மலை போன்ற மார்பழகு
மழ மழத் தோளழகு
தோளில் போட்ட பூப்போட்ட துண்டு
காற்றில் ஒதுங்கும் கணங்களில்
கட்டுக்கடங்காத என்
கடைக்கண் பயணம்
எனது வேட்கையின் மையமாய்
எப்போதும் நீ
உன் உதட்டின் மேல் உதித்தக்
கருங்கிரணக் கதிர் முடிகளை
என் இதயத்தில்
தொட்டிச்செடிகளாகப் பதியம் போட்டது
ஞாபகம் இருக்கிறதா என் பழைய நண்பனே
உனக்குத் தெரியாமலே
வேட்டையாட நுழைந்த என் கருவிழி முயல்கள்
லுங்கிமடித்துக் கட்டிய உன்
முழங்கால் முடிப்புதர்களில்
அம்புகளின் அழகில் அடிபட்டுக் கிடந்தது
மறக்க முடிகிற மரண நொடிகளா?
நீ அருகில் கடக்கும் போதெல்லாம்
உன் சிலிர்ப்பூட்டும் வாசத்தில் சிறைப்பட்ட
என் நெடிய நாசி…
உன் ஒவ்வொரு உச்சரிப்பையும்
சிந்தாமல் சிதறாமல் உள்ளிழுத்த
என் செவிப்பறை காந்தம்…
உனக்கு நீ எனக்கு நான் என
உறைந்து போன நாட்களின் சந்தோஷம்
திருமணத்திற்குப் பின்
ஏனோ தேயத் தொடங்கியது
மெல்ல மெல்ல அதிகார மையமாய் ஆன
“ஆம்பிள” சிங்கமாய் நீ
மலை போன்ற மார்பழகு
மழ மழத் தோளழகு
தென்படாதா என்று தேடிக்கொண்டே இருக்கிறேன்
இரண்டுக்கும் நடுவில் இருந்த
உன் நல்ல இதயத்தை!…
– ஹேமா அருள்