முதலுதவி… உயிர் காக்கும்!

Image

இன்று உலக முதலுதவி தினம்! இந்த தினத்தை ‘செஞ்சிலுவைச் சங்கம்’ (பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் – International Red Cross Red Crescent Movement) 2000ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. ஓர் உயிரைக் காப்பாற்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாய்ப்பாக இந்த தினத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது இதன் நோக்கம். இந்த வருடம், முதலுதவி தினம் ‘முதலுதவி மற்றும் சாலைப் பாதுகாப்பு’ என்கிற கருத்தின் அடிப்படையில் அனுசரிக்கப்படுகிறது.

உலக அளவில் மனித உயிர்களை பலி வாங்குவதில் முதல் இடம் வகிப்பது சாலை விபத்து. உலக அளவில் 30 வினாடிகளுக்கு ஒருவர் சாலை விபத்தில் இறக்கிறார். விபத்து நிகழ்வுகளில், அது நிகழ்ந்த சில நிமிடங்களுக்குள் 50 சதவிகிதத்துக்கும் மேல் உயிரிழப்பு ஏற்படுகிறது. இருந்தாலும் இந்த உயிரிழப்பைத் தடுக்க முடியும், அடிபட்டவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தால்! முதலுதவிப் பயிற்சி, விபத்தின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மக்களுக்குக் கற்றுக் கொடுக்கிறது. மிகப் பெரிய மற்றும் சிறிய அவசரகாலங்களில் உதவுவதற்கும் சிறப்பாக செயல்படுவதற்கும் தேவையான திறமையைக் கொடுக்கிறது.

இந்த ஆண்டு, ‘டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் முதலுதவி பயிற்சி பெற்றிருக்க வேண்டும்’ என்பதை சட்டபூர்வமாக்க வேண்டும்’ என்கிற கோரிக்கையை வைத்திருக்கிறது செஞ்சிலுவைச் சங்கம். முதலுதவிப் பயிற்சி ஒரு மனிதனின் வாழ்க்கையின் அத்தனை நிலைகளிலும், வீடு, பள்ளி, பணிபுரியும் இடம் என எல்லா இடங்களிலும் அவசியம். எனவே, அதை எல்லோருக்கும் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. முதலுதவி சிகிச்சையை யார் வேண்டுமானாலும் எளிதாகக் கற்றுக் கொள்ளலாம்.

நெருங்கிய தோழி… நன்றாகப் பேசிக் கொண்டிருக்கும் போதே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்து விழுந்து விடுகிறார். அவருக்கு ஹார்ட் அட்டாக் என்பது நமக்குப் புரிகிறது. இந்த நேரத்தில் அவருக்கு சிறியதாக ஒரு மசாஜ் செய்தால் போதும்… அவரைக் காப்பாற்றிவிடலாம். இதை முதலுதவிப் பயிற்சியில்தான் கற்றுக் கொள்ள முடியும். உண்மையில் முதலுதவி குறித்த விழிப்புணர்வு நம் தேசத்தில் மிக மிகக் குறைவு என்கிறார்கள் மருத்துவர்கள். இந்திய செஞ்சிலுவைச் சங்கம் அதற்கான பயிற்சி முகாம்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. ஒருவர் ஒருமுறை முதலுதவிப் பயிற்சியைக் கற்றுக் கொண்டால் மட்டும் போதும். தொடர்ந்து அந்தப் பயிற்சியை செய்முறையாக செய்து கொண்டே இருந்தால்தான், அவசர காலத்தில் அவரால் சரியாகச் செயல்பட முடியும்.

கிணற்றில் ஒரு சிறுவன் விழுந்து விடுகிறான். அவனைக் கிணற்றிலிருந்து தூக்கியும் விடுகிறார்கள். ஆனால், அவனைக் காப்பாற்ற என்ன மாதிரியான முதலுதவியைத் தர வேண்டும் என்பது பக்கத்தில் இருப்பவர்களுக்குத் தெரியவில்லை என்றால், அவனைக் காப்பாற்ற முடியாது.

பல நாடுகளில் முக்கியமான பொது இடங்களில் ஏ.இ.டி. (Automated External Defibrillators) என்கிற முக்கியமான உயிர்காக்கும் சாதனங்களை வைத்திருக்கிறார்கள். இந்த சாதனங்களைக் கையாளத் தெரிந்தால் போதும்… பல உயிர்களைக் காப்பாற்றிவிடலாம். இது போன்ற முதலுதவி சிகிச்சை சாதனங்களை இந்தியாவில் பல இடங்களில் வைக்க வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம்.

அவசர காலங்களில் செய்ய வேண்டியவை… செய்யக் கூடாதவை என சில விஷயங்கள் இருக்கின்றன. அவற்றில் சில…  

விபத்து

* கார் வைத்திருப்பவர்கள், அதில் கண்டிப்பாக முதலுதவிப் பெட்டி வைத்திருக்க வேண்டும்.

* விபத்து ஏற்பட்டு ஒருவர் மயங்கி விழுந்து கிடந்தால், அவருடைய கழுத்துப் பகுதியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கழுத்து ஆடாமல் இருப்பதற்கு எதெல்லாம் கிடைக்கிறதோ, அதைப் பயன்படுத்த வேண்டும். அவரை வெகு ஜாக்கிரதையாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும். இல்லையென்றால், ஒரு சிறிய காயம் கூட, பெரிய விளைவை ஏற்படுத்திவிடும்.

* அடிபட்ட ஒருவரின் ஹெல்மெட்டைக் கழற்றும் போது, அவருடைய தலை, கழுத்து மற்றும் உடலுக்குத் தேவையான சப்போர்ட் கொடுக்க வேண்டும். இதைச் சரியாகச் செய்யவில்லை என்றாலும், காயம்பட்டவருக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.

* அடிபட்டவருக்கு மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் டானிக்கையும் கொடுக்கக் கூடாது.

பாம்புக் கடி

* பாம்பு கடித்த இடத்தைச் சுற்றி எந்த வெட்டுக் காயத்தையும் ஏற்படுத்தக் கூடாது.

* கட்டு எதையும் போடக் கூடாது.

விஷம்

* யாராவது விஷம் குடித்து மயக்க நிலையில் இருந்தால் அவர்களுக்கு உப்புக் கலந்த தண்ணீரயோ அல்லது வேறு எந்த திரவத்தையோ குடிக்கக் கொடுக்கக் கூடாது. அதை உறிஞ்சிக் குடிப்பதால் அவர் இறந்து போகவும் வாய்ப்பு உண்டு.

வீட்டில்…

* சமையலறையில் உடம்பில் எங்காவது தீக்காயம் ஏற்பட்டால், காயம்பட்ட இடத்தைக் குளிர்ந்த நீரால் கழுவவும். பிறகு அதன் மேல் கொஞ்சம் வெண்ணெயை எடுத்துத் தடவவும்.

* வெட்டுக்காயம் பட்டால், காயம் பட்ட இடத்தை நீரால் கழுவிவிட்டு, அதன் மேல் சிறிது ஐஸ் கட்டியை வைக்கவும். அந்த இடத்தில் ரத்தம் உறைந்து போகும். பிறகு அதன் மேல் முகத்துக்குப் பூசும் பவுடர், கடலை மாவு அல்லது கொண்டைக் கடலை மாவு எதையாவது வைத்து லேசாக அழுத்தவும்.

* வாய்ப்புண்ணால் தாங்க முடியாத வலியா? வெந்நீரில் சிறிது கிறிஸ்டல் உப்பைக் கலந்து வாயைக் கொப்புளிக்கவும்.  கறிவேப்பிலை இலைகளையோ அல்லது 10 மணத்தக்காளி இலைகளையோ வாயில் போட்டும் மெல்லலாம். உடனடி பலன் கிடைக்கும்.

* தோலில் தடிப்பு அல்லது கட்டிகள் ஏற்பட்டால் மஞ்சள் தூளும் தேங்காய்த் தண்ணீரும் கலந்து பூசலாம்.

* அஜீரணக் கோளாறால் ஏற்படும் தலைவலிக்கு சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து அருந்தினால் பலன் கிடைக்கும்.

* வெயிலில் நடந்ததால் ஏற்பட்ட களைப்பில் மயக்கமா? ஒரு டம்ளர் தண்ணீரில் சிறுதுண்டு இஞ்சி, எலுமிச்சைச்சாறு ஒரு டேபிள்ஸ்பூன், சிறிது சர்க்கரை, சிறிது உப்புக் கலந்து குடித்தால் உடனடியாக மயக்கம் தெளியும்.

இவையெல்லாம் வீட்டு வைத்தியம் மட்டுமல்ல… முதலுதவியும் கூட.

ஒவ்வொரு வீட்டிலும் முதலுதவிப் பெட்டி இருப்பது நல்லது. அதை அவ்வப்போது பராமரிக்க வேண்டும். அதில் துணி, காயங்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய மருந்து, அவசர உதவி எண்கள், அருகிலிருக்கும் மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் தொலைபேசி எண்களைக் குறித்து வைத்திருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.

பல மருத்துவமனைகளிலும், செஞ்சிலுவைச் சங்கங்களிலும் முதலுதவி செய்வதற்கான பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்கிறார்கள். அதைக் கற்றுக் கொள்வது ஒவ்வொருவரின் சமூகக் கடமை. முதலுதவி சிகிச்சை உயிரைக் காப்பாற்றும்… அது எங்கேயும், எப்போதும், எல்லோருக்கும் தேவையான உயிர் காக்கும் ஆயுதம்.

– பாலு சத்யா

 Picture Courtesy: http://www.ncfsc.com/ 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s