ஒரு கதைசொல்லியின் கதை!
உலக வரைபடத்தை விரித்துப் பார்த்தால், ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் ஒரு ஆமையை குறுக்கு வாட்டில் படுக்கப் போட்டது போல ஒரு நாடு இருக்கும். அது நைஜீரியா! ஆப்பிரிக்காவை கருப்பின மக்கள் ஒரு பெண்ணாகத்தான் பாவித்து வந்திருக்கிறார்கள். வரைபடத்தில் தெரிவதோ ஆரோக்கியமான பெண்மணி. எல்லா வளங்களும் இருந்தும் இன்று வரை ‘ஆப்பிரிக்கா’ என்கிற அந்த திடகாத்திரமான பெண்மணியால் மற்ற நாடுகளோடு போட்டி போட்டு மேலே ஏறி, மீடேற முடியவில்லை. வரலாற்று ஆய்வாளர்களும் பொருளாதார வல்லுனர்களும் ‘உள்நாட்டுப் பிரச்னை, இன மோதல்கள், படிப்பறிவின்மை’ என்று எத்தனையோ காரணங்களைச் சொல்கிறார்கள். அதெல்லாம் இல்லை. காலனியாதிக்கம்… கோடிக்கணக்கான கருப்பின மக்கள் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்ட இன்னொரு சரித்திரம்தான் இன்றைய நிலைக்குக் காரணம் என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். அந்த சரித்திர நிகழ்வுகளுக்குள் நாம் இப்போது போகப் போவதில்லை. ஆனால், ‘கோஸி ஆன்வுரா’வைப் (Ngozi Onwurah) பற்றித் தெரிந்து கொள்வதற்கு இந்தப் பின்னணி அவசியம் என்று தோன்றுகிறது.
‘கோஸி ஆன்வுரா’ நைஜீரியாவில் பிறந்தவர். பத்திரிகையாளர்களும் சினிமா விமர்சகர்களும் ஓர் இயக்குநர் என்பதையும் தாண்டி, அவரை ‘சிறந்த கதைசொல்லி’ என்றுதான் வர்ணிக்கிறார்கள். இத்தனைக்கும் பாதாள உலகம், ஒற்றைக்கண்ணுடனும் ஒன்பது தலையுடனும் உலகை மிரட்டும் அரக்கன், விண்வெளியில் பெயர் தெரியாத கிரகத்தில் வாழும் விந்தை மனிதர்கள் பற்றியெல்லாம் அவர் தன் படைப்புகளில் சொல்லவில்லை. தான் வாழ்ந்த வாழ்க்கையை, தான் அனுபவித்த இன்னல்களை தெளிவாகப் பதிவு செய்தார். அதன் காரணமாகவே கொண்டாடப்பட்டார். கொண்டாடப்பட்டு வருகிறார்.
‘பிறப்பதற்கு ஒரு பூமி, பிழைப்பதற்கு ஒரு தேசம்’ என்கிற கொடுமையான வரம் வாங்கி வந்த கோடானு கோடிப் பேர்களில் கோஸி ஆன்வுராவும் ஒருவர். 1966ல் நைஜீரிய கருப்பினத் தந்தைக்கும் ஸ்காட்லாந்திய வெள்ளையின அம்மாவுக்கும் பிறந்தார் கோஸி ஆன்வுரா. ஏற்கனவே பிரச்னை பூமி. உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தது. சரித்திரத்தில் வர்ணிக்கப்படும் ‘பயாஃப்ரா போர்’ (Biafra War). இனிமேலும் அங்கே வாழ முடியாது என்கிற சூழ்நிலையில் கோஸி ஆன்வுராவின் தாய் மேட்ஜே, இடம் பெயரலாமா என யோசித்தார். தந்தை வர மறுத்தார். தந்தைக்கு போரில் கொஞ்சம்… அல்ல… தீவிர ஈடுபாடு.
மேட்ஜே, வேறொரு நாட்டில் போய்க் குடியேறுவதில் தீவிரமாக இருந்தார். அவருக்குக் குழந்தைகளின் எதிர்காலம் முக்கியமாகப் பட்டது. எப்போதும் மனிதர்களின் வாழ்க்கை, தங்களோடு முடிந்து போய்விடுவதில்லையே! எந்த நாட்டுக்குப் போவது? அது, உலகம் முழுக்க இங்கிலாந்தின் மேல் ஈர்ப்புக் கொண்டிருந்த நேரம். அதுதான் சரி என்றும் மேட்ஜேவுக்குப் பட்டது. இங்கிலாந்துக்குக் குடியேற முடிவு செய்தார்.
கோஸியையும் அவர் சகோதரன் சைமனையும் அழைத்துக் கொண்டு இங்கிலாந்துக்குப் போனார். மேட்ஜே எதிர்பார்த்தது போல இங்கிலாந்து பூங்கொத்துக் கொடுத்து அவர் குடும்பத்தை வரவேற்கவில்லை. அங்கே பிரச்னை காத்திருந்தது. அவர்கள் எதிர்பார்க்காத புதுப் பிரச்னை. பின்னாளில் ஜெர்மன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் நடந்த ஒரு தருணத்தில் கோஸி ஆன்வுரா ஒரு பத்திரிகைக்குப் பேட்டி அளித்திருந்தார். அதில் இப்படிக் குறிப்பிட்டார்… ‘‘போர்ச்சூழல் என்பதற்காகத்தான் நாங்கள் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தோம். அங்கே இன்னொரு சண்டை காத்திருந்தது. அது, எங்களுக்காக மட்டுமே காத்திருந்த பிரத்தியேகச் சண்டை’’.
அப்படி என்ன பிரச்னை? நிறப் பிரச்னை. கோஸியும் சைமனும் கருப்பும் பிரவுனும் கலந்த நிறத்தில் இருந்தார்கள். அம்மா மேட்ஜே, வெள்ளை வெளேரென்று இருந்தார். அவர்கள் குடியேறியது ‘நியூ கேஸ்டில்’ என்கிற சின்னஞ்சிறு நகரத்தில் இருந்த ஒரு குடியிருப்புப் பகுதியில். அங்கே இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள், அதற்கு முன்பு கருப்பின மக்களை சந்தித்தது கிடையாது. அப்படி சந்தித்திருந்தவர்கள், கருப்பின மக்களோடு வாழ்ந்ததில்லை. அதுதான் பிரச்னை. இந்த இனப் பிரச்னை பெரியவர்களைவிட குழந்தைகளைத்தான் அதிகம் பாதித்தது. கோஸி ஆன்வுராவின் சகோதரர் சைமன் பல இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
‘டேய் கருப்பு நாயே… வெளியே வாடா!’ என்று வாசலில் குரல் கேட்கும். வெளியே வந்து பார்த்தால் யாரும் இருக்க மாட்டார்கள். எந்தக் காரணமும் இல்லாமல் சாத்தியிருக்கும் கதவின் மீதும் ஜன்னல்களின் மீதும் கற்கள் எறியப்படும். தெருவில் இறங்கி நடந்தால் பின்னால் கேலி, கிண்டல்களும், அசிங்கமான சொற்களும் காற்றில் பறந்து வரும்.
இதற்கு முடிவு கட்ட முடியாமல் பிள்ளைகள் திணறினார்கள். அம்மா மேட்ஜே, மௌனமாக கண்ணீர் வடித்தார். அவரால் அதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாதல்லவா?! கருப்பினர்கள் வாழும் நாடு என்றால் அவர்களுக்குள்ளேயே பிரச்னை. அதற்கு பயந்து வெளியே வந்தால் வேறொரு பிரச்னை. நாம் கருப்பாக இருப்பதால்தானே இப்படியெல்லாம் நடக்கிறது? கோஸியும் சைமனும் ஒரு முடிவெடுத்தார்கள். தங்கள் நிறத்தை எப்படியாவது வெள்ளையாக மாற்றுவதென்று! மிக உசத்தியான சோப்பை குளிப்பதற்கு உபயோகித்தார்கள். உடல் முழுக்க ப்ளீச்சிங் செய்து பார்த்தார்கள். ம்ஹூம்… ஒரு பயனும் இல்லை. அவர்கள் இயற்கை நிறத்தை மாற்ற எந்த ரசாயனமும் உதவவில்லை. பின்னாளில், தன்னுடைய ‘காஃபி கலர்டு சில்ட்ரன்’ படத்தில் இதை ஒரு காட்சியாகவே வைத்திருந்தார் கோஸி ஆன்வுரா.
வன்முறையாளர்களுடன் பழகிப் பழகி கோஸிக்குள்ளும் ஒரு வன்மம் குடி கொள்ள ஆரம்பித்தது. கோபம் என்கிற குணத்தையும் தாண்டிய வன்மம். நிறத்தால் பட்ட அவமானம், அவருக்குள் மெல்ல மெல்ல கொழுந்து விட்டு எரியத் தொடங்கி வன்மமாக, அதுவே படைப்பாக கருக் கொண்டது.
கோஸி வளர்ந்தாலும் நிறப் பிரச்னை அவரை விட்டு விலகுவதாக இல்லை. அந்தப் பகுதியை விட்டே போய்விடலாமா என்றுகூட யோசிக்க ஆரம்பித்தார் மேட்ஜே. இந்தப் பிரச்னையில் சிக்கி, சோர்ந்து போயிருந்த கோஸிக்கு பதினைந்தாவது வயதில் ஒரு வாய்ப்பு! அப்போது அவர் ஒரு ரயிலில் லண்டனுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார். யாரோ ஒரு மனிதர், கோஸியையே வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார். வெகு நேரம் அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. கோஸியின் அருகே வந்தார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
‘வணக்கம். நான் ஒரு மாடலிங் ஏஜென்ட். நேரடியாக விஷயத்துக்கு வந்துவிடுகிறேன். உங்கள் அழகு என்னை மிகவும் பாதித்துவிட்டது. என்னுடன் பணியாற்ற உங்களுக்கு விருப்பமா?’’
கோஸி, ஒரு கணம்தான் யோசித்தார். ஒப்புக் கொண்டார். அப்போதைக்கு அதைத் தவிர வேறு வழி இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. மாடலிங் பெண்ணாக மாறினார் கோஸி.
கோஸி, வெற்றிகரமான மாடலாக இருந்தாலும் அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. அது, அவர் உடல் பருமன். அவருக்கு சாதாரணமான உடல்வாகு கிடையாது. மற்றவர்களைவிட இரு மடங்கு. மாடலிங்குக்கு அந்த உடல் ஒத்து வராது. உடல் பருமனைக் குறைக்க கொஞ்சமாகச் சாப்பிட வேண்டியிருந்தது. பெரும்பாலும் பட்டினி! அவருக்கு சினிமாவில் ஈர்ப்பு அதிகமிருந்தது. மாடலிங் செய்யும் நேரம் போக, மீதி நேரத்தில் அதற்காகவே படித்தார். லண்டனில் இருந்த ‘செயின்ட் மார்ட்டின் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்’டிலும் ‘தி நேஷனல் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ஸ்கூல்’லிலும் சேர்ந்தார். படிப்பை முடித்தார். எத்தனை நாட்கள்தான் உடலை வறுத்தி, மாடலிங் செய்வது? சினிமாவில் இறங்கலாம் என முடிவெடுத்தார்.
1988ல் அவருடைய முதல் குறும்படம் ‘காஃபி கலர்டு சில்ட்ரன்’ வெளியானது. பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் வெற்றியும் பெற்றது. கூடுதலாக விருதுகள்! பி.பி.சி.யின் சிறந்த குறும்படத்துக்கான முதல் பரிசு, சான்ஃபிரான்சிஸ்கோ திரைப்பட விழாவில் ‘கோல்டன் கேட் விருது’, ‘நேஷனல் பிளாக் ப்ரோக்ராமிங் கன்சார்டியமின் ப்ரைஸ்டு பீஸஸ் விருது’ என்று அள்ளிக் குவித்தது அந்தக் குறும்படம். மொத்தம் பதினைந்தே நிமிடங்கள் ஓடும் அந்தக் குறும்படத்தில் தானும் சகோதரன் சைமனும் அனுபவித்த கொடுமையைத்தான் பதிவு செய்திருந்தார் கோஸி. ‘‘நான் பள்ளிக்கூடத்தில் அனுபவித்த கொடுமைகளையும் இன்னல்களையும் இந்தப் படத்தில் பதிவு செய்திருக்கிறேன். இப்படிச் செய்தால் எனக்குக் கிடைப்பது ஒன்று சிறையாக இருக்கும் அல்லது நான் ஒரு திரைப்பட இயக்குநராக இருக்க வேண்டும். இரண்டுக்கும் நடுவே வேறு எதுவும் இருக்க வாய்ப்பில்லை. நான் இயக்குநராகிவிட்டேன். என் கோபத்தை என் திரைப்படத்தில் வெளிப்படுத்தினேன்’’.
அதிர்ஷ்டம் கோஸி ஆன்வுராவின் பக்கம் இருந்தது. தொடர்ந்து குறும்படங்கள் இயக்கினார். எல்லாமே அவர் அனுபவித்த, கோடிக்கணக்கான கருப்பின மக்கள் அனுபவிக்கும் பிரச்னைகளைப் பேசும் படங்கள். 1991ல் அவர் இயக்கிய ‘தி பாடி பியூட்டிஃபுல்’ அவருக்கும் அவர் அம்மாவுக்குமான உறவுமுறை பற்றியது. ‘‘என் அம்மா அவர். என்னைப் பெற்றெடுத்தவள். ஆனால், எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அவர் வெள்ளை நிறம். நான் பழுப்பும் கருப்பும் கலந்த நிறம். இதில் இருக்கும் பல பிரச்னைகளை நான் பதிவு செய்ய வேண்டியிருந்தது’’ என்று ஒரு பத்திரிகையில் குறிப்பிட்டிருக்கிறார் கோஸி. அந்தப் படத்துக்கு மெல்போர்ன் மற்றும் மாண்ட்ரியலில் நடந்த திரைப்படவிழாவில் பரிசுகள் கிடைத்தன. அது மட்டுமல்ல, உலக அளவில் இருக்கும் பல பல்கலைக்கழகங்களில் திரைப்படப் பிரிவில் பாடமாகவும் வைக்கப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், நியூ யார்க் பல்கலைக்கழகம், மிட்சிகன் ஸ்டேட் பல்கலைக்கழகம் இவற்றிலெல்லாம் கோஸி, விரிவுரை ஆற்றவும் இந்தப் படம் ஒரு காரணமாக அமைந்தது.
1994ல் கோஸி ஆன்வுரா தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்கினார். ‘வெல்கம் II தி டெரர்டோம்’ என்பது படத்தின் பெயர். அது மிக அதிகமாக கவனம் பெற்றது. அதற்குக் காரணமும் உண்டு. இங்கிலாந்தில் முதன் முதலில் ஒரு கருப்பினப் பெண்ணால் இயக்கப்பட்ட முதல் முழுநீளத் திரைப்படம் அது. அதிலும் இனப்பாகுபாட்டை மையப்படுத்தியிருந்தார் கோஸி. ஒரு பத்திரிகை விமர்சனம் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, ‘முகத்தில் அடித்தது மாதிரி இருந்தது’ என்று விமர்சனம் எழுதியிருந்தது. அது 1652ல் தெற்கு கலிபோர்னியா கடற்கரையில் கருப்பின மக்களுக்கு நடந்த ஓர் நிகழ்வை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். கருப்பின மக்களுக்கும் வெள்ளையினத்தவருக்கும் இடையே நிகழும் இன வேறுபாட்டை வெகு சாமர்த்தியமாக, அதே சமயம் நுட்பமாக பதிவு செய்திருந்தது அந்தத் திரைப்படம்.
மொத்தம் ஒரு டஜன் படங்களை இயக்கியிருந்தாலும் கோஸிக்கு படம் எடுப்பது அவ்வளவு சுலபமான காரியமாக இல்லை. கருப்பினப் பெண் என்கிற ஒரே காரணத்துக்காகவே தயாரிப்பாளர்கள் மிகக் குறைந்த தொகையைக் கொடுத்தார்கள். அவ்வளவு போதும் என்பது அவர்களின் மனப்பான்மை. தொலைக்காட்சிகளில் கூட கருப்பினம் சார்ந்த படைப்புகளுக்கு ப்ரைம் டைமில் ஸ்லாட் கிடைப்பதில்லை என்பதையும் வருத்தத்தோடு பதிவு செய்திருக்கிறார் கோஸி. அதற்கெல்லாம் குறைந்த பார்வையாளர்கள்தான் இருப்பார்கள் என்பது தொலைக்காட்சி நடத்துபவர்களின் எண்ணமாக இருந்தது. ‘கருப்பின மக்கள் படம் எடுத்தால் அது அவர்களைப் பற்றிய படமாகத்தான் இருக்க வேண்டும் என்பது என்ன மோசமான மனநிலை?’ என்று வருத்தத்தோடு ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் கோஸி.
ஆல்வின் கச்லர் (Alwin Kuchler) என்ற ஒளிப்பதிவாளரைத் திருமணம் செய்து கொண்டார். அவரோடும் ஒரே மகளோடும் லண்டனில் வசிக்கிறார்.
மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் டாம் ட்ராட்மேன், ‘இந்த உலகத்தைப் பற்றி நமக்குத் தெரியாத பல விஷயங்களைச் சொல்லக்கூடியவர் இந்த சிறந்த கதைசொல்லி. அவை எல்லாமே வலியையும் வேதனையும் தரக்கூடிய கதைகள்’ என்று கோஸியைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
‘சிறந்த கதைசொல்லி’ என்று தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் கோஸி மெதுவான குரலில் சொல்வதெல்லாம் ஒன்றுதான்… ‘‘ஆப்பிரிக்கர்கள் மிகச் சிறந்த கதைசொல்லிகள். இப்போது நான் நைஜீரியாவுக்குத் திரும்பிப் போனால், என் அன்புக்குரிய வயதான உறவினர் யாராவது வருவார். என் அருகே அமர்வார். கதை சொல்ல ஆரம்பிப்பார். அது 400 வருடங்களுக்கு முன்பு நாங்கள் எங்கே இருந்தோம் என்கிற அற்புதமான கதையாக இருக்கும். ஆப்பிரிக்கர்கள் மிகச் சிறந்த கதைசொல்லிகள்…’’.
– பாலு சத்யா
Ngozi Onwurah | |
---|---|
Born | Nigeria, West Africa. |
Education | Film -St. Martin’s School of Art, The National Film (UK), The Television School (UK) |
Occupation | Director, Producer, Model, Lecturer |
Spouse(s) | Alwin Kutchler |
Children | 1 daughter |