பல இடங்களில் காலை ஆறு மணிக்கே வந்து வரிசையில் நிற்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அதுவும் குடும்பம் சகிதமாக. மிக நீண்ட வரிசை. வரிசையைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்புக்கும் சில இடங்களில் காவல்துறையினரும் பணியில் ஈடுபடுகிறார்கள். பெரும்பாலும் பள்ளிகளில் நடைபெறுகிறது முகாம். ‘ஆதார்’ அடையாள அட்டை பெற, பெயரையும் அடையாளத்தையும் பதிவு செய்வதற்குத்தான் இத்தனை களேபரம். அடையாளத்துக்கு விரல் ரேகைகள் எடுக்கப்படுகின்றன. விழிகள் பதிவு செய்யப்படுகின்றன. பாஸ்போர்ட் எடுக்க வேண்டுமா, கேஸ் சிலிண்டரில் மானியம் பெற வேண்டுமா? இனிமேல் ஆதார் அட்டையும், ஆதார் எண்ணும் அவசியம் என்று அரசு அறிவித்திருப்பதும் ஒரு காரணம்.
‘‘உங்க ஏரியாவுக்கு முந்தா நாளே எடுத்துட்டாங்களே…’’ என்று யாராவது சொன்னால் அடி வயிற்றில் பகீர் என்றாகிவிடும். 2010ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்த போது கொடுத்துவிட்டுப் போன ரசீது சிலரிடம் இருக்காது. தொலைந்து போயிருக்கும். என்ன செய்வது, யாரைக் கேட்பது என்று அல்லாடுவார்கள். அந்தக் கேள்வியுடனேயே மற்றவர்களோடு வரிசையில் நிற்பார்கள்.
‘‘அது ஒண்ணும் இல்லீங்க… உங்க பக்கத்து வீட்ல கணக்கெடுப்பு செஞ்சிருப்பாங்கல்ல… அவங்க ரசீதை ஒரு ஜெராக்ஸ் எடுத்து கொண்டுட்டு வாங்க. அதைக் காமிச்சா, உங்க வீட்டுல இருக்குறவங்களோட பேரு இருக்கா, இல்லியான்னு சொல்லிடுவாங்க’’ என்று யாராவது சொல்ல பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரிக்க ஓடுவார்கள். சிலருக்கு ரசீது வந்திருக்காது. வேறு சிலரோ வீடு மாற்றிப் போயிருப்பார்கள். புதிய வீட்டு முகவரியைப் பதிவு செய்ய வேண்டுமானால், என்ன செய்வது என்கிற யோசனை வரும். இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் இந்தக் கணக்கெடுப்புப் பணி இன்று வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜரூராக நடந்தபடிதான் இருக்கிறது.
கிராமப்பகுதிகளில் இதற்கு நல்ல வரவேற்பு! சென்னையில் 35 சதவிகிதம் பேர்தான் ஆதார் அட்டைக்காக தங்கள் பெயரையும் முக்கிய அடையாளத்தையும் பதிந்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அக்டோபர் இறுதிக்குள் சென்னையில் 70 சதவிகிதம் பேரைப் பதிந்துவிட வேண்டும் என்பது ‘தேசிய மக்கள்தொகை பதிவேடு’ (National Population Register) அமைப்பின் லட்சியம். எனவே, சென்னையில் வீடு தேடி வர முடிவு செய்தது.
இதற்கு முக்கியமான நிபந்தனை ஒன்றையும் விதித்தது. ஒரு பகுதியில் இருக்கும் ‘குடியிருப்போர் நல சங்கம்’ மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறைக்கு தங்கள் பகுதிக்கு வந்து தகவல்களைப் பெறக் கோரி, கடிதம் அனுப்ப வேண்டும். அதன் அடிப்படையில் ‘ஆதார்’ எண்ணுக்கான அடையாளங்கள் மற்றும் தகவல்களைப் பெற முகாம்கள் நடத்தப்படும். சங்கத்தில் குறைந்தது 30 பேராவது (குடியிருப்போர்) உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இதன் சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் ‘ஆதார்’ எண்ணுக்கான முகாம்களை மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறையே சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்து நடத்தும். இப்போதே பல குடியிருப்போர் நல சங்கங்கள் இது தொடர்பான கோரிக்கைகளை அனுப்ப ஆரம்பித்திருக்கின்றன. ஆனால், இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. மிகப் பெரிய அளவில் பணியாளர்கள் இதில் ஈடுபட வேண்டியிருக்கும்.
உண்மையில், ஆதார் அடையாள அட்டை பெற்றுவிட வேண்டுமே என்று ரொம்பவும் பதட்டப்பட வேண்டியதில்லை. இதை ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்வது நல்லது. ஆதார் எண்ணுக்கான கணக்கெடுப்பு முகாம்கள் தொடரும் என அறிவித்திருக்கிறார்கள். நேரம் இல்லாதவர்கள், உரிய நேரத்தில் முகாம்களுக்குச் செல்ல முடியாதவர்களுக்காக இன்னொரு அறிவிப்பும் இருக்கிறது… ‘ஒவ்வொரு நகராட்சியிலும், அந்தந்த பகுதிகளில் நிரந்தர ஆதார் மையங்கள் விரைவில் நிறுவப்பட உள்ளன. அங்கே சென்று பெற்றுக் கொள்ளலாம்’.
ஆதார் அட்டைக்கான விண்ணப்பத்தை ஆன்லைனிலும் அனுப்பலாம். ஒருவேளை ஆதார் அட்டை தொலைந்து போனால், இணையதளத்தின் மூலமாக, அந்த எண்ணைக் கொண்டு நாமே பிரின்ட் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.
ஆதார்… தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்கண்ட இணையதளத்தைப் பார்க்கலாம்…
தொடர்பு கொள்ள இலவச தொலைபேசி எண்…
1800 300 1947
– ஆனந்த பாரதி