ஓவியமாக உயிர் பெற்ற நிர்பயா!

ந்தியர்கள் மறக்க முடியாத பெயர்… டெல்லியில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி உயிரிழந்த மாணவியின் கற்பனைப் பெயர்… ‘நிர்பயா’. அதையே தலைப்பாக்கி, சமீபத்தில் ஓர் ஓவியக் கண்காட்சியை டெல்லியில் நடத்தியிருக்கிறார் சென்னை ஓவியர் ஸ்வர்ணலதா.

இவரது கணவர் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர். டிசம்பர் மாதம் விடுமுறைக்கு டெல்லிக்குப் போயிருக்கிறார் ஸ்வர்ணலதா. அவர்கள் இருந்த இடத்துக்கு இந்தியா கேட் வழியாகத்தான் செல்ல வேண்டும். அது டெல்லி மாணவி பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி இறந்து போன நேரம். அதற்கு எதிராக தினமும் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட அந்த போராட்டங்கள் ஸ்வர்ணலதாவை யோசிக்க வைத்தன.

PD1_9541

‘‘இந்தியா கேட்ல நடந்த போராட்டங்களை நேரில் பார்த்தேன். அப்போ எல்லா பத்திரிகையிலும் அதுதான் தலைப்புச் செய்தி. போராட்டத்துல கலந்துகிட்ட எல்லா பெண்கள் முகத்துலயும் ஒரு பயத்தைப் பார்த்தேன். பல பெண்களுக்கு வேலைக்குப் போக வேண்டிய நிர்பந்தம். வேலை பார்த்தாதான் நகர வாழ்க்கையில செலவுகளை சமாளிக்க முடியும். பெண் குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, பள்ளி நேரம் முடிஞ்சதும் சரியா வீட்டுக்கு வரணுமேன்னு பதைபதைப்போட காத்திருப்பாங்க. ஏன்னா, 3 வயசு, 2 வயசு குழந்தைகள் எல்லாம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக ஆரம்பிச்சிட்டாங்க. இந்தக் கொடுமைகள் கிட்டத்தட்ட ஒரு தொடர்கதை மாதிரி தொடர்ந்து நடக்க ஆரம்பிச்சிடுச்சு. என்னதான் பெண்கள் பாதுகாப்புக்குன்னு சட்டங்கள் வந்துட்டாலும், பெண்களுக்கு ஆதரவா குரல்கள் எழுந்தாலும், பாலியல் கொடுமைகளுக்கு எதிரா போராட்டம் நடந்தாலும் இன்னும் பெண்களோட கஷ்டம் தீரலை. பெண் குடும்பத்தில் ஒரு அங்கம், அவளும் இந்த மனித சமுதாயத்தில் ஓர் அங்கம்னு யாரும் நினைக்கறதில்லை. அவங்களோட கஷ்டங்களை வெளியே கொண்டு வரணும்னு நினைச்சேன்.

வினோதினி, வித்யான்னு தொடர்ந்து பாலியல் பலாத்கார வன்முறைகள்… வெளியே தெரியாம பெண்களுக்கு எதிரா எத்தனையோ கொடுமைகள்… இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தணுங்கிறதுக்காக இந்த ஓவியங்களை வரைய ஆரம்பிச்சேன். ஜனவரியிலிருந்து மே மாதத்துக்குள் 37 ஓவியங்கள், 6 சிற்பங்களை உருவாக்கிட்டேன். கண்காட்சியா வைக்கிறதுக்கு டெல்லிதான் பொருத்தமான இடம்னு தோணிச்சு. டெல்லியில இருக்குற ‘இந்தியா ஹாபிடேட் சென்டர்’ (India Habitat Centre) முக்கியமான இடம். அங்கே ஓவியக் கண்காட்சியை வச்சா நிறையபேருக்குப் போய் சேரும்னு நினைச்சேன். ஆனா, அங்கே இடம் கிடைக்கிறது கஷ்டம். அப்ளிகேஷன் போட்டுட்டு, ரெண்டு, மூணு மாசம் காத்திருக்கணும். அவங்க என் ஓவியங்களைப் பாத்துட்டு உடனே கண்காட்சி நடத்த அனுமதி குடுத்துட்டாங்க. அதுதான் ஆச்சரியமான விஷயம்.

970906_187115724777483_1194129611_n

‘நிர்பயா’ ஓவியக் கண்காட்சிக்கு நான் எதிர்பார்த்ததை விட நிறையபேர் வந்தாங்க. சில பெண்கள் ஓவியங்களைப் பாத்துட்டு கண் கலங்கினாங்க. என்னோட ஓவியக் கண்காட்சி வெற்றி அடையறதுக்கு ஊடகங்களின் ஒத்துழைப்பு ரொம்ப முக்கியக் காரணம். இன்னும் இதைத் தொடர்ந்து நடத்த வேண்டி இருக்கு. சொந்த ஊரான சென்னையில ‘நிர்பயா’ கண்காட்சியை ஆகஸ்டுக்குள்ள நடத்தணும்னு முடிவு செஞ்சிருக்கேன். உலக அளவுல இதைக் கொண்டு போகிற திட்டமும் இருக்கு’’ என்கிற ஸ்வர்ணலதா இன்னொரு விஷயத்தையும் அழுத்தமாக வலியுறுத்துகிறார்.

‘‘பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை அரசாங்கத்தால மட்டும் தடுத்து நிறுத்த முடியாது. அரசால் அதிகபட்சமா தண்டனைகளைக்  கடுமையாக்க முடியும். அவ்வளவுதான். தனிமனிதனாப் பாத்து இப்படி பண்ணக்கூடாதுன்னு முடிவெடுத்தாத்தான் இதெல்லாம் சரியாகும். அதுக்கு பெண்களை சக மனுஷியா மதிக்கவும், நடத்தவும் எல்லாரும் முன் வரணும்.’’

ஏற்கனவே, 1998ல் சென்னை லலித்கலா அகடாமியில் ஸ்வர்ணலதா ஓர் ஓவியக் கண்காட்சியை நடத்தியிருக்கிறார். ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களை தஞ்சாவூர் பாணி ஓவியங்களாக வரைந்து கண்காட்சியாக வைத்திருந்தார். ‘‘அந்த கண்காட்சிக்குக் கிடைத்த வரவேற்புதான் என்னை மேலும் மேலும் ஓவியம் வரையத் தூண்டியது’’ என்கிறார் ஸ்வர்ணலதா. அதைத் தொடர்ந்து 2000ஆம் ஆண்டிலும் ஒரு கண்காட்சியை நடத்தியிருக்கிறார்.

இவருடைய ஓவியங்களில் பெரும்பாலானவை Contemporary Style என சொல்லப்படும் சமகாலத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்ட பாணியில் உருவாக்கப்பட்டவை. சென்னை கண்காட்சியில் இடம் பெற்ற ஓவியங்களில் ஒன்று… தாஜ்மகால், அதை முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தன் மனைவி, மகளுடன் பார்வையிடுவது போல் அமைந்திருக்கும்.

ஸ்வர்ணலதாவின் அடுத்த திட்டம்? ‘‘மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ‘ஓசோன்’ சம்பந்தமா ஒரு ப்ராஜக்ட் குடுத்திருக்காங்க. இன்னும் வரைய ஆரம்பிக்கலை. அதை திட்டம் போட்டு முன் முடிவெடுத்தெல்லாம் செய்ய முடியாது. உட்காந்ததும் என்ன தோணுதோ வரைய ஆரம்பிச்சிடுவேன். சமயத்துல ஒண்ணு வரையணும்னு நினைச்சு, அது 4 ஓவியமாக்கூட நீளும்’’ என்று சிரிக்கிறார்.

‘நிர்பயா’ ஓவியக் கண்காட்சியில் ஸ்வர்ணலதா வரைந்த ஓவியம் ஒன்றில் காந்தி தலைகுனிந்து நிற்கிறார். காந்தி இருந்திருந்தால் அப்படித்தானே நின்றிருப்பார்?!

– பாலு சத்யா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s