வப்போது ஆர்கிடெக்ட் தொழிலிலும் ஈடுபட்டார்.

Image

ஈரானில் ஆண்களும் பெண்களும் இரட்டை வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று நம்பினார் தமீனே. வீட்டிலும் வெளியிலும் பெண்கள் வெவ்வேறுவிதமாக அணுகப்படுகிறார்கள் என்பதை தெளிவாக தன் படைப்புகளில் சுட்டிக் காட்டினார். ‘பெண்ணியவாதி’ என்று அடையாளப்படுத்தப்பட்டார். ஒரு பேட்டிக்கு பதிலளித்தபோது தமீனே மிலானி இப்படிக் குறிப்பிட்டிருந்தார்… ‘‘என்னுடைய படங்கள் ஈரானில் இருக்கும் மத்தியதர பெண்கள் எதிர்கொள்ளும் பொருளாதார, சமூக, உளவியல் பிரச்னைகளை பேசுபவை…’’ மறுக்க முடியாத உண்மை!

 – பாலு சத்யா

Image

Tahmineh Milani
Film Director

3 thoughts on “திரைவானின் நட்சத்திரங்கள்! – 2

  1. இவ்வளவு வலிமையான விஷயத்தை இவ்வளவு எளிமையாகச் சொல்ல முடியுமா? வியப்புறச் செய்யும் வித்தகம் கைகூடிய எழுத்துகள். வாழ்க வளமுடன். —
    —நா வே. அருள்

  2. அன்பு தோழா

    படம் எடுத்தா இப்டி ஒஒரு படம் எடுக்கணம்
    அருமையான வார்த்தை அமைப்பு
    நன்றி
    ரவி நாராயணன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s