எளிதாக வாங்கலாம் கொலைக்கருவி!

Image

* வினோதினி. 23 வயது. காரைக்கால் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர். பொறியியல் பட்டதாரி. வினோதினியை ஒருதலையாகக் காதலித்தார் சுரேஷ். வினோதினி அவர் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. தீபாவளி விடுமுறைக்கு வந்திருந்த வினோதினி மீது ஆசிட் ஊற்றினார் சுரேஷ். முகம் கருகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கண்பார்வையும் பாதிக்கப்பட்டிருந்தது. சிகிச்சை பலனின்றி கடந்த பிப்ரவரி 12ம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

* வித்யா. சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர். 21 வயது. ஏழ்மைக் குடும்பம். அப்பாவை இழந்தவர். அம்மா கூலி வேலை செய்து வந்தார். ஒரே அண்ணன். 12ம் வகுப்பு வரை படித்த வித்யா ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்த்து வந்தார். அதே காதல். விஜய பாஸ்கர், வித்யாவைக் காதலிக்க… வீட்டில் தங்கை திருமணம் வரைக்கும் காத்திருக்கச் சொல்ல… திருமணம் தள்ளிப் போனதால் ஆத்திரம் விஜயபாஸ்கருக்கு. வித்யா மீது ஆசிட் ஊற்றினார். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வித்யா, சிகிச்சை பலனின்றி அதே பிப்ரவரி மாதம் இறந்து போனார்.

இரண்டும் மரணங்கள் அல்ல… அப்பட்டமான கொலைகள்! அதற்கு உதவியது சல்லிசாகக் கிடைத்த ஒரு கொலைக் கருவி… ஆசிட்!

தரை, கழிவறையை சுத்தம் செய்யவும், நகையை பாலீஷ் போடவும் ரிப்பேர் செய்யவும், மேலும் பல உபயோகங்களுக்காகவும் விற்கப்படுகிறது ஆசிட். சல்பரிக், ஹைட்ரோஃப்ளோரிக், ஹைட்ரோக்ளோரிக் எனப்படும் அபாயகரமான திராவகங்கள். இவை மிக எளிதாகக் கடைகளில் கிடைப்பது குற்றவாளிகளுக்கு வசதியாகப் போய்விடுகிறது. இந்த ஆசிட் வீச்சுத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த ஜூலை மாதம் நாடு முழுக்க ஆசிட் விற்பனையைக் கடுமையாக்கியது உச்ச நீதிமன்றம்.

‘ஆசிட் விற்பனையாளர்களும், இடைத்தரகர்களும், வாங்குபவர்கள் முகவரி, புகைப்படச் சான்று ஆகியவற்றைக் காட்டி எதற்காக வாங்குகிறார்கள் என்கிற நியாயமான காரணத்தைத் தெரிவித்த பிறகுதான் விற்க வேண்டும். ஆசிட் விற்பவர்கள் யாருக்கு விற்றார்கள் என்கிற ஆவணத்தை பராமரிப்பது அவசியம். ஆசிட் விற்ற மூன்று நாட்களுக்குள் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் அந்தத் தகவல்களை விற்பனையாளர்கள் ஒப்படைக்க வேண்டும். கைவசம் இருப்பில் இருக்கும் ஆசிட் குறித்த விவரங்களை உள்ளூர் மாஜிஸ்ட்ரேட்டிடம் 15 நாள்களுக்கு ஒருமுறை தெரிவிக்க வேண்டும். கல்லூரி மாணவர்கள் ஆசிட் கேட்டால், அவர்களிடம் உரிய அடையாள அட்டையும் கல்லூரியிடம் இருந்து பெற்ற அனுமதிக் கடிதமும் இருக்க வேண்டும். 18 வயதைத் தாண்டாதவர்களுக்கு விற்கக்கூடாது’ என்றெல்லாம் நிபந்தனைகள் விதித்தது உச்ச நீதிமன்றம். இந்த நிபந்தனைகள் எல்லாம் கிட்டத்தட்ட காற்றில் பறந்த கதைதான். சல்பரிக் ஆசிட் போன்ற பயங்கரமான உயிர்க்கொல்லிப் பொருளை நேரடியாக கவுன்ட்டர்களில் விற்பதில்லை. அவ்வளவுதான். மற்றபடி, ஹார்ட்வேர் ஷாப்களிலும், பேட்டரி விற்கும் ஸ்டோர்களிலும், மளிகைக் கடைகளிலும், ஆசிட் கிடைக்கும் பிற கடைகளிலும் எளிதாக வாங்க முடியும்.

Image

உச்ச நீதிமன்றம் இவ்வளவு நிபந்தனைகளை விதித்த பிறகும், தமிழகம், புதுவை இரு மாநிலங்களிலும் ஆசிட் விற்பனை எந்த வரைமுறைகளுக்கும் உட்படாமல் கனஜோராக நடந்து கொண்டுதான் இருக்கிறது. மிகக் குறைந்த விலைக்கு இவற்றை வாங்கலாம் என்பதுதான் கொடுமையின் உச்சக்கட்டம்!

கடலூர் மாவட்டத்தில் இருக்கும் சில தொழிற்சாலைகளில் ஹைட்ரோக்ளோரிக் ஆசிட் தயாரிக்கப்படுகிறது. சல்பரிக் ஆசிட், சோப் ஆயில் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் கிடைக்கும். புதுச்சேரியில் மட்டும் 50க்கும் மேற்பட்ட சோப் ஆயில் தயாரிக்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. சோப் ஆயில் உற்பத்திக்காக சராசரியாக, ஒரு நாளைக்கு 1,000 மெட்ரிக் டன் சல்பரிக் ஆசிட் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் கழிவாக, இந்த நிறுவனங்கள் 1,200 டன் சல்பரிக் ஆசிட்டை வெளியேற்றுகின்றன. இந்தக் கழிவுகளை யார் வேண்டுமானாலும் ஒரு கிலோ 50 பைசா என்கிற விலைக்கு டன் கணக்கில் வாங்க முடியும். 10 சதவிகிதத்துக்கு மேல் ஆசிட் கலப்பு இருக்கும் எந்தப் பொருளும் அபாயகரமானது. புதுச்சேரியில், இந்த சல்பரிக் கழிவுகளை அலுமினியம் சல்பேட் தொழிற்சாலைகள்தான் பெரும்பாலும் வாங்குகின்றன. ஆனால், அவை முழுவதும் அலுமினியம் சல்பேட் உற்பத்திக்குத்தான் பயன்படுகின்றன என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல ஊர்களில் எளிதாகக் கிடைக்கிறது ஆசிட். ‘ரொம்ப பவர்ஃபுல்லானதுங்க. பாத்து யூஸ் பண்ணுங்க!’ என்று மட்டும் எச்சரிக்கை செய்து விற்கிறார்கள். ஒரு லிட்டர் ஆசிட் பாட்டிலின் விலை 50 ரூபாய். ‘மிக அபாயகரமானது, அரித்துவிடக்கூடியது’ (Highly Corrosive) என்கிற எச்சரிக்கை லேபிளில் ஒட்டப்பட்டிருக்கிறது. டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் 500 மி.லி. ஹைட்ரோக்ளோரிக் ஆசிட் பாட்டிலின் விலை 30 ரூபாய்.

உண்மையில், ஆசிட் விற்பனையை கண்காணிப்பது கடினமான காரியம். தமிழ்நாட்டில் மட்டும் பல லட்சம் ஹார்ட்வேர் ஸ்டோர்கள் இருக்கின்றன. ஆசிட் விற்பனையை முறைப்படுத்த சட்டம் பிறப்பிக்கப்பட்டால் மட்டும் போதாது. அதை நடைமுறைப்படுத்த உரிய வழிமுறைகளும் தேவையான அளவுக்கு ஆள் பலமும் வேண்டும். அதைவிட, மக்களின் மனநிலையில் மாற்றம் வேண்டும். பெண்களை வெறும் போகப் பொருளாகப் பார்க்கிற, சித்தரிக்கிற மனப்பான்மை மாற வேண்டும். இது அவ்வளவு எளிதாக உடனே நடந்து விடுகிற காரியமுமல்ல.

ஆசிட் வீசுபவர்களுக்கு உடனடியாக, கடுமையான தண்டனை வழங்கப்பட்டால் இது போன்ற குற்றச் செயல்கள் ஒருவேளை குறையலாம். ஆசிட் விற்பனையை கடுமையாக்கினால் போதும். குற்றச் செயல்களைத் தடுத்துவிடலாம். ஆனால், சர்வ சாதாரணமாக நடக்கும் ஆசிட் விற்பனை, அது சாத்தியமே இல்லை என்பதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.

– பாலு சத்யா 

‘அமிலம் எனும் அவலம்’ விரிவான கட்டுரையை ‘குங்குமம் தோழி’ செப்டம்பர் 1-15 இதழில் படிக்கலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s