(உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1-7)
புதிதாக இந்த உலகத்தைக் காண வரும் பிஞ்சுக் குழந்தைக்கு என்ன கொடுக்கலாம்? மருத்துவர்கள் வலியுறுத்துவது தாய்ப்பால். ஆனால், பழமையில் ஊறிய பலரும் கொடுப்பது, தேன், கோயில் தீர்த்தம் அல்லது சர்க்கரைத் தண்ணீர்.
பல குடும்பங்களில் குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் கொடுப்பதில்லை. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ‘குழந்தைக்கு செரிமானம் ஆகாது’. இந்த நம்பிக்கையிலேயே குழந்தை பிறந்த சில நாள்களுக்கு தண்ணீரையோ, தேனையோ மட்டும் கொடுப்பார்கள். வட இந்தியாவில் முதல் மூன்று நாட்களுக்குக் கோயிலில் இருந்து கொண்டு வந்த தீர்த்தத்தை மட்டுமே குழந்தைக்குக் கொடுக்கிற சில குடும்பங்களும் உண்டு. இப்படிப்பட்டவர்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர வைப்பது மிகவும் கடினமான காரியம்.
‘2011ல் உலக அளவில் 6 கோடியே 90 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களுடைய 5வது பிறந்தநாள் வருவதற்குள் இறந்திருக்கிறார்கள். இந்த இறப்புகளில் 98 சதவிகிதத்துக்கும் அதிகமான குழந்தைகள் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள். இப்படி இந்தியாவில் மட்டும் ஒரு கோடியே 6 லட்சம் குழந்தைகள் இறந்திருக்கிறார்கள்’ என்கிறது ஒரு புள்ளி விவரம். குழந்தைகள் நல மருத்துவர்களும், ஆரோக்கிய நிபுணர்களும் ‘பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் புகட்டினால், இது போன்ற இறப்புகளைத் தவிர்த்துவிடலாம்’ என்கிறார்கள். ‘ஒரு குழந்தையின் ஆயுளைப் பாதுகாப்பதற்கு மிகச் சிறந்த, செலவே இல்லாத வழி தாய்ப்பால் கொடுப்பது’ என்கிறது யூனிசெஃப் (The United Nations Children’s Fund) அமைப்பு.
‘‘குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் புகட்டத் தொடங்குவது, ரத்தத்தில் நஞ்சு சேருதல் (Sepsis), மார்ச்சளிக் காய்ச்சல் (Pneumonia), வெப்பக் குறைபாடுகள் (Hypothermia), வயிற்றுப் போக்கு ஆகிய பிரச்னைகளால் குழந்தை இறப்பதை 22 சதவிகிதம் தடுக்கிறது’’ என்கிறார்கள் யூனிசெஃப் அமைப்பின் நிபுணர்கள்.
‘தாய்ப்பால் குழந்தையின் கற்றல் திறனை வளர்க்க உதவுகிறது. உடல் பருமன் ஏற்படாமல் தடுக்கிறது. பிற்காலத்தில் குணப்படுத்த முடியாத வியாதிகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது’ என்கிறார்கள் மருத்துவர்கள். உண்மையில், இந்தியாவில் 34% குழந்தைகளுக்கு மட்டும்தான் பிறந்த 1 மணி நேரத்துக்குள் தாய்ப்பால் புகட்டப்படுகிறது.
இந்தியாவில், நகரங்களிலும் ஏன்… கிராமங்களிலும் கூட சில நாட்களுக்கு மட்டும் குழந்தைக்குத் தாய்ப்பால், பிறகு, பசுவின் பாலைக் கொடுத்துப் பழக்குகிறார்கள். ‘குழந்தை பிறந்த 12 மாதங்களுக்கு, புகட்டுவதற்கு ஏற்றதல்ல பசுவின் பால்’ என்கிறார்கள் மருத்து ஆய்வாளர்கள்.
‘குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்குக் கட்டாயம் தாய்ப்பால்தான் கொடுக்க வேண்டும். குழந்தை தாய்ப்பால் குடிக்கப் பழகும் வரை ஸ்பூனால் புகட்டலாம். தாய்ப்பாலோடு எந்த உணவையோ, நீர்ப்பொருளையோ சேர்க்கக்கூடாது. தண்ணீரைக்கூட சேர்க்கக்கூடாது’’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். கேட்க வேண்டியவர்களின் காதில் விழுந்தால் சரி.
Image credit: http://blog.yeeshungga.com
– ஆனந்த பாரதி
அமுதம் – 4