(உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1-7)
உலக விஞ்ஞானத்தின்
மொத்த சூட்சுமத்தையும்
கருப்பைக்குள் அடைகாக்கிறாள் தாய்
தாய்
குழந்தையைப் பெற்றெடுத்தாலும்
குழந்தைதான் தாயை வளர்த்தெடுக்கிறது
தாய்க்கு
மொத்தம் மூன்று இதயங்கள்
இரண்டில் பால் கசிகின்றன
ஒன்றில் அன்பு…
மண்ணுக்கு மழைநீர்
மழலைக்குத் தாய்ப்பால்
தாய்ப்பால்…
கடலில் அல்ல
உடலில் கடைந்த உயிரமுதம்
யாருக்கு வாய்க்கும் இலவச சத்துணவு
குழந்தைக்குத்தான்
மடியில் படுத்துண்ணும்
மாபெரும் பாக்கியம்
அறுநூறு வகை உயிரிகள்
இருநூறு வகை இனிப்புப் புரதங்கள்
உண்டால் உறக்கம்
மச மச கிறக்கம்
ஆயுள் முழுக்க நோய்கள் மரிக்கும்
போஸான் அணுத்துகளே … புரியவில்லையே
தரணியே அதிசயிக்கும்
இந்த தசை “பாட்டில்” தயாரிப்பு
மார்பகமா…மருந்தகமா ….
சமூக மனசாட்சியின் மீது சந்தேகம் கொண்டு
இயற்கை தந்த சீதனம்தான்
அன்னைக்கு இரண்டு அமுதசுரபிகள்!
தாய்ப்பாலுக்கு
மனிதர்கள் கொண்டாடுவது
வார விழா
குழந்தைகளுக்கு
தாய்ப்பால் கொண்டாடுவதோ…
ஆயுள்விழா!
– நா.வே.அருள்
அமுதம் – 3
Photo Courtesy: Mr. & Mrs. J. William Meek III. ©2006 Will Barne