தொட்டும்விடும் தூரத்தில் இல்லை வானம்!
அந்தப் பெண் மூன்று குழந்தைகளுக்கு மூத்தவள். அவள் பிறந்த போது அம்மாவுக்கு 16 வயது. அப்பாவுக்கு 17 வயது. பால்ய விவாகம் இங்கிலாந்திலும் நடந்திருக்கிறது என்பதற்கான அடையாளம்! அவள் சிறுமியாக இருந்தபோது இன்னொரு துயர சம்பவமும் நடந்தது. சேர்ந்து வாழப் பிடிக்காமல், அப்பாவும் அம்மாவும் பிரிந்து போனார்கள். அம்மா, தனி மனுஷியாக நான்கு குழந்தைகளையும் வளர்த்தார். பின்னாளில் அந்தப் பெண் வளர்ந்து, ஆளாகி ஒரு குறும்படம் இயக்கினார். ‘வாஸ்ப்’ (Wasp) என்ற அந்தக் குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. அந்தப் பெண்ணின் பெயர் ஆண்ட்ரியா ஆர்னால்ட் (Andrea Arnold).
அவரிடம் ஒரு பத்திரிகையாளர் கேட்டார்… ‘‘இது உங்கள் சொந்தக் கதை போல தெரிகிறதே?’’
‘‘நான் மிகச் சாதாரணமான உழைக்கும் வர்க்கக் குடும்பத்தில் இருந்து வந்தவள். அதனால், எனக்குத் தெரிந்ததைத்தான் கதையாக எழுதியிருப்பேன், அதைத்தான் திரைப்படமாக இயக்கியிருப்பேன் என்று நீங்கள் நினைக்கலாம் என்று நான் கருதுகிறேன்’’. இப்படி ஆண்ட்ரியா பதில் சொல்லியிருந்தாலும்கூட அந்த நிருபர் கேட்டதில் அர்த்தம் இருந்தது. ‘வாஸ்ப்’ கதைக்களன் அப்படி. நான்கு குழந்தைகளுடன் தனியாக வாழும் ஒரு தாய். முன்னாள் பாய் ஃப்ரெண்ட் ஒருவனை சந்திக்கிறாள். இருவருக்குள்ளும் நேசம் மலர்கிறது. குழந்தைகளை விடவும் முடியாமல், தன் பாய் ஃப்ரெண்டை தொடரவும் முடியாமல் தவிக்கிறாள். கிட்டத்தட்ட ஆண்ட்ரியாவின் அம்மா நிலையும் அதுதான்.
தென்கிழக்கு இங்கிலாந்தில் இருக்கும் கென்ட் பகுதியில், டாடர்ட்ஃபோர்டில் (Dartford) 1961, ஏப்ரல் 5ம் தேதி பிறந்தார் ஆண்ட்ரியா. சிறுமியாக இருந்த போதே படிப்பதிலும் எழுதுவதிலும் தீராத ஆர்வம் அவருக்கு. அந்த வயதிலேயே மனித வாழ்க்கையின் கறுப்புப் பக்கங்களை எழுதினார். பத்து வயது இருக்கும் போது ஒரு திகில் கதை எழுதினார். அடிமை வியாபாரத்தைப் பின்னணியாகக் கொண்ட கதை. அதைப் படித்துவிட்டு ஆண்ட்ரியாவின் அம்மா உருகிப் போனார்.
ஒரு நடனப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார் ஆண்ட்ரியா. சக மாணவிகள் பாப் இசை கேட்டுக் கொண்டோ, நடனப் பயிற்சியை செய்தபடியோ இருப்பார்கள். ஆண்ட்ரியா, ஆன் ஃபிராங்க்கின் டைரிக் குறிப்பை எடுத்து வைத்துக் கொள்வார். அறைக்குள் அங்கும் இங்கும் உலவியபடி, சத்தம் போட்டுப் படிப்பார். ஆசிரியர்கள், ‘இந்தப் பெண் மட்டும் ஏன் இப்படி இருக்கிறாள்?’ என்று குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள். பள்ளிப் படிப்பை முடித்த போது ஆண்ட்ரியாவுக்கு வயது 16. அடுத்தது என்ன? அவரின் குடும்பச் சூழ்நிலை மேற்படிப்புப் படிக்க அவருக்கு உதவவில்லை. இனி பிழைத்தாக வேண்டும். சொந்தக் காலில் நின்றாக வேண்டும். முக்கியமாக சம்பாதித்தாக வேண்டும். அதற்கு சிறந்த வழி நடிப்பது. ஒரு நடிகையாக தன் வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்தார் ஆண்ட்ரியா.
நினைப்பதெல்லாம் நடந்து விடுகிறதா என்ன? கென்ட்டை விட்டு கிளம்ப வேண்டும் என முடிவு செய்தாலும், மேலும் இரண்டு வருடங்கள் கழித்துதான் அவரால் லண்டனுக்குச் செல்ல முடிந்தது.
அவருக்கு அப்போது 18 வயது. லண்டனிலும் உடனே அவருக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. தொலைக்காட்சிதான் அவரை வரவேற்றது. அவருடைய முதல் வேலை நடனமாடுவது. அவர் கற்றுக் கொண்ட நடனப் பயிற்சி அதற்குக் கை கொடுத்தது. ‘டாப் ஆஃப் தி பாப்ஸ்’ நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார் ஆண்ட்ரியா. 1980ல் இன்னொரு வாய்ப்பு அவருக்குத் தேடி வந்தது. குழந்தைகளுக்கான தொலைக்காட்சித் தொடரில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் வேலை. அவ்வப்போது நடிக்கவும் செய்யலாம். அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பெயர் ‘நம்பர் 73’. அதன் மூலம் கொஞ்சம் பிரபலமானார். 1990ல் இளைஞர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒரு நிகழ்ச்சியில் தோன்றினார். ‘எ பீட்டில் கால்டு டிரெக்’ (A Beetle called Derek) என்ற அந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. ஆனாலும் என்ன… வயதைப் போலவே வாழ்க்கையும் ஓடிக்கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 10 வருடங்களைத் தொலைக்காட்சியில் தொலைத்திருந்தார் ஆண்ட்ரியா. இப்படியே போனால் என்ன ஆவது என்று தோன்றியது அவருக்கு. போதும், விட்டுவிடலாம் என முடிவெடுத்தார். ‘‘தொலைக்காட்சி என்பது மிகப் பெரிய வேடிக்கை. அதன் ஓட்டத்தோடு நானும் சேர்ந்து போய்க் கொண்டிருந்தேன். ஆனால், கேமராவின் முன்னால் நிற்கும் போதெல்லாம் என்னால் ஒருபோதும் சௌகரியமாக உணர முடிந்ததில்லை’’ என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் ஆண்ட்ரியா.
பல வருடங்களாக குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் தோன்றியவருக்கு ‘எ பீட்டில் கால்டு டிரெக்’ புதிய நம்பிக்கையைக் கொடுத்திருந்தது. இயக்குநராக வேண்டும் என்கிற ஆசையை ஏற்படுத்தியிருந்தது. தனக்குத் தெரிந்ததையெல்லாம், தன்னிடம் இருக்கும் கதைகளையெல்லாம் திரைப்படம் ஆக்க வேண்டும் என்று விரும்பினார் ஆண்ட்ரியா. அதற்கு முதலில் முறையாக சினிமாவைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் அவருக்குப் புரிந்தது. ‘அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் ஆஃப் லாஸ் ஏஞ்சல்ஸ்’ பள்ளியில் சேர்ந்தார். இயக்கத்தை மட்டும் கற்றுக் கொண்டால் போதாது. படைப்பாற்றலை வெளிப்படுத்தும் திரைக்கதையையும் முறையாகப் படிக்க வேண்டும் என முடிவெடுத்தார். அந்தப் படிப்பு முடிந்ததும் சொந்த ஊரான கென்ட்டுக்குத் திரும்பினார். அங்கே ‘பி.ஏ.எல். லேப்ஸ்’ல் (PAL Labs) திரைக்கதை எழுதுவது தொடர்பான படிப்பில் சேர்ந்தார்.
தவம் இருப்பது போல முயற்சி செய்து முன்னேறுவது ஒரு வகை. ஆனால், அதற்குக் கூட வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் சரியாக அமைய வேண்டும். ஆண்ட்ரியா மிகச் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். பற்றிக் கொள்ள ஆதாரங்கள் இல்லை. தானாகத் தவழ்ந்து, நடை பழகி, மெல்ல ஓடி, ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ள வேண்டும். ஓட்டப் பந்தய மைதானம் வரை வருவதற்கே படாதபாடு பட வேண்டி இருந்தது.
தன்னுடைய 37வது வயதில், 1998ல் ‘தி மில்க்’ என்ற முதல் குறும்படத்தை இயக்கினார். ஊடகங்களின் வெளிச்சம் அவர் மீது லேசாக விழுந்தது. பிறகு மூன்று வருடங்கள் இடைவெளி. 2001ம் ஆண்டு ‘டாக்’ என்ற மற்றொரு குறும்படம். ஏதோ புதிதாகச் செய்கிறாரே என்று எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். 2003. அவர் இயக்கிய ‘வாஸ்ப்’, ஒட்டுமொத்த உலகத் திரையுலகினரின், ஊடகங்களின் கவனத்தையும் பெற்றது. அதற்குப் பிறகு ‘ரெட் ரோட்’ (2006), ‘ஃபிஷ் டேங்க்’ (2009), ‘உதரிங் ஹெய்ட்ஸ்’ (2011) (Wuthering Heights) என மூன்று முழுநீளத் திரைப்படங்களை இயக்கிவிட்டார் ஆண்ட்ரியா. ‘ரெட் ரோட்’ திரைப்படத்துக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருது, ‘பாஃப்டா விருது’ (BAFTA Award), ‘ஃபிஷ் டேங்க்’ படத்துக்கு பிரிட்டிஷ் இண்டிபெண்டென்ட் ஃபிலிம் விருது, கேன்ஸ் திரைப்படவிழாவில் ஜூரி விருது, ‘பாஃப்டா விருது’, ‘உதரிங் ஹெய்ட்ஸ்’ படத்துக்கு வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான ‘கோல்டன் ஒசெல்லோ விருது’ எனப் பல விருதுகளைப் பெற்றுவிட்டார்.
‘உதரிங் ஹெய்ட்ஸ்’ படத்தைத் தவிர மற்ற எல்லாமே அவருடைய சொந்தக் கதைகள். ‘உதரிங் ஹெய்ட்ஸ்’கூட எமிலி ப்ரான்டே என்கிற பிரபல ஆங்கில எழுத்தாளரின் நாவல். அந்தப் படத்தில் திரைக்கதைக்கு மட்டும் தன் பங்களிப்பைச் செலுத்தியிருந்தார் ஆண்ட்ரியா.
இப்போது இங்கிலாந்தில் நீண்ட கால நண்பரான அலெக்ஸுடன் வசித்து வருகிறார். பல வருடப் போராட்டத்துக்குப் பின் திரையுலகில் நுழைய முடிந்தாலும் ஆண்ட்ரியாவின் சாதனையைக் குறைத்து மதிப்பிட முடியாது. திரைத்துறையில் கால காலத்துக்கும் அவர் பெயரை நினைவில் வைத்துக் கொள்ள ஆஸ்கர் விருது பெற்ற ‘வாஸ்ப்’ குறும்படம் ஒன்று போதும்.
– பாலு சத்யா
Andrea Arnold
Born | 5 April 1961 (age 52) Dartford, Kent, England |
---|---|
Occupation | Film director and actress |