துர்க்கை!

Image

நிலத்தடி நீர்மட்டம் குறையும்… விவசாயம் பாதிக்கப்படும்… சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும்… மக்களின் வாழ்வாதாரம் நசுக்கப்படும். படித்துப் படித்துச் சொன்னாலும் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் அதைக் கண்டுகொள்வதில்லை. காரணம், லட்சக்கணக்கில்… கோடிக்கணக்கில் பணம் புரளும் தொழில் அது! மணற் கொள்ளை! இந்தத் தொழில் கனஜோராக நடந்து கொண்டிருப்பது தமிழகத்தில் மட்டுமல்ல… இந்தியா முழுக்க!

ஏரிகள், ஆறுகள், நதிகள் என்று மணல் குவிந்து கிடக்கும் நீர்நிலைகளைத் தேடித் தேடி ஓடுகிறார்கள் மணற் கொள்ளையர். வண்டி வண்டியாக, லாரி லாரியாக மணலை அள்ளி காசு பார்க்கிறார்கள். சட்டத்துக்குப் புறம்பான இந்தத் திருட்டில் ஏகத்துக்கும் லாபம் பார்க்கிற இவர்களை எதிர்க்க பலருக்கு ஏன்… பல அதிகாரிகளுக்குக்கூட துணிவிருப்பதில்லை. எதிர்த்தால் மிரட்டல் வரும்… சமயத்தில் உயிருக்கேகூட ஆபத்து நேரிடும். இந்தத் தொழிலில் ஈடுபட்டவர்கள் எதற்கும் துணிந்தவர்கள். ஆள் பலம் உள்ளவர்கள். தமிழகத்திலேயே இந்தத் திருட்டை எதிர்த்த ஓர் அதிகாரி தன் உயிரை பலியிட நேர்ந்திருக்கிறது. அப்படிப்பட்ட மணற் கொள்ளையை எதிர்த்து அதிரடியாகக் களமிறங்கி, ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி.

மேற்கு உத்தரப்பிரதேசத்தில், யமுனை நதியிலும் அதன் கிளை ஆறான ஹிந்தோன் ஆற்றிலும் தொடர்ந்து மணற் கொள்ளை நடந்து வந்திருக்கிறது. கௌதம் புத்தா நகர் மாவட்டத்தில், கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து மட்டும் காவல்துறையினர் பயந்து பயந்து மணல் திருட்டு தொடர்பாக 17 எஃப்.ஐ.ஆர்.களை பதிவு செய்திருக்கிறார்கள். பல வழக்குகளில், வட்டாரத் தலைமை நீதிபதிகள் சட்டத்துக்குப் புறம்பாக மணல் அள்ளுபவர்களை கைது செய்ய உத்தரவிட்டிருக்கிறார்கள். ஆனாலும் மணல் திருட்டுத் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

Image

துர்க்கா சக்தி நாக்பால் இதற்கு முடிவு கட்ட எண்ணினார். இவர் ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி. துணை மாஜிஸ்ட்ரேட்டாக இருப்பவர். இதற்காகவே ஒரு தனிப்படையை அமைத்தார். அதில் வருவாய்த்துறையினர், காவல்துறையினர், போக்குவரத்துத்துறையில் பணியாற்றுபவர்கள் எல்லோரும் இருந்தார்கள். ஒட்டு மொத்தமாகக் கிளம்பி ஒரே இடத்துக்குப் போகாமல், தன் அணியில் இருந்தவர்களைப் பிரித்தார். அக்ஸர்பூர், ஜெகன்பூர் சாப்ரோலி, குலாவ்லி, கம்பாக்‌ஷ்பூர்… என்று மாவட்டத்தில் மணற் கொள்ளை நடக்கும் பல கிராமங்களில் அதிரடியாக ரெய்டு நடத்தினார். இந்த ரெய்டில் கடந்த 2 நாட்களில் மட்டும் மணற் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட 24 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. திருட்டில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதோடு மணற் கொள்ளைக்குத் துணை போகும் அரசு அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்திருக்கிறார் துர்க்கா.

அதே நேரத்தில், மணற் கொள்ளையர்கள் மீதான பயமும் மக்கள் மத்தியில் அதிகமாகிக் கொண்டே போகிறது என்பதைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை, நொய்டா நெடுஞ்சாலையில் ஒரு மணல் லாரி, போலீஸ் ஜீப்பின் மீது மோதியதில் 5 காவல்துறையினர் காயமடைந்திருக்கிறார்கள். இதைப் பார்த்தெல்லாம் பயப்படும் நிலையில் இல்லை துர்க்கா.

‘‘எங்களுக்கும் சட்ட விரோதமாக மணல் அள்ளுபவர்களுக்கும் இடையில் எந்த தனிப்பட்ட விரோதமும் இல்லை. அவர்களுடன் எங்களுக்கு சண்டையும் இல்லை. இந்த சட்ட விரோதமான திருட்டு பெரிய பிரச்னையாக நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அதனால் ஒட்டு மொத்த மாவட்டமுமே பாதிப்புக்கு உள்ளாகிறது. இதில் பெரும் தொகை பங்காகக் கிடைக்கிறது என்பதாலேயே பலரும் இந்தத் தொழிலில் இறங்குகிறார்கள். ஆனால், இந்தத் திருட்டு மிகத் தீவிரமான சுற்றுச்சூழல் பிரச்னையை ஏற்படுத்திவிடுகிறது. அதனால் இதை நிறுத்தியே ஆகவேண்டும்’’ என்று ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் உறுதியான குரலில் சொல்லியிருக்கிறார் துர்க்கா.

– பாலு  

குறிப்பு: கடந்த சனிக்கிழமை துர்க்கா சக்தி நாக்பால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. சக அதிகாரிகள் துர்க்காவின் சஸ்பென்ஷன் ஆர்டரை திரும்பப்பெறக் கோரி தலைமைச் செயலருக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s