உலக தாய்ப்பால் வாரம் (ஆகஸ்ட் 1 – 7)
தாய்ப்பால் என்பது குழந்தைக்கு வழங்கப்படும் ‘தேவர்களின் அமுதம்’. அது கொடுக்கும் சக்தியைப் போல, வேறு எந்தப் பாலுக்கும் சக்தியில்லை. இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. பச்சிளம் குழந்தைகளுக்கும் குழந்தைகளுக்கும் தாய்ப்பால் மிக சத்தான உணவு. அதுதான் குழந்தையின் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் பாதுகாக்கிறது.
குழந்தைப் பருவத்தில் தாய்ப்பால் குடித்து வளர்ந்தவர்கள், பிற்காலத்தில் அதிக எடைப் பிரச்னைக்கோ, உடல் பருமனுக்கோ ஆளாவதில்லை. இது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. அவர்கள் நீரிழிவு என்று சொல்லப்படும் சர்க்கரை வியாதிக்குள் விழுவதில்லை; அதோடு அறிவுபூர்வமான பரீட்சைகளில் மிகச் சிறப்பாக தங்களை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், உலக அளவில் 38 சதவிகிதக் குழந்தைகளுக்கு மட்டுமே தாய்ப்பால் ஊட்டப்படுகிறது. அதுவும் ஆறு மாதங்களுக்கு என்பது வருத்தத்துக்குரிய செய்தி.
இந்தியாவில் 46 சதவிகிதக் குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் கிடைக்கிறது. அதுகூட தாய்ப்பாலுக்கு இணையான வேறு எந்த ஆகாரமும் குழந்தைக்குக் கிடைக்காத காரணத்தால்தான். ‘‘கிட்டத்தட்ட எல்லா தாய்மார்களும் தாய்ப்பால் கொடுக்கத் தகுதியானவர்களே! தாய்ப்பால் குறித்த மிகத் துல்லியமான தகவல்களும், ஆதாரங்களும் கிடைத்தால் அவர்களால் அது முடியும். ஆனால், பல இடங்களில் தாய்ப்பால் கொடுக்கவிடாமல் தாய்மார்கள் தடுக்கப்படுகிறார்கள். ‘மார்க்கெட்டில் புழக்கத்தில் இருக்கும் பல பால் பொருட்களைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால் போதும். அதுவே குழந்தைகளின் வாழ்க்கையைத் தொடங்க மிகச் சிறந்தது’ எனத் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் தாய்மார்கள்’’ என்கிறார் உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சித்துறையின் நிபுணர் கேர்மென் கேஸனோவாஸ் (Carmen Casanovas).
குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தேவையான அத்தனை சத்துணவுகளும் தாய்ப்பாலில் இருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள். அது பாதுகாப்பானது. அதில் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகமாக இருக்கிறது. அதனால் குழந்தைப்பருவத்தில், குழந்தைக்கு ஏற்படும் அடிப்படை நோய்களில் இருந்து தாய்ப்பால் குழந்தையைக் காப்பாற்றுகிறது.
தாய்ப்பால், தாய்மார்களுக்கும் நன்மை தருகிறது. மிக முக்கியமாக கருப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
Photo Credit: UNICEF India
– தீபா வெங்கடகிருஷ்ணன்