குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம்!

Image

குழந்தைப் பாதுகாப்பைப் பற்றி நாம் யோசிக்கிறோமா? ஆபத்து, அவசர காலத்தில் அவர்களுக்கு என்னென்ன முதலுதவி, சிகிச்சை தரவேண்டும் என்று கற்று வைத்திருக்கிறோமா? இப்படிக் கேட்டால் பெரும்பாலானவர்கள் சொல்லும் பதில்   ‘இல்லை’. இன்றைய அவசர உலகில் அதற்குப் பலருக்கும் நேரமும் இருப்பதில்லை. அந்த அவசியத்தைப் பற்றி யோசித்திருக்கிறது ஒரு மருத்துவமனை. யோசித்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் அதை செயல்படுத்தவும் களத்தில் இறங்கியிருக்கிறது. அது, சென்னை அப்போலோ குழந்தைகள்  மருத்துவமனை.

அவசரநிலை நேர்வுகளின்போது குழந்தைகளுக்கு முதலுதவி மற்றும் அடிப்படை உயிர்காப்பு மற்றும் ஆதரவை வழங்குவதில் முக்கியப் பங்காற்றுபவர்கள் ஆசியர்களும் பெற்றோர்களும். அவர்களுக்கு அந்தத் திறனை கற்றுக் கொடுக்க, சென்னை மாநகரிலுள்ள பள்ளிகளை இலக்காகக் கொண்ட விழிப்புணர்வு இயக்கம் ஒன்றை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ‘உலக முதலுதவி தின’ அனுசரிப்பின்போது தொடங்கியது. இன்றைக்கு, அது தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில், குழந்தைகள் காப்பகங்கள் உட்பட 40 பள்ளிகளில் இச்செயல்திட்டமானது ஆர்வத்தோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் நேரடி பயிற்சி மற்றும் மேற்பார்வைகளின் கீழ் குழந்தைகளுக்கு அவசரநிலை மருத்துவ உதவி தேவைப்படும் முதல் 30 நிமிடங்களில் உயிர்காக்க அவசியமான முதலுதவியை வழங்க 600 ஆசிரியர்கள் பயிற்சியையும், அதற்கு உரிய சான்றிதழையும் பெற்றிருக்கிறார்கள்!

Image

குழந்தைகள் மருத்துவமனையில் இதற்காக நடைபெற்ற ஆண்டுதின நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் K.இராமானுஜம், ஐ.பி.எஸ்., D.சபிதா, ஐ.ஏ.எஸ்., அரசு முதன்மைச் செயலர், பள்ளி கல்வித்துறையைச் சேர்ந்த பிரபல பிரமுகர்கள் பங்கேற்றனர். வீட்டில், சாலையில், பள்ளி வளாகத்துக்குள் குழந்தைகளை பாதிக்கின்ற, விரும்பத்தகாத விபத்துகள், நிகழ்வுகளை தவிர்க்கவும் உதவவும் அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த பள்ளிகள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பதை ஊக்குவிப்பதாக இவர்களின் பங்கேற்பு அமைந்தது. குழந்தைகளுக்குக் காயங்கள் ஏற்படுவதை தடுப்பதற்காக,  அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை தன் ஆதரவை வித்தியாசமான முறையில் தெரிவித்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்துப் பள்ளிகளின் பிரதிநிதிகளுக்கும் சிபிஆர் சாதனத்தொகுப்பை வழங்கியது.

குழந்தைகளுக்கு விபத்து ஏற்படும் நேர்வுகளில், அது நிகழ்ந்ததற்கு அடுத்த முதல் முப்பது நிமிடங்கள்தான் அவர்கள் உயிர் பிழைப்பது அல்லது மீட்கப்படுவதற்கான சாத்தியங்கள் நிறைந்த தருணம். குழந்தைகள் தொடர்பான விபத்துகள் அதிகரித்துவரும் நிலையில், பங்கேற்கின்ற பள்ளிகளின் நிர்வாகம் மற்றும் சென்னை போக்குவரத்து காவல்துறையோடு சேர்ந்து அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், இத்தகைய அவசரநிலையை கையாள போதுமான அளவு தயாராக இருக்கிறார்கள். அதோடு, தொடர்புடைய நபர்களுக்கு கல்வியையும் பயிற்சியையும் வழங்குவதற்கான முயற்சியையும் மேற்கொள்கிறார்கள். பூச்சிக்கடிகள், தொண்டையில் ஏதாவது  சிக்கிக்கொள்வது, தீக்காயங்கள், அதிர்ச்சி மற்றும் விபத்து போன்ற நேர்வுகளில் உடனடியாக முதலுதவி நடவடிக்கையை விரைவாகச் செய்ய இது போன்ற பயிற்சிகள் அவர்களுக்கு உதவும்.

Image

அவசரநிலையில், மருத்துவ சிகிச்சைக்காக பாதிக்கப்பட்ட குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பாக நாம் மேற்கொள்ள வேண்டிய உயிர்காப்பு நடவடிக்கைகள் சில இருக்கின்றன. அது தொடர்பான ஒரு சிற்றேடு, பயிற்சி பெற்ற நபர்களுக்கு வழங்கப்படுகிறது. அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு அவசரநிலை மற்றும் ஐசியு துறையின் முதுநிலை மருத்துவர் டாக்டர் இந்திரா ஜெயகுமார் இந்நிகழ்ச்சியில் பேசினார்.   “இச்செயல்திட்டத்தின் முதலாண்டானது, அதிக மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிப்பதாக இருக்கிறது.  சென்னையிலும் தமிழ்நாடு முழுவதிலும் இன்னும் அதிக பள்ளிகளை வருகின்ற மாதங்களில் இத்திட்டத்தில் ஈடுபடுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். வயது வந்த நபர் எதிர்கொள்கின்ற இதே போன்ற சிரமங்களோடு ஒப்பிடும்போது குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற காயங்கள் மாறுபட்டவை. வீடுகளில் பெற்றோர் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முதலுதவி வழங்குவதற்கு போதுமான வசதியிருப்பதையும் அவற்றை வழங்க ஆசிரியர்கள் பயிற்சியளிக்கப்பட்டிருப்பதையும் பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். கீழே விழுவதானால் ஏற்படும் ரத்தக் கசிவு அல்லது எலும்பு முறிவிலிருந்து விளையாட்டுப் பொருட்கள் அல்லது உணவுப் பொருட்களை விழுங்கும்போது குழந்தைகளின் தொண்டையில் சிக்கிக்கொள்வது என அனைத்துமே ஆபத்தான நிகழ்வுகள். இவற்றைக் கையாள முதலுதவி செய்பவர்கள் தயார் நிலையில் இருப்பது அவசியம். விபத்து நேரத்திலிருந்து பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்களிடம் குழந்தை கொண்டு சேர்க்கப்படும் வரை, முடிந்தவரை மிகக் குறைந்த அளவே பாதிப்பு ஏற்படுவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். அப்போலோ நடத்திய இப்பயிற்சித் திட்டத்தால் பயனடைந்த பெற்றோர்களும் ஆசியர்களும், இத்தகைய சூழ்நிலைகளில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பிறருக்கும் கற்பிக்க வேண்டும்.” என்று கூறினார்.

சென்னை மாநகரிலுள்ள குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிபடுத்த ‘அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் குழுமம்’ மேற்கொள்கிற சிறப்பான செயல்முயற்சியாக ‘குழந்தை
பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம்’ இருக்கிறது. எல்லோருக்குமே இதில் பொறுப்பு இருக்க வேண்டியது அவசியமென்பதால் சென்னை போக்குவரத்து காவல்துறையின் ஆதரவோடு சாலை விபத்து பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் அவசர நிலையில் முதலுதவி வழங்குவதற்கான பயிற்சி திட்டங்களை அப்போலோ மருத்துவமனை நடத்திவருகிறது. பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் பள்ளி வேன் ஓட்டுனர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மருத்துவ உதவி பணியாளர்களால் இப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், குழந்தைகளுக்கான அவசர நிலையைக் கையாள, காவல்துறையினருக்குப் பயிற்சியளிக்க தனியாக பி.எல்.எஸ். திட்டத்தை நடத்த இருக்கிறது அப்போலோ மருத்துவமனை. நல்ல திட்டம். வளரட்டும்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s