‘படிப்பதைத் தவிர மகிழ்ச்சியைத் தரும் வேறொரு விஷயம் இல்லை என்று நான் அறிவிக்கிறேன்’.
பிரபல ஆங்கில நாவலாசிரியை ஜேன் ஆஸ்டன் (Jane Austen), ‘ப்ரைடு அண்ட் ப்ரிஜுடீஸ்’ (Pride and Prejudice) நாவலில் எழுதிய பிரபல வாசகம். அவரை கவுரவிக்கும் விதமாக இந்த வாசகத்தைத் தாங்கிய பத்து பவுண்ட் கரன்ஸி ஒன்று 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் வெளியாக இருக்கிறது. இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறார் ‘பேங்க் ஆஃப் இங்கிலாந்’தின் கவர்னர் மார்க் கார்னே. ஒரு சுவாரஸ்யமான செய்தி, அந்த கரன்ஸியில் இடம் பெற்றிருக்கும் ஆஸ்டனின் ஓவியம், அவர் சகோதரி கேஸ்ஸண்ட்ரா ஆஸ்டன் வரைந்தது. மற்றொரு சுவாரஸ்யம், கரன்ஸியில் இடம் பெற்றிருக்கும் கட்டிடம் (Godmersham Park), இவருடைய சகோதரர் எட்வர்ட் ஆஸ்டன் நைட்டின் வீடு. இந்த வீட்டுக்கு அடிக்கடி செல்வாராம் ஜேன் ஆஸ்டன். அந்த பாதிப்பில் உருவானதுதான் இவருடைய பல நாவல்கள் என்பது எத்தனையோ பேரின் நம்பிக்கை.
1775 டிசம்பர் 16ம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார் ஜேன் ஆஸ்டன். அப்பா மற்றும் சகோதரர்களிடம் ஆரம்பக் கல்வியைக் கொஞ்சம் கற்றுக் கொண்டார். பிறகு, தானே தேடித்தேடி பல புத்தகங்களைப் படித்து படிப்பறிவையும் எழுத்தறிவையும் வளர்த்துக் கொண்டார். ஆரம்பத்தில் இவர் எழுதிய எழுத்துப் பரிசோதனைகளும், நாவலும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டன. 1811ல் இவருடைய ‘சென்ஸ் அண்ட் சென்சிபிலிட்டி’ நாவல் எல்லோரையும் இவர் எழுத்தின் மேல் கவனம் கொள்ள வைத்தது. பிறகு வெளியான ‘ப்ரைட் அண்ட் பிரிஜுடிஸ்’, ‘மேன்ஸ்ஃபீல்ட் பார்க்’, ‘எம்மா’ நாவல்கள் இவருக்கு சமூகத்தில் பெரும் மரியாதையையும், திரளான வாசகர்களையும் பெற்றுத் தந்தது. இவை தவிர, நாவல்கள், கடிதங்கள், கவிதைகள், கட்டுரைகள் என பல தளங்களில் தன் முத்திரையைப் பதித்திருக்கிறார். மேலும் இரு நாவல்கள் எழுதினார். ‘சேண்டிடோன்’ (Sanditon) என்று ஒரு நாவலுக்குத் தலைப்பு வைத்து எழுத ஆரம்பித்து, நாவலை எழுதி முடிப்பதற்கு முன்பாகவே இறந்து போனார்.
2014ம் ஆண்டு, ஆஸ்டனின் பிரபல நாவல் ‘ப்ரைட் அண்ட் ப்ரிஜுடிஸ்’ வெளியாகி 200 வருடங்கள் நிறைவடையும் வருடம். இந்தச் சமயத்தில் அவருடைய உருவம் கரன்ஸியில் வெளியாக இருக்கும் அறிவிப்பு எத்தனையோ ரசிகர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்திருக்கிறது.
– மேகலா பாலசுப்ரமணியன்
Jane Austen
Born | 16 December 1775 Steventon Rectory, Hampshire,England |
---|---|
Died | 18 July 1817 (aged 41) Winchester, Hampshire, England |
Resting place | Winchester Cathedral, Hampshire, England |
Period | 1787 to 1809–11 |
Genres | Romance |