13 வயதில் டாக்டர் படிப்பு!

Image

‘டாக்டர் பட்டம்’ பலருடைய கனவு! மருத்துவத்துறை தவிர, பல்வேறு துறைகளில் ஆய்வுகளுக்காக வழங்கப்படும் ‘டாக்டர் பட்டம்’ (முனைவர் – (Ph.D) மரியாதைக்குரிய ஒன்று. ஆனால், அதைப் பெறுவது அத்தனை எளிதான காரியமல்ல. கடலில் மூழ்கி முத்தை எடுப்பது போல, தான் சார்ந்த துறையில் கரைந்து, பல சோதனைக் கட்டங்களைத் தாண்டித்தான் பெற முடியும். முதலில் ஆய்வுக்கான பாடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்… அதற்கு அனுமதி கிடைக்க வேண்டும்… பிறகு ஆய்வு… அதற்கான தேடல்… எல்லாம் முடிந்ததும், ஆய்வு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தால் ஆங்கீகரிக்கப்பட வேண்டும்… ‘வைவா’ எனப்படும் வாய்மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்… இப்படி பல சோதனைகளைக் கொண்டது டாக்டர் பட்டத்துக்கான ஆய்வு. அப்படிப்பட்ட முனைவர் படிப்பை மேற்கொள்ள உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் இளம் பெண்ணுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது, சென்னை அருகே உள்ள ஒரு பல்கலைக்கழகம். அந்தப் பெண்ணுக்கு வயது அதிகமில்லை… வெறும் 13.

சுஷ்மா வர்மா லக்னோவைச் சேர்ந்தவர். அப்பா தேஜ் பகதூர் வர்மா, ஒரு தினக்கூலி. மொத்தம் ஐந்து பேர் கொண்ட குடும்பம். அவரைப் பொறுத்தவரை, அவர் வருமானத்துக்கு குழந்தையைப் படிக்க வைப்பதே ஆடம்பரச் செலவு. ஆனால், சுஷ்மாவை அப்படி அவரால் விட்டுவிட முடியவில்லை. பள்ளிக்கே செல்லவில்லை. ஆனால், இரண்டரை வயதில், ஒரு மேடையில் ராமாயணக் கதையை சொன்னாள் சுஷ்மா. ஒரு தவறு இல்லை, மொழியில் எந்தத் தடங்கலும் இல்லை. ‘இவளிடம் ஸ்பெஷலாக ஏதோ இருக்கிறது என்பதை உணர்ந்தார் அப்பா. சுஷ்மாவுக்கு ஐந்தரை வயது இருக்கும் போது பள்ளியில் சேர்த்தார். எல்லாக் குழந்தைகளும் சேர்ந்தது போல அல்ல… சுஷ்மா சேர்ந்தது நேரடியாக 9ம் வகுப்பில்! இந்தியாவின் கல்விமுறையில் இது ஓர் அதிசயம். இரண்டே வருடங்கள்… தன் மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்துவிட்டார் சுஷ்மா. ‘மிக இளம் வயதில் மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தவர்’ என்கிற சுஷ்மாவின் சாதனை லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றது.

இப்போது சுஷ்மாவின் 13வது வயதில், சென்னை, வண்டலூரில் இருக்கும் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகம் (BSAU), அவரை அழைத்திருக்கிறது. முதுகலைப் பட்டப்படிப்பைப் படித்தபடியே, அவர் முனைவர் பட்டத்துக்கான ஆய்வையும் செய்ய வாய்ப்புக் கொடுத்திருக்கிறது. சுஷ்மா, அறிவியலில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். இந்த அளவுக்கு இந்தக் குழந்தை மேதை வளர உதவியது உத்தரப்பிரதேச அரசாங்கமும் பல தனி நபர்களும் என்கிறார் சுஷ்மாவின் தந்தை.

‘‘எதைப் படித்தாலும் மனப்பாடம் செய்யாமல் புரிந்து படிப்பேன். அதனால் அது என் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. சின்னஞ்சிறு வயதில், நான் என் அண்ணனின் பாடப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்துவிட்டேன்’’ என்கிறார் சுஷ்மா.

சென்னையில், மைக்ரோ பயாலஜியில் முதுகலைப் பட்டத்தைப் படிக்க சுஷ்மாவுக்கு சீட் கிடைத்திருக்கிறது. மூன்றாவது வருடத்திலிருந்து முனைவர் பட்ட ஆய்வுக்கான ஃபெலோஷிப் அவருக்குக் கிடைக்கும். இங்கே அவருக்கு கல்வி, விடுதிச் செலவு, பராமரிப்பு எல்லாவற்றையும் இலவசமாக அளிக்க முன் வந்திருக்கிறது பி.எஸ்.ஏ.யு. பல்கலைக்கழகம். இளம் மேதைகளுக்கு அவ்வளவு சுலபமாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை. சுஷ்மாவுக்குக் கிடைத்திருக்கிறது. அவர் மேலே, மேலே வளர வேண்டும்!

– பாலு சத்யா

  

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s