காலத்தை வென்ற கதைகள் – 11

வாஸந்தி 

Imageதமிழ் எழுத்துலகில் தனக்கென தனித்துவமான அடையாளம் கொண்டவர். தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் முக்கியமான ஒருவராகக் கருதப்படுபவர். சமூக, மனித உளவியல் கூறுகளை வெகு இயல்பாக எழுத்தில் கையாண்டவர். இயற்பெயர் பங்கஜம். கர்நாடகாவில் உள்ள தும்கூரில் 1941, ஜூலை 26ல் பிறந்தார். பெங்களூரில் வசித்தபோது, ஜேன் ஆஸ்டன், ஜெயகாந்தன், அலெக்ஸாண்டர் டூமாஸ், சார்லஸ் டிக்கன்ஸ் எழுத்துகளைப் படிக்க ஆரம்பித்து, தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தார். இவருடைய ஆரம்ப கால நாவல்கள் எல்லாமே பெண்களை மையப்படுத்தி எழுதப்பட்டவை. டெல்லிக்கு இடம் பெயர்ந்த பிறகு அரசியல் நாவல்கள் எழுத ஆரம்பித்தார்.

மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்திலும் வரலாற்றிலும் பட்டம் பெற்றார். நார்வே நாட்டிலிருக்கும் ஆஸ்லோ பல்கலைக்கழகத்தில் முதுகலைச் சான்றிதழ் பெற்றவர். இவருடைய நாற்பது நாவல்கள், பதினைந்து குறுநாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. ‘இந்தியா டுடே’ தமிப் பதிப்பின் ஆசிரியராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். ‘பஞ்சாப் சாகித்ய அகாடமி’ விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவருடைய ‘வாஸந்தி சிறுகதைகள்’ நூலுக்கு தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் சிறந்த சிறுகதை நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது. இவருடைய சிறுகதைகளும் நாவல்களும் ஆங்கிலத்திலும் பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.

தேடல்  

கொல்லை முற்றத்துள் இறங்கிய படிக்கட்டில் அமர்ந்தபடி பார்த்தபோது அடர்ந்த வேப்பமரத்தின், மாமரத்தின் இலைகளின் ஊடே வானம் மிக மிக சமீபத்தில் தெரிந்தது. இளநீலத் துணி ஒன்று மரத்தைப் போர்த்தியிருந்த மாதிரி. சற்று எழுந்து கையை நீட்டினால் உள்ளங்கைக்குள் வசப்பட்டு விடும் போல. உட்கார்ந்த இடத்தை வெளிப்படுத்தாமல் பட்சிகள் குரல் எழுப்பின கூ…கூ… கீ…கீ… என்று சளசளத்தன. அவளுடன் அந்தரங்கம் பேச வந்தன. அவளுக்குத் தெரியும் மொட்டை மாடிப்படிகளில் ஏறிச் சென்று நின்றால் மரங்கள் தாழ்ந்து விடும். பட்சிகளை எத்தனை தேடினாலும் கண்ணில் படாமல் மாயமாய் இலைகளுக்குள் பதுங்கிக் கொண்டு கவி பேசும்.

குழந்தை சிணுங்கிற்று. ‘உஷ், நீ உன் குரலை எழுப்பாதே’ என்றாள் அவள் செல்லமாக. மார்போடு அணைத்து முழங்கால்களைச் சுற்றி கைகோர்த்து அமர்ந்தாள். பின்னால் அவனது காலடி சத்தம் கேட்கிறதோ என்ற சந்தேகத்துடன் திரும்பிப் பார்த்தாள். கொல்லையிலிருந்து வாசல் வரை கப்சிப்பென்று இருந்தது. குழந்தை அழுதால் அவனுக்குப் பிடிக்காது. அது இருப்பதன் பிரக்ஞை கூட அவனுக்கு கிடையாது என்று அவளுக்குத் தெரியும். அதனால்தான் குரல் எழும்போது திடுக்கிடுவான். அவளுக்கு மட்டுமே அது சொந்தம் போல் இருந்தது, அவனுடைய உணர்வுகளுடனோ உடலுடனோ சம்பந்தமில்லாமல். அவளது எண்ணங்களில் ஜனித்து உணர்வுகளோடு கலந்து. அதற்குப் பெயர் கூடக் கிடையாது. சமயத்திற்குத் தகுந்தாற்போல் அவளது கற்பனையில் பெயர்கள் தோன்றும். ஒரு நாள் நிலா, இன்னொரு நாள் ரோஜா, அல்லி, மல்லி, ஒரு நாள் காளி என்று கூடத் தோன்றிற்று. ஏன் கூடாது? அவளை அவன் எத்தனை முறை பத்ரகாளி என்று கூப்பிடுகிறான்! பத்ரகாளி என்பதற்கு ஆண்பால் என்ன என்று அவள் யோசித்தாள். குழந்தை மீண்டும் சிணுங்கிற்று. ‘உஷ் உஷ்’ என்று சமாதானப்படுத்தினாள். ‘பாட்டுப் பாடவா?’ என்றாள் குனிந்து மென்மையாக. கண்களை மூடி மனசுக்குள் முனகிக் கொண்டாள். மனசு முழுவதும் பொலபொலவென்று மல்லிகை மொட்டுகள் அரும்பி மலர்ந்தன. குப்பென்று எழுந்த வாசனை நெஞ்சை அழுத்திற்று. அதை உள்ளுக்கிழுத்து கண்களைத் திறந்த போது மரக்கிளைகளுக்கப்பால் புதிது புதிதாக வர்ணஜாலங்கள் தெரிந்தன. பதுங்கியிருந்த பட்சிகள் எட்டிப் பார்த்தன. பஞ்சபூதங்களும் இசைந்து சரிகமபதிநிஸ என்று சுருதி கூட்டினாற்போல் மௌனக் குகையில் புதையுண்டிருந்த வார்த்தைகள் வெடித்துச் சிதறி வரிவரியாக நெளிந்து மனத்திரையில் விழுந்தன. பனி மழையில் நனைந்த குளிர்ச்சியில் உடல் தண்ணென்றிருந்தது.

குழந்தையின் சிணுங்கல் அடங்கிப் போயிற்று. பேச்சு மூச்சில்லாமல் இருந்தது. அவளுக்குத்தான் களைத்து விட்டது. சற்று முன் வெளிப்பட்ட வார்த்தைகள் என்ன என்று சுத்தமாக நினைவில்லாமல் போயிற்று. வெற்றிடமாகிப் போன மனத்துடன் அவள் அமர்ந்திருந்தாள். இப்படித்தான் ஆகிறது எப்பவும். அவளுக்கு அம்மாவைப் பெற்ற பாட்டியின் நினைவு வந்தது. எண்பது வயதுப் பாட்டியைப் பார்த்துக் கொள்ளும் பொறுமை யாருக்கும் இல்லை. பாட்டியும் சும்மா இருக்கமாட்டாள். இரவு நேரத்தில் வீட்டுக்குள்ளும் கொல்லையிலும் அலையோ அலை என்று அலைவாள். என்ன தேடுவாள் என்று தெரியாது. கண் எப்படித் தெரிகிறது என்று அதிசயமாக இருக்கும். சில சமயம் வெல்லக்கட்டி, குழந்தைகள் பதுக்கியிருக்கும் சாக்லேட் அல்லது மோர், பால் எது இருந்தாலும் அவளுக்கு வாயில் போட வேண்டும். போடும்போது பாத்திரம் உருளும். சட்டி உடையும். அல்லது அவளே விழுந்து அடிபட்டுக் கொள்வாள். மாமியும் மாமாவும் கத்தோ கத்து என்று கத்துவார்கள். திருட்டுக் கிழம் என்று சபிப்பார்கள். ‘கிருஷ்ணா ராமான்னு கிடக்க வேண்டிய வயசிலே இது என்ன தீனிச் சபலம்’ என்று கத்தியபடி மாமா ரத்தத்தைத் துடைத்து மருந்து போடுவார். பாட்டி எதுவுமே காதில் விழாத மாதிரி உட்கார்ந்திருப்பாள். ‘ஏந்திருடரே… ஏந்திருடரே’ என்ற கத்தல் யாருக்கோ, தனக்கில்லை என்பது போல கண்ணை மூடிக் கொள்வாள். அவளுக்குத் தான் செய்தது ஞாபகம் கூட இல்லை என்று தோன்றும்.

எல்லாமே பழக்கத்தால் வருவது என்று தோன்றிற்று. மௌனமும் மறதியும் கூட. பாடப் பழகுவது போல பேசாமல் இருப்பதையும் பழகிக் கொள்ளலாம். ஆசைகளை அழித்துக் கொள்ளலாம். ஆனால் அந்தப் பழக்கம் ஏற்பட வேண்டுமென்றால் சில கொலைகளைச் செய்ய வேண்டும். பல சமயங்கள் குழந்தை அழும்போது அவன் போடும் கூச்சலுக்காக, அதைத் தூக்கிக் கொண்டு அவள் ஆற்றங்கரையோரமோ அல்லது மாந்தோப்புக்கோ செல்வாள். மறந்து போய் அங்கே எங்கோ புதரில் அதை விட்டுவிட்டு வந்து விட்டதைப் போல கனவு வரும். எது நிஜம் எது கனவு என்று புரியாமல் நெஞ்சம் தடுமாறும். எத்தனை நாட்களுக்கு, அவனுக்குத் தொந்தரவாக இருக்கக் கூடாது என்று குழந்தையைச் சுமந்து கொண்டு இப்படித் திரியப் போகிறோம் என்று அவளுக்குத் திகைப்பாக இருந்தது. அவனது கட்டுப்பாடுகளையும் மீறி அது எப்படி ஜனித்தது என்று அவளுக்குத் தெரியாது. ஆனால் அது அவளுக்கு வேறு ஒரு பிரபஞ்சத்தைக் காட்டும் அற்புதம். அதனாலேயே அதை அவனிடமிருந்து பாதுகாக்க வேண்டியது அவசியம் என்ற வெறி நாளுக்கு நாள் அதிகரித்தது. கிட்டத்தட்ட பாட்டியின் வெறியைப் போல, அவளது நேரத்தை, சிந்தனையை ஆட்கொண்டது. இதை எப்படி நிறைவேற்றுவது என்ற யோசனையில் நேரம் போவது தெரியாமல் அவள் உட்கார்ந்திருக்கிறாள்.

”என்ன எப்ப பார்த்தாலும் ஏதோ பெரிய யோசனையிலே உட்கார்ந்திருக்கே?” என்று அவன் நையாண்டி செய்வான். அல்லது தான் சொல்வதை அவள் காதில் போட்டுக் கொள்ளவில்லை என்கிற எரிச்சலில் கேட்டிருக்கிறான்.

Image

”ஒண்ணுமில்லே” என்பாள் அவள். அப்படி அவன் கேட்பதும், அப்படி அவள் பதில் சொல்வதும் பழக்கமாகிப் போயிருந்தது. அந்த ‘ஒண்ணுமில்லே’யில் பலவித பயங்கள் புதைந்திருந்தது அவனுக்குத் தெரியாது. அவளை ஆட்கொண்டு வரும் வெறியை அடக்கவே முடியாமல் போனால் என்ன செய்வது என்ற அவளது பீதியை அவனால் உணர முடியாது என்று தோன்றிற்று. மீராவுக்கும் ஆண்டாளுக்கும் கூட இப்படிப்பட்ட வெறி இருந்திருக்கும் என்று தோன்றிற்று. அவர்களைப் போல தன்னைக் கற்பித்துக் கொள்வது சுகமாக இருந்தது. துளசி மாலையை அணிந்து கண்ணாடி முன் அழகு பார்த்து, ‘உன்தன்னோடுற்றோமேயாவோம், உனக்கே நாம் ஆட்கொள்வோம்’ என்று விலகிப் போவது எத்தனை சௌகர்யம்! அழுகைச் சத்தம் கேட்கக்கூடாது, பாட்டுச் சத்தம் கேட்கக் கூடாது என்று கட்டளையிடாத ‘உத்தமன் பேர்பாடி’ தப்பித்துக் கொள்வது எத்தனை சுலபமான வடிகால்!

புருஷனும் வேணும், புள்ளையும் வேணும் என்றால் இப்படித்தான் பிசாசைப்போல் அலைய வேண்டும். புதருக்குள் மறைக்க வேண்டும். எங்கே மறைத்தோம் என்பது மறந்து போனால் கதை முடிந்து போகும். பிறகு ஆசையில்லை. வர்ணஜாலங்கள் இல்லை. மந்திரச் சொற்கள் இல்லை. தரிசனங்கள் இல்லை.

”ஜனனீ!”

அவள் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள். திரும்பிப் பார்க்க யோசனையாக இருந்தது. அவனை எதிர்கொள்ளும்போது அவன் கேட்கப்போகும் கேள்விகளுக்குப் பதில்களைத் தயார் செய்ய ஆயத்தமானாள். துளசி மாடத்தில் அம்மா நீர் வார்த்துக் கொண்டிருப்பது போல் இருந்தது. தயக்கமேற்பட்டது. அம்மா, நீதான் அவசரப்பட்டே, செத்துடுவேன்னு பயமுறுத்தினே. நா செத்தப்புறம் உன்னை யாரு பாத்துப்பான்னு தினமும் துளைச்சே.

“ஜனனீ!”

வரேன், வரேன். வராம எங்க போக முடியும். உங்களைத் தவிர எனக்கு வேற யார் இருக்கா? எனக்கு நீங்க தேவை. உங்க துணை தேவை. அம்மா உரமேத்தி வெச்ச பாடம் இது. பொட்டை நெட்டுரு போட்ட பாடம். எனக்கு மீறத் தெரியாது. வரேன்.

”ஜனனீ!”

அவள் மெள்ள, மிக மெள்ளத் திரும்பினாள். ”உன்னை எங்கெல்லாம் தேடறது? உள்ளே வா. சாப்பாட்டு நேரம்” என்று கடுகடுத்தாள் வார்டு ஆயா.

”இல்லே உள்ளே வரல்லே நா” என்றாள் அவள் பீதியுடன்.

”நல்ல வார்த்தையிலே சொன்னா நீ கேட்க மாட்டே” என்று ஆயா தோளைப் பிடித்து இழுத்தபோது அவள் ஆட்டுக் குட்டியைப் போல் பின் தொடர்ந்தாள். வராந்தாவிலும் கூடத்திலும் நின்றிருந்த பெண்களின் முகங்களைப் பார்க்க பயந்து தலைகுனிந்தபடி நடந்தாள்.

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத் தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க,

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும்.

”என்னது?” என்றாள ஆயா.

”ஒண்ணுமில்லே.”

யாரோ கடகடவென்று சிரித்தார்கள். பழைய கோவலன் கண்ணகி சினிமாவில் வரும் கண்ணாம்பா போல. டி.வி.யில் காட்டியபோது பார்த்திருக்கிறாள். ”எரியட்டும்! எரியட்டும்..!” பின்னால் அட்டை மாளிகைகள் எரிந்த மதுரை சாம்பலாகும் – தலைவிரி கோலமாக கண்ணாம்பா ஹஹ் ஹஹ்ஹா… சிரிப்பு தொத்திக் கொண்டது போலிருந்தது. சங்கிலித் தொடர் போல் வெளிப்பட்ட சிரிப்பு கூரையில் எதிரொலித்துக் கூடம் அதிர்ந்தது. அவளுக்குக் கண்களில் நீர் துளிர்த்தது. ஓட்டமும் நடையுமாக ஆயாவைப் பின் தொடர்ந்தாள்.

”உம் உம், வாங்க வாங்க.”

மேஜை மேல் வைத்திருந்த அண்டாக்களிலிருந்து பீங்கான் தட்டுக்களில் களிபோல் சோறும் தோல்போல் சப்பாத்தியும் பருப்புக் குழம்பும், பொரியலும் விழுந்தன. அவள் தட்டை எடுத்துக் கொண்டு மாமரத்தைப் பார்த்தபடி இருந்த படிக்கட்டுக்குச் சென்று அமர்ந்தாள். சாப்பிட ஆரம்பிக்கும் சமயத்தில் சாப்பாட்டறையில் தட்டுக்கள் கீழே விழும் சத்தம் கேட்டது. அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டதில் கையிலிருந்த தட்டிலிருந்து பொரியலும் சோறும் அவளது புடவையில் தெறித்தன. அவள் வார்டைச் சேர்ந்த அம்புஜமும் சாந்தாவும் ஒருவர் முடியை மற்றவர் பிடித்து இழுத்துச் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

”ஏய் பேய்களா, நிறுத்துங்க உங்க சண்டையை” என்று ஆயா அலற, இரண்டு மூன்று நர்சுகள் வந்து பிடித்து விலக்கினார்கள். சாந்தா அம்புஜத்தைக் குரோதத்துடன் பார்த்தாள் – கொலைவெறி தெரிந்தது பார்வையில்.

”நம்ம தலையெழுத்து. இதுங்களோடு மாரடிக்க வேண்டியிருக்கு” என்று ஆயா தலையிலடித்துக் கொண்டாள். ”நானும் ஒருநாள் இங்கே பேஷண்டா வந்தாலும் வந்துருவேன்”.

ஜனனிக்கு உடம்பு லேசாக நடுங்கிற்று. தட்டைப் பிடித்திருந்த விரல்கள் நடுங்கின. தட்டைப் படிக்கட்டில் வைத்து இரண்டு கைவிரல்களையும் கோத்துக் கொண்டாள். மார்பு படபடத்தது. ரத்தம் சூடேறி மண்டைக்குப் போய்விட்டது போல் இருந்தது. புழுங்கி மூச்சிறைத்தது. மாமரத்து இலைகள் அசைக் காணோம். எல்லாம் ஸ்தம்பித்து உறைந்திருந்தன. பிரபஞ்சமே உறைந்திருந்தது. யாரோ “ஃப்ரீஸ்!” என்றாற்போல. அவள் முகத்தை முழங்கால்களில் கவிழ்த்துக் கொண்டாள். கூடத்து சத்தங்கள் ஓய்ந்து விட்டன. அவரவர்கள் மூலைக்கு மூலை உட்கார்ந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

”என்ன ஜனனிம்மா, சாப்பிடலியா?” அவள் சுவாரஸ்யமில்லாமல் நிமிர்ந்தாள். கக்கூஸ் கூட்டும் அஞ்சலை நின்றிருந்தாள் வெற்றிலை மென்றபடி. இவளுக்கு வெற்றிலை வேண்டும் எப்பவும். தற்காப்புக் கவசம் மாதிரி. அவன் விடாமல் சிகரெட் புகைக்கும்போது அவளுக்கு அப்படித்தான் தோன்றும். அது ஒரு கவசம். உணர்ச்சிகளை மறைக்க. இயலாமையை மறைக்க. அதிகாரத்தின் அடையாளம் கூட. ‘நீ புகைச்சுடுவியா என் எதிர தைரியமா?’ என்பது போல, பதிலுக்கு வெற்றிலையையாவது அஞ்சலைபோல மென்றிருக்கலாம் என்று இப்போது தோன்றிற்று.

”என்ன சாப்பிடலே?”

அவள் பொம்மை போல தட்டை எடுத்துச் சோற்றை அளைந்தாள்.

”அவருக்கு சாதம் இப்படி இருந்தா பிடிக்காது.”

”பின்னே எப்படியிருக்கணுமாம்?”

”மல்லிகைப் பூவா ஒண்ணு மேல ஒண்ணு ஒட்டாம.”

”இல்லேன்னா என்ன செய்வாரு?”

”இப்படி சாந்தா தட்டை விட்டெறியலே, அப்படி விட்டெறிவார்.”

அஞ்சலை சிரித்தாள்.

”பின்னே அவரில்லே இங்கே வந்து இருக்கணும்!”

”ஐயையோ, வேண்டாம் பாவம்!”

அஞ்சலை படிக்கட்டில் அமர்ந்து கொண்டாள், ”ஏனாம், வந்து இருந்து பார்க்கட்டுமே இங்கே எப்படியிருக்குன்னு.”

”அவரும் வந்துட்டா, நா வீட்டுக்கு எப்படிப் போறது?”

”சில சமயம் நல்லாத்தான் பேசறே” என்று அஞ்சலை இழுத்துப் பேசினாள். ”சொல்லு, புருஷன் மேல ரொம்பப் பிரியமா?”

ஜனனி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ‘உனக்கு மட்டும் சொல்றேன்’ என்கிற முகபாவத்துடன் ‘இல்லை’ என்று தலையசைத்தாள்.

”என்..?” என்றாள் அஞ்சலை லேசாக.

ஜனனியின் கண்களில் ஒரு தீவிரம் தெரிந்தது.

”என் குழந்தையைக் கொன்னுட்டார்.”

”என்னது?” என்றாள் அஞ்சலை திடுக்கிட்டு. ”எப்படி, ஏன்?”

”எப்படித் தெரியுமா? இப்படி” என்று தட்டில் இருந்த சப்பாத்தியை இரண்டாகப் பிய்த்து எதிரும் புதிருமாகப் போட்டாள். ”மகாபாரதத்திலே ஜராசந்தனை பீமன் பிச்சுப் போடல்லே அது மாதிரி.”

அஞ்சலை ஒரு வெற்றிலைச் சுருளை வாயில் திணித்துக் கொண்டாள்.

”நா என்னைத்தைக் கண்டேன் அதெயெல்லாம் – எதுக்குக் கொல்லணும்?”

”பிடிக்கலே. அது அழுதா பிடிக்கலே. சிணுங்கினா பிடிக்கலே. நா வெச்ச பாசம் பிடிக்கவே. அதே கவனமா இருக்கேனாம். அவரைக் கவனிக்கக் கூட நேரமில்லாம.”

அஞ்சலை பேசாமல் அவளையே பார்த்தபடி சற்று நேரம் இருந்தாள்.

”சரி, நீ சாப்பிடு தாயீ, இன்னொரு நாளைக்குப் பேசுவம்.”

”நா சொன்னது நிஜம். பொய்யில்லே” என்றாள் அவள். ”அவர் அப்படிப் பண்ணுவார்னு எனக்குத் தெரியும். எத்தனையோ நாள் குழந்தையைப் புதர்லே கொண்டு போய் மறைச்சு வைப்பேன். அப்புறம் எங்கே வெச்சோம்னு மறந்து போய் புதர் புதராத் தேடுவேன்.”

”நீ சாப்பிடு தாயீ.”

”நா சொன்னது நிஜம்.”

”சரி சரி. நா நம்பறேன். நீ சாப்பிடு”.

அஞ்சலை செல்வதையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு அவள் சாப்பிட ஆரம்பித்தாள். சாப்பிடாவிட்டால் ஆயா திட்டுவாள். பிறகு மத்தியானம் தூங்காவிட்டால் திட்டுவாள். இந்தத் திட்டுக்கு உடம்பும் மனசும் பழகிவிட்டது. மௌனத்துக்குப் பழகினது போல. திட்டு கேட்க்காவிட்டால்தான் என்னவோ போல் இருந்தது. ‘எழுந்திரிங்க எழுந்திரிங்க’ என்று சத்தம் கேட்டதும்தான் உடல் எழுந்தது. ‘பல் விளக்குங்க’ என்றதும் பல் விளக்கிற்று. ‘குளியுங்க’, குளித்தது. ‘சாப்பிடுங்க’, சாப்பிட்டது. ‘தூங்குங்க’, தூக்கம்தான் கட்டளைக்கு அடிபணிய மறுத்தது. மூடிய கண்களுக்குள் பிசாசுகளை எழுப்பி விட்டது. அவை போட்ட ஆட்டத்திலும் செய்த துவம்சங்களிலும் ஏற்பட்ட வேதனையில் அவள் அலறுவாள். அழுவாள். ஏன் அழறே?

என் குழந்தை. என் குழந்தை.

என்ன உன் குழந்தைக்கு?

அதைக் காணோம்.

இப்ப தூங்கு, நாளைக்குத் தேடுவோம். ஊசி குத்துவார்கள்.

நாளைக்கும் அதற்கடுத்த நாளும் குழந்தையைப் பற்றியே மறந்து போகும். அதை நினைத்து இப்போது துக்கமேற்பட்டது; ஆதார உணர்வுகளையே இழந்து வருவது போலத் தோன்றிற்று. சருமம் கூட முன்பு போல மிருதுவாக இல்லை. புறங்கையும் புறங்காலும் கட்டட வேலை செய்பவள் போல் சொரசொரத்து பாளம் பாளமாகத் தெரிந்தது. கட்டடத்துக்குள் நடக்கும் போது கண்ணாடிக் கதவில் தெரியும் அவளது உருவம் பீதியை அளிக்கிறது. அன்று டாக்டரின் அறைக்குச் சென்ற போது கழிவறையில் இருந்த கண்ணாடியில் தெரிந்த பிரதி பிம்பத்தைப் பார்த்து அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. நானா? அது நிச்சயம் வேறு யாரோ. அல்லது அவளுள் ஏதோ ரசாயன மாற்றம் ஆகியிருக்க வேண்டும். பள்ளிக் கூடத்தில் ‘டாக்டர் ஜெக்கில் அண்டு மிஸ்டர் ஹைட்’ கதை படித்திருக்கிறாள். நல்லவனும் கெட்டவனும், அழகனும் குரூபியும் ஒரே ஆளிலிருந்து வெளிப்படும் பயங்கரம் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. அவளது நிஜ வாழ்வில் அது உண்மையாகும் என்று அவளுக்குத் தெரியாது. கல்யாணமான பிறகு அவன் ஒரு சமயம் குழைவதும் ஒரு சமயம் அனலைக் கக்குவதும் அந்தக் கதையை ஞாபகப்படுத்தும். வெளி உலகத்திடம் அத்தனை இனிமையாக இருப்பவன் அவளிடம் மட்டும் ஏன் அப்படி இருக்கிறான் என்று குழப்பும். அவனுடைய குற்றச்சாட்டுகள் கூடக் குழப்பும். நீ அதிகப்பிரசங்கி. மேதாவிங்கிற நினைப்பு உனக்கு. உன் சமையல் நன்னால்லே. புருஷன்ங்கற மதிப்பு இல்லே. உன் கடமை என்னன்னு முதல்ல தெரிஞ்சுக்கோ. அதுக்கப்புறம்தான் மத்ததெல்லாம் – காரணம் புரியாமல் குற்ற உணர்வு ஏற்படும்.

சரி. சரி. சரி.

புத்தகம் இல்லை. ரேடியோ இல்லை. டி.வி. இல்லை. கதவுகளையும் ஜன்னல்களையும் சாத்தியாச்சு. சினேகிதாள் இல்லை. பல்லைக் கடித்துக் கொண்டுப் புழுங்கிச் செத்த அவதியில், மூடிய அறைக்குள் அது ஜனித்தது. ‘பரஸுரே’ என்று தான்ஸேன் பாடியபோது மழை பொழிந்தது போல, அதன் குரல் கேட்ட மாத்திரத்தில், அவளது குண்டலினி உசுப்பப்பட்டு உள்ளமெல்லாம் பிரகாசித்தது. ஒரு ஜ்வாலையில் வீற்றது போலாகியது.

ஒளிக்க முடியவில்லை. குரல் எழுப்பிற்று. நான்கு பேர் கவனத்தைக் கவரும்படி குரல் எழுப்பிற்று. அவனுக்குக் கோபம் வந்தது. அதையும் மீறி அது குரல் எழுப்பியதுதான் ஆச்சரியம். ஒருநாள் அவனது கோபம் கட்டுக்கடங்காமல் போயிற்று! குரலைக் காண்பிப்பியா? உனக்கு இத்தனை திமிரா? அவள் என்ன செய்வது என்று தெரியாமல் பார்த்தாள். ஜராசந்தனுடன் போர் செய்யும் பீமன் போல் தெரிந்தான். அவன் அடிக்க அடிக்க அது செத்துச் செத்து திரும்பத் துளிர்த்தது. வானத்தை முட்டும் பீமனாய் அவன் நின்றான். சரக், சரக் – கிழியட்டும். ஜராசந்தன் மாதிரி – இரண்டாகத் தூக்கி வீசி எறிந்தான்.

அவள் விழி பிதுங்கிற்று. நாபியிலிருந்து ஒரு கேவல் எழுந்து தொண்டையை அடைத்தது. தேகம் முழுவதும் பற்றி எரிந்து பத்ரகாளியாக வீறு கொண்டு எழுந்தது. எல்லை மீறி ஆத்திரமும் கோபமும் எழ ரத்த நாளங்கள் எல்லாம் வெடித்து விடுவது போல முறுக்கிக் கொண்டன.

“என்ன பண்றேள்? எங் குழந்தை. எங் குழந்தை. சாகடிக்கிறேளா? எப்பேர்ப்பட்ட ராட்சசன் நீ. சண்டாளன். நீ மனுஷனா? மனுஷனா?

கையில் கிடைத்ததை வைத்து அவன் முதுகை முகத்தை மண்டையைப் பதம் பார்த்தது நினைவுக்கு வந்தது.

‘பத்ரகாளீ, பத்ரகாளி! ராட்சஸி.” திமுதிமுவென்று அக்கம்பக்கத்து ஜனங்கள் நுழைகிறார்கள். அந்தக் கொலைகாரனை எதுவும் சொல்லாமல் நிற்கிறார்கள்.

”பாருங்கோ பாருங்கோ.” அவன் முதுகை, கன்னத்தை, மண்டையைக் காட்டுகிறான். அவளது கைகளை யாரோ கட்டுகிறார்கள். அவன் முதுகை அணைத்துச் சமாதானப்படுத்துகிறார்கள். குழந்தை என்ன ஆயிற்று என்று யாருக்கும் கவலையில்லை.

அவள் உள்ளங்கையால் முகத்தை மூடிக் கொண்டாள். கண்களிலிருந்து சரம் சரமாய் நீர் வழிந்தது. முடியலே முடியலே. என்னாலே இங்கே இருக்க முடியலே. அழைச்சுண்டு போயிருங்கோ. நா பண்ணது தப்பு. இனிமே ஒழுங்கா இருக்கேன். அதற்கு மேல் தாங்க முடியாது போல அவள் விசித்து விசித்து அழுதாள். அவன் முகமே மறந்துவிடும் போல் இருந்தது. அஞ்சுகத்தையும் சாந்தாவையும் கோகிலாவையும் மற்றவர்களையும் பார்க்க வீட்டிலிருந்து வருகிறார்கள். அவளுக்குத்தான் யாருமில்லை. அவன் வந்து எத்தனையோ மாதங்கள் ஆகிவிட்டன.

”நா வீட்டுக்குப் போறேன் டாக்டர். எனக்கு ஒண்ணுமில்லே. நன்னா இருக்கேன். இப்ப என் வீட்டுக்காரரை வந்து கூட்டிப்போகச் சொல்லுங்கோ.”

”இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்மா.”

இன்னும் எத்தனை நாள்? எத்தனை நாள்? மூச்சு முட்டிற்று. நாள் முழுவதும் ஓலங்களும் சிரிப்புகளும் அழுகைகளும் சண்டைகளும். ”உனக்கு இன்னும் மனநிலை தெளியணும். மறுபடி வயலென்ட் ஆயிட்டீன்னா?”

மாட்டேன். மாட்டேன், என்னை நம்புங்கோ. அப்படியெல்லாம் நடந்துண்டதுக்கு வெட்கப்படறேன்.

”அவங்க பயப்படறாங்க. கூட்டிட்டுப் போக மாட்டேங்கறாங்க.”

‘ஓ’ என்று அலற வேண்டும் போல் இருந்தது. முன்பெல்லாம் குழந்தையை அவனிடமிருந்து எப்படிப் பாதுகாப்பது என்று தீவிரமாக யோசித்தது போல இப்போது இங்கிருந்து எப்படித் தப்பிப்பது என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள். எப்படித் தப்பிப்பது? பெரிய பெரிய பூட்டிய இரும்புக் கேட்டுகள். காவல்காரர்கள். இரவில் தூக்கம் வராமல் திட்டங்கள் தீட்டினாள். காலையில் தலையை வலித்தது. சாப்பிடப் பிடிக்காமல் வாந்தி வந்தது.

கண்டவர்களிடமெல்லாம் புலம்பத் தோன்றிற்று.

”அஞ்சலை, நா வீட்டுக்குப் போகணும். இங்க இருக்க முடியலே என்னாலே.”

”மறுபடியும் அந்தப் புருஷன்கிட்டேயா?”

”பின்னே யார்கிட்ட? எத்தனை புருஷன் இருக்கான் எனக்கு.”

”புடிக்காத புருஷன் கிட்ட போயி என்ன செய்யப் போற தாயீ. அவன் மறுபடி இங்க அனுப்புவான்.”

”மாட்டார். நா ஒழுங்கா இருப்பேன். சொன்னபடி கேட்பேன். வாயைத் திறக்க மாட்டேன். அவருக்குப் புடிச்ச சமையலைச் சமைச்சுப் போடுவேன். மல்லிகைப் பூ மாதிரி இட்லி பண்ணத் தெரியும் எனக்கு.”

அஞ்சலை இடுப்பில் கையை வைத்துக் கொண்டாள் ராணி மங்கம்மா மாதிரி. பிறகு அக்கம்பக்கம் பார்த்து மெள்ளச் சொன்னாள். ”நீ வெளியிலே போறதுக்கு நா உதவி செய்யறேன். ஆனா மறுபடி அந்த ஆள்கிட்ட போய் சாவாத.”

”வேற எங்க போவட்டும்? பிறந்த வீட்டிலே யாரும் இல்லே. என் படிப்புக்கு யார் வேலை குடுப்பா?”

”மல்லிப்பூ மாதிரி இட்லி பண்ணுவே இல்லே?”

அவளுக்குத் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. வேண்டாம் வேண்டாம். அவர்கிட்டயே போயிடறேன். அடிச்சாலும், உதைச்சாலும் அவர் யாரு? எம் புருஷன்தானே? அவர் எதிர்பார்க்கிறபடி நா நடந்துக்கலேன்னா அவருக்குக் கோபம் வரத்தானே வரும்? போக்கெடமில்லாத எனக்குப் பவிசென்ன வேண்டிக்கிடக்கு? அவர் வந்தால் இதைத் தெரிவிக்கணும். இரவு முழுவதும் அவள் புலம்பினாள்.

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்

உன் தன்னோடு உற்றோமே யாவோம்;

உனக்கே நாம் ஆட்செய்வோம்.

மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.

சதா சர்வகாலமும் வாய் முணுமுணுத்தது – மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்…

—–

அவன் டாக்டரின் பார்வையைத் தவிர்த்தபடி சங்கடத்துடன் அமர்ந்திருந்தான்.

”என்ன நீங்க, மாசத்துக்கு ஒரு தடவையாவது ஜனனியைப் பார்க்க வரவேண்டாமா?”

”எனக்கு டூர் போகற வேலை டாக்டர். ஒழுங்கா பணம் அனுப்பறேனே?”

”எங்களுக்கு அனுப்பறீங்க. அவ சமாதானத்துக்கு நீங்க வரணும்.”

”எனக்குச் சங்கடமாயிருக்கு. பழசெல்லாம் ஞாபகம் வருது. நானும் நிறைய கஷ்டப்பட்டுட்டேன் டாக்டர். எனக்கும் ஏமாற்றங்கள் இருக்கு.”

டாக்டர் அனுதாபத்துடன் அவனைப் பார்த்தாள்.

”குழந்தை செத்துடுச்சா?”

”குழந்தையா? இல்லையே?”

”ஜனனி அடிக்கடி சொல்லுவா. குழந்தை செத்திடுச்சின்னு.”

அவன் சிரித்தான்.

”குழந்தையே பிறக்கலே. குழந்தையில்லேன்னு எனக்கு ஏமாற்றம் கூட. அவ மூளைக் கலக்கத்திலே என்னவோ சொல்லுவா. குற்ற உணர்வோ என்னவோ.” டாக்கடர் ஏதோ சொல்ல நினைத்துப் பேசாமல் இருந்தாள்.

”இப்ப எப்படி இருக்கா?”

”நல்ல இம்ப்ரூவ்மென்ட் இருக்கு. வீட்டுக்குப் போகணும்ங்கறா.”

”வேண்டாம், வேண்டாம். குழந்தை, கோட்டான்னு சொல்றாங்கறீங்க. நல்லா குணமான பிறகு வரட்டும். ஒரு வருஷம் ஆனாலும் ஆகட்டும்.”

டாக்டருக்குச் சோர்வாக இருந்தது. எத்தனையோ பேரைப் பார்த்தாயிற்று. ஒரு வருஷம் என்கிற கணக்கைக் கேட்டாயிற்று. விவாகரத்துக்குச் சுலபம் என்ற மனக்கணக்கு.

”ஜனனியைப் பார்த்துட்டுப் போங்க.”

”சரி.”

அவன் சங்கடத்துடன் அமர்ந்திருப்பது தெரிந்தது. அவனது சங்கடத்துக்குக் காரணம் நான் என்ற குற்ற உணர்வு ஏற்பட்டது. ”வாங்கோ” என்றாள் புன்னகையுடன். வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்பது போல.

”நா இப்போ நன்னா ஆயிட்டேன். பார்த்தா தெரியறதோல்லியோ.”

அவன், அவளுடைய காய்ந்த முகத்தை, குழி விழுந்த அருளற்ற கண்களை, பிசுக்குப் பிடித்த ஜடையை, கசங்கிய புடவையை லேசான அருவெறுப்புடன் பார்த்தான்.

”என்னை வீட்டுக்கு அழைச்சிண்டு போயிடுங்கோ. போறேளா?”

அவளுடைய கண்களில் தெரிந்த தீவிரம் அவனுக்குப் பீதி அளித்தது.

”இப்ப வேண்டாம். நன்னா தேவலையாகட்டும்.”

”எனக்கு நன்னா தேவலையாயிடுத்து.” அவள் சரேலென்று அவன் அருகில் சென்று அவனுடைய தோளைப் பற்றினாள்.

”நீங்க சொன்னபடியெல்லாம் கேக்கறேன்.” அவள் விசும்ப ஆரம்பித்தாள். ”சத்தியமா உங்க இஷ்டத்துக்கு விரோதமா நடக்க மாட்டேன். சத்தியமா கவிதை எழுதமாட்டேன். என்னை அழைச்சிண்டு போயிடுங்கோ ப்ளீஸ். எனக்கு வேற போக்கிடமில்லை.”

தோளைப் பிடித்து உலுக்கிய அந்த இரும்புக் கரங்களை அவன் திகைப்புடன் பார்த்தான். இவளுடன் எப்படி இரண்டு ஆண்டுகள் குடும்பம் நடத்தினோம் என்று வியப்பேற்பட்டது. வெடுக்கென்று அவள் கையை விலக்கினான். ”நா செத்துப் போயிட்டேன்னு நினைச்சுக்கோ. நா உன்னை டைவோர்ஸ் பண்ணிட்டேன்னு நினைச்சுக்கோ” என்றான் அடிக்குரலில்.

அவளுக்குச் சுறுசுறுவென்று கோபம் வந்தது.

”ஏன், ஏன்? நா ஏன் அப்படி நினைக்கணும்? நீங்க என்னை ஏமாத்தறேள். என்னை இங்கே உயிரோடு குழி வெட்டப் பார்க்கறேளா? அதுதான் ப்ளானா?”

”டாக்டர், டாக்டர்! ஷி இஸ் டர்னிங் வயலென்ட் – டாக்டர் ஹெல்ப்!”

அவனுடைய அலறலைக் கேட்டு நர்சுகள் ஓடிவந்து, அவளை விலக்கி உள்ளே அழைத்துக் கொண்டு போனார்கள். அவள் ‘வேண்டாம் வேண்டாம்’ என்று அழ அழ, ‘தூங்கு’ என்று ஊசி போட்டார்கள்.

அவள் கண் விழித்தபோது இன்னும் இருட்டாகவே இருந்தது. எங்கே இருக்கிறோம் என்று புரியவில்லை. வீட்டில் படுக்கையறையில் அவனருகில் படுத்திருப்பது போல ஒரு வினாடி தோன்றிற்று. எங்கோ அழுகுரல் கேட்டது. தொடர்ந்து சிரிப்பு. அவள் விடுக்கென்று எழுந்து சுற்று முற்றும் பார்த்தாள். மூலைக்கொருவராகப் போர்வை போர்த்திய உருவங்கள். விழிக்கும் நேரத்தில் பைசாசங்களாக உலவும் உடல்கள். ஆன்மாவைப் புதர்களில் தொலைத்துவிட்ட அப்பாவிகள். எல்லாரையும் கட்டித்தழுவிக் கண்ணீரால் கரைய வேண்டும் என்ற தாபம் அவளுள் எழுந்தது.

”நா விவாகரத்து செய்துட்டதா நினைச்சுக்கோ. நா செத்துட்டதா நினைச்சுக்கோ.”

அவளுக்குச் சிரிப்பு வந்தது. புருஷன் விஷத்தை அனுப்பிய போது மீரா சிரித்த ஞாபகம் வந்தது. மீராவைக் கண்ணன் காப்பாற்ற வந்தது போல இப்பொழுது யாரும் வரப் போவதில்லை. அவள் எழுந்தாள். ஆச்சரியமாக இருட்டில் கண் தெரிந்தது. பாட்டியின் ஞாபகம் வந்தது. பாட்டி இருட்டில் அறை அறையாக நகர்ந்தது போல அவள் சுலபமாக நடந்து வெளியே வந்தாள். பால் பாத்திரங்களைக் கொண்டு வரும் டெம்மோ வெளியே நின்றிருந்தது. டிரைவர் வாட்ச்மேனை சத்தம் போட்டு எழுப்பினாள். டெம்போ உள்ளே நுழைவதற்காக இரும்பு கேட் திறக்கப்பட்டது. தூங்கி வழியும் வாட்ச்மேன் கண்ணில் படாமல் அவள் புதுங்கிப் பதுங்கி வெளியேறினாள். மார்பு படபடத்தது. தார் ரோட்டில் வெறும் காலுடன் வேக வேகமாக நடப்பது நூதன அனுபவமாக இருந்தது. காற்றில் இருந்த மண்ணின் மணம் நாடி நரம்பையெல்லாம் உசுப்பி மீட்டி விட்டது. கீழ்வானத்தில் நெருப்புப் பொறி போல செவ்வொளி லேசாகப் படரத் துவங்கும் போது வானம் மிக அருகில் நெருங்கி விட்டது போலிருந்தது. பறவைகளும் வானமும் மிக அருகில் நெருங்கி விட்டது போலிருந்தது. பறவைகளும் வானமும், மரமும் காற்றும், நட்சத்திரமும் கவிதைக் குழந்தைகளும். அவளும் ஏதோ ஒரு விதியின் உந்துதலில் இசைவுடன் பயணிப்பது போலிருந்தது.

*

Painting Credit: http://www.shairy.com

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s