நீங்கள் மின்னஞ்சல் முகவரி வைத்திருக்கிறீர்களா? நல்லது.
அதை முறையாக, எச்சரிக்கையாகக் கையாள்கிறீர்களா? என்ன… இல்லையா? அல்லது அதைப் பற்றிய யோசனை எதுவும் இல்லையா? உஷார்! திருடர்கள் உங்கள் மின்னஞ்சலில் நுழைந்து உங்களை வேவு பார்க்கக்கூடும்.
தகவல் பரிமாற்றத்துக்கு உலகில் பலரும் பெரிதும் நம்பி இருப்பது ‘இ-மெயில்’ எனப்படும் மின்னஞ்சல் வழிமுறையைத்தான். சொந்தமாக கம்ப்யூட்டர் வைத்திருக்காதவர்கள் கூட மின்னஞ்சல் முகவரி வைத்திருப்பார்கள். மிகப் பெரிய தகவல் பரிமாற்றப் புரட்சிக்கு விதை போட்டது இந்த மின்னஞ்சல். அதிலும் சில திருடர்கள் நுழைந்திருப்பதுதான் கவலைக்குரிய செய்தி!
மின்னஞ்சலைப் பயன்படுத்தப்படும் போது செய்யக்கூடாத 11 விஷயங்களை பட்டியல் போட்டிருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த ஆடம் கே லெவின். 30 வருடங்களாக நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் அனுபவம் வாய்ந்த ஆடம் கே லெவின் பட்டியலிட்ட விஷயங்கள் இங்கே…
- இன்டர்நெட் மையங்கள், நூலகங்கள் போன்ற இடங்களில் இருக்கும் கம்ப்யூட்டர்கள் பாதுகாப்பாற்றவை. அவற்றில் தந்திரங்களைச் செய்து, இ-மெயில் செக் செய்யும் போது உங்கள் பாஸ்வேர்டைக்கூட சிலர் திருடிவிடும் வாய்ப்பு உண்டு.
- வேலை முடிந்ததும் உடனே இ-மெயிலை லாக் ஆஃப் (Logoff) செய்துவிட வேண்டும். Signed up நிலையிலேயே வைத்திருந்தால் உங்கள் மின்னஞ்சல்களில் இருக்கும் தகவல்களை யாராவது நோண்டவோ, தெரிந்து கொள்ளவோ வாய்ப்பு இருக்கிறது.
- மின்னஞ்சல் பெயரும் (Login Name) பாஸ்வேர்டும் ஒன்றாக இருக்கக்கூடாது.
- பயன்படுத்துபவர் பெயர், பாஸ்வேர்ட், பண விவரங்கள் குறித்த தகவல்கள், தொடர்பு கொள்ளும் விவரம் போன்ற மிக நுட்பமான, முக்கிய தகவல்களைத் தாங்கியிருக்கும் பழைய மின்னஞ்சல்களை அவ்வப்போது முறையாக அழித்து (Delete) விட வேண்டும்.
- மிகக் குறைவான வட்டி விகிதத்தில் உங்களுக்கு கடன் தருவதாகவோ, கிரெடிட் கார்டு தருவதாகவோ உத்தரவாதம் கொடுக்கிற மின்னஞ்சல்களா? எச்சரிக்கையாக இருங்கள்.
- நண்பர்களிடம் இருந்து வரும் தெளிவில்லாத, வைரஸ்களைத் தாங்கி வருவது போலத் தெரியும் மின்னஞ்சல்களை க்ளிக் செய்யாதீர்கள். சில நாடுகளில் சைபர் குற்றவாளிகள், நண்பர்களைப் போல மின்னஞ்சலில் தோற்றம் காட்டி, கையில் காசில்லாமல் தவிப்பதாக ஏய்த்து பணம் பறித்திருக்கிறார்கள்.
- வங்கியிலிருந்தோ, கிரெடிட் கார்டு நிறுவனத்திலிருந்தோ ‘உங்கள் கணக்கை சரி பார்க்கவும்’ என்று வரும் மின்னஞ்சல்களிடம் கவனமாக இருங்கள். பணம் அல்லது உங்களுடன் ஏதாவது ஒப்பந்தம் என முக்கியமான விஷயங்களைக் கையாளும் நிறுவனத்துடன் தகவல் தொடர்புக்காக மின்னஞ்சலைப் பயன்படுத்தாதீர்கள். உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை ஒருபோதும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
- பல திருட்டுகள் இதுவரை உங்களுக்கு அறிமுகமாகாதவர்களுக்கு அனுப்பும் பணத்துடன் தொடர்புடையவை. ‘இந்த செக்கை பணமாக மாற்றிக் கொடுங்கள். இந்த பரிவர்த்தனையை (Transactions) முடித்துக் கொடுங்கள்’ என்றுதான் இவை தொடங்கும். ஜாக்கிரதை!
- ’உங்கள் கிரெடிட் கார்டு தொலைந்து போய்விட்டது’ என்று வரும் தந்திரமான செய்திகளைப் பார்த்து ஏமாந்துவிடாதீர்கள்.
- ‘அந்த நிவாரணத்துக்குப் பணம் கொடுங்கள்… இதற்கு உதவி செய்யுங்கள்’ என நன்கொடை கேட்டு வரும் மின்னஞ்சல்களில் இருந்து விலகியே இருங்கள்!
- எங்கேயாவது பயணம் செல்ல இருக்கிறீர்கள். ‘மிகச் சிறந்த… மிக உண்மையான எங்கள் நிறுவனம்’ என்று சொல்லி உதவுவது போல வரும் டிராவல் ஒப்பந்தக்காரர்களின் மின்னஞ்சல்களை கண்டு கொள்ளாதீர்கள்.
Photo Credit: http://www.bbb.org
தொகுப்பு: பாலு சத்யா
nandri payanulla seithikal