ஹாலிவுட் ரொம்ப உயரம்!
வெற்றியாளர்களை நினைவுகூர்வது அவசியம். அதைவிட தோல்வி அடைந்தவர்களின் வாழ்க்கையை அலசுவதும் ஆராய்வதும் மிக மிக அவசியம். அதிலிருந்துதான் எங்கே தவறு, எப்படிச் சரி செய்வது, தடைகளை எப்படித் தாண்டுவது என்பதையெல்லாம் கற்றுக் கொள்ள முடியும். நடிகை பெக் என்ட்விஸ்லேயின் (Peg Entwistle) வாழ்க்கை, திரைப்படத்துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொருவருக்குமே பாடம்!
‘ஹாலிவுட்’ என்றதும் பெரும்பாலானோருக்கு முதலில் நினைவுக்கு வருவது எது? அங்கே இருக்கும் பிரம்மாண்டமான ஸ்டூடியோக்களோ, பிரபல நடிகர்களோ, நடிகைகளோ, இயக்குநர்களோ அல்ல. லாஸ் ஏஞ்சல்ஸில், மவுன்ட் லீ மலையின் மீது பொறிக்கப்பட்டிருக்கும் ‘HOLLYWOOD’ என்ற எழுத்துகள்தான். அந்த மலையும் எழுத்துகளும் ஹாலிவுட் என்கிற பிரம்மாண்டத்தின், கனவுத் தொழிற்சாலையின் அடையாளம்! அந்த மலையின் மீது கஷ்டப்பட்டு ஏறி, அதிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார் பெக் என்ட்விஸ்லே.
1908, பிப்ரவரி 5ம் தேதி இங்கிலாந்து, வேல்ஸில் இருக்கும் போர்ட் டால்பாட் (Port Talbot) நகரில் பிறந்தார் பெக். அப்பா ராபர்ட் சைம்ஸ் என்ட்விஸ்லே நாடக நடிகர். அம்மா, எமிலி என்கிற மில்லிசென்ட் லில்லியன் என்ட்விஸ்லே. சிறு வயதிலிருந்தே பெக் என்ட்விஸ்லேவுக்கு ஒரு கனவு இருந்தது. நடிகை ஆகவேண்டும் என்கிற கனவு. திரையில் தோன்றி, ஆடவும் பாடவும் வேண்டும், பாராட்டுகளையும் கைதட்டல்களையும் அள்ளிச் செல்ல வேண்டும் என்ற கனவு. அது வாழ்நாள் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் அவர் கூடவே வந்தது. பெக்கின் ஆரம்ப நாட்கள் லண்டனில் இருக்கும் வெஸ்ட் கென்ஸிங்டன்னில் கழிந்தது.
சின்னஞ்சிறு பெண்ணாக பெக் இருக்கும் போதே அம்மா எமிலி இறந்து போனார். அது பெக் சந்தித்த முதல் இழப்பு, பேரிழப்பு. அம்மாவின் அரவணைப்பில்லாமல் வளரும் குழந்தை சந்திக்கும் அத்தனை பிரச்னைகளையும் எதிர்கொண்டார் பெக். அப்பா ராபர்ட் எஸ். என்ட்விஸ்லே, பிழைப்புக்காக பெக்கை அழைத்துக் கொண்டு அமெரிக்காவுக்குக் கிளம்பினார். சின்சினாட்டி, ஓஹியோ, நியூ யார்க் என்று எங்கெங்கேயோ வாழ்ந்தார்கள். ராபர்ட் அமெரிக்காவில் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்தன. நாடகங்களுக்குப் பிரபலமாக இருந்த பிராட்வே பகுதியில் சில நாடகங்களில் ராபர்ட் நடிக்க, அந்த வருமானத்தில் குடும்பம் நடந்து கொண்டிருந்தது.
டிசம்பர் 1922. பெக்கின் வாழ்க்கையில் மற்றொரு இடி விழுந்தது. நியூ யார்க்கில் இருக்கும் பார்க் அவென்யூவுக்கு அருகில் நடந்த கார் விபத்தில் ராபர்ட் என்ட்விஸ்லே இறந்து போனார். பெக்கின் சித்தப்பா ஹெரால்டு, குழந்தைகளை தன்னுடன் அழைத்துக் கொண்டு போனார். அவர், அப்போது பிராட்வேயின் பிரபல நாடக நடிகர் வால்டர் ஹேம்டனிடம் மேனேஜராக இருந்தார். பெக்கின் வாழ்க்கையில் கலை உலகம் மெல்ல அறிமுகமானது.
1925. பெக், பாஸ்டனில் இருந்த ஒரு நாடகக்குழுவில் சேர்ந்தார். ‘ஹென்றி ஜுவட்’ (Henry Jewett) என்ற அந்தக் குழு அமெரிக்க அளவில் பிரபலமாக இருந்த நேரம் அது. பெக், தீவிரமாக நடிப்புக் கற்றுக் கொண்டார். மேடையில் தோன்றினார், சின்னச் சின்ன வேடங்களில். வால்டர் ஹேம்டன், பெக்கின் திறமையைப் பார்த்து தான் நடிக்கும் ‘ஹேம்லட்’ நாடகத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்தார். அரசருக்கு விஷத்தைக் கொண்டு வந்து தரும் கதாபாத்திரம்!
***
அமெரிக்காவில் அப்போதெல்லாம் ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையாக நாடக நடிகர்களும் புகழ் பெற்றிருந்தார்கள். பிராட்வேயில் இருந்த சிறந்த நாடக நடிகர், நடிகைகளை ஹாலிவுட் அள்ளிக் கொண்டு போனது. அப்படி ஒரு வாய்ப்பு தனக்கு வராதா என்று காத்திருந்தார் பெக்.
நியூ யார்க்கில் அப்போது பிரபலமாக இருந்த ‘தியேட்டர் கில்ட்’ நாடக நிறுவனம் பெக்கை வேலைக்குச் சேர்த்துக் கொண்டது. அங்கே சேர்ந்த பிறகு, ‘மேன் ஃப்ரம் டொரண்டோ’ நாடகத்தில் ‘மார்த்தா’ என்ற கதாபாத்திரத்தில் முதன் முறையாக நடித்தார். 28 முறை அரங்கேறியது அந்த நாடகம். 1932 வரை, ‘தியேட்டர் கில்ட்’ தயாரித்த 10 நாடகங்களில் நடித்தார். ‘டாமி’ என்கிற நாடகம்தான் அவருக்குக் கொஞ்சம் பெயரை சம்பாதித்துக் கொடுத்தது. 238 முறை மேடையேற்றப்பட்டது. அந்த நாடகத்தின் மூலம்தான் வெளி உலகுக்குக் கொஞ்சம் அறிமுகமானார் பெக். பத்திரிகைகள் அவரைப் பற்றியும் சிறு குறிப்பு வரைந்தன.
‘தியேட்டர் கில்ட்’ குழுவினர் நடிகர்களை அடிக்கடி எங்கேயாவது சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வார்கள். வாரா வாரம் நடிகர்களின் கதாபாத்திரங்களை மாற்றுவார்கள். அப்பாவி, நகைச்சுவை நடிகை, குணச்சித்திர வேடம்… என்று தான் ஏற்ற எல்லா பாத்திரங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் பெக். நாடகங்களில் நடித்தாலும் ‘ஹாலிவுட் கனவு’ அவரை விடாமல் துரத்தியபடி இருந்தது.
1927ல் ராபர்ட் கெய்த் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவரும் ஒரு நடிகர். என்ன… மேடையில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் நடித்தவர். அது தெரிந்தபோது அதிர்ந்து போனார் பெக். ராபர்ட் கெய்த்துக்கு திருமணமாகி 6 வயதில் ஒரு மகனும் இருந்தான். இதை மறைத்துவிட்டார் கெய்த். விஷயம் கேள்விப்பட்டு துடித்துப் போனார் பெக். 1929ல் கெய்த்திடம் இருந்து விவாகரத்துப் பெற்றார். முதல் மனைவி இருப்பதை மறைப்பது சட்டப்படி குற்றம். முதல் தாரம், வழக்குப் போட்டால் கெய்த் சிறைக்குப் போக வேண்டியதுதான். பெக்கின் நல்ல மனம், கெய்த்தைக் காப்பாற்றியது. தன்னிடம் இருந்த பணத்தை முதல் தாரத்துக்கு ஜீவனாம்சமாகக் கொடுத்து, வழக்கு நடக்காமல் காப்பாற்றினார்.
1932ன் முற்பகுதி. பிராட்வேயில் பெக் நடித்த நாடகம் ‘ஆலிஸ் சிட் பை தி ஃபயர்’ அரங்கேறியது. அந்த நாடகத்தை எழுதியவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஜே.எம்.பேரி. நாடகத்தில் நடித்த ‘லாரட் டெய்லர்’ பிராட்வேயில் புகழ்பெற்ற நடிகை. அவருடைய குடிப்பழக்கத்தால், இரண்டு முறை நாடகம் நின்று போனது. பார்வையாளர்களுக்கு டிக்கெட் கட்டணத்தைத் திருப்பித் தர வேண்டிய கட்டாயம். நாடகக்குழு நிர்வாகம், மேலும் நாடகத்தை நடத்த விருப்பமில்லாமல் நடிகர்களை வீட்டுக்கு அனுப்பியது. அதற்காக பெக்குக்கும் மற்றவர்களுக்கும் தரப்பட்டது ஒரு வாரச் சம்பளம்!
***
அது அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை (Great Depression) நிலவிய காலம். நாடகத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைப்பதே அரிதாக இருந்தது. நாடகங்கள் தொடர்ந்து நடந்தால்தானே வாய்ப்புக் கிடைக்கும்? பிராட்வேயில் அதற்கு மேலும் காலம் கழிக்க முடியாது என்று தெரிந்து போனது. பெக், லாஸ் ஏஞ்சல்ஸுக்குப் போக முடிவு செய்தார். பக்கத்திலேயே ஹாலிவுட். நடிக்க வாய்ப்புக் கிடைக்காமலா போகும்?
1932, ஏப்ரல் மாதம் ஹாலிவுட்டுக்கு வந்தார் பெக். அங்கே பெண்களுக்காகவே இருக்கும் ‘ஹாலிவுட் ஸ்டூடியோ கிளப்’பில் அறை எடுத்துத் தங்கினார். திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புக் கேட்டு அலைந்தார். அறை வாடகையே தாறு மாறாக இருந்தது. வேளா வேளைக்கு வயிறு பசிக்காமல் விடுகிறதா? அதற்கு வேறு தீனி போட்டாக வேண்டுமே! பெக் என்ட்விஸ்லேவுக்குத் தெரிந்த ஒரே வேலை நடிப்பு. வாடகை கொடுக்க முடியாமல், சித்தப்பாவின் துணையுடன் ‘பீச்வுட் கேன்யான் டிரைவ்’ என்ற ஓட்டலுக்கு இடம் பெயர்ந்தார். தொடர்ந்து சினிமா வாய்ப்புத் தேடி கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கினார்.
பெக்குக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. சினிமாவில் அல்ல. நாடகத்தில். மறுபடியும் நாடகமா? அயர்ந்து போனார். ஆனால், அவருக்கு அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. ‘தி மேட் ஹோப்ஸ்’ என்ற நாடகம் அது. லாஸ் ஏஞ்சல்ஸில் மேடை ஏறியது. பத்திரிகையில் விமர்சனங்கள் எல்லாம் நல்லவிதமாக வந்தாலும் 12 நாட்களுக்கு மேல் ஓடவில்லை. மறுபடி பிரச்னை. பணத் தேவை. பெக் இறுக மூடப்பட்ட ஹாலிவுட் கதவுகளை எப்படியாவது திறந்துவிட வேண்டும் என்கிற உத்வேகத்தோடு மோதிப் பார்த்தார்.
பலன் கிடைத்தது. சினிமாவில் நடிக்க முதல் வாய்ப்பு! பெக்கின் கனவு நிறைவேறுவதற்கான முதல் படி. துள்ளிக் குதித்தார். தாரை தாரையாக கண்ணீர் வந்தது. அது ‘தேர்ட்டீன் வுமன்’ என்கிற மர்மப் படம். ‘ரேடியோ பிக்சர்ஸ்’ (RKO) என்ற தயாரிப்பு நிறுவனம், பெக்கை அந்தத் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தது. மிகச் சிறிய கதாபாத்திரம்தான். ஆனால், உற்சாகமாக நடித்தார். அந்தப் படம் அவர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று நம்பினார். இனிமேல் தடையே இல்லாமல் மளமளவென்று வெற்றிப் படிகளில் ஏறிவிடலாம் என்றுமனக் கோட்டை கட்டினார். அது அவ்வளவு சீக்கிரம் உடைந்து விழும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே பெட்டிக்குள் முடங்கியது.
படத்துக்கான அடிப்படை வேலைகள் முடிந்தன. திரையுலக வழக்கப்படி ‘தேர்ட்டீன் வுமன்’ சிறப்புக் காட்சி முக்கியமானவர்களுக்காக திரையிடப்பட்டது. அதைப் பார்த்தவர்கள் சொன்ன விமர்சனம் தயாரிப்பாளர்களை முகம் சுளிக்க வைத்தது. ‘என்னாங்க… இப்பிடி எடுத்திருக்கீங்க?’ என்ற கேள்வியால் தயாரிப்பாளர்கள் திணறிப் போனார்கள். திரைப்படத்தை திரும்ப எடிட் செய்தார்கள், இசைக் கோர்ப்பை லேசாக மாற்றினார்கள். ஆனால் திருப்தியாக இல்லை. ‘தேர்ட்டீன் வுமன்’ திரைப்படம் ரிலீஸாவது தள்ளிப் போனது. நொறுங்கிப் போனார் பெக். எத்தனை வருடப் போராட்டத்துக்குப் பின் வந்த முதல் வாய்ப்பு! இனிமேல் அவ்வளவுதானா? எல்லாம் முடிந்துவிட்டதா?!
1932, செப்டம்பர் 16. இரவு சாப்பாடு முடிந்தது. பெக், தன் சித்தப்பாவிடம், ‘‘அப்பிடியே பீச்வுட் பக்கம் ஒரு வாக் போயிட்டு, அங்கே இருக்குற மருந்துக் கடையில என் ஃபிரெண்ட்ஸையும் பார்த்துட்டு வர்றேன்’’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். பாதி தூரம் போனதும் அவர் பாதை மாறியது. ‘HOLLYWOOD’ எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கும் மவுன்ட் லீ மலையில் ஏற ஆரம்பித்தார். அந்த எழுத்துகளுக்கு அருகே வந்து நின்றார். ஒவ்வொன்றும் 45 அடி உயரம், 30 அடி அகலம் கொண்டவை. தன் மேல் கோட்டை அழகாக மடித்து கீழே வைத்தார். பக்கத்தில் தன் பர்ஸையும் வைத்தார். அந்த போர்டை பராமரிக்கும் தொழிலாளர்கள் பயன்படுத்தும் ஏணியில் ஏறி ‘H’ என்ற எழுத்தின் உச்சிக்குப் போனார். காற்று சில்லென்று அடித்தது. அதிலிருந்து தரையைப் பார்த்தார். குதித்தார். தற்கொலை செய்து கொண்ட போது அவருக்கு வயது 24.
இது நடந்து இரண்டு நாள் கழித்து, ஹாலிவுட் லேண்டில் பெண்ணின் பிணம் ஒன்று கிடப்பதாக ஒரு பெண்மணி போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். போலீஸ் வந்தது. பெக் விட்டுப் போன கோட்டும் பர்ஸும் கிடைத்தன. நேர்த்தியாக உடை அணிந்த, நீலக் கண்களை உடைய, அழகான கூந்தலுடன் கூடிய பெக்கின் பிணம் கிடைத்தது. பெக்கின் சித்தப்பா கதறியபடி அடையாளம் காட்டினார். பிரேத பரிசோதனையில் இடுப்பெலும்பு முற்றிலுமாக நொறுங்கிப் போய் பெக் மரணமடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பெக், இறப்பதற்கு முன்பு தன் பர்ஸில் ஒரு கடிதத்தை எழுதி வைத்திருந்தார். அதை அமெரிக்காவின் பிரபல பத்திரிகைகள் பிரசுரம் செய்தன. ‘ஒரு கோழையாக இருப்பதை நினைத்து நான் பயப்படுகிறேன். எல்லாவற்றுக்கும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இதை நான் வெகு காலத்துக்கு முன்பே செய்திருந்தால், நிறைய வலிகள் ஏற்படாமல் தவிர்த்திருக்கலாம்’.
நிறைய படங்களில் நடிக்கவில்லை, பெரும் புகழும் பணமும் சம்பாதிக்கவில்லை. ஒரே ஒரு படம்தான். ஆனால், இன்றும் ஹாலிவுட்டில் மறக்க முடியாத ஒரு பெயராக இருப்பது ‘பெக் என்ட்விஸ்லே’. எவ்வளவோ போராடிப் பார்த்தவர் இன்னும் சில காலம் காத்திருந்திருக்கலாம் என்பதுதான் காலம் அவருக்கு சொன்ன தீர்ப்பு.
அவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து, ‘தி பீவர்லி ஹில்ஸ் ப்ளேஹவுஸ்’ நிறுவனத்திடம் இருந்து பெக்கின் பெயருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தை சித்தப்பா ஹெரால்ட் வாங்கிப் பிரித்தார்.
‘மிஸ் பெக் என்ட்விஸ்லே அறிவது. நாங்கள் அடுத்து ஒரு திரைப்படம் தயாரிக்க இருக்கிறோம். அதில் நடிப்பதற்கு உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். கதா பாத்திரம் என்னவென்றால், மன உளைச்சலால் ஒரு இளம் பெண் தற்கொலை செய்து கொள்கிறாள்…’
இதை என்னவென்று சொல்வது? விதியா? எப்படி இருந்தாலும் பெக் இன்னும் கொஞ்சம் பொறுமையாகக் காத்திருந்திருக்கலாம்.
– பாலு சத்யா
Peg Entwistle
Born – Millicent Lilian Entwistle, 5 February 1908, Port Talbot, Wales
Died – 16 September 1932 (aged 24), Hollywood, California, U.S.
Cause of death – Suicide
Resting place – Oak Hill Cemetery
Nationality – English
Occupation – Actress
Years active – 1925–1932
Spouse(s) – Robert Keith (m. 1927–1929)