‘‘படிக்கிற பசங்களுக்கு எதுக்கு சாப்பாடு போடணும்?’’ என்ற கேள்விக்கு ஒருமுறை இப்படி பதிலளித்தார் காமராஜர்… ‘‘சாப்பாடாவது கிடைக்கட்டுமேன்னு நாலு பேரு புள்ளைங்களை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவைப்பாங்கல்ல?’’
காமராஜர், எம்.ஜி.ஆர். உள்ளிட்ட பல தலைவர்கள் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தியதற்குக் காரணம், வறுமைக் கோட்டில் உள்ள பல குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான். தமிழகம் மட்டுமல்ல… இந்தியாவில் பல மாநிலங்களில் இருக்கும் அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் செயல்பட்டு வருகிறது. சுகாதாரமற்ற உணவு, சுத்தமில்லாத தண்ணீர் இதுதான் பல இடங்களில் நிலைமை. ஆனாலும், அந்த உணவும் பல மாணவ, மாணவிகளுக்குத் தேவைப்படுகிறது என்பதுதான் கொடுமை. ‘பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் பலி… உணவில் பூச்சி மருந்து கலந்திருந்தது’, ‘சதீஸ்கரில் மதிய உணவு சாப்பிட்ட 35 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்’… தொடர்கிற செய்திகள் பீதியைக் கிளப்புவது ஒரு பக்கம். மற்றொரு பக்கம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவதிலும் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவது நாடாளுமன்றம் வரை எதிரொலித்து கலங்கடித்திருக்கிறது.
பாராளுமன்றத்தில் இதற்காகவே இருக்கும் குழு (The Committee for the Welfare of Scheduled Caste and Scheduled Tribes) இந்தியாவில் பல இடங்களில் மதிய உணவுத் திட்டத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதை சுட்டிக் காட்டியிருக்கிறது. அதை நடைமுறைப்படுத்தும் பள்ளிகள் மீதும் ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி பரிந்துரைத்திருக்கிறது. இந்தியாவில் ஒதுக்குப்புறமாக, உள்ளடங்கிய கிராமங்களிலும், கடலோரப் பகுதிகளிலும், முக்கியமாக ஒடிஸாவிலும் மதிய உணவின் போது தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது. தலித் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனியாக உணவு பரிமாறப்படுகிறது. இந்தப் பிரச்னையைத் தீர்க்க, மத்திய அரசு இதற்காகவே சிறப்பு குழுக்களை ஏற்படுத்தி, அந்த இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறது அந்தக் குழு. கிட்டத்தட்ட 144 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாகவும் சுட்டிக் காட்டியிருக்கிறது.
மாணவர்கள் மனதில் தீண்டாமை என்னும் விஷ விதையை விதைக்கும் சில பள்ளிகளும் ஆசிரியர்களும் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ‘தீண்டாமை ஒரு பாவச் செயல்’ என்று காந்தி சொன்னதை பாடங்களில் கற்பித்தால் மட்டும் போதாது. அதை பள்ளிகள் செயலிலும் நிரூபிக்க வேண்டும். ‘சாதிகள் இல்லையடி பாப்பா!’ என்று பாடம் நடத்திக் கொண்டே. அதற்கு நேர் எதிராக நடந்து கொள்ளும் சிலரை என்னதான் செய்வது?
– பாலு சத்யா
Photo Credit: http://indiagiving.wordpress.com