காலத்தை வென்ற கதைகள் – 13

ஜோதிர்லதா கிரிஜா 

Image

பிறந்தது சென்னை. வளர்ந்தது வத்தலக்குண்டு. பதின்மூன்று வயதில் குழந்தை எழுத்தாளராக அறிமுகம். குழந்தைகளுக்கான புதினங்கள், தொடர்கதைகள், சிறுகதைகள், பாரதியாரின் வாழ்க்கை வரலாறு என ஏராளமாக எழுதியிருக்கிறார். 1968ல் இவருடைய முதல் சிறுகதை வெளியானது. தபால் தந்தி இலாகாவில் பணியாற்றிய இவர், நிறைய எழுத வேண்டும் என்பதற்காகவே விருப்ப ஓய்வு பெற்றவர். இதுவரை இவருடைய 23 குறுநாவல்கள், 600 சிறுகதைகள், 62 குறுநாவல்கள், 3 நாடங்கள், 3 கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. வங்காளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இவருடைய சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ஆங்கிலத்திலும் எழுதி வருகிறார். இலக்கிய சிந்தனை, தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு உட்பட பல பரிசுகளைப் பெற்றவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். 

*****

நியாயங்கள் மாறும்

”நேற்றிலிருந்து நானும் கவனித்துக் கொண்டே இருக்கிறேன். என்ன யோசனை அப்படி-ஏதோ பெரிய கோட்டையைப் பிடிப்பதற்கு யோசனை செய்வது மாதிரி?”

ஆழ்ந்த உறக்கத்தின்போது உலுக்கி எழுப்பப்பட்டவனுக்குரிய திடுக்கிடலுடன் வள்ளிநாயகம் இலேசான தலைக் குலுக்கலோடும் சட்டென விரிந்து கொண்ட விழிகளோடும் கல்பனாவை ஏறிட்டான். ஓர் அசட்டுப் புன்னகையும் கையும் மெய்யுமாய்ப் பிடிபட்டவனுக்குரிய குற்ற உணர்வும் தன் முகத்தில் தெரிய அவன் பதில் ஏதும் சொல்லாமல் அவளைப் பார்த்தவன் பார்த்தபடியே இருந்தான்.

”என்ன பதிலையே காணோம்? உம்? உங்கள் அலுவலகத்தில் ஏதேனும் பிரச்னையா? உங்கள் மேனேஜர் வழக்கம் போல் எதற்காகவாவது சத்தம் போட்டு உங்களை நாலு பேருக்கு முன்னால் மட்டந்தட்டிப் பேசிவிட்டாரா?”

வள்ளிநாயகத்தின் முகத்தில் ஏறியிருந்த அசட்டுச் சிரிப்பு மறைந்து போய் அதில் ஒரு முனைப்பு ஆக்கிரமித்துக் கொண்டது.

”கல்பனா! உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். இத்தனை நாட்களாக அதற்குத் துணிச்சல் வரவில்லை. ஆனாலும், என்றைக்காவது ஒருநாள் உன்னிடம் அதைப் பற்றி நான் பேசித்தானாக வேண்டும் என்ற குறுகுறுப்பு கொஞ்ச நாட்களாக என்னை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு மனம்விட்டு உன்னோடு பேசிவிடலாம் என்று இருக்கிறேன்.”

இவ்வாறு சொல்லிவிட்டு ஒரு திகைப்பிலும் திகிலிலும் உடனடியாக அகன்றுபோன அவள் கண்களை ஏறிட இயலாதுபோய் அவன் தன் பார்வையைக் கீழிறக்கினான்.

”என்ன சொல்லி என்னை அலைக்கழிக்கப்போகிறீர்கள்? எனக்குப் பயமாய் இருக்கிறதே? வேலையைக் கீலையைப் போக்கிக் கொண்டு வீட்டீர்களா என்ன?” என்று கேட்டுவிட்டு அவள் அவன் உட்கார்ந்திருந்த சோபாவில் தானும் அவனுக்கு அருகே உட்கார்ந்தாள்.

கீழிறக்கிய பார்வையை சற்றும் உயர்த்தாமல், ”அதெல்லாம் இல்லை, கல்பனா! இது வேறு சங்கதி. எப்படி ஆரம்பித்து எப்படி முடிப்பது என்றே புரியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது” என்று வள்ளிநாயகம் முனகினான்.

”எதுவாக இருந்தாலும் வாய்விட்டுச் சொல்லிவிடுங்கள். அந்த விஷயத்தைச் சொல்ல இத்தனை நாட்களாகத் துணிச்சல் வரவில்லை என்று நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால், நீங்கள் சொல்லப் போவது ஏதோ மிக விபரீதமான ஒரு விஷயம் என்று தோன்றுகிறது.”

அவன் உடனே எதுவும் பேசாமல் சில நொடிகளுக்கு மௌனம் காத்தான்.

”என்ன ஒண்ணும் சொல்லாமல் இருக்கிறீர்கள்?

”சொல்லுகிறேன், சொல்லுகிறேன்,” என்று பதற்றமாக முனகிவிட்டு முகத்தில் அரும்பு கட்டிய வேர்வைத்துளிகளை வேட்டி ஓரத்தால் ஒற்றிய பிறகு, ”நான் சொல்லப்போகும் விஷயத்தைக் கேட்ட பிறகு என்னை வெறுக்க மாட்டாயே, கல்பனா? அதைக் கேட்ட பிறகும் உன்னுடைய பிரியம் மாறாமல் இப்போது இருப்பது மாதிரியே இருக்குமா?” என்றான் அவன்.

ஏற்கனவே விரிவடைந்திருந்த அவள் விழிகள் அவற்றின் அதிகபட்ச அகலத்துக்கு விரிந்துகொள்ள, அவள் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தாள். தலை உயர்த்திய அவன் அந்தப் பார்வையில் கலந்திருந்த உணர்ச்சிகளைத் துல்லியமாய்க் கணக்கிட்டான்.

Image

திகைப்பு, திகில், பரபரப்பு, அருவருப்பு… இன்னும் என்னென்னவோ அந்தப் பார்வையிலிருந்து சிந்திக்கொண்டிருந்ததாய் அவனுக்குப் பட்டது.

”விஷயம் இன்னதென்பதைச் சட்டென்று சொல்லி முடியுங்களேன்.”

”என் கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லவில்லை. விஷயத்தைத் தெரிந்து கொண்டதன் பிறகும் உன் அன்பு மாறாமல் இருக்குமா என்று கேட்டேன்.”

அது ‘நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்தது’ என்று சொல்லத் துடித்த உதடுகளை அடக்கிய கல்பனா, ”நீங்கள் சொல்லப்போவது எதுவானாலும் அது நம் உறவையோ பந்தபாசத்தையோ மாற்றாது,” என்றாள். அப்போதைக்கு அப்படிச் சொல்லுவதுதான் அவனிடமிருந்து உண்மையை வரவழைக்கும் என்று அவள் கணக்குப் போட்டாள். தன் உண்மையான எண்ணத்தை வெளியிடுதல், வேறு ஏதேனும் பொய்யை அவனைச் சொல்ல வைத்து விடும் என்று அவள் நிச்சயமாக நம்பியதால், செய்தியைத் தெரிந்து கொள்ள வாய்ப்பற்றுப் போகலாம் என்று அவள் அஞ்சினாள்.

அவன் மறுபடியும் தலையைக் குனிந்துகொண்டு எச்சில் விழுங்கினான்.

அவள் வாக்களித்ததன் பிறகும் சில வினாடிகளைப் பேசாமையில் அவன் கழித்ததைப் பார்த்ததும், ”சின்ன வீடு ஏதாவது வைத்திருக்கிறீர்களா, இல்லாவிட்டால் எந்தப் பெண்ணையாவது நேசித்து வருகிறீர்களா?” என்றாள். குரல் உணர்ச்சிகளை விழுங்கிய முறையில் அமைதி வெளிப்பட ஒலித்தது. அவன் உடனே தலை உயர்த்தி அவளைப் பார்த்தான். முகத்தில் சிறிது கூச்சமும் வியப்பும் தெரிந்தன.

”கல்பனா, ஆனால் ஒரே ஒரு வித்தியாசம்.”

”சொல்லுங்கள்.”

”உன்னை மணப்பதற்கு முன்னால் நான் ஒரு பெண்ணோடு தொடர்பு கொண்டிருந்தேன். அவள் கர்ப்பமானதும் கைவிட்டுவிட்டேன். வேறு சாதிக்காரப் பெண்ணானதால் வீட்டில் பலத்த எதிர்ப்புத் தோன்றவே அவளை மணக்கும் துணிச்சல் எனக்கு இல்லை. மேலும்…”

”அவள் ஏழைப் பெண்ணாக வேறு இருந்திருப்பாள். என் வீட்டில் உங்களுக்கு வேலையும் பெற்றுத் தருவதாக வாக்களிக்கவே, அவளைக் கைவிட்டு விட்டு என்னைக் கல்யாணம் செய்து கொண்டு விட்டீர்கள். அப்படித்தானே? சரி, தொலையட்டும், இப்போது அவளையும் இங்கு அழைத்து வந்து இருக்கச் செய்யப்போகிறீர்களா?”

”இல்லை. இல்லை. அவள் இப்போது உயிருடன் இல்லை.”

”அவள் குழந்தை உயிருடன் இருக்கிறதாக்கும். ஆணா, பெண்ணா?”

”ஆண் குழந்தை.”

”எத்தனை வயது?”

”பத்து.”

”சாவதற்கு முன்னால் உங்களை அவள் எப்படி, எங்கே எவ்வாறு சந்தித்தாள்?”

”ஓர் ஆள் மூலம் என் ஆபீசுக்குச் சொல்லியனுப்பினாள். சாகக்கிடப்பதாகச் சொல்லியனுப்பியதால் போயிருந்தேன்.”

”போன மாதம் மங்களூருக்கு டூர் போவதாகச் சொல்லிப் போனீர்களே, அப்போதா?”

”ஆமாம். கல்பனா! குழந்தையை ரகசியமாய் அயலூரில் பெற்று ஓர் அனாதை விடுதியில் தன் தோழி ஒருத்தியின் மூலம் சேர்த்துவிட்டு அவள் தனியாக வாழ்ந்து வந்தாளாம். ஆனால் எப்படியோ நான் வேலை செய்கிற அலுவலகம் இன்னது என்பதையும் நமக்குக் குழந்தைகள் இல்லை என்பதையும் கண்டுபிடித்திருக்கிறாள். அந்த அனாதை விடுதியின் தலைவிக்கு ஒரு கடிதம் கொடுத்திருப்பதோடு, அவளையும் சாவதற்கு முன்னால் அழைத்து நான் வந்து கேட்டால் குழந்தையை ஒப்படைக்குமாறு சொல்லி இருக்கிறாள்…”

”ஆக, அந்தக் குழந்தையைக் கூட்டி வந்து நாம் வளர்க்க வேண்டும். அதுதானே?”

”ஆமாம், கல்பனா. நமக்கோ குழந்தைகள் இல்லை.”

இவ்வாறு சொல்லிவிட்டு அவன் கெஞ்சுதல் தெறித்த பார்வையை அவள் மீது பதித்தான்.

கல்பனா வாய்விட்டுப் பெரிதாகச் சிரித்தாள். அவன் சிரிப்பு வராமல் அவளைத் திகைப்புடன் பார்த்தான்.

”என்னுடைய பிரச்னையும் தீர்ந்தது. எப்படியடா உங்களிடம் அதைப் பற்றிய பேச்சை எடுப்பது என்று நானும் நமக்குக் கலியாணம் ஆன நாளிலிருந்து தவித்துக் கொண்டிருக்கிறேன். இப்போதுதான் எனக்கும் என் விஷயம் பற்றிப் பேசுவதற்குத் தைரியம் வந்தது.”

இவ்வாறு சொல்லிவிட்டு அவள் நிறுத்தினாள். ஐந்து நொடி நேரத்துக்குப் பேசாமல் இருந்தாள். அதற்குமேல் அவனால் தன் ஆவலையும் திகிலையும் அடக்கிகொள்ள முடியவில்லை.

”சொல்லு, கல்பனா! என்ன விஷயம்?” என்றான். குரலில் தடுமாற்றம் ததும்பியது.

”நீங்கள் சொன்னது போன்ற அதே சமாசாரந்தான். நீங்கள் உங்கள் காதலியைக் கைவிட்டது மாதிரி என்னையும் அதே நிலையில் என் காதலன் கைவிட்டான். குழந்தையை அழிக்க மனமின்றி உங்கள் காதலியைப் போலவே நானும் ஒரு குழந்தையைப் பெற்றேன். டில்லிக்குப் போய் என் சிநேகிதி ஒருத்தியின் உதவியோடு குழந்தையை நான் பெற்றுக் கொண்டதால் செய்தி யாருக்குமே தெரியாது. டில்லியில் வேலை கிடைத்திருப்பதாய் என் படிப்பறிவில்லாத விதவை அம்மாவை ஏமாற்றிவிட்டுப் புறப்பட்டுப் போவது சுலபமாயிருந்தது. அந்தக் குழந்தை இங்கேதான் என் சிநேகிதி மஞ்சுளா ரங்கபாஷ்யம் நடத்துகிற அனாதை இல்லத்தில் வளர்ந்து வருகிறது. அது என் குழந்தை என்பது மஞ்சுளாவுக்குத் தெரியாது. மஞ்சுளாவின் அனாதை இல்லத்தில் அந்தக் குழந்தையைச் சேர்த்தது என் டில்லி சிநேகிதி.”

கல்பனா நடுக்கமான குரலில் கூறிவிட்டு அவன் முகத்தை ஆவலுடனும் கவலையுடனும் பார்த்தாள். வள்ளிநாயகத்தின் முகம் இறுகிப் போயிருந்தது. அப்படி ஓர் இறுக்கத்தை அந்த முகத்தில் அதற்கு முன்னால் அவள் பார்க்க நேர்ந்ததே இல்லை. அந்த இறுக்கம் உள்ளடங்கி இருந்த உணர்ச்சிகளை அவளால் தெளிவாய்க் கண்டு கொள்ள முடிந்தது. ஆத்திரம், கோபம், சகிக்க முடியாத அருவெறுப்பு ஆகிய உணர்ச்சிகளின் ஒட்டுமொத்தமான கலவை எப்படி இருக்கும் என்பது அவளுக்கு முதன் முதலாய்ப் புரிந்தது.

கணத்துள் மாறிப்போன முகத்துடன் அவன் கடகட வென்று பெரிதாய்ச் சிரித்தான்.

”உன்னைக் கையும் மெய்யுமாய்ப் பிடிப்பதற்கு நான் கண்டுபிடித்த வழி இவ்வளவு சீக்கிரம் உன்னிடமிருந்து உண்மையை வரவழைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உன் இறந்தகாலத்தைப் பற்றி உன் ஊர்க்காரன் ஒருவன் எனக்குச் சொன்னபோது நான் நம்பவில்லை. இப்போது நீயே உளறிக் கொட்டிவிட்டாய். நீ செய்த துரோகத்தை உன் வாயாலேயே சொல்ல வைத்துவிட்டேன். பார்த்தாயா?…” – சிரித்தபோது விளைந்த முகமாற்றம் அறவே மறைந்து இப்போது அவன் முகத்தில் கடுங்கோபம் குதித்துக் கொண்டிருந்தது.

இப்போது அட்டகாசமாய்ச் சிரிப்பது கல்பனாவின் முறையாக இருந்தது.

”சிரித்து மழுப்பலாம் என்றா பார்க்கிறாய்?”

”நான் ஏன் மழுப்புகிறேன்? என்னுடைய ஊரைச் சேர்ந்த எவனும் உங்களிடம் அப்படி ஒரு கதையைச் சொல்லியே இருந்திருக்க முடியாது. ஏனென்றால் என் வாழ்க்கை சுத்தமானது. அப்படி ஒர் இறந்தகாலம் எனக்குக் கிடையவே கிடையாது. இல்லாத ஒன்றை எவனோ உங்களிடம் சொன்னான் என்று நீங்கள் சொல்லுவதில் உங்கள் தந்திரம் வெளிப்படலாம். ஆனால் அது அப்பட்டமான பொய் என்பது உங்களுக்கே தெரியும். நான் ஏன் என் காதலன் என்னைக் கைவிட்டதாகவும் எனக்கு ஒரு குழந்தை பிறந்தது என்றும் சொன்னேன் தெரியுமா? உங்கள் எதிரொலி என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான். தனது இறந்தகாலம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் தன் மனைவி அதைப் பொருட்படுத்தக்கூடாது, பொருட்படுத்தமாட்டாள் என்றெல்லாம் எதிர்பார்க்கிற கணவன் அதேமாதிரி ஒரு நிகழ்வு தன் மனைவியின் வாழ்க்கையில் நடந்திருக்கும் பட்சத்தில் அவன் முகம் எப்படி மாறுகிறது என்பதைப் பார்ப்பதற்குத்தான் நான் அப்படி ஒரு பொய்யைச் சொன்னேன். என் பிரியம் மாறாது என்று நான் சொன்னது உங்களிடமிருந்து ‘நிஜமான’ ‘உண்மையை’ வரவழைப்பதற்காகத்தான். உங்கள் ஓரவஞ்சனை தெரிந்த பிறகும் என் பிரியம் மாறாது என்றா நினைக்கிறீர்கள்?” கல்பனா மறுபடியும் சிரித்தாள். அவன் பல்லைக் கடித்தான்.

Painting Credit: Kootation.com

***

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

சிவசங்கரி

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s