காலத்தை வென்ற கதைகள் – 14

Image

ஹெப்சிபா ஜேசுதாசன்

குமரி மாவட்டம் புலிப்புனம் ஊரைச் சேர்ந்தவர். பர்மாவில் 1925ம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை பர்மாவில் மர வியாபாரம் செய்து கொண்டிருந்தார். இரண்டாம் உலகப் போரின் போது குடும்பம் நாகர்கோவிலுக்கு இடம் பெயர்ந்தது. நாகர்கோவிலில் படித்த ஹெப்சிபா ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். திருவனந்தபுரம் பல்கலைக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். இவருடைய கணவர் ஜேசுதாசன் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தமிழ்ப் பேராசிரியர். கணவரின் தூண்டுதலால் ‘புத்தம் வீடு’ நாவலை எழுதினார். இந்நாவல், மலையாளத்திலும் ஆங்கிலத்தில் ‘லிஸ்ஸி’ஸ் லெகஸி’ (Lissy’s Legacy) என்ற பெயரிலும் மொழி பெயர்க்கப்பட்டது. தமிழின் ஆரம்ப நாவல்களில் முக்கியமான 10 நாவல்களைப் பட்டியலிட்டால் நிச்சயம் அதில் ‘புத்தம் வீடு’ இடம் பெற்றிருக்கும். கணவரின் உதவியோடு ‘Countdown from Solomon’ என்ற இலக்கிய வரலாற்று நூலை நான்கு பாகங்களாக எழுதினார். இது தவிர கவிதைகள், கட்டுரைகள், சிறுவர் இலக்கியம் என பல தளங்களில் தடம் பதித்திருக்கிறார்.  திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் வழங்கும் ‘விளக்கு விருது’ 2002ம் ஆண்டு இவருக்குக் கிடைத்தது. 2012, பிப்ரவரி 9ம் தேதி மறைந்தார். 

*****

‘புத்தம் வீடு’ நாவலில் ஓர் அத்தியாயம்… 

Image

ருஷங்கள் எப்படித்தான் ஓடி விடுகின்றன! வாழ்க்கை முறைதான் எப்படி எப்படி மாறி விடுகின்றது! சுயேச்சையாக ஓடியாடித் திரிந்து, நெல்லி மரத்தில் கல்லெறிந்து, குளத்தில் குதித்து நீச்சலடித்து, கூச்சலிட்டுச் சண்டை போட்டு, கலகலவென்று சிரித்து மகிழ்ந்து, எப்படி எப்படியெல்லாமோ இருந்த ஒரு குழந்தை, பாவாடைக்கு மேல் ஒற்றைத் தாவணி அணிந்து கொண்டு, அது தோளிலிருந்து நழுவிவிடாதபடி இடுப்பில் இழுத்துக் கட்டிக் கொண்டு, கதவு மறைவில் பாதி முகம் வெளியில் தெரியும்படி குற்றவாளிபோல் எட்டிப் பார்க்கிற பரிதாபத்துக்கு இத்தனை சடுதியில் வந்து விடுகிறதே, இந்த வாழ்க்கைத் திருவிளையாடலை என்னவென்று சொல்வது!

அதோ அந்த அடிச்சுக் கூட்டிலிருந்து அப்படிப் பாதிமுகமாக வெளியில் தெரிகிறதே, அந்த முகத்துக்கு உரியவள் லிஸிதான். அந்தக் கண்கள் வேறு யாருடைய கண்களாகவும் இருக்க முடியாது. அவை அவளைக் காட்டிக் கொடுத்து விடுகின்றன. ஆனால், அந்தக் கண்களில் குறுகுறுப்போ மகிழ்ச்சியோ துள்ளி விளையாடவில்லை. அவற்றில் படிந்திருப்பது சோகமா, கனவுலகத்தின் நிழலா சும்மா வெறும் சோர்வா என்பதுதான் தெரியவில்லை. தலையில் நன்றாய் எண்ணெய் தேய்த்து வாரியிருக்கிறாள். அவள் முகத்திலும் எண்ணெய்தான் வழிகிறது. மாநிறமான அந்த முகத்துக்கு ஒளி தந்து அழகு செய்வதற்குப் புன்னகை ஒன்றும் அதில் தவழவில்லை. லிஸியா அது? நம் லிஸியா? ஏன் இப்படிக் குன்றிக் கூசிப் போய் நிற்கிறாள்? ஏன்? ஏன்?

முதலாவது, லிஸி பெரிய வீட்டுப் பிள்ளை என்பதை நீங்கள் அறிய வேண்டும். அதை மறந்திருந்தீர்களானால் இதுதான் அதை மறுபடியும் ஞாபகத்தில் கொள்ள வேண்டிய தருணம். லிஸியும் ஒருபோதும் அதை மறந்து விடக் கூடாது. அவள் பெரிய வீட்டுப் பெண். பனைவிளை புத்தம் வீட்டுக் குலவிளக்கு. ஆகையால் அவள் பலர் காண வெளியில் வருவது கொஞ்சங்கூடத் தகாது. அது அவள் விலையைக் குறைப்பதாகும். இரண்டாவது, ‘இற்செறிப்பு’ ஒரு பழந்தமிழ் வழக்கம். சங்க காலத்திலேயே உள்ள வழக்கம். நல்லவேளையாக இது இன்னும் வெளிவராத இரகசியமாகவே இருந்து வருகிறது. பனைவிளை புத்தம் வீட்டார்க்குச் சங்க கால வழக்கங்கள் ஒன்றும் தெரியாது. அதற்குள்ள தமிழ் ஞானமும் அவர்களுக்குக் கிடையாது. ஆனால் தலைமுறை தலைமுறையாக வரும் வழக்கம் மட்டும் நன்றாகத் தெரியும். லிஸிக்கு பதினான்கு வயது ஆகிறது. “பெரிய பிள்ளை” ஆகி விட்டாள். ஒற்றைத் தாவணி அணிந்துவிட்டாள். ஆகையால் இற்செறிப்பு மிகவும் அவசியமாகி விட்டது. நீங்கள் லிஸியின் முகத்தைப் பார்த்தால், அந்தக் கண்கள் மட்டும் உங்களிடம் “ஏன்? ஏன்?” என்று கேட்பது போலிருக்கும். ஆனால் இதற்கெல்லாம் போய்த் துயரப்படாதேயுங்கள். துயரப்பட்டால் தமிழ்நாட்டின் மற்ற பெண்மணிகளின் துயரங்களுக்கெல்லாம் எப்படிக் கணக்கெடுக்கப் போகிறீர்கள்?

அவள் என்னென்ன ஆசைகளை உள்ளத்தில் போற்றி வளர்த்து வந்தாள் என்று யாரும் கவலைப்படவில்லை. லிஸி வெறும் அப்பாவிப் பெண் ஒன்றும் அல்ல. முதலில் ரகளை நடத்தித்தான் பார்த்தாள். அழுது அடம் பிடித்தாள். அவளுக்குத் தெரிந்த முறையில் சத்தியாக்கிரகம் பண்ணினாள். ஆனால் இத்தனை பேரின் எதிர்ப்புக்கு இடையில் ஒரு குழந்தையின் பலம் எத்தனை தூரந்தான் போக முடியும்? அப்பனும் அம்மையுந்தான் போகட்டும். இந்தக் கண்ணப்பச்சியுங் கூட அல்லவா அவர்களுடன் சேர்ந்து கொண்டார்? கண்ணம்மையின் காரியம் கேட்கவே வேண்டாம். சித்தியாவது ஒருவாக்குச் சொல்லக் கூடாதோ? சித்திக்கு வழக்கம்போல வாய்ப்பூட்டு போட்டிருந்தது. மேரியக்கா இந்தத் தருணம் பார்த்துக் கிராமத்தில் இல்லை. மேரியக்கா பாளையங்கோட்டையில் இருக்கிறாள். காலேஜில் படிக்கிறாள். மேரியக்காவைப் படிக்க வைக்க அவளுக்குச் சித்தப்பாவோ மாமாவோ யார் யார் எல்லோமோ இருக்கிறார்கள். லிஸிக்கு யார் இருக்கிறார்கள்?

பள்ளிக்கூடத்துக்குத்தான் விட்டபாடில்லை. கோயிலுக்காவது விடக் கூடாதோ? நாலு தோழிகளை அங்கு சந்திக்கும் பாக்கியமாவது கிடைக்கும். கண்ணப்பச்சி கண்டிப்பாகச் சொல்லி விட்டார். “இப்ப எதுக்கு? மொதல்ல ரெண்டு பேராப் போவட்டும். நம்ம குடும்பத்திலே இல்லாத பழக்கம் நமக்கு என்னத்துக்கு?”

“ரெண்டு பேர்” என்று யாரை கண்ணப்பச்சி குறிப்பிடுகிறார் என லிஸிக்கு ஓரளவு தெரியும். ஆனால் அவள் வருங்காலத்தை விட நிகழ்காலத்திலேயே அக்கறை உடையவள். இரண்டு பேராகக் கோயிலுக்குப் போகலாம் என்ற நம்பிக்கை அப்போதைக்கு அவளுக்குத் திருப்தி தருவதாயில்லை. என்றாலும் இளம் உள்ளங்கள் எப்போதும் அழுதுகொண்டிருக்க முடியாது. எது முதலில் எட்டிக்காயாகக் கசக்கிறதோ அதுவும் நாளடைவில் பழக்கப்பட்டுவிடுகிறது. வாழ்க்கையே உலக ஞானத்தைப் போதிக்கிறது. லிஸிக்குப் பள்ளிக்கூடம் இல்லாவிட்டால் என்ன? வீடு இல்லையா? தோழர், தோழியர் இல்லாவிட்டால் போகிறார்கள். மேரியக்கா தந்த மைனா இருக்கிறது. லில்லி, செல்ல லில்லி இருக்கிறாள். லில்லியோடு கொஞ்சிக் குலவுவதில் பொழுதில் பெரும்பகுதியும் கழிந்து விடுகிறது. அந்தச் சின்னத் தலையை மடியில் இட்டுக் கொள்வதில்தான் எத்தனை இன்பம்! வீட்டு வேலைகளும் அப்படி ஒன்றும் பாரமானவை அல்ல. தானாகச் செய்தால் செய்வாள். இல்லாவிட்டால் அம்மையும் சித்தியும் இல்லையா? லிஸி பெரிய வீட்டுச் செல்லப்பிள்ளை தானே? இப்படியாகத் தன்னை நாளடைவில் சமாதானம் செய்து கொள்ளுகிறாள் அந்தப் பேதைப் பெண். மேலும், பதவிக்காகப் போய் ஏங்கிக் கிடந்தாளே, வீட்டிலேயே அவளுக்கு மகத்தான பதவி காத்துக் கிடக்கிறது. கண்ணப்பச்சிக்குக் கண் மங்கிக் கொண்டிருக்கிறது. கண்ணம்மை போன பிறகு, அதுவும் இரண்டு வருஷம் ஆகி விட்டது. கண்ணப்பச்சிக்குத் தனிமைத் துயரம் அதிகம். லிஸியின் துணையை இன்னும் கூடுதலாக நாடினார். இந்த ஒரு காரணத்தால்தான் லிஸிக்கு அடிச்சுக் கூட்டுக்கு வரும் உரிமை கிடைத்தது. ஆபத்துக்குப் பாவம் இல்லை அல்லவா? கண்ணப்பச்சிக்கு நினைத்த நேரம் பைபிளும், தினப்பத்திரிக்கையும் வாசித்துக் கொடுக்க வேறு யார் இருக்கிறார்கள்? ஆகையால் லிஸிக்கு அடிச்சக்கூட்டில் பெருமையுடன் நடமாடும் பதவி கிடைத்தது. அம்மைக்கும் சித்திக்கும் கிடைக்காத பதவி; அவர்கள் மாமனாருடன் பேசக் கூடாது. அவர்கள் கணவன்மார்களும் – சித்தப்பாவும் இப்படி ஆகிவிட்டாரே என தங்கள் தந்தையுடன் பேசுவதில்லை. லிஸிதான் அந்த வீட்டில் கண்ணப்பச்சிக்கு ஊன்றுகோல். அவளுக்கு அது புரியவும் செய்தது. அதனால் கண்ணப்பச்சியிடம் அவளுடைய பாசம் இன்னமும் அதிகமாயிற்று.

வீட்டிலுந்தான் என்னென்ன மாற்றங்கள்? ‘ஆடு குழை தின்கிற’ மாதிரி வெற்றிலை போட்டு வந்த கண்ணம்மை போய் விட்டார்களே! லிஸி வெற்றிலை இடித்துக் கொடுப்பாள் என்று அவள் கையைப் பார்ப்பதற்கு இப்போது யார் இருக்கிறார்கள்? ஆனாலும் அவள் வீட்டார் பல காரியங்களுக்காக அவள் கையை இன்னும் எதிர்பார்த்துத்தான் இருந்தார்கள். அதற்குக் காரணம் லிஸியேதான். லிஸி, மேரியக்காவின் வீட்டிலிருந்து சில பாடங்களைக் கற்றறிந்தாள். கிராமத்து வீடானாலும் அதைச் சுத்தமாக வைக்கலாம் என்றறிந்திருந்தாள். ஏராளமாகக் குவிந்து கிடக்கும் பழ வகையறாக்களுக்கென்று ஓரிடம், கண்ணப்பச்சி மாட்டுக்கென்று சீவிப்போடும் பனம் பழக்கொட்டைகளுக்கென்று ஓரிடம், இப்படியெல்லாம் ஒழுங்குபடுத்தி வைத்திருந்தாள். ஈக்களின் தொல்லை இப்போது குறைந்துவிட்டது. அடிச்சுக்கூட்டுக்கு நேராகத் திறக்கும் ஜன்னலுக்கு ஒரு ‘கர்ட்டன்’ கூடத் தைத்துப் போட்டிருந்தாள். அது லிஸிக்கு மிகவும் சௌகரியமாயிருந்தது. யாராவது கண்ணப்பச்சியிடம் எப்போதாவது பேசுவதற்கென்று வருவார்கள். அப்போது வீட்டினுள் இருந்து கொண்டே எல்லாவற்றையும் பார்க்கலாம். வீட்டை இப்போது பார்த்தால் ஏதோ பெண்மணிகள் வாழும் இல்லமாகத் தோற்றமளித்தது. முன்பெல்லாம்… லிஸிக்கு இப்போது சித்தியிடம் மதிப்பு மிகவும் குறைந்து விட்டது. சித்தியாவது வீட்டை கவனித்துக் கொள்ளக் கூடாதா? சித்திக்கு அழகாக ஸாரி கட்டத் தெரியும். பவுடரை நாசுக்காகப் பூசத் தெரியும். ஆனால் இந்த அம்மையிடம் ஒத்துப் போகக் கூடத் தெரியவில்லையே; கண்ணம்மை மரித்த பிறகு! சித்தியின் முகம் இப்போதெல்லாம் கவலை படர்ந்த இருள் சூழ்ந்திருக்கிறது. சித்தப்பா அடிக்கடி ‘பிஸினஸ்’ என்று சொல்லிக் கொண்டு, திருவனந்தபுரம் போய் வருகிறார். அங்கிருந்து யாராவது உறவினரைக் கூட அழைத்து வருவார், போவார். ஆமாம், அதற்காகவாவது வீட்டை நன்றாக வைத்திருக்க வேண்டாமா? உன் முற்றத்தில் பூத்துக்குலுங்குகின்ற ரோஜாச் செடிதான் எத்தனை அழகாயிருக்கிறது! லில்லியின் பட்டுக் கன்னங்களைப் போல் லிஸியின் பழைய நினைவுகளைப் போல். ஆனால் அதைப் பேண வேண்டுமானால் லிஸி மட்டுந்தான் உண்டு வீட்டில். வேறு யார் இருக்கிறார்கள்?
லிஸிக்கு சாமர்த்தியம் இல்லாவிட்டால் அப்பனை இப்படி வீட்டில் பிடித்து வைத்திருக்க முடியுமா? அவர் கள்ளுக்கடைக்குப் போவதை நிறுத்த முடியவில்லை. ஆனால் காப்பிக் கடைக்குப் போகிறதை நிறுத்தி விட்டாள். ஓட்டல் பலகாரம் வீட்டில் கிடைக்கும்போது அவர் எதற்காக ஓட்டலுக்குப் போகிறார்? அவரும் கண்ணப்பச்சியைப் போல லிஸியின் கையை எதிர்பார்த்துத் தானே இருக்கிறார்! இப்படியாக அவளுக்குப் பெருமையும் திருப்தியும் தரக் கூடிய விஷயங்கள் அறவே இல்லாமல் போகவில்லை. இல்லையானால் எப்படித்தான் வாழ்கிறதாம்?

Image
இன்றைய வாழ்க்கையில் மிகமிகப் பிடித்த சமயம் பனையேற்றக் காலந்தான். அக்கானி அவள் விரும்பிக் குடிக்கும் பானம். அதில் விழுந்து செத்துக் கிடக்கும் ஈ, எறும்புகளை அவள் ஒருபோதும் அசிங்கமாகக் கருதினதில்லை. அவற்றை அகப்பையால் நீக்கி விட்டுக் கோப்பையை பானையில் இட்டு முகந்து குடிப்பாள். ஆனால், அதுவல்ல விஷயம். அக்கானிக் காலத்தில் அதைக் காய்ச்சுவதற்கென்று ஒரு கிழவி வீட்டுக்கு வருவாள். அவளுடன் பேசிக் கொண்டிருப்பது லிஸிக்கு நல்ல பொழுதுபோக்கு. அவள் எரிப்பதற்கென்று உலர்ந்த சருகுகளை விளக்குமாறு கொண்டு ‘அரிக்கும்’போது லிஸியும் கூட நடப்பாள்; அவர்கள் வீட்டடிதான்; ஆகையால் அதில் ஒன்றும் கட்டுப்பாடில்லை. இந்தக் கிழவியின் மகன்தான் இவர்களுக்குப் பனையேறிக் கொடுப்பது. அவன் பெயர் தங்கையன். பனையேற்ற ஒழுங்குபடி ஒருநாள் அக்கானி தங்கையனைச் சேரும். தங்கையன் முறை வரும்போது அவனுடைய இளம் மனைவி அக்கானியை எடுத்துப் போக வருவாள். இவர்கள் குழந்தைகள் இரண்டு பேர். பிறந்த மேனியாகக் கூட ஓடி வருவார்கள். வாழ்க்கை வெறும் சப்பென்று ஆகி விடாதபடி இவர்கள் எல்லோரும் லிஸிக்கு உதவினார்கள்.
லிஸிக்கு வெளியுலகந்தானே அடைத்துக் கொண்டது? ஆனால் உள்ளே இவளுக்கென்று ஒரு தனி உலகம் உருவாகிக் கொண்டிருந்தது. பனையேறுபவர்கள் சடக் சடக்கென்று குடுவையைத் தட்டிக் கொண்டு வருவதும் பனையோலைகளின் இடையே வானத்தை எட்டிப் பிடிப்பதைப் போல் இருந்து கொண்டு ‘அலுங்குகளை’ அதாவது பனம் பாளைகளைச் சீவிக் கீழே தள்ளுவதும் ஒருவரையொருவர் கூவியழைத்து வேடிக்கை பேசிக் கொள்வதும் எல்லாம் சுவாரஸ்யமான காரியங்களே. பனையுச்சியிலிருந்து எந்தெந்த விஷயங்களெல்லாம் அலசி ஆராயப்படும் தெரியுமா? மன்னர் அரண்மனை இரகசியங்கள் தொட்டு ஹிட்லரின் ராணுவ காரியங்கள் வரையுள்ள விஷயங்கள் அடிபடும். லிஸி இப்போது பள்ளிக் கூடத்தில் படிக்கிற மாதிரிதான். தன் வீட்டு வாசலில் இருந்து கொண்டே பல புதிய பாடங்களைப் படித்துக் கொண்டிருக்கிறாள்.
***

ஹெப்சிபா ஜேசுதாசனின் படைப்புலகம் குறித்து பேராசிரியர் அ.ராமசாமி…

சமூகத்தின் இயங்கியல் தன்மையைப் புரிந்து கொண்ட ஹெப்ஸிபாவின் வாழ்க்கை பற்றிய கோட்பாடு அதன் போக்கிலேயே அவருக்குரிய இலக்கியக் கோட்பாட்டையும் உருவாக்கித் தந்துவிடுகிறது. அந்தக் கோட்பாடே யதார்த்தவாதம் (realisam ) என்பது. இந்த யதார்த்தவாதம், பனைவிடலிகளின் சப்த ஒழுங்கையும், பனையேறிகளின் கோவணத்தையும், அக்காணியின் மணத்தையும், கல்லூரிக் காதலர்களின் கற்பனையையும், அனாதைப் பையனின் வறுமைத் துயரத்தையும் அப்படியே படம் பிடித்துக் காட்டுவதோடு நின்று விடுகிற இயல்புநெறிவாதத்திலிருந்து (Naturalism ) விலகி, சமூக வளர்ச்சியைப் புரிந்து கொண்ட ஆசிரியர், யார் பக்கம் தன் சார்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்து வெளிப்படுத்தும் தன்மையதாகும். இதுவே ஹெப்ஸிபாவின் இலக்கியக் கோட்பாடாகும். இந்த இலக்கியக் கோட்பாடே – சமூகத்தை வளர்ச்சிப் போக்கில் நகர்த்தும் தன்மையுடைய இலக்கியக் கோட்பாடே – அவருக்கு நாவல் வரலாற்றுக்கு முக்கியப் பங்களிப்பு செய்தவர் என்ற பெருமையினைப் பெற்றுத் தந்தது எனலாம். 

Photo Credit: Kalachuvadu (Hephzibah Jesudasan)

Photo Credit: http://www.themarkeworld.com (Palm Tree)

**********

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

ஜோதிர்லதா கிரிஜா

சிவசங்கரி

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s