வரம் கிடைக்காத குழந்தைகள்!

Image

(உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1-7)

உலகிலேயே மிகக் குறைந்த காலத்துக்கு தாய்ப்பால் வரம் கிடைக்கப் பெற்ற குழந்தைகள் வாழும் நாடு, இங்கிலாந்து. ‘இங்கிலாந்தில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமான தாய்மார்கள், பிரசவத்துக்குப் பிறகு 6 வாரத்துக்கு மேல் தாய்ப்பால் கொடுப்பதில்லை’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். அதனால் அவர்களுக்குத் தங்கள் குழந்தைகளின் மேல் அக்கறையில்லை என்று அர்த்தமில்லை. தாய்ப்பாலின் அருமை அவர்களுக்குப் புரியவில்லை என்றுதான் அர்த்தம்.

‘உலகம் முழுக்க சத்துக் குறைபாடு காரணமாக, 5 வயதுக்குள் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 3 கோடியே பத்து லட்சம். அந்தக் குழந்தைகளில் பாதி முதல் நான்கு வாரத்துக்குள் (28 நாட்களில்) இறந்து போகின்றன’ என்று குறிப்பிட்டிருக்கிறது யுனிசெஃப் அறிக்கை ஒன்று. தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு ஏற்படாது. பல உடல்நலக் கோளாறுகள் நெருங்காது. இதை பழைய பதிவுகளில் திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டோம். நல்ல விஷயத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம்தானே!

பல பெண்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பதில் ஏற்படும் ஆதாரச் சிக்கல், பயம்! அழகு குறைந்து போகும், நம் சக்தி போய்விடும் என்கிற பயம். சில பெண்களுக்கு போதுமான அளவுக்குப் பால் இருக்குமோ, இருக்காதோ என்கிற நம்பிக்கை இன்மை. இவர்களுக்கெல்லாம் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு இல்லை. சரியான வழிகாட்டுதல் இவர்களுக்குத் தேவைப்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கும் மருத்துவரையோ, செவிலியரையோ அணுகினால் போதும், சந்தேகங்களைத் தீர்த்து வைத்து உதவுவார்கள்.  

பிரசவத்துக்குப் பிறகு கட்டாயமாக 6 மாத காலத்துக்கும், அதன் பின் 2 வயது வரைக்கும் மற்ற சத்தான உணவுகளுடனும் தாய்ப்பாலை குழந்தைக்குக் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் புகட்டுவது குழந்தைக்கு மட்டுமல்ல, தாய்க்கும் நல்லது. எல்லாவற்றுக்கும் மேல் குழந்தைக்கும் அம்மாவுக்கும் இடையே ஒரு ஆழமான நெருக்கத்தையும் பிரிக்க முடியாத பந்தத்தையும் ஏற்படுத்துவது தாய்ப்பால்தான்.

Image

அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (American Academy of Pediatrics) அமைப்பு, தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு ஏற்படும் சில நன்மைகளைப் பட்டியலிட்டிருக்கிறது. அவை…

 • காது தொற்று நோய்கள் (Ear Infections) ஏற்படாது.
 • வயிற்றுப் போக்கு வராமல் தடுக்கும்.
 • நிமோனியா காய்ச்சல், மூச்சுத் திணறல், மூச்சு நுண்குழாய் அழற்சி (Bronchiolitis) வராது.
 • இரைப்பை, குடல் அழற்சி நோய்கள் (Gastrointestinal) நெருங்காது.
 • சிறுநீர்ப்பை தொற்று நோய்கள் (Urinary Tract infections) உண்டாகாது.
 • மூளைக்காய்ச்சல் (Meningitis) நோயும் மற்ற பாக்டீரியா,  வைரஸ் தொற்று நோய்களும் ஏற்படாது.
 • ரத்தத்தில் நச்சுப் பொருட்களோ, சீழோ (Sepsis) ஏற்படாமல் தடுக்கும்.
 • பிற்காலத்தில் ‘டைப் – 1’ மற்றும் ‘டைப் – 2’ நீரிழிவு நோய் ஏற்படாது.
 • நிணநீர் திசுக்கட்டி (Lymphoma), வெள்ளணுப்புற்று (Leukemia) நோய்கள் ஏற்படாது.
 • குழந்தைப் பருவத்தில் ஏற்படும் அதிக எடை, உடல் பருமன் பிரச்னைகள் நெருங்காது.
 • அம்மாக்களுக்கு…
 • பிரசவத்துக்கு முன்பிருந்த அதே அளவுக்கு கருப்பை வெகு விரைவாகத் திரும்பும்.
 • மாதவிலக்கு தாமதமாகி, தாயின் உடலில் இரும்புச்சத்து சேருவதற்கு உதவும்.
 • வெகு விரைவிலேயே பிரசவத்துக்கு முந்தைய எடைக்குத் தாய் திரும்ப முடியும்.
 • எலும்புகள் வலுவடையும்.
 • மார்பகப்புற்று நோய், மற்றும் கருப்பைக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு வெகுவாகக் குறைக்கப்படும்.

குழந்தையின் உயிரைக் காப்பாற்றும், குழந்தை ஆரோக்கியமாக வளர உதவும் தாய்ப்பால், ‘அமுதம்’ என்பதில் சந்தேகமில்லை. தாய்ப்பாலின் மகத்துவத்தை ஒவ்வொரு அன்னைக்கும் உணர்த்துவோம். அந்த அமுதத்தைப் போற்றுவோம்! 

Image Credit: kootation.com

–  பாலு சத்யா 

அமுதம் – 6

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s