திருமணம் செய்த காரணத்தால் 19 வயது மாணவியை வகுப்புகளில் அனுமதிக்காமல் தேர்வெழுத விடாமல் தடை செய்தது ஒரு தனியார் கல்லூரி. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் கிளை அந்த மாணவியைக் கல்லூரியில் தொடர்ந்து படிக்க அனுமதிக்க வேண்டும் என்று கல்லூரிக்கு அறிவுறுத்தியிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவைச் சேர்ந்தவர் சி.சரஸ்வதி. திருச்செந்தூரில் இருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் (முதல் வருடம்) படித்து வந்தார். கடந்த மே மாதம் 7ம் தேதியில் இருந்து சரஸ்வதி வகுப்புகளில் அனுமதிக்கப்படவில்லை. அவருடைய தந்தை, தன் விருப்பம் இல்லாமல் சரஸ்வதி திருமணம் செய்து கொண்டதாக கல்லூரி நிர்வாகத்தில் புகார் செய்திருந்தார். இத்தனைக்கும் அந்தப் பெண்ணின் தந்தை குடும்பத்தை சரியாக கவனிப்பதில்லை. தன் அத்தையின் உதவியால்தான் சரஸ்வதி கல்லூரியில் படித்து வந்தார். அத்தை, தன் மகன் முருகபெருமாளைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி கோரிக்கை வைத்திருக்கிறார். சரஸ்வதி ஒப்புக் கொண்டார். சரஸ்வதியின் திருமணம் கடந்த ஏப்ரல் 10ம் தேதி உறவினர்கள் மற்றும் மூத்த குடும்ப உறுப்பினர்களின் முன்னிலையில் நடந்திருக்கிறது. திருமணம் செய்யப்பட்டது, முறையாக மே 7ம் தேதி பதிவும் செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் தந்தை அளித்த புகாரின் பேரில் சரஸ்வதி கல்லூரியில் அனுமதிக்கப்படவில்லை. வலுக்கட்டாயமாகக் கையெழுத்து வாங்கிக் கொண்டு ‘மாற்றுச் சான்றிதழ்’ (Transfer Certificate) கொடுத்திருக்கிறார்கள். இதையெல்லாம் தன் புகாரில் தெரிவித்திருந்தார் சரஸ்வதி.
வழக்கை விசாரித்த மதுரை பெஞ்ச், ‘விண்ணப்பதாரர் மேஜர். தன் வாழ்க்கையைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவருக்கு இருக்கிறது. இது தொடர்பாக கல்லூரி எடுத்த நடவடிக்கை ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல. இவரை படிப்பைத் தொடரவும், செமஸ்டர் தேர்வுகளை எழுதவும் கல்லூரி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்’ என்று தெரிவித்திருக்கிறது.