இன்றொருநாள்-
அரைக்கம்பத்தில் பறக்கட்டும்
அன்னைத் தமிழ்க்கொடி
ஓய்வு கொள்கிறது
தமிழின் சுவாசம்
வெறிச்சோடிக் கிடக்கிறது வெள்ளித்திரை
எதிரியின் பலத்தில் பாதி மட்டுமல்ல
வாலிபம் என்கிற வார்த்தையிலும் பாதி
வாலிதான்!
வாலியே
கருப்பும் வெளுப்பும் கலந்து நெய்த
கவிதைத் தாடியே
வெள்ளித்திரையின் வியாசனே
திசையெல்லாம் ஒலிக்கிற திரைக்கம்பனே
சுய விமர்சனத்தில் நீ
கறாரான கம்யூனிஸ்ட் போல…
அதனால்தான் சொன்னாய்:
“மெட்டுக்குத் தாலாட்டும் தாய்
துட்டுக்கு வாலாட்டும் நாய்”
பலநேரம்
உன் வாய் சிவந்திருந்தது
சிலநேரம்
உன் வார்த்தை மஞ்சளாயிருந்தது
கவிதைப்பயிரோ…
எப்போதும்
பச்சைப் பசேல் என்றிருந்தது
உன்னை எதிர்கொண்டதால்
எமனின் பலம் இருமடங்கானது
ஸ்ரீராமன்
வாலியை மறைந்திருந்து கொன்றதாய்
வழங்கும் புராணம்
வாலியே… நீ மறைந்து…
எங்களைக் கொன்றாய்
இது என்ன நியாயம்?
– நா.வே.அருள்