உலக அதிபர் மறைந்தார்!

Image

‘பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே… உலகில் பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே!’ எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், சீர்காழியின் குரலோடு அந்த வரிகள் ஒலிக்கும் போது ரசித்துக் கேட்போம். யதார்த்தத்தில் இப்படி ஒருவர் சொன்னால் ஏற்றுக் கொள்வோமா?

1948. மே 25. பாரீஸில் இருக்கும் அமெரிக்க தூதரகத்துக்குள் ஒருவர் நுழைகிறார். அங்கிருக்கும் அதிகாரிகள் அவர் வந்த காரணத்தை விசாரிக்கிறார்கள்.

‘‘என்னுடைய அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்’’.

அதிகாரிகள் திகைப்போடு அவர்களைப் பார்க்கிறார்கள்.

‘‘காரணம்?’’

‘‘நான் சாதரண அமெரிக்க குடிமகன் அல்ல; உலகக் குடிமகன். இந்த உலகத்தின் முதல் குடிமகன்’’.

அவர் பெயர் கேரி டேவிஸ் (Garry Davis). அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றியவர். கேட்பதற்குப் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றலாம். ஆனால், அவருடைய பரந்துபட்ட மனம், உலகத்துக்கு அவரை அடையாளம் காட்டியது. அவருடைய கொள்கை மிக எளிமையானது. ‘இந்த உலகம் தனித்தனி நாடுகளாகப் பிரிந்திருக்காவிட்டால் உலகில் சண்டை என்கிற பேச்சுக்கே இடமில்லை’. அவர் தன்னுடைய 91வது வயதில், சமீபத்தில் காலமானார்.

*

கடந்த வாரம் அவர் இறப்பதற்கு முன்பு வரைகூட அவர் அமெரிக்காவின் எந்த மாகாணத்தைச் சேர்ந்தவராகவும், எந்த நாட்டைச் சேர்ந்தவராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிக்கவில்லை. எந்த நாட்டுக்குள்ளேயாவது நுழைவார், துரத்தப்படுவார். அல்லது கைது செய்யப்படுவார். ஒன்றல்ல… இரண்டல்ல… பல நாடுகளில் அவருக்கு இந்த அவலம் நிகழ்ந்தது. அவரிடம் பாஸ்போர்ட் இருந்தது. அது அவரே வடிவமைத்த ‘உலக பாஸ்போர்ட்’. எந்த நாடும் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

உலகின் முதல் குடிமகனாகத் தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட கேரி டேவிஸ், பிராட்வேயில் ஒரு காலத்தில் பாட்டுப் பாடி, நடனமாடும் கலைஞர். ‘ஓர் உலகம்’ இயக்கத்தின் (One World Movement) தலைவராகத் தனக்குத் தானே பதவி சூட்டிக் கொண்டவர். நாடுகளுக்கு இடையிலான கோடுகளை அழித்துவிட வேண்டும் என்று கனவு கண்டவர். இன்றைய தேதியில் உலக அளவில் அவருக்குக் கிட்டத்தட்ட 10 லட்சம் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.

இப்படி தன்னைத்தானே ‘உலக குடிமகன்’ என்று அறிவித்துக் கொள்ளும் முதல் நபர் கேரி டேவிஸ் அல்ல. இருந்தாலும், அந்தப் பெயருக்காக விடமுயற்சியுடன், தளராமல் இறுதிவரை போராடியவர். ‘ஒரே உலகம்’ என்கிற வடிவத்துக்கு குரல் கொடுத்த ஆதரவாளர்கள் நிறையபேர். ஜெர்மன் தத்துவியலாளர் ஆல்பர்ட் ஸ்க்வீட்ஸர், ஜீன்-பால் சார்த்தர், விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், அமெரிக்க எழுத்தாளர் இ.பி.ஒயிட் போன்ற பிரபலங்களும் அதில் அடக்கம்.

டேவிஸ், இப்படி குரல் எழுப்பியதோடு அப்படியே சும்மா இருந்துவிடவில்லை. செயலிலும் இறங்கினார். 60 வருடங்களுக்கு முன்பு உலக மக்களின், உலக அரசாங்கத்தை நிறுவினார். அது முறையாக செயல்பட்டது. அந்த அரசு, ஆவணங்களை வெளியிட்டது. பாஸ்போர்ட் கொடுத்தது. அடையாள அட்டைகளை வழங்கியது. பிறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களை கொடுத்தது. அவ்வப்போது தபால்தலைகளையும், கரன்ஸிகளையும்கூட வெளியிட்டது!

உலக அதிபராக பதவி ஏற்பதற்கு டேவிஸ் விரும்பினாலும் அதற்கு எதிர்ப்புகளையே எப்போதும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பத்திரிகைகளும், பலரும் ‘அவர் கற்பனை உலகில் வாழ்பவர், அபத்தமாக யோசிப்பவர்’ என்று வாதாடினார்கள். அவருடைய ஆதரவாளர்களோ அவர் இதுவரை வழங்கியிருக்கும் ஆவணங்கள் எல்லாமே அகதிகளுக்கும் நாடற்றவர்களுக்கும் உண்மையான மதிப்பைப் பெற்றுத் தருபவை என்றார்கள்.

இப்போது சர்ச்சையில் சிக்கியிருக்கும் எட்வர்ட் ஸ்நோடெனுக்குக் கூட டேவிஸ் சில வாரங்களுக்கு முன்னால், ரஷ்ய அதிகாரிகள் மூலமாக ஒரு பாஸ்போர்ட் அனுப்பியிருந்தார். அதைப் பற்றி ஸ்நோடெனிடம் இருந்து இதுவரை கருத்து எதுவும் வெளிவரவில்லை.

*

Image

கேரி டேவிஸ், மூன்று முறை திருமணம் செய்து மண வாழ்க்கையில் இருந்து விவாகரத்துப் பெற்றவர். குழந்தைகள் இருக்கிறார்கள். புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவரை வைத்து ‘ஒன் தி கேரி டேவிஸ் ஸ்டோரி’ என்கிற ஆவணப்படம் 2007ல் வெளியாகியிருக்கிறது. அவர் மறைந்தாலும், ‘எந்த நாடுகளையும் சாராத மனிதன் நான்’ என்கிற அவருடைய குரல் பல காலத்துக்கு ஒலித்துக் கொண்டே இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

– பாலு சத்யா

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s