சுண்டாட்டத்தில் சுடர்விடும் நட்சத்திரம்!

Image

ட்ட வடிவில் குட்டி குட்டியாக கறுப்பு, வெள்ளை காய்கள், ஒரு சிவப்பு நிறக் காய், ஒரு ஸ்ட்ரைக்கர் இவற்றோடு கேரம் போர்டு முன்னால் அமர்ந்தால் பலருக்கு நேரம் போவதே தெரியாது. அப்படி சுண்டி இழுக்கும் இந்த ‘சுண்டாட்டம்’. இது வெறும் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. மனதை கவனம் சிதறாமல் ஒருநிலைப்படுத்த, நம் சாமர்த்தியத்தை அதிகப்படுத்த உதவுகிற விளையாட்டு. உள் அரங்க விளையாட்டு என்று ஒதுக்கிவிட முடியாத கேரமில் உச்சம் தொட்ட பெண்கள் எத்தனையோ பேர். அவர்களில் நட்சத்திரமாக மின்னுகிறார் ஜெயஸ்ரீ.

Image

‘‘அப்பாவுக்கு ரொம்ப பிடிச்ச விளையாட்டு கேரம். அவரைப் பார்த்துப் பார்த்து எனக்கும் அந்த விளையாட்டு மேல ஆர்வம் வந்துடுச்சு. 11 வயசுல விளையாட ஆரம்பிச்சேன். இப்போ தேசிய அளவில் எனக்குன்னு ஒரு அடையாளம் கிடைச்சிருக்கு’’  படபடவென்று பேசுகிறார் ஜெயஸ்ரீ. கேரம் விளையாட்டில் 18 முதல் 21 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் தேசிய அளவில் சாம்பியன் பட்டத்தை தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொண்டிருக்கும் இளம் வீராங்கனை.

சென்னை நேரு விளையாட்டரங்கில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவரிடம் பேசினோம். ‘‘அப்பா வீரராஜூ தனியார் பேங்க்ல ப்யூனா வேலை பார்க்கிறார். வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் கேரம் போர்டு முன்னாலதான் உக்காருவார். அதுதான் அவருக்கு ரிலாக்ஸ் தர்ற விஷயம். லீவ் நாட்கள்ல கூட கேரம்தான் அவருக்கு பொழுதுபோக்கு. அவரோட யார் விளையாடினாலும் அப்பாதான் ஜெயிப்பார். இந்த விளையாட்டுல பெரிய ஆளா வரணும்னு அவருக்கு ஆசை. ஆனா பொருளாதார சூழல் சரியா இல்லை. அதனாலேயே அவரால இந்த விளையாட்டுல பெரிய அளவுக்கு வர முடியலை. அப்பாவைப் பார்த்துப் பார்த்து எனக்கு கேரம் போர்டு பக்கம் கவனம் திரும்பிடுச்சு. ஆரம்பத்துல சாதாரணமாத்தான் விளையாட ஆரம்பிச்சேன். ஒரு தடவை அப்பா கூட விளையாடினப்போ நான்தான் ஜெயிச்சேன். வேணும்னே அப்பா விட்டுக் கொடுத்தாரான்னு தெரியலை. அதை பக்கத்துல இருந்து பார்த்துட்டு இருந்த அப்பாவோட ஃபிரெண்ட் ராஜன் ‘‘இந்த கேம்ல உனக்கு இவ்ளோ இன்ட்ரஸ்ட் இருக்குறதைப் பார்க்க ஆச்சரியமா இருக்கு. உனக்கு விருப்பம் இருந்தா சொல்லு. முறையா கத்துக்கிட்டு பெரிய லெவல்ல சாதிக்கலாம்’’னு சொன்னாரு.

அவர் அப்படிச் சொன்ன பிறகுதான் கேரம்ல எனக்கு ஈடுபாடு அதிகமாச்சு. சரின்னு தலையாட்டினேன். பதினொரு வயசுல கேரம் விளையாட ஆரம்பிச்சேன். எப்படி முறையாக விளையாடணும்கிறதை கத்துக் கொடுத்த கோச் 3 பேர். ஆனந்த் சார், பாபு சார், விஜயராஜ் சார். இவங்கதான் எனக்கு கேரம் பற்றிய அடிப்படையைக் கத்துக் கொடுத்தவங்க. கேரம் விளையாடறப்போ முதல்ல எந்த இடத்துல உட்காரணும்? காய்ன்களை எப்படி கார்னர் பண்ணனும்? எந்த வழியைப் பயன்படுத்தினா ஈஸியா ஸ்கோர் பண்ணலாம்? எல்லாத்தையும் கத்துக் கொடுத்தாங்க. இதையெல்லாம் அவங்க சொல்லித் தந்த பிறகுதான் கேரம் விளையாட்டுல இத்தனை விஷயங்கள் இருக்குன்னு புரிஞ்சுது.

நான் விளையாட வந்தப்போ எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன் இளவழகி அக்கா. அவங்க விளையாடறதை பார்த்துகிட்டே இருக்கலாம். அவ்ளோ சூப்பரான பிளேயர். என்னோட ஆர்வத்தைப் புரிஞ்சுக்கிட்டு கேரம்ல பல டெக்னிக்குகளை சொல்லிக் கொடுத்தாங்க. அவங்க சொன்ன வார்த்தைகள் ஒவ்வொண்ணும் மனசுல அப்படியே பதிஞ்சு போய்க் கிடக்கு. புதுசா விளையாட வர்றவங்களை ரொம்ப என்கரேஜ் பண்ணுவாங்க. எனக்குள்ள இருந்த தயக்கம், பயம் எல்லாம் பறந்து போனதுக்குக் காரணம் அவங்கதான். அப்புறம்தான் ரொம்ப தன்னம்பிக்கையோட விளையாட ஆரம்பிச்சேன்.

2007ல முதல் முறையா மாநில அளவிலான போட்டியில கலந்துக்கிட்டேன். 3வது இடம் கிடைச்சது. அதே வருஷம் தேசிய அளவில் சப் ஜூனியர் லெவல்ல கலந்துக்கிட்டேன். நாலாவது இடத்துக்கு வந்தேன். உற்சாகம் அதிகமாச்சு. இன்னும் இன்னும் உயர பறக்கணும்னு தோணிச்சு. 2008ல நடந்த நேஷனல் லெவல் போட்டியில 2ம் இடம், 2009ல நடந்த போட்டியில முதலிடம்னு மெல்ல மெல்ல முன்னேற ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் நடந்த போட்டிகள்ல முதலிடம் எனக்குத்தான்.

போன மார்ச் மாதம் வாரணாசியில நடந்த யூத் நேஷனல் போட்டியில முதலிடம் கிடைச்சுது. இதுவரைக்கும் 7 நேஷனல் லெவல் போட்டிகள்ல வின்னர் நான்தான். இது தவிர மாநில அளவிலான போட்டிகள்லயும் விளையாடிட்டு இருக்கேன். தமிழக அளவில் இளவயது வீராங்கனை பிரிவில் முதலிடமும், தேசிய அளவில் 12 வது இடத்தையும் தக்க வச்சிருக்கேன். என்னோட ஆசையெல்லாம் உலக அளவில் கேரம்ல பெரிய பிளேயரா வரணும்கிறதுதான். ஒரு சாதாரண குடும்பத்துல பிறந்துட்டு இந்த மாதிரியான இடத்தை அடையறது ஈசியான காரியமில்லை. அந்த உயரத்துல பாதியை தொட்டுட்டேன். இன்னும் சாதிக்கணும். கேரம்ல தமிழ்நாட்டுலதான் பெரிய பிளேயர்ஸ் இருக்காங்க. அதுல நானும் ஒருத்தின்னு நினைக்கும் போதே பெருமையா இருக்கு.Image

இப்போ பிசிஏ படிச்சிட்டு இருக்கேன். காலேஜ்லயும், வீட்டுலயும் எனக்கு நல்ல ஒத்துழைப்பு குடுக்குறாங்க, ஸ்பான்சர்ஸ் இருக்காங்க. எல்லாமே நல்லவிதமா போய்கிட்டு இருக்கு. கூடிய சீக்கிரமே கேரம்ல உச்சத்தைத் தொடுவேன்கிற நம்பிக்கையும் இருக்கு’’. ரெட் அண்ட் ஃபாலோ அடித்தது போன்ற உற்சாகம் கொப்பளிக்கிறது ஜெயஸ்ரீயின் பேச்சில்!

 – எஸ்.பி.வளர்மதி

படங்கள்: மாதவன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s