இங்கே சினிமா தியேட்டர்கள் இல்லாத ஊர் இருக்கிறதா? இருக்கிறது… விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு. சரி. சினிமா தியேட்டரே இல்லாத நாடு இருக்கிறதா? இருக்கிறது. சவூதி அரேபியா!
அங்கே சினிமா பார்க்க வேண்டுமென்றால் டிவிடியில், வீடியோவில் அல்லது இணையதளத்தில்தான் பார்க்க முடியும். வேண்டுமானால் வீட்டில் ‘ஹோம் தியேட்டர்’ அமைத்துக் கொள்ளலாம். தியேட்டரில் டிக்கெட் வாங்கி, இடைவேளையில் நம் இஷ்டத்துக்கு பாப்கார்ன் கொரித்து, சமோசா, பப்ஸ் சாப்பிட்டு, கோககோலா, காபியெல்லாம் குடிக்க முடியாது. அந்தக் கொடுப்பினை சவூதி வாழ் மக்களுக்கு இல்லை. ஆனால், அங்கே சினிமா ரசிகர்கள் இருக்கிறார்கள். சில படங்களும் கூட எடுக்கப்படுகின்றன. திரையிடத் தியேட்டர்கள்தான் இல்லை.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த இயக்குநர் அப்துல்லா அல்-அயாஃப் (Abdullah Al-Eyaf) இயக்கிய ‘சினிமா 500 கி.மீ’ என்ற ஆவணப்படம் 2006ல் வெளியானபோது சவூதியில் பெரிய சர்ச்சையே கிளம்பியது. சர்ச்சைக்குக் காரணம் அதன் கதை. டாரிக் அல் ஹுசேனி 21 வயது இளைஞன். தனக்கு பாஸ்போர்ட் வேண்டும் என்று விண்ணப்பம் செய்கிறான். அதற்கு அவன் குறிப்பிட்டிருக்கும் காரணம் வெகு சுவாரஸ்யம். ‘இங்கே தியேட்டர்கள் இல்லை. எனக்கு தியேட்டரில் சினிமா பார்க்க ஆசையாக இருக்கிறது. இங்கிருந்து 500 கி.மீ. தூரத்தில் இருக்கும் பஹ்ரெயினில் இருக்கும் தியேட்டரில் படம் பார்ப்பதற்காக எனக்கு பாஸ்போர்ட் தேவைப்படுகிறது…’
அப்துல்லா அல் அயாஃப், ‘சினிமா 500 கி.மீ.’ படத்தை எடுக்க சவூதியின் பண்பாட்டு மற்றும் கலாசார அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டியிருந்தது. படம் தயாரான பிறகு தன் சொந்த நாட்டிலேயே ஒன்றிரண்டு தனியார் இடங்களில்தான் அதைத் திரையிடவும் முடிந்தது. மற்றபடி சொந்த மண்ணில் பொதுமக்களுக்கு திரையிட அவருக்கு வழியே இருக்கவில்லை.
இப்படி சினிமாவை ஒதுக்கி வைத்திருக்கும் சவூதியில் ஒரு பெண் திரைப்பட இயக்குநர்! நம்ப முடியாத இந்தச் செய்தியை நிஜமாக்கிக் காட்டியிருக்கிறார் ஹைஃபா அல்-மன்சூர் (Haifaa al-Mansour). ‘வாட்ஜ்டா’ (Wadjda) என்ற அற்புதமான திரைப்படத்தை இயக்கி, ‘யார் இந்த ஹைஃபா?’ என உலகமெங்கும் இருக்கும் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் இந்தப் பெண்மணி.
ஹைஃபாவின் தந்தை, அப்துல் ரஹ்மான் மன்சூர் ஒரு கவிஞர். மொத்தம் 12 குழந்தைகள். எட்டாவதாகப் பிறந்தவர் ஹைஃபா. அதென்னவோ சிறு வயதிலிருந்தே சினிமா மோகம் அவரைப் பிடித்து ஆட்டியது. தந்தை அப்துல் ரஹ்மான் மன்சூர் நல்ல திரைப்படங்களைத் தேடி எடுத்து வந்து, மகளுக்கு வீடியோவில் போட்டுக் காட்டி, சினிமா ஆர்வத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்தார். கெய்ரோவில் இருக்கும் அமெரிக்கன் யுனிவர்சிட்டியில் இலக்கியத்தில் பட்டப்படிப்புப் படித்தார் ஹைஃபா. ஆனாலும் சினிமா ஆசை உள்ளே சிறு பொறியாக கனன்று கொண்டே இருந்தது. தயங்கித் தயங்கி சினிமாவுக்கான படிப்புப் படிக்க வேண்டும் என்ற தன் ஆசையை அப்பாவிடம் சொன்னார். அப்பாவுக்கு விருப்பம்தான். ஆனால் வீட்டில் இருந்த மற்றவர்களால் பூகம்பம் வெடித்தது.
சவூதி அரேபியாவில் பெண்கள் இது போன்ற பொது வெளியுடன் தொடர்புடைய வேலைகளில் ஈடுபட முடியாது. எங்கேயோ வெளிநாட்டில் அதற்கான படிப்பைப் படித்துவிட்டு வந்தாலும் உள்ளூரில் அந்தப் பட்டத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது? உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தில் இருந்தவர்களெல்லாம் தடுத்தார்கள். ஆனால், ஹைஃபா பிடிவாதமாக இருக்கவே, ஆஸ்திரேலியாவில், சிட்னியில் இருக்கும் ஒரு திரைப்படப் பள்ளியில் அவரை சேர்த்துவிட்டார் அப்துல் ரஹ்மான் மன்சூர்.
திரைப்படப் படிப்பை முடித்துவிட்டு ஊருக்கு வந்தார் ஹைஃபா. அடுத்து? ஆரம்ப முயற்சியாக குறும்படங்களை இயக்கினால் என்ன? இந்த யோசனைக்கு மறுபடியும் வீட்டில் எதிர்ப்பு. வெளியூரில் இருந்த தூரத்து உறவினர்கள் எல்லாம் அவர் தந்தையை கடிதங்களில் கடுப்படித்தார்கள். ‘ஹைஃபாவை வெளிநாட்டுக்கு அனுப்பி சினிமா கத்துட்டு வரச் சொன்னீங்களாமே! அவ ஏதோ கேமராவை தூக்கிட்டு சினிமா எடுக்கப் போறாளாமே? இதெல்லாம் கொஞ்சம்கூட நல்லால்ல’.
ஹைஃபாவின் தந்தை எதையுமே காதில் போட்டுக் கொள்ளவில்லை. இவ்வளவு எதிர்ப்புகளையும் தாண்டி, தன் மகள் பெண்ணாகவே இருந்தாலும் அவளால் நினைத்ததை அடைய முடியும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை அவருக்கு இருந்தது. மகளின் விருப்பத்துக்கு மானசீகமாக பச்சைக்கொடி காட்டினார். ‘ஹூ’ (Who), ‘தி பிட்டர் ஜர்னி’ (The Bitter Journey), ‘தி ஒன்லி வே அவுட்’ (The Only Way Out) என மூன்று குறும்படங்களை இயக்கினார் ஹைஃபா. மூன்றாவது குறும்படமான ‘தி ஒன்லி வே அவுட்’ பெரும் வரவேற்பைப் பெற்றது. ஐக்கிய அரேபிய அமீரகமும் (United Arab Emirates), ஹாலந்தும் அந்தப் படத்துக்கு பரிசுகள் வழங்கின.
தொடர்ந்து ‘வுமன் வித்தவுட் ஷேடோஸ்’ (Women Without Shadows) என்ற ஆவணப்படத்தை இயக்கினார் ஹைஃபா. அதில் பெர்சியன் வளைகுடாப் பகுதியில் வாழும் பெண்களின் மறைக்கப்பட்ட பக்கங்களைப் பதிவு செய்திருந்தார். 17 சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட அந்த ஆவணப்படம், ‘மஸ்கட் திரைப்பட விழா’வில் சிறந்த ஆவணப்படத்துக்கான விருதையும், ராட்டர்டாமில் நடந்த ‘நான்காவது அரேபிய திரைப்பட விழா’வில் ஜூரிகளுக்கான சிறப்பு விருதையும் பெற்றது. இந்த முயற்சிகள் எல்லாம் வெற்றி பெற்ற பிறகுதான் முழுநீளத் திரைப்படம் எடுப்பதில் தீவிரமானா ஹைஃபா.
சவூதி அரேபியாவில் 2006ல் வெளியான ‘கெயிஃப் அல்-ஹல்’ (Keif al-Hal) மட்டும்தான் அதிக செலவில் தயாரிக்கப்பட்ட முதல் முழுநீளத் திரைப்படம். சவூதி நடிகை நடித்து, துபாயில் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருந்தாலுமே கூட அந்தப் படத்தை இயக்கியவர் ஒரு பாலஸ்தீன இயக்குநர். அவர் பெயர் இஸிடோர் முஸல்லாம் (Izidore Musallam). அரேபியாவில், அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணால் எழுதி, இயக்கப்பட்ட முதல் முழுநீளத் திரைப்படம் ஹைஃபாவின் ‘வாட்ஜ்டா’தான். இதயத்தில் சிறு வேதனையைக் கிளர்ந்தெழச் செய்யும் மென்மையான கதை.
சவூதியின் தலைநகரான ரியாத்தில் வாழும் 12 வயது பெண் வாட்ஜ்டா. பழமைவாதத்தைப் பிடிவாதமாகப் பற்றிக் கொண்டிருக்கும் மண்ணில் வாழ்ந்தாலும், ஜீன்ஸ், ஸ்னீக்கர்ஸ் அணிய விரும்புகிறவள். ராக் இசை கேட்பவள். அவளுக்கு இருக்கும் ஒரே ஆசை, கனவு பச்சைநிறத்தில் ஒரு சைக்கிளை வாங்கவேண்டும். அதில் ஏறி ஊர்த் தெருவில் பட்டாம்பூச்சியாகப் பறக்க வேண்டும். முக்கியமாக அவள் நண்பன் அப்துல்லாவை சைக்கிளில் முந்த வேண்டும். ஆனால், இந்த ஆசை யார் நினைத்தாலும் நடக்காத காரியம். அங்கே ஆண்களுக்கு மட்டும்தான் சைக்கிள் ஓட்ட அனுமதி.
எங்கே மகள் சைக்கிள் வாங்கிவிடுவாளோ என்கிற பயத்திலேயே வாட்ஜ்டாவின் தாய் அவளுக்கு எந்தப் பணமும் கொடுக்க மறுக்கிறாள். அந்த சமயத்தில் அவள் படிக்கும் பள்ளியில் குரான் ஒப்பிக்கும் போட்டி ஒன்று நடக்கிறது. அதில் கலந்து கொண்டு, அதில் கிடைத்த பரிசுத் தொகையில், தான் விரும்பிய சைக்கிளை வாங்குகிறாள் வாட்ஜ்டா.
இந்தப் படத்தை இயக்குவதற்கு சில வருடங்களுக்கு முன்னால், தன் மகள் இயக்கிய முழுநீளத் திரைப்படத்தைப் பார்க்காமலேயே இறந்து போனார் ஹைஃபாவின் தந்தை அப்துல் ரஹ்மான் மன்சூர்.
‘‘அப்பா இருந்திருந்தால் என்னை நினைத்து நிச்சயம் பெருமைப்பட்டிருப்பார். அவர் எனக்கு ஆதரவாகவும், என் கனவு நிறைவேற வேண்டும் என்று விரும்பியவர். சவூதியில் இது போன்ற மனிதர்களைக் காண்பது அரிது’’ என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் ஹைஃபா.
ஆனால், இந்தப் படத்தை எடுக்க அவர் பட்ட பாடு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் போன்ற திரைத் தொழிற்சாலைகள் எதிர்கொள்ளாத பிரச்னைகளை எல்லாம் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சவூதி அரேபியாவில் பெண்கள், ஆண்களுடன் சேர்ந்து வேலை பார்க்க அனுமதி இல்லை. ஒரு அந்நிய ஆணுடன் சேர்ந்து தெருவில் நடக்கக்கூட முடியாது. சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. அதில் ஆண்களும் பணியாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. பிறகு எப்படித்தான் ஒரு படத்தை இயக்குவது?
பழமைவாதிகள் அதிகம் இருக்கும் பகுதியில் வெளிப்புறப் படப்பிடிப்பு நடக்கும் போதெல்லாம் ஒரு வேனுக்குள் ஒளிந்து கொள்வார் ஹைஃபா. அதற்குள் இருந்தபடியே நடிகர்களுக்கு போனிலோ, வாக்கி டாக்கியிலோ எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்வார். பெண்கள் நடிப்பதும் சவூதியில் இருக்கும் பல ஆண்களுக்குப் பிடிக்காத ஒன்று. ‘வாட்ஜ்டா’ பாத்திரத்துக்குப் பொருத்தமான பெண் கிடைக்காமல் திணறிப் போனார் ஹைஃபா. ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் ‘வாட் முகமது’ (Waad Mohammed) என்ற 12 வயதுப் பெண் அவருக்குக் கிடைத்தார். ‘ரொம்ப சாமர்த்தியமான பெண்’ என்று அந்தச் சிறுமியைப் பற்றிக் குறிப்பிடுகிறார் ஹைஃபா.
படத்தை எடுத்து முடித்த பிறகு மற்றொரு பிரச்னை. எங்கே திரையிடுவது? அதற்கான இடத்தைத் தானே நேரில் போய்த் தேடலாம் என்றால் அதற்கும் வழியில்லை. சவூதி அரேபியாவில் ஒரு பெண் தனியாக நடந்து போவதோ, காரை ஓட்டிச் செல்வதோ முடியாது. அதாவது, பெண்கள் சர்வசாதாரணமாக நடமாட முடியாது. அதோடு, அவரால் எது ஆபத்தான பகுதி என்பதையும் அடையாளம் காண முடியவில்லை. எப்படியோ சில இடங்களில் ‘வாட்ஜ்டா’வை திரையிட்டார். மக்கள் கரவொலி எழுப்பி வரவேற்றார்கள். 2012ம் ஆண்டு வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிட்டார். உலக ரசிகர்கள் அந்தப் படத்தை உச்சி மோந்து கொண்டாடினார்கள்.
விமர்சனங்கள் வந்தன. அவர் சார்ந்த மதத்துக்கு எதிராக இருந்ததாக அவரைத் திட்டி எழுதிய மெயில்களைப் புறந்தள்ளினார் ஹைஃபா. அவற்றை விட அவர் படத்தைப் பாராட்டி டிவிட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் வந்த விமர்சனங்கள்தான் அதிகம். எழுதி அனுப்பியவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.
அமெரிக்கர் ஒருவரை மணந்து கொண்டார் ஹைஃபா. இப்போது, பஹ்ரெயினில் தன் கணவர், குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ஒரே ஒரு முழுநீளப்படம்தான் இயக்கியிருக்கிறார். ஆனால், அது கால காலத்துக்கும் பேசப்படும். ஏனென்றால், தடையை மீறி, தைரியமாக அவர் இயக்கிய ‘வாட்ஜ்டா’, சவூதியில் நிலவும் பழமைவாத நடவடிக்கைகளை நாசூக்காக, அதே நேரம் மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது.
– பாலுசத்யா
Haifaa al-Mansour
Haifaa al-Mansour (Arabic: هيفاء المنصور, born 10 August 1974) is a film director from Saudi Arabia. She is one of the country’s best-known and most controversial directors, and the first female Saudi filmmaker.
Films
- Who? (من؟)
- The Bitter Journey (الرحيل المر)
- The Only Way Out (أنا والآخر)
- Women Without Shadows (نساء بلا الظل)
- Wadjda (وجدة)