பெயரின்றி அமையாது உலகு!

Image

ரு மனிதனின் அடையாளம் எது? கண், காது, மூக்கு உள்ளிட்ட முகமா? கைகளா, கால்களா, உடலா? இல்லை. பெயர். அதுதான் மனிதர்களின் முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வந்திருக்கிறது. சரி. மனிதர்களுக்குப் பெயரே இல்லை என்றால் என்ன ஆகியிருக்கும்? நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. ‘உள்ளங்கை அளவு முடியை பின்னல் போட்டிருப்பாங்கள்ல… கொஞ்சம் குண்டா, கருப்பா, உதட்டுக்கு மேல கூட மச்சம் இருக்குமே…’ என்றோ, ‘ஒல்லியா வெடவெடன்னு காத்தடிச்சா பறந்து போற மாதிரி இருப்பாரே… அவரு இருக்காருங்களா?’ என்றெல்லாம்தான் அடையாளம் சொல்லி மனிதர்களைத் தேட  வேண்டியிருக்கும். மனிதர்களுக்கு ‘நாமகரணம்’ அதாவது ‘பெயர்’ சூட்ட வேண்டும் என்று முடிவு செய்த நம் மூதாதையர் புத்திசாலிகள். பெயர் வைத்ததால்தான் முகவரி என்ற ஒன்று அமைந்தது. அதாவது தெருக்களுக்கும் பெயர். வீட்டு கதவுகளுக்கு ‘இலக்கம்’ என்கிற எண்ணாலான பெயர். இன்றைக்கு கொட்டாம்பட்டியிலிருந்து ஒருவர் சான்ஃபிரான்சிஸ்கோவுக்கு கடிதம் அனுப்பினால், உரிய இடத்துக்கு, உரிய நபருக்குப் போய்ச் சேர்ந்துவிடும். காரணம், பெயர்களால் அமைந்தது உலகு!

தமிழில் புனைபெயரில் எழுதும் கவிஞர்கள், எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ‘பிரபஞ்சன்’, ‘பிரளயன்’, ‘கந்தர்வன்’ என்றெல்லாம் பெயர்களைப் படிக்கிறபோது, ‘நம்ம அப்பன், ஆத்தா இப்பிடி ஒரு பேரை வைக்காமப் போயிட்டாகளே’ என்கிற ஆதங்கம் சமயத்தில் எழும். ‘ஏ யப்பா… பேரச் சொல்றதுக்கே என்னா கம்பீரமா இருக்கு?’ என்று தோன்றும். என்னப்பா இது ‘ராக்காயி… மூக்காயி… கருப்பாயி’ன்னுட்டு என்று சலிப்பாக இருக்கும். பெயர் வரலாறு உண்மையில் விறுவிறுப்பானதுதான். இதைப் பற்றி யாராவது ஆய்வு செய்தால் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கக்கூடும்.

பெயருக்கு முன்னால் திரு., திருமதி, திருவளர் செல்வன், திருவளர் செல்வி, மாண்புமிகு… என்கிற அடைமொழியெல்லாம் எப்போது வந்ததென்று தெரியவில்லை. ‘ரத்தக்கண்ணீர்’ படத்தில் எம்.ஆர்.ராதா அவர்கள், ‘சீமான்களே… சீமாட்டிகளே…’ என்று ஆரம்பித்து ஓர் உரை நிகழ்த்துவார். சிறு வயதில் அப்படி ஒரு வார்த்தையைக் கேட்டு பிரமித்துப் போன அனுபவமும் எனக்கு உண்டு. வீட்டில் வந்து அதற்கு அர்த்தம் கேட்டால், யாருக்கும் தெரியவில்லை. பள்ளிக்கூடத்தில் தயங்கித் தயங்கி சாந்தி டீச்சரிடம் கேட்ட பிறகுதான் அதற்கு விளக்கம் கிடைத்தது. ‘லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்”. அது சரி… எம்.ஆர்.ராதா ஆண்களை முன்னிலைப்படுத்தி ‘சீமான்களே… சீமாட்டிகளே…’ என்று ஏன் சொன்னார் என்பது இன்று வரை புரியத்தான் இல்லை. ‘சீமாட்டிகளே… சீமான்களே…’ என்று ஏன் சொல்லவில்லை?

இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயர்கள்கூட பெயர்க் குழப்பத்தால் தடுமாறிப் போயிருந்திருக்கிறார்கள். அதிகாரம் தங்கள் கைக்கு வந்த பிறகு, ஊர்களை, அங்கே இருக்கும் இடங்களை அடையாளப்படுத்த தங்களுக்குத் தோன்றியதையெல்லாம் வைத்தார்கள். அதை ஆவணப்படுத்தினார்கள். ‘திருச்சிராப்பள்ளி’ என்றால் ‘ட்ரிச்சினாப்போல்லி’. அழகான தூத்துக்குடிக்கு ‘ட்யூட்டிகோரின்’… இப்படி நீள்கிறது அவர்கள் பெயர் வைத்த சாகசம்.

ஒருமுறை இப்படி ஊர்களுக்கு பெயர் வைக்கும் ஆங்கிலேயர்கள் சிலர் போய்க் கொண்டிருந்தார்கள். ஓர் ஊர் வந்தது. அதன் பெயர் அவர்களுக்குத் தெரிய வேண்டும். அந்த ஊரின் பெயர் என்ன? கேட்பதற்கு ஆட்கள் யாரும் அருகே தென்படவில்லை. தூரத்தில் நான்கைந்து பெண்கள் இடுப்பில் குடத்துடன் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். தாங்கள் ஏறி வந்த குதிரைகளை விரட்டி, அவர்கள் அருகே போனார்கள். முன்னால் போன ஆங்கிலேய அதிகாரி ஒரு பெண்ணை வழிமறித்தார்.

‘‘ஹேய்… லேடி! வாட் இஸ் திஸ் ப்ளேஸ்…’

அந்தப் பெண் பயந்து போனாள். முன்னாள் போனவளைக் கூப்பிட்டாள்.

‘அடி… அக்கா… மங்கலம்…’

அந்த ஆங்கிலேய அதிகாரி தன் நோட் புக்கை எடுத்தார். பிரித்தார். அந்த ஊருக்கான பெயரை இப்படி எழுதினார்.

‘அடியக்க மங்கலம்.’ இன்னமும் அந்த ஊர் தமிழகத்தில் இருக்கிறது. இப்படி விசித்திரமான ஊர்களின் பெயர்கள் பல இருக்கின்றன. சென்னையைத் தாண்டி ஆந்திர எல்லையில் ‘தடா’ என்ற ஊர். கிராமங்களில் பல ‘பட்டி’ ஆனதும், நகரங்களில் சில பகுதிகள் ‘பேட்டை’ ஆனதும்கூட எப்படி என்று தெரியவில்லை. இருக்கட்டும்!

பெயரை மாற்றியதாலேயே பிரச்னைகளை எதிர்கொள்ளும் கதாநாயகன். அதைச் சுற்றிப் பின்னப்பட்ட கதைதான் ‘எதிர்நீச்சல்’ திரைப்படம். சமீபத்தில் வெளியாகி, வசூலில் சக்கை போடு போட்ட திரைப்படம். திரைப்படத்துறையில் இன்றைக்கும் சில பெயர்கள் வித்தியாசமாகத் தெரியும். அடைமொழிகளோடு கூடிய பெயர்கள் அவை. ‘தேங்காய்’ சீனிவாசன், ‘என்னத்த’ கன்னையா, ‘ஜாக்குவார்’ தங்கம், ‘உசிலை’ மணி, ‘கள்ளபார்ட்’ நடராஜன் இப்படி நீள்கிற பெயர்களுக்கு முடிவில்லை. அவையெல்லாம் காரணப் பெயர்கள். தமிழ் சினிமாவில் ‘தவக்களை’ என்றுகூட ஒரு நடிகர் அழைக்கப்பட்டார்!

நியூமராலஜி பார்த்து அந்த நம்பிக்கையில் தங்கள் பெயரை மாற்றி வைத்துக் கொள்கிறவர்கள் இன்றைக்கு ஏராளம். ‘பாலு’ என்கிற பெயரை ‘பலு’ என்று எழுதுவார்கள். ‘ரங்கன்’ என்கிற பெயரை ‘கு.ரங்கன்’ என்று மாற்றிக் கொள்வார்கள். அந்த பிரச்னைக்குள் நாம் போக வேண்டியதில்லை. பெயர்கள் மனிதர்களின் அடையாளங்கள். உலகின் மிகப் பிரபலமான மனிதர்களுக்கேகூட சில பெயர்க் காரணங்களும் உள்ளன.

Image

Image

உலகையே மிரட்டிய ஹிட்லரின் பெயர் கூட அப்படித்தான். குகைகளில் குடியிருக்கும் ஒருவகை குருட்டு வண்டான ‘அனாப்தால்மஸ் ஹிட்லேரி’யின் (Anophthalmus hitleri) நினைவாகத்தான் ‘அடால்ஃப் ஹிட்லர்’ என்று அவருக்கு பெயர் சூட்டப்பட்டது. பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலியின் பெயரும் அப்படித்தான். ஏப்டோஸ்டிகஸ் ஏஞ்சலினாஜோலியே (Aptostichus Angelinajolieae) என்ற சிலந்தியின் பெயரைத்தான் சுருக்கி ‘ஏஞ்சலினா ஜோலி’ ஆக்கினார்கள். அதே போல ‘அகாத்திடியம் செனியி’ (Agathidium Cheneyi) என்கிற வண்டின் பெயர்தான் முன்னாள் அமெரிக்க துணை முதல்வர் ‘டிக் செனி’ (Dick Cheney) ஆனது. அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ‘டொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட்’க்கு (Donald Rumsfeld) ‘அகாதிடியம் ரம்ஸ்ஃபெல்டி’ (Agathidium rumsfeldi) என்கிற வண்டின் நினைவாகத்தான் பெயர் சூட்டப்பட்டது. ‘முதலை வேட்டைக்காரர்’ என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வனவியலாளர் ‘ஸ்டீவ் இர்வின்’ ஒருவகை ரத்த ஒட்டுண்ணியான ‘ட்ரைபேனாசோமா இர்வினி’யின் (Trypanosoma Irwini) பெயராலேயே அழைக்கப்பட்டார். இவ்வளவு ஏன்… அமெரிக்காவின் பிரபல நடிகையும் பாடகியுமான பியோன்ஸ் நோல்ஸ், (Beyonce Knowles) ஸ்கேப்டியா பியோன்சே (Scaptia beyoncea) என்கிற பூச்சி. அமெரிக்க பிசினஸ்மேன் பால் ஆலன், (Paul Allen) எரிஸ்டலிஸ் ஆலெனி (Eristalis Alleni) என்கிற மலர் வண்டு. உலகின் மிகப் பெரிய பணக்காரரான பில்கேட்ஸ், எரிஸ்டலிஸ் கேட்டஸி (Eristalis Gatesi) என்கிற மற்றொரு மலர் வண்டு. இதையெல்லாம் எழுதுவதற்கே மூச்சு முட்டுகிறது. ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கும் பெயர்க் காரணத்தை ஆராய்ந்தால் நிச்சயம் தலை சுற்றும்.

திருநெல்வேலியில் பல பெண்களுக்கு ‘கோமதி’ என்று பெயர் இருக்கும். நெல்லை வாழ் அம்மன், கோமதியம்மனின் நினைவாக… மதுரையில் மீனாட்சி. காஞ்சியில் காமாட்சி. அப்பாவி என்றால் ‘அருக்காணி’ அல்லது ‘அலமேலு’. அல்ட்ரா மாடர்ன் என்றால் ‘அனன்யா’, ‘அசின்’… நீள்கிறது பெயர்களின் சரித்திரம்.

பெயர்க்காரணம் முக்கியமா, முக்கியமில்லையா? தெரியவில்லை. ஆனால், தனக்கு இப்படி ஓர் பெயரா என்கிற வேதனையில் ஒரு மனித உயிர் தன்னை மாய்த்துக் கொள்ளலாமா? சமீபத்தில் அந்த அவலம் நடந்தேறியிருக்கிறது. அந்தப் பெண்ணுக்குப் பத்தொன்பது வயது. அவளின் இறந்த உடல் ஒரு புதரில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. கீரனூருக்கு அருகே இருக்கும் மலை அடிவாரத்தில் அவள் உடல் கிடந்தது. கிராமத்துவாசிகள் அவள் உடலைக் கண்டுபிடித்து போலீசுக்குத் தகவல் சொல்லியிருந்தார்கள். விசாரணையில் அந்தப் பெண் மலை மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

நெடுஞ்சேரிக்கு அருகே இருக்கும் அன்னவாசலைச் சேர்ந்தவள் அந்தப் பெண். அவளுக்கு இருந்த பிரச்னை எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அவள் பெயர். ‘போதும் பொண்ணு’ என்று பெயர் வைத்திருந்தார்கள் பெற்றோர். அந்த தனித்துவமான பெயர்தான் அவள் மரணத்துக்கே காரணமாக அமைந்திருந்தது. மரணச் செய்தியாக ஒரு குறிப்பை எழுதிவிட்டுத்தான் அந்தப் பெண் இற்ந்திருந்தாள். அதில், இந்தப் பெயர் தன் தோழிகளாலும் உறவினர்களாலும் கிண்டல் செய்யப்படுவதை வருத்தம் தோய்ந்த வார்த்தைகளில் பதிவு செய்திருந்தாள். தொடர்ந்து மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறக்கும் போது, ‘போதும் பொண்ணு’ என்று பெயர் வைப்பது புதுக்கோட்டை வட்டாரத்தில் வழக்கம். அப்போதுதான் அடுத்ததும் பெண் குழந்தை பிறக்காது என்பது அவர்களின் நம்பிக்கை. அந்தப் பெயர், அந்தப் பெண்ணுக்குக் காரணப் பெயராக இருக்கலாம்; மரணப் பெயர் ஆகிவிட்டதுதான் துயரம். சில சமயங்களில் இதற்காகவெல்லாமா தற்கொலை செய்து கொள்வார்கள் என்றுகூடத் தோன்றும்.

‘வயிற்றுவலி காரணமாக பெண் தற்கொலை’. ‘கணவன் திட்டியதால் மனைவி தற்கொலை’. படிப்பவர்களுக்கு இது செய்தி. அனுபவித்துப் பார்க்கிறவர்களுக்குத்தான் அந்த வலி புரியும். ‘போதும் பொண்ணு’ அதை அனுபவித்தவள்!

– ஆனந்த பாரதி

Advertisements

One thought on “பெயரின்றி அமையாது உலகு!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s