காலத்தை வென்ற கதைகள் – 17

தபால் விநோதம் (பகுதி-2)

வை.மு.கோதைநாயகி அம்மாள்

Image

ழக்கம்போல் உத்தமன் மாலை நேரத்தில் ஆற்றங்கரைக்கு உலாவச் செல்வதற்குப் போய் விட்டான். வந்த தபால்களை சேவகன் மறுநாள் காலை போவதற்கான கிராமவாரியாகக் கட்டிவைப்பது வழக்கம். அதேபோல் செய்து கொண்டிருந்தான்.

சித்ராவுக்கு அன்று பகல் ருசிகண்டதால் இந்தத் தபால்களையும் பார்க்க ஆசை அடித்துக் கொண்டது. என்றும் இல்லாத புதிய முறையில் அன்று தபால்காரனிடம் ”ஏம்பா நாளை எந்தெந்த கிராமத்திற்குப் போக வேண்டும? உனக்கு எத்தனை குழந்தைகள்?” என்று கேட்டவாறே அவன் வைத்த கடிதங்களை எடுத்துப் பார்த்தாள்.

தபால்காரன், ‘‘என் தலைவிதியை ஏன் கேக்கறீங்கம்மா! இந்த காயர வெய்யில்ல போய்வர்றதுக்குள்ளே என் ப்ராணனே போயிடும் போலிருக்குது; புள்ளே குட்டிக்கென்ன குறைச்சல்? அரைடெஜன் இருக்கும்மா!’’ என்று சொல்லியபடியே தன் வேலையில் ஈடுபட்டான். எனினும் இத்தனை நாள் இந்தப் பக்கமே வராத மனுஷி வந்து பேசுவதைக் கண்டு சற்று பிரமிப்பு கூட அடைந்தான்.

சித்ரா கையில் எடுத்த கடிதத்தின் எழுத்து அச்சடித்தது போன்று அத்தனை அழகாயிருந்தது. அது வருமாறு…

”அம்மாவுக்கு நமஸ்காரம்.

நான் இதுவரையில் எத்தனை கடிதம் எப்படியெல்லாம் என்னுடைய நிலைமையை விளக்கி எழுதியும் நீங்கள் கார்த்திகை மாசத்து மழை கடா முதுகில் பெய்ததுபோல் இருக்கிறீர்கள். நீங்கள் அனுப்புகிற பிச்சைக்காசு எனது ஒரு வாரத்துச் செலவுக்குக் கூட போதவேயில்லை; அப்பாவுக்கு இதோடு பல கடிதங்கள் எழுதியாயிற்று. இது வரையில் பணமே அனுப்பவில்லை; இதைத் தந்தியாக எண்ணி உடனே 150 ரூபாயை தந்தி மணியார்டரில் அனுப்பினால் பார்க்கிறேன், இல்லாவிட்டால் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்த சங்கதியைத்தான் கேட்பீர்கள்! ஜாக்ரதை…

இங்ஙனம்

சுந்தரம்

மகா பயங்கரமான இந்தக் கடிதத்தைப் படித்ததும் சித்ராவை  உண்மையில் தூக்கிவாரிப் போட்டு அவள் எண்ணங்களைப் பலவிதமாகச் சிதறடித்துவிட்டது. ”என்ன அக்ரமம்! பணமனுப்பா விட்டால் தூக்கு போட்டுக் கொள்வானா? ஐயையோ! இதைப்படித்த அவன் தாயாரின் வயிறு எப்படித்தான் துடிக்காது பாவம்! அவர்கள் என்ன செய்வார்களோ? என்று நினைக்கும்போது அவளுடைய அகக் கண்களுக்கு முன்பு சுந்தரத்தின் தாயார் துடிதுடிப்பது போலும், தன் கணவனிடம் கெஞ்சி அழுவது போலும், தன்னுடைய உயிரையாவது அடகு வைத்துப் பணம் திரட்டப் பாடுபடுவதுபோலும், இதற்காக தம்பதிகள் சண்டை செய்து கொள்வது போலும், பணம் கிடைக்காததால் தாமதமாகிவிடுவதாயும், இதற்குள் கடிதம் எழுதியவன் தூக்குப்போட்டுக் கொண்டு சாகத் துணிவது போலும் பலவிதமான பயங்கரத் தோற்றங்கள் அவள் இதயத் திரையில் சினிமாக் காட்சிபோல் தோன்றியதால் அசைவற்ற நிலையில் அப்படியே உட்கார்ந்துவிட்டதை அப்போதுதான் பார்த்த தபால்கார கோவிந்தஸ்வாமி ”என்னம்மா பெரிய யோசனை பண்றீங்க?” என்று குரல் கொடுத்தான்.

அந்தக் குரலைக் கேட்டபிறகுதான் சித்ராவுக்குத் தான் அந்தர உலகத்தில் சஞ்சரிக்கும் உண்மை தெரிந்ததும் சுற்றுமுற்றும் பார்த்தாள். தான் படித்த விஷயத்தில் லயித்திருப்பதாகக் காட்டிக் கொள்ளக் கூடாதென்கிற நோக்கத்துடன் ”ஒன்றுமில்லை, என் தகப்பனார் கடித மெழுதி நாளாயிற்றே என்று யோசனை செய்தேன். அவ்வளவுதான்” என்று எதையோ கூறி சமாளித்துக் கொண்டாள்.

அதையே நிஜமென்று நம்பித் தன் வேலையில் கவனம் செலுத்தினான். சித்ரா மற்றொரு கடிதத்தை எடுத்தாள்.

”ஐயா! உமக்கு உடம்பில் மானம் என்பதே இல்லை என்று தெரிகிறது. இதோடு எத்தனை தரம் கடிதம் போடுவது? மரியாதையாய் பணத்தை அனுப்பினாலாச்சு; இல்லையேல் சட்டப்படி நான் நடந்து கொள்ளப் பின்வாங்கமாட்டேன்; பணம் வேண்டியபோது பல்லிளித்துக் கெஞ்சி அடதாளம் போட்டதெல்லாம் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்போது அந்த ஞானம் மழுங்கிப்போய்விட்டதா? உடனே  ஒரு வாரத்திற்குள் பணத்தை அனுப்பினால் சரி. இல்லையேல் கோர்ட்டு மூலம் ஜப்திக்கு வருவேன் என்பதை நினைவூட்டுகிறேன்.

இங்ஙனம்

சுப்பராமன்

இதைப்படிக்கும் போது திடீரென்று இவளுடைய தகப்பனாரின் பிம்பம்தான் கண் முன்பு தோன்றியது. நிறைந்த சம்சாரி, குறைந்த வருவாய். இந்நிலைமையில் தன் கல்யாணத்திற்கே கடன் வாங்கித்தான் செய்தார் என்பது அவளுக்கு சடக்கென்று நினைவுக்கு வந்ததும் அவளையறியாது ஏதோ வேதனை செய்தது. தன் பிதாவின் நிலைமையும் ஒருவேளை இப்படியாகி விடுமோ! கடன்காரர்கள் உபத்திரவிப்பார்களோ! – என்ற வீண் கவலையும் யோசனையும் சில வினாடிகள் அவளைப் பாதித்தன. கடன்காரன் என்றால் இப்படி எல்லாமா மிரட்டுவார்கள்? கடன் வாங்கிய மனிதர்கள் கொடுக்காமல் ஏமாத்தி விடுவார்களா என்ன? அவர்களுக்கு எத்தனை தொந்தரவோ! எத்தனை கஷ்டமோ பாவம்! – என்ன அதிகாரமிரட்டல் கடிதம் இது – என்று தனக்குள் அபாரமான யோசனையுடன் சில நிமிஷமிருந்து பின்னர் மறுபடியும் கீழே பார்த்தாள். ஒரு கவர் சரியாக கோந்து ஒட்டாது பிரிந்திருந்தது. உடனே அதை எடுத்தாள். அது ஒரு பெண்மணி – எழுதத் தெரியாத நிலைமையில் எழுதியிருப்பதாகத் தெரிந்தாலும் ஆவலுடன் படிக்கவாரம்பித்தாள்.

”அம்மா, அப்பாவுக்கு நமஸ்காரம்.  பட்டண வாஸத்து வாழ்வு ஒணும்னும் படித்த மாப்ளெ ஒணும்னும், உத்யோகம் பண்ர சம்மந்தி ஒணும்னும் ஆசைபட்டுண்டு என்னே கொண்டு தள்ளினிங்களே – ஊரோட அக்கடான்னு விழுந்து கெடக்கற அத்தானுக்குக் குடுத்தா அகவுரவம்னு அம்மா சொன்னாளே – இப்ப நான் படற பாடு யாருக்குத் தெரியும்? பட்ணவாஸத்து உத்யோகம் பண்ர மாப்ளெக்கி நிஜார் சொக்கா, ஹாட்டு, இது இல்லாமெ சரிப்படலையாம். ”ஒங்கப்பன் என்ன வாங்கிக் கொடுத்தான்? ஒரு ஹாட்டு உண்டா? ஸூட்டு உண்டா? ஃபேஷனா மேஜெ நாற்காலி சோபா உண்டா?  ஷோக்கான ட்ரஸ் உண்டா… கள்ளுமொந்த மாதிரி மூஞ்சியெ வச்சிண்டு நிக்கறத்தெ பாரு! நான் என்ன ஏரு ஓட்ர கழுதேன்னு பாத்தியான்னு ஒங்க மாப்ளெ சதா என்னெ திட்டிண்டே இருக்கா. பட்டணவாஸமாம் பட்டணம்… குடி இருக்க எடங்கடயாது. கொழாத் தண்ணியோ சித்த நேரம் வரது. அதுக்கு ஆயிரம் போட்டி. அப்புறம் நின்னுபோனா தண்ணி கண்ணீர்தான்! எதித்த வீடுக் கிணத்துலேந்து நான் தூக்கிண்டு வரபோது என்ன அவலமாயிருக்கு தெரியுமா? நாட்டுப்புறத்து வேலைலேயே பட்டணத்துலே செய்யற சுகந்தான் நீங்க தேடி வெச்சது. எந்த சாமானும் கெடக்கறதில்லே. எதுவும் ரேஷனாம்! அரிசியோ, என்னால கல்லும் நெல்லும் பொறுக்கவே முடியல்லே… கழுத்தே வீங்கிப் போறது! நாட்டுப்புறத்துலே கறிகாயோ, கீரைவகையோ தாராளமாய் கைசலிக்கக் கிடைச்சுது. இந்த எழவு ஊருலே அதுவும் இல்லே. பாலுக்கும் க்யூவாம், காப்பிக்கொட்டைக்கும் க்யூவாம்! துணிக்கும் அதே எழவாம்!.. ஒரு கஜம் வாயல் கொடுக்கரான்னு எங்க மாமியார் என்னையும் இழுத்துண்டுபோய் கடே வாசல்ல நிக்கவைக்கிறார். எனக்கு மானமே போறது. எங்க மாமனார் ஒரு டம்பாச்சாரி… ஒங்க மாப்ளே ஒரு ஷோக் மைனர். இந்த லக்ஷணத்துலே வருமானம் பஞ்சாய்ப் பறக்கிறது. கடன்வேறே வாங்கி மலையாட்டம் ஏறறது. நேத்திக்கு என் கை வளையே ஒண்ணு கட்டாயப்படுத்திப் புடுங்கி, போய் வித்து, பட்டண வாஸத்து ஷோக்குநிஜார் சொக்காய் தெச்சு பட்டாஸ் வெடிச்சுட்டார். இன்னும் ஒரு வடம் சங்கிலிதான் பாக்கி. அதுக்கு என்னிக்கு தலைநோகுமோ தெரியாது! க்ருஸ்னயால் எண்ணெக்கி ரேஷனாம். வௌக்குப் பஞ்சம், கட்டைக்கும் பஞ்சம். மூணுவேளே சோத்தப்போட்டு என்னெ வளத்தங்களே… இங்கே ஒரு வேளை சோறுகூட வயிறு நிறைய கிடையாது. பகல் பட்டினி, ராத்திரி அரைவயிறுதான். விருந்தாளி வந்துட்டா அதுவும் ஸைபர்தான்! இந்த லக்ஷணத்துலே பொண்ணு துள்ளி விளையாடத்தான் பட்டணத்துலே கொண்டு தள்ளினங்கோ… 15 குடித்தனத்துக்கு மத்தியிலே ஒரு டஞ்சன்லே குடித்தனம். வாசல் வெளிநாட்டமே கடயாது. ஜெயில் வேற வேண்டாம்! என் பாட்டுல நான் காலாற நடந்துண்டு, ஆறுலே குளிச்சுண்டு, வயல்லேபோய் வேடிக்கெ பாத்துண்டு மாடும் கன்னும் கோகுலமாட்டம் இருக்கிற அழகென அனுபவிச்சுண்டு பாலும் தயிரும் சாப்பிட்டுண்டு குசாலாயிருந்ததே மண்ணெப் போட்டும் என்ன அழவச்சது போரும்! என் தங்கெயெயாவது கிராமத்துலேயே குடுத்து, என் மாதிரி கஷ்டத்துக்கு ஆளாக்காமே பாத்துக்குங்கோ… இந்தக் கடுதாசியே கூட நான் அவாளுக்குத் தெரியாமே ரகஸியமா எழுதியிருக்கேன். பொண்ணு பட்டண வாஸத்துலே பிரமாதமாயிருக்கான்னு நீங்க நெனச்சிண்டிருக்கீங்களே, இந்த ஆனந்தம் தெரியட்டும்னுதான் இதை எழுதறேன். என் ரவிக்கைகள் எல்லாம் தொளதொளன்னு போயிடுத்து. தங்கெ அளவுக்கு நாலு ரவிக்கே தெச்சி அனுப்புங்ககோ. க்யூவுலே நின்னு வாங்கிண்டு வந்த வாயலே எங்க மாமியார் தன் பொண்ணுக்கு தெச்சுட்டா…

இப்படிக்கு

பர்வதம்

”என்ன வேடிக்கை! அடிக்கடி பாட்டி ‘உலகானுபவம்… உலகம் பலவிதம்… லோகோ பின்னருசி’… என்றெல்லாம் சொன்னதைக் கேட்டபோது எனக்கு ஒண்ணுமே புரியாது விழித்தேனே… பாட்டி சொல்லிய வசனங்களைவிடக் கடிதங்கள் பலவற்றைப் படித்தால் அதுவே மகத்தான லோகானுபவங்களை உண்டாக்கி விடும் போலிருக்கிறதே பாவம்! பேசுவது போலவே தன்னுடைய மனத்தினுள்ளதைக் கொட்டி அளந்து விட்டாள்… நான் கிராமத்தை வெறுத்துக் சண்டையிட்டு வீணாக அவர் மனதை நோவடிக்கிறேன். இவள் பட்டணத்தை வெறுத்து தன் கொச்சை பாஷையில் அதன் உண்மை ஸ்வரூபத்தை படம் பிடித்துக் காட்டி விட்டாளே!.. என்ன உலக விசித்திரம்!.. என்று கட்டுமீறிய வியப்பில் சித்ரா மூழ்கினாள்.

கடிதங்களைப் படிக்கும் ஆசை சிறு விதையாக ஊன்றி இதற்குள் முளைத்துச் செடியாக ஆரம்பித்து விட்டதும் அவள் மனதே அவளையறியாது மாறியது. ”இத்தனை நாளும் கிராமம்… கிராமம்… என்று பழித்து வந்தோமே, கிராமத்து உத்தியோகத்தையும் மிக்க இழிவாக எண்ணி வந்தோமே. இத்தனை ஸ்வாரஸ்யமான பொழுதுபோக்கு இதில் இருப்பதே நாம் உணராது போய்விட்டோமே!” என்று நினைக்கும் போதுதான், தன் கணவனை ஏளனமாக நடத்தும் கொடுமை சுருக்கென்று இதயத்தில் தைத்தது.

7

Image

ரவு வழக்கத்திற்கும் அதிகமான நேரங்கழித்துத்தான் உத்தமன் வீட்டிற்கு வந்தான். வாசல் கதவைப் போட்டுவிட்டு, சித்ரா மேஜை மீது விளக்கேற்றி வைத்துக் கொண்டு அன்றைய தபாலில் யாருக்கோ வந்துள்ள மாதப் பத்திரிகையை வெகு ஸ்வாரஸ்யமாகப் படித்துக் கொண்டிருப்பதை கண்டு பின்னும் சந்தோஷமடைந்து அவள் அனுபவித்துப் படிக்கும் இன்பத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் படிக்கும் விஷயமாவது –

”சகோதர சகோதரிகளே!

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய உணர்விக்கும் என்னம்மை – தூய

உருப்பளிங்கு போல்வாள் என்னுள்ளத்தினுள்ளே

இருப்பள் இங்குவாரா திடர்

– ஸ்ரஸ்வதியந்தாதி.

64 கலைகளின் அற்புத ச்ருஷ்டியைக் கலைத் தெய்வமாகிய சாக்ஷாத் கலாராணி… கலைவாணி… நமக்கு ச்ருஷ்டித்து அளித்திருக்கிறாள். அக்கலைகளின் சிறப்பை அறிவாளிகள் ஒருவாறு அறிந்திருக்கலாம். 64 கலைகளுக்கும் மேலான எண்ணிக்கைகளில் கலை வளர்ந்து வருகின்றதை இன்று ப்ரத்யக்ஷமாகக் காண்கிறோம். ஆனால் அவை 64 கலைக்கோர்வையுடைய மாலையில் சேரவில்லை. இனிமேலுள்ள அறிஞர்கள் அவைகளை ஆராய்ந்து இதுவும் ஒரு தனிக்கலைதான் என்று முடிவுகட்டும் காலம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. பேசுவது, பாடுவது, ஆடுவது, ஓடுவது, எழுதுவது… எல்லாம் கலைத் தெய்வத்தின் புதுமை ச்ருஷ்டியேயாகும்.

எழுதுகோல் பிடித்து எழுதும் காவியம், பாடல், இலக்கியம், இலக்கணம் முதலிய எழுதுகோல் சம்மந்தப்பட்ட சகலமும் கலையாகும்போது எழுது கோலால் எழுதப்படும் ”கடிதம் எழுதுவதும் ஒரு கலைதான்” என்பதை ஏன் நிரூபிக்கக்கூடாது? நமது ”சுதந்திர தேவி” பத்திரிகையில் இந்தப் புதிய தொடரை ஆரம்பித்திருக்கிறோம். கடிதம் எழுதுவதும் ஒரு கலைதான் என்பதைப் பலவிதமான உதாரணங்களுடனும் பல கடிதங்களின் குறிக்கோளுடனும் விளக்கி அழகிய வ்யாஸமாக எழுதும்படி நேயர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளித்திருக்கிறோம். இந்தக் கட்டுரைப் போட்டிக்கு 5 சிறந்த பேரறிவாளிகளை பரிசோதகராக நியமித்திருக்கிறோம். கட்டுரைகளை அவர்கள் பரிசீலனை செய்து ஏகமனதாகவோ, அல்லது அதிகப்படி ஆதரவு கிடைத்ததாகவோ பொறுக்கும் கட்டுரைக்கு முதல் பரிசு 500ரூபாய். இரண்டாவது பரிசு 200 ரூபாய். மூன்றாவது பரிசுகள் 100… 100 ரூபாய்கள் வீதம் மொத்தம் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் போட்டியில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள், இருவரும் தாராளமாகக் கலந்து கொள்ளலாம். கட்டுரையை ஆற அமர யோசித்து எழுதுவதற்கு இன்னும் இரண்டு மாத தவணை கொடுத்திருக்கிறது. அதற்குள் எழுதி அனுப்பக் கோருகிறேன். நிபந்தனைகள் எதுவும் கிடையாது.

வ்யாஸங்கள் போட்டி நடத்துவதின் நோக்கம் எழுத்தாளர்களின் கற்பனையை, ஊக்கத்தை, முயற்சியை, பழக்கத்தை விருத்தி செய்வதேயாகும். ஆகையால் போட்டியில் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

இந்த விஷயத்தைப் படிக்கப் படிக்க ஏற்கனவே முளைத்துள்ள செடியில் இன்னும் சில கிளைகள் இலைகள் வெடிக்க ஆரம்பித்தன. அதே விஷயத்தைப் பலதரம் படித்தாள்.

எத்தனைநேரம் வீதியில் நிற்பது என்று மெல்ல கதவைத் தட்டி ”சித்ரா…” என்றான்.

சித்ரா அலறியவாறு அந்தப் பத்திரிகையை – ராப்பரில் சுற்றிவந்தது போலவே மேஜைமீது வைத்து விட்டு வந்து கதவைத் திறந்தாள். ” என்ன சித்ரா! நேரமாகிவிட்டதால் தூங்கிவிட்டாயா?” என்று வேண்டுமென்று குறும்பாகக் கேட்டான். ”இதற்குள்ளாகவா தூக்கம்?” என்று கூறிக் கொண்டே உள்ளே இலை போடச் சென்றுவிட்டாள்.

சாப்பாடாகியதும் கொட்டு கொட்டென்று தான் மட்டும் தனியாக படுத்திருப்பாள். உத்தமன் ஆபீஸ் வரவு செலவு கணக்குகளையெல்லாம் வெகு ஒழுங்காகச் செய்துவிட்டுப் பிறகு படுக்கைக்கு வருவான். அன்றும் வழக்கம்போல் தன் ஆபீஸ் அறைக்குச் சென்று விட்டான். சித்ரா தன் காரியங்களை முடித்துக் கொண்டு மாடிக்குச் சென்று படுத்தாள். ஆனால் அவள் மனதில் புதிதாக எழும்பியுள்ள ஆசையின் அலை சிறுகச்சிறுக மோதிக் கொண்டே இருப்பதால் எண்ணம் பூராவும், தான் பத்திரிகையில் படித்த விஷயத்திலேயே சுழன்றது.

பிறருடைய தபால்களைப் பார்க்கக் கூடாதென்கிற நியாயத்தை அறிந்தும் சித்ராவின் அந்த ஆசை தடுக்க முடியாது பொங்கியதால் கணவனுக்குத் தெரியாதபடி தான் படிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள். கட்டுரைப் போட்டி அவள் உள்ளத்தைக் கவர்ந்ததால் அதைப் பற்றியே அவளுடைய சிந்தனை சிதறியது.

Image

ன்று உத்தமன் காலை மாலை இரண்டு வேளைகளும் வெளியே போய்விட்டதால் வேலை மிகவும் அதிகமாயிருந்தது. அவைகளைப் பார்த்து விட்டு வரும்போது மணி இரவு பதினொன்றாகி விட்டது. வழக்கத்திற்கு விரோதமாக சித்ரா விழித்துக் கொண்டே படுத்திருப்பதைப் பார்த்து வியப்புடன்… ”இன்னுமா தூங்கவில்லை? ஏன் சித்ரா? உடம்பு ஒன்றுமில்லையே! இதோ, உனக்குக் கடிதம் வந்திருக்கிறது இந்தா… இதை க்ரமமாக நாளை முத்திரை போட்டு நாளைக்குத்தான் கொடுக்க வேண்டும். சித்திரா தேவிக்காக இன்றே கொடுத்து விடுகிறேன்!” என்று கூறி அதைக் கொடுத்துவிட்டுத் தாழவிருந்த விளக்கை உயர்த்தி, தான் தினவர்த்தமானியைப் படித்தவாறு படுத்தான்.

சித்ரா தனக்கு வந்த கவரைப் பிரித்துப் படிக்க வாரம்பித்தாள்.

”அன்புமிக்க சித்ராவுக்கு புண்ணியவதி எழுதியது. உபயக்ஷேமம்.

நாம் ஒருவரையொருவர் பார்த்தே பலவருடங்கள் ஆகிவிட்டன. எனினும் பாலிய சினேகிதத்தின் அன்பும் வேகமும் என்றும் குறையாது. நான் சென்ற மாதம் பட்டணத்திற்குச் சென்றபோது உன்னைப் பார்ப்பதற்காக உன் வீட்டிற்குப் போனபிறகுதான் நீ கல்யாணம் செய்து கொண்டு புக்ககத்திற்குப் போய் விட்டதாக உன் தாயாரின் மூலமறிந்தேன். நீ என்றுமே வெறுத்தும் பழித்தும் வந்த கிராமவாஸமே உனக்குக் கிடைத்துவிட்டதென்று நீ விசனப்படுவதாயும், அதனால் உன் பெற்றோர்களைக் கூட கோபித்து வெறுத்துக் கடிதமே போடாதிருப்பதாயும் அவர்கள் கவலைப்பட்டார்கள். உன் கணவர் கிராமத்துத் தபாலாபீஸ் போஸ்ட்டு மாஸ்டராக இருப்பதாயும் மிகவும் நல்லவர் என்றும் அறிவும் அழகும் உடையவரென்றும் சொல்லக்கேட்டுச் சந்தோஷப்படுகிறேன். நீ எனது அந்தரங்க நேசியாகையால் ஒரு முக்கியமான ரகஸியத்தை உனக்கு, உன் க்ஷேமத்தைக் கோரி எழுதுகிறேன்.

அதாவது, எனது உறவினர் ஒருவர் கிராமத் தபாலாபீஸ் உத்யோகம்தான் பார்த்து வந்தார். நல்ல காலமும்,  கெட்டகாலமும், எந்தவிதமான தொழிலிலும் மனிதர்களை பின்பற்றியே நிழல்போல் வருகிறது. போஸ்ட் மாஸ்டராகவிருப்பதால் மணியார்டர்கள் வருவதும் அனுப்புவதுமான பண நடமாட்டம் கிராமத்து ஜனசங்கைக்குத் தகுந்தவாறு இருக்கும்ல்லவா? அவரும் அவருடைய மனைவியும் வெகு கெட்டிக்காரர்கள். எந்த கெட்டிக்காரத்தனமும் விதியை வெல்ல முடியாது என்பதை மறந்து விட்டார்கள் பாவம்! விதியின் விளையாட்டில் ஆபீஸ் பணத்தைக் கையாண்டு வந்தார்கள். திடீரென்று இன்ஸ்பெக்டர் வந்தபோது பலவிதமான குற்றங்களையும் கண்டுபிடித்து விட்டார். மனிதர் இப்போது விழிக்கிறார். இத்தனைக்கும் காரணம் அவருடைய மனைவியின் மூடத்தனந்தான் என்று பிறகு தெரியவந்தது. சதாகையில் பணமிருப்பதால் தமது சொந்த செலவுகளுக்கெல்லாம் அவைகளைச் செலவு செய்துவிட்டுத் தானும் மதிப்பிழந்து கணவனையும் அகப்படச் செய்துவிட்டாள். என் கணவர்தான் தபாலாபீஸ் இன்ஸ்பெக்டர். ஆகையால் ஆங்காங்கு சில கிராமங்களின் தபாலாபீஸ்களில் நடக்கும் அநியாயங்களை அவர் எடுத்துச் சொல்லித் திட்டுவார். சில போஸ்ட் மாஸ்டர்கள் வெகு மேன்மையான முறையில் நடந்துவருவதையும் அவரே பாராட்டுகிறார்.

உன் கணவர் போஸ்ட்மாஸ்டர் என்று கேள்விப்பட்டதால் உனக்கு இந்த விவரங்களை எழுதினேன். பணம் மகா பகையாளி. அவசரமாக யாராவது கடன் கேட்டால் கையில்தான் இருக்கிறதே, மணியார்டர் கொடுக்க வேண்டியவர்களுக்கு ‘இன்னும் வரவில்லை’ என்று இழுத்தடித்து, தினங்களைக் கடத்திவிட்டு கடன் கேட்டவர்களுக்கு ஆபத்தான நிலைமையை அறிந்து உதவி செய்வதுபோல் இந்தப் பணத்தைக் கொடுத்து, ரூபாய்க்கு ஒரு அணா வீதம் வட்டி வாங்கிக் கொண்டு அந்த வருமானத்திற்காக அநியாயம் செய்துதான் சிலர் அகப்பட்டுக் கொண்டார்கள். நீ மகா புத்திசாலி. படித்தவள். ஆகையால் உனக்கு நான் எச்சரிக்கவில்லை. இந்தத் தொழிலின் லீலைகளை எழுதினேன். நீயும் உன் கணவரும் சந்தோஷமாயும், ஒற்றுமையாவும் இருப்பீர்களென்று நம்புகிறேன். உன் புதிய கிராமவாஸத்தின் வாழ்க்கை உனக்குப் பிடிக்கிறதா! அதை எழுது. தொழிலில் ஜாக்கிரதையாகவிருங்கள். இப்படி எழுதினேன் என்று வித்தியாசமாக எண்ணாதே. எனக்கு இப்போது மூன்று குழந்தைகள். நான் மிகவும் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன்.

உன் பிரிய தோழி,

புண்யவதி

இக்கடிதத்தைப் படித்த சித்ராதேவிக்கு ஏனோ கதிகலங்கிப் போய் தலைச்சுற்றி, ”அடேயப்பா! கிராமத்துத் தபாலாபீஸ் உத்தியோகத்தில் கூட இத்தனை சனீச்வரத் தாண்டவம் இருக்கிறதா! என்ன ஆச்சரியம்!” என்று தனக்குள் எண்ணிப் பெருமூச்சு விட்டாள்.

பத்திரிகை படிக்கும் உத்தமன் கடைக் கண்ணால் அவ்வப்போது பார்த்துக் கொண்டுதான் இருந்தான். பெருமூச்சை ஒரு சாக்காகக் கொண்டு அப்போதுதான் பார்ப்பதுபோல் பார்த்து… ”என்ன சித்ரா! பெருமூச்சு பலமாகவிருக்கிறதே… என்ன விசேஷம்?” என்றான்.

கடிதத்தைத் தன் கணவனுக்குக் காட்டுவதற்கும் ஆசை அடித்துக் கொள்கிறது. முதலில் சற்று விழித்தாள். பிறகு கடிதத்தை கணவரிடம் கொடுத்துவிட்டு ‘‘அடேயப்பா… கிராமத்துத் தபாலாபீஸ்களில் கூடவா ஆபத்து!” என்றாள்.

உத்தமன் சிரித்தவாறு, ”சித்ரா! நீயோ படித்த மேதை. நானோ பட்டிக்காட்டான். ஆபத்துக்கு கிராமம், நகரம் என்கிற வித்யாஸம் உண்டானால் உலகம் இப்போதுள்ள நிலைமையில் இருக்கவே இருக்காதே. ஏகசக்ராதிபதியாய் சூர்யனே அஸ்தமிக்காது இருக்கும்படியான முறையில் ராஜ்யபாரம் செய்து வந்த பிரிட்டீஷ் சாம்ராஜ்யமே இன்று விதியின் விளையாட்டினால் கலகலத்து விட்டது என்றால் மற்றவைகளுக்குக் கூற வேண்டுமா! சர்வலோக ரக்ஷகனாகிய ஸ்ரீ மந்நாராயணனும் லோகமாதாவாகிய ஸ்ரீமகாலக்ஷ்மியுமே ஸ்ரீராமனாயும் ஸீதையாயும் அவதரித்திருக்கும்போது கூட விதி அவர்களை ஆட்டவில்லையா! கேவலம் புழுக்குச் சமமான சில மனிதர்கள் விதிக்குத் தப்ப முடியுமா?” என்று பெரிய வேதாந்தத்தைக் கூறியபின், கடிதத்தைப் படித்து முடித்துவிட்டுக் கடகடவென்று சிரித்தான். சித்ராவுக்கு ஒன்றும் புரியவில்லை. ”ஏன்? எதற்காக சிரிக்கிறீர்கள்?” என்றாள்.

உத்தமன்: உன் சினேகிதை புண்யவதிக்குத் தபாலாபீஸ் தமாஷ்கள் இன்னும் சில தெரியவில்லை. பாவம்! குற்றமான செய்கையை மட்டும் எழுதி உன் கணவன் பட்டிக்காட்டு மனித மிருகமாயிற்றே, எங்கே திருடிவிடுவானோ என்று எச்சரித்திருக்கிறாள் பாவம்!

சித்ரா: என்ன அப்படி ஏளனமாகச் சொல்கிறீர்கள்? அவள் அப்படி எல்லாம் அசம்பாவிதமாக எழுதவில்லை. வீணான பழி சொல்ல வேண்டாம். உலகத்திலுள்ள…

உத்தமன்: ஆமாமாம். நானும் உலகத்திலுள்ள விசித்திரங்களைத்தான் சொல்ல வந்தேன். என்னைப் பற்றிக் குற்றமாகச் சொல்லியதாக நான் சொல்லவில்லை. இது கிடக்கட்டும். தபாலாபீஸில் வினோதங்கள் இன்னும் என்னென்ன இருக்கின்றன தெரியுமா! தபால் கவர்களில் வைத்து வரும் தபால் தலைகளைச் சிலர் திருடிவிடுவார்கள். புக்போஸ்டில் வரும் பத்திரிகைகளோ, புத்தகங்களோ இவர்களும் இவர்களைச் சேர்ந்தவர்களும் படித்துவிட்டுத்தான் விலாசதாரர்களுக்கு கொடுப்பார்கள்…

இதைச் சொல்லும்போது சித்ராவுக்கு தூக்கிவாரிப் போட்டது. தான் சாயங்காலம் பத்திரிகை படித்ததை ஒரு வேளை பார்த்து விட்டாரோ. அதனால்தான் சுட்டிக் காட்டிப் பேசுகிறாரோ! என்று கூடத் தோன்றிவிட்டதால் தலைசுழன்றது. அவளால் பேச முடீயவில்லை…

உத்தமனோ தன் வார்த்தையை நிறுத்தாமல். ”அதுமட்டுமா சித்ரா! ஒரு ஊரிலேயே ஒருவருக்கொருவர் விரோதி என்று வைத்துக் கொள்ளு. அவர்கள் போஸ்ட்மாஸ்டரைக் கைக்குள் போட்டுக் கொக்கொண்டு ஒருவனுக்கு வந்துள்ள ரகஸிய சமாச்சாரங்களை வெகு ரகஸியமாக அறிந்து அதற்குத் தகுந்தபடி தமது வேலைகளில் உஷாராகவிருப்பார்கள். இம்மாதிரி சோதாத்தனமான காரியம் செய்வதில் சிலர் லஞ்சம் கூட வாங்குகிறார்கள் என்று கேள்வி…

சித்ரா கவனிக்காதிருப்பதையும் ஏதோ யோசனை செய்வதையும் கண்ட உத்தமன் அவளுடைய வேதனையைத் தெரிந்து கொண்டான். அதற்குமேல் எதுவும் பேசி அவளை வருத்தக்கூடாதென்கிற எண்ணத்துடன், ”சித்ரா! உனக்குத் தூக்கம் வந்து விட்டது போலிருக்கிறது. சரி. படுத்துக் கொள்ளு” என்று, தானே வார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்தான். சித்ராவுக்கு உண்மையில் ஏதோ செய்தது.

Image

சித்ராவுக்கு மட்டும் கடிதங்களைப் படிக்கவும் அதன் வாயிலாக அனுபவம் பெறவும் கட்டுரை எழுதவும் ஆசை அடித்துக் கொள்கிறது. தான் நாட்டுப்புறத்தை வெறுத்ததையும் அதனால் கணவனைக் கூட வெறுத்து அவன் மனத்தைப் புண்ணாக்கிவிட்டதையும் அவன் உணர்ந்துதான் குத்திக் காட்டியபடியே இருக்கிறான் என்பதை நன்றாக உணர்ந்தபிறகு எப்படியாவது தன் கணவனின் மனக்கசப்பை மாற்றித் தனது உத்ஸாகத்தைத் தெரிவிக்க வேண்டுமென்கிற ஆசை உண்டாகியது.

பாம்பின் காதை பாம்பே அறியும் என்பதுபோல் சித்ராவின் பழைய எண்ணங்கள் மாறி கிராம வாழ்க்கையிலும் பொழுதுபோக்க வசதியிருக்கிறது என்பதையறிந்து, அவள் சந்தோஷமாயிருந்தால் போதும் பிறகு தானே சமாதான வாழ்க்கையில் களிப்பாள் என்ற நோக்கத்துடன் ஏதாவது ஒரு வேலையைச் சாக்காக வைத்துக் கொண்டு வெளியே போக ஆரம்பித்தான். ருசிகண்ட பூனை உரியைத் தாவுமாம் என்பது போல் பழையபடி காலையில் வேலைகள் ஆன உடனே ஆபீஸ் ரூமுக்கு வந்தாள்.

மேஜை மீதிருந்த தபால்கள் இவள் கவனத்தைக் கவர்ந்ததால் ”ஆனது ஆகட்டும்” என்று அவைகளைப் புரட்டிப் பார்த்தாள். ஒரே விலாஸத்திற்கு 5…6… கடிதங்கள் இருப்பதைப் பார்த்ததும் வியப்புடன் அவைகளைப் படிக்கவாரம்பித்தாள்.

”அன்புமிக்க ஐயா! உபயக்ஷேமங்கள்.

தங்கள் புதல்வியின் திருமண அழைப்பு வந்தது. மிக்க சந்தோஷம். கல்யாணத்திற்கு வரமுடியாமைக்கு வருந்துகிறேன். தம்பதிகளுக்கு என் ஆசிகள்.

இங்ஙனம்,

மாணிக்க முதலியார்

”அன்பிற் சிறந்த நண்பரவர்களே! மங்களம் உண்டாகுக. இவண் நலம். அவண் சுகத்தை அங்ஙனமே ஆசிக்கின்றனன். தம் செல்வக் குமாரியின் திருமண அழைப்புத்தாள் கண்டு பூரித்தனம். வர இயலாமைக்கு மன்னிப்பு வேண்டுகிறோம். தம்பதிகளுக்கு சர்வமங்களமும் உண்டாவதாக.

இங்ஙனம்

முனுசாமி

”ஐயா அவர்களுக்கு யானாகிய கோனாரக் குப்புச்சாமி எழுதியது என்னவென்றால், இப்பவும் உங்கள் மவளுக்கு விவாகம் என்ற கடிதம் என் சமூகத்திற்கு தேவரீர் அனுப்பியதை யானாகிய கோனரக் குப்புசாமி பெத்துக்கொண்டு எளுதும் விவரம் என்னவென்றால், கண்ணன் அருளால் இங்கு நான், என் மனைவி, புத்திரி புனிதவல்லி, என் அம்மாவாகிய அலமேலு மங்கை மகாலக்ஷ்மிதேவி, என் குமாரன் திருவாளர் ஜெயராமக்ருஷ்ணக் கோனான் முதலியவர்கள் சுகம். அப்படியே அய்யா அவர்கள் வீட்டிலும் சுகமென்று எதிர்பார்க்கிறேன். எனக்கு இரண்டு நாளாகக் காய்ச்சலாயிருப்பதாலும்… என் மனைவியின் பாட்டியாராகிய திருமதி. ராஜரத்தின கண்ணம்மா அவர்கள், சென்ற புதன்கிழமை பரலோகம் சேர்ந்துவிட்டாள். அதனாலும் நாங்கள் ஒருவரும் வரமுடியாது இருக்கிறது. சாவுக்குப்போயே ஆகணும். அதனால் என் மனைவி கூட புத்திரன் கூட எங்கம்மா கூட வரமுடியாது. இன்னொரு பெண்ணுக்கு கல்யாணம் செய்தால் அப்போது சாவு ஒன்று இருக்காதுன்னு நினைக்கிறேன். அப்போ அவச்யம் வரேன். ஐயா அவர்கள் மன்னிக்கணும். கல்யாணப் பெண்ணுக்கு மொய்யி எளுதுவதற்காக 10 ரூபாய் அனுப்பி இருக்கிறேன். என் பேராகிய கோனாரக் குப்புச்சாமி மொய்யி எயுதியதுன்னு எயுதவும்.

இப்படிக்கு

கோனாரக் குப்புசாமி

இதைப் படிக்கும்போது சித்ராவுக்குச் சிரிப்பு அடக்கவே முடியாது வந்துவிட்டது. கடிதம் எழுதுவதும் ஒரு கலைதான் என்ற விஷயம் நேற்று வரைக்கும் படித்ததற்கும் இன்று அசட்டுப் பிசட்டென்று மூடத்தனமும் அறியாமையும் சொட்டி வழிய எழுதியிருக்கும் இக்கடிகத்தைப் படித்ததும் அவளுடைய ஆச்சரியம் கரைபுரண்டது. அசம்பாவிதம்… கல்யாண விஷயமாக எழுதும் கடிதத்தில் சாவுகூட எழுதுவார்களா! இது கூட அந்த மடையனுக்குத் தெரியவில்லை. ஐயோ அப்பாவியே! என்று சிரித்தாள்.

”அன்புமிக்க ஐயன்மீர்!

தம்பதிகள் சர்வ மங்களத்துடனும் நீடூழி வாழ்க இறைவனை வேண்டுகிறேன். அடுத்த ஆண்டு இத்திங்களில் தங்களுக்கு ‘பாட்டனார்’ என்கிற அரிய பெரிய ஒப்புயர்வற்ற பட்டத்தை சர்வலோகரக்ஷகன் அளிக்க அவனடி வேண்டும்.

வேணுகோபால்

”சங்கரனுக்கு ஆசீர்வாதம். உபயக்ஷேமம்.

உன் மகளுடைய கல்யாண அழைப்பு கிடைத்தது. எழவெடுத்த ரயிலில் எப்படித்தான் வருகிறது என்பதை நினைக்கும்போதே மென்னைத்திரிகி ப்ராணன் போய் விடும் போல் தோன்றுகிறது. நாசமாய்ப்போன பஞ்ச காலத்தில் வீட்டிலுள்ள அத்தனை சனிகளையும் இழுத்துக்கொண்டு வருவதற்குச் சங்கடமாக இருக்கிறது. கல்யாணத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு அடித்துக் கொள்கிறது. நானோ சாகிற கிழம். இன்றோ நாளையோ சாவு. யார் கண்டா! எதற்கும் இந்த கண்ணாலே உன்னருமை மகளின் கல்யாண ஜோடியைப் பார்த்துவிட ஆசை அடித்துக் கொள்கிறது. சண்டாள உலகத்தின் கஷ்டங்கள் நீங்கும் வரையில் யார் யார் இருப்பார்களோ, சாவார்களோ… ஆகையால் எப்படியாவது விழுந்து அடித்துக் கொண்டு செத்தேன் பிழைத்தேன் என்று சனிக்கிழமை ரயிலில் வந்து விடுகிறேன். ஸ்டேஷனுக்கு மட்டுமே ஆளை அனுப்பு. இந்தக் கண்ராவி ரயில் ஸ்டேஷனுக்குச் சரியா பாதி ராத்திரி இருட்டில் வந்து தொலைகிறது. அதனால் ஆளை அனுப்பு.

இங்ஙனம்,

அப்பு மாமா

”இதற்குமுன் படித்த புத்திசாலிக் கடிதத்திற்கு இது தாதா போலிருக்கிறது. அட கிரகசாரமே! இப்படியும் ஒரு பிரக்ருதி உலகில் இருக்கிறதா! கல்யாணத்திற்கு வரும் ஆசையில் என்ன பேசுகிறோம் எழுதுகிறோம் என்று கூடவா மறந்து விடுகிறது” என்று ஆச்சரியத்தால் மூழ்கியிருக்கும் சமயம் ஒரு கிழவி வந்து கதவை இடித்தாள்.

சித்ரா கதவைத் திறந்து என்னவென்று விசாரித்தாள். ”அம்மா! ஐயா இல்லீங்களா! அவசரமா ஒரு கடுதாசி எயுதணுங்க! மகாராஜா ஐயாதான் எனக்கு எயுதர வயக்கம். எப்போ வருவாங்க?” என்றாள்.

சித்ரா ”அவர் எப்போது வருவாரோ தெரியாது. உனக்கு அவசரமானால் நானே எழுதுகிறேன் சொல்லேன்” என்று தன்னையறியாத உற்சாகத்தில் கூறினாள்.

உடனே கிழவி நீட்டி மடக்கிக் கொண்டு உட்கார்ந்தாள். ‘‘உம்… எயுதுங்க…’’

”இதே போல நீ இனிமேலுக்கும் ஒம்பொஞ்சாதியே இட்டுகிணு போவாங்கட்டி போனாக்க, பெரிய பெரிய சண்டெதான் நடக்கும். பாயாப்போன மானங்காஞ்சி போச்சு, வவுரும் காஞ்சி போச்சு. இனுமேலிக்கி இங்கு வெச்சுகிணு காப்பாத்த முடியாதுண்ணா முடியாதுதான். ஒடனே இட்டுகிணு போவாகாட்டிபோனா இன்னா நடக்குதுன்னு பாத்துக்கோ…

வீராயி

என்று தான் எழுத வேண்டிய விஷயத்தை மெஷின் போல் சொல்லிவிட்டாள். சித்ரா அந்த விஷயத்தை சற்று மெருகுடன் கடிதம் எழுதும் பாணியில் எழுதி படித்துக் காட்டினாள். கிழவி மிக்க சந்தோஷத்துடன், ”யம்மா! எங்க எஜமானுக்குத் தகுந்த மவராஜி நீ. நல்லா இருக்கணும்” என்று வாழ்த்தும்போது வெளியிலிருந்து வந்த உத்தமன் ”என்ன ஆயா! என்ன விசேஷம்? தம்பிக்குக் கடிதம் எழுதுணுமா?” என்று நகைத்துக் கொண்டே கேட்டான்.

கிழவி: சாமீ! ஒங்க மனசுபோல ஒங்களுக்கு சம்சாரம் வாச்சிருக்குதுங்க. ஐயா எங்கேன்னு கேக்கறதுக்குள்ளாரே அம்மா நானே எயுதுறேன்னு சொல்லுடீனுச்சு. எயுதிப்புட்டாங்க. எயுதபடிக்க தெரியாத பட்டிக்காட்டுப் பொணங்களான எங்களுக்கு ஒங்களெ போலே ஒபகாரம் பண்றவங்க இருக்கிறதாலேதானுங்க, நாங்க பொழக்கிறோம்

என்று சொல்லும்போது உத்தமன் மனது கட்டுமீறிய சந்தோஷத்தால் பூரித்தது. தன் மனைவி இத்தனை சடுதியில் இம்மட்டும் முன்னுக்கு வந்து விட்டாளா என்பதை எண்ணி மகிழ்ந்தவாறு அவள் முகத்தைப்பார்த்தான். அவள் சிரித்துக் கொண்டே தலைகுனிந்தாள். அவள் முகத்தில் ஒரு சாந்தியும் சந்தோஷமும் நிலவியது.

10 

Image

ன்று விடுமுறை தினமாகையால் உத்தமன் வேலைக்காரியை சித்ராவுக்குத் துணை வைத்துவிட்டு தன் மாமாவைப் பார்த்துவிட்டு வருவதாகச் சென்றான். சித்ராவுக்கு பரிபூர்ண சுதந்திரம் கிடைத்தது போலாகி விட்டதால் அன்று கவர்களைக்கூட பிரித்து படித்து விட்டு ஓசைப்படாமல் ஒட்டி விட வேண்டும் என்கிற ஆசை உண்டானதால், மறுநாள் கிராமங்களுக்குக் கொண்டு போக வேண்டிய தபால்களை விடியற்காலைதான் தபால்காரன் வந்து எடுத்துப் போவானாகையால் சில கவர்களை மெல்ல எடுத்தாள்.

ஆனால், தான் செய்யப்போவது குற்றமாயிற்றே இதனால் தன் கணவனுக்கு ஒன்றும் துன்பம் நேரிடாமலிருக்குமா! என்பதை மனம் நினைக்காமலில்லை. எனினும் ஆசையே முன்னோக்கி நின்றதால் மெல்ல ஜலத்தைத் தடவி ஜாக்ரதையாகக் கவரைப் பிரித்துக் கடிதத்தை எடுத்தாள்.

”என் அன்பைக் கொள்ளைக் கொண்ட ஆனந்தவல்லியே! அம்ருத கலசமே! உன்னைப் பிரிந்த நாள்முதலாக நான் படும் அவஸ்தை…

இதென்ன காதல் கடிதம்போலிருக்கிறதே… என்னதான் இருக்கிறது பார்க்கலாம்…

ஆண்டவனுக்குத்தான் அர்ப்பணம். கண்மணீ! என்னிதய ராணி! நாம் பெற்றோராகப் போகிறோம் என்கிற சந்தோஷம் ஒரு புறமிருப்பினும் சில மாத காலம் உன்னைப் பிரிந்திருப்பது எனக்கு நரகவேதனையாயிருக்கிறது. உன்னோடு பேசாத வாயும் உன்னமுத மொழிகளைக் கேளாத செவியும், உன்னை என் ஆவல் தீரக்கட்டி…

சீச்சீ! வெட்கக்கேடு… என்னதான் உயிர்க் காதலியாயிருப்பினும் இப்படியா மானங்கெட்டு எழுதுவது… என்று வெட்கத்துடன் கவரில் கடிதத்தைப் போட்டு ஜாக்ரதையாக ஒட்டிவிட்டு மற்றொரு கவரைப் பிரித்துப் படிக்கவாரம்பித்தாள்.

”என்னாருயிர் அன்னையே! உன் திருவடித் தாமரைகளில் அனந்தங்கோடி தண்டனிட்டுச் செய்யும் விக்ஞாபனம்:

அம்மா! என் விஷயத்தில் நீங்கள் கொஞ்சமும் கவலைப்படவே வேண்டாம். உங்கள் வயிற்றில் பிறந்து உங்களுடைய பரிசுத்தமான ரத்தம் என் சரீரத்தில் ஓடும்போது நான் எப்படியம்மா கெட்டுவிட முடியும்? அப்பாவுக்கு நான் சரியாகப் படிக்கிறேனா இல்லையா என்கிற சந்தேகம் தோன்றியிருக்கிறது. அதனால்தான் அவர் என் நண்பன் நாராயணனின் தகப்பனாருக்கு கடிதம் எழுதி விசாரித்திருக்கிறார். அதைப்பற்றி நான் சற்றும் கவலைப்படவில்லை. என்னுடைய நலனைக் கோரி அல்லும் பகலும் பாடுபடும் முன்னறி தெய்வங்களாகிய நீங்கள் என் க்ஷேமத்திற்காகச் செய்வீர்களேயன்றி வேறில்லை. அம்மா! அப்பாவுக்கு என்னுடைய பரிசுத்தத்தை நீ நன்கு எடுத்துக்கூறி அவரைச் சந்தேகப்படாமிலிருக்கும் படிக்குத் தெரிவி. அவருடைய மனங்களித்து என்னை வாழ்த்துவதற்காகவே நான் இதோடு என் காலேஜ் ப்ரின்ஸ்பால் என்னை மிகவும் கொண்டாடி எழுதிய ஒரு கடிதத்தை வைத்திருக்கிறேன். இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அம்மா! என் கல்யாணத்தைப் பற்றி இப்போது அவசரமில்லை என்றுதான் நினைக்கிறேன். அப்படி நீங்கள் இப்போதே செய்துதான் ஆகவேண்டுமென்றால் உங்களிஷ்டம் போல் செய்யுங்கள். உங்கள் மனங்கோணாமல் நடப்பதே என்னுடைய கடமை. என்னுடைய ப்ரார்த்தனையும் அதுவே. இந்த ஹோட்டல் சாப்பாடு எனக்கு மிகவும் வெறுப்பாயிருக்கிறது. உங்களுடைய மாதுர்யமான சமையலைச் சாப்பிடுவதற்கு நாக்கு பறக்கிறது. லீவு விட்டவுடனே வருகிறேன். நம்ஸ்காரம்.

உங்கள் அடிமைப்புதல்வன்

ராஜாராம்

அதோடிருந்த கடிதத்தைப் படிக்கவாரம்பித்தாள்.

”சிரஞ்சீவி ராஜாராமனுக்கு ஆசீர்வாதம். உபயக்ஷேமம்.

இன்று என் குழந்தைக்கு நேர்ந்த பேராபத்தில் நீதான் கடவுள்போல் வந்து காப்பாற்றின பேருபகாரத்தை நான் என்றுமே மறக்கமாட்டேன். காலேஜில் நீ படிக்க வந்த நாள் முதல் உன்னுடைய ஒழுக்கத்தையும், சீலத்தையும், புத்திசாலித்தனத்தையும் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன். இத்தனை சிறந்த உத்தமனாகிய உனக்கு இத்தகைய தயாளத்தனமும் பரோபகார சிந்தையும் இருப்பது அவைகளுக்குச் சிகரம் வைத்தது போலிருக்கிறது. நீ செய்த உதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்வதென்றே தெரியவில்லை. விலை மதிக்கக் கூடிய எதைக் கொடுத்தாலும் அது ஈடாகாது. என் வயிற்றில் பாலை வார்த்த உன்னை நிறைந்த இதயத்துடன் பரிபூரணமாக ஆசீர்வதிக்கிறேன். இதுதான் விலையில்லாத செல்வம். உனக்கு என்னால் எத்தகைய உதவியாவது வேண்டியிருந்தால் என்னை நேரில் பயமின்றி வந்துபாரு. இத்தகைய உத்தமமான மகனைப் பெற்றுள்ள புண்யாத் மாக்களாகிய உன் பெற்றோர்களை நான் பாராட்டுகிறேன்.

இங்ஙனம்

பாலாஜிராவ்

ப்ரின்ஸிபால்

கம்புக்கும் களைவெட்டி, தம்பிக்கும் பெண் பார்த்தது என்பதுபோல், இந்த பையன் யாரோ தெரியவில்லை, பக்கத்துக் கிராமத்தில்தான் பெற்றோர்களிருப்பதால் இதைப் பற்றி விசாரிக்கச் செய்தால் என் தங்கை சரோஜாவை இவனுக்குச் கொடுக்கலாமே என்று சித்ராவுக்குத் தோன்றியது. தான் விளையாட்டாகவும் பொழுதுபோக்காயும் கடிதம் படிக்க ஆரம்பித்ததில் கல்யாணம் நிச்சயிக்கும் விஷயத்தில் தானே தாவியதும், யோசனைகள் பலமாக எழுந்து வேலை செய்ய ஆரம்பித்தன.

11 

Image

த்தமனுக்கு உண்மையிலேயே அன்று அலுப்பினால் தூக்கம் வந்துவிட்டது. படுத்தவுடனே தூங்கிவிட்டான். சித்ராவுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. தன் கணவன் அயர்ந்து தூங்குவதையறிந்ததும் ஓசை செய்யாமல் ஆபீஸ் அறைக்கு வந்து மிக்க ருசிகண்ட தொழிலை ஆரம்பித்தாள். தபாலுக்கு அனுப்ப வேண்டிய கடிதங்கள், தபாலில் அன்று வந்த கடிதங்கள் முதலியவைகள் மேஜைமீது இந்த துரைசானியம்மாளின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தன. சித்ரா வந்ததும் அவளைக் கண்டதும் கண்களைச் சிமிட்டி அழைப்பது போல் அவள் மனதிற்குத் தோன்றியதால் உத்ஸாகத்துடன் தன் வேலையை ஆரம்பித்தாள்.

”அன்புள்ள ப்ராண நாதருக்கு நமஸ்காரம். உபயக்ஷேமம். உங்கள் கடிதம் வந்தது. அன்றும், இன்றும், என்றும் ஒரே வார்த்தைதான். மறுபேச்சு கிடையாது. உங்களுக்கு நான் முக்கியமாயிருந்தால், நான் அங்குவர வேண்டுமாயிருந்தால் முதலில் உங்கள் தாயாரையும் அந்த ராக்ஷஸி உங்கள் அக்காவையும் வீட்டைவிட்டு ஓட்டினால்தான் வரமுடியும். இல்லாவிட்டால் நான் அங்கு அடி எடுத்து வைக்க மாட்டேன். ஓயாது ஒழியாது என் மீது குற்றங்குறைகளைக் கூறியவாறு ஆட்சி செய்வதற்கு இனி நான் உள்பட மாட்டேன். அம்மாவும், அக்காவும் உங்களுக்குப் பிரதானமானால் அவர்களே சாச்வதமாய் சிரஞ்சீவியாய் இருக்கட்டும். எப்போது இதைச் சொன்னாலும் திக்கற்ற விதவையாகிய அக்காவை எங்கே துரத்துவது என்கிறீர்கள். திக்கற்று வக்கற்று கிடக்கும் பிணங்களுக்கு அதிகாரமும் ஆணவமும் ஏன்? அடங்கி நாய் போல் கிடக்கத் தெரிய வேண்டாமா! நான் என்ன பிச்சைக்காரன் வீட்டு மகள் என்று எண்ணிவிட்டாளா? மிராசுதார் மீனாக்ஷிசுந்தரத்தினுடைய மகள் என்பதை நினைத்துப் பார்க்கட்டும். என் கீழ் அடங்கி, போட்டதைத் தின்றுவிட்டு வீட்டு வேலைகளைச் செய்து கொண்டு இருந்தால் இருக்கட்டும். உலக்கைகள் போல் இரண்டு பேர்களை வீட்டில் வைத்துக் கொண்டு சமையலுக்கு அனாவச்யமாகச் செலவு செய்து ஏன் ஆளை வைக்க வேண்டும்? வேலைக்காரிதான் எதற்கு? வீட்டில் குழந்தையா குட்டியா! ஒன்றுமில்லாத தடிமரங்கள் போல் நால்வர் இருக்கும் இடத்தில் இவர்கள் செய்வதற்கென்ன என்கிறேன். என்மேல் கோபிக்க வேண்டாம். இவைகளுக்குச் சம்மதமாயின் கடிதமெழுதவும் வருகிறேன்.

ஜானகி

இக்கடிதம் சித்ராவின் வியப்பைக் கிளறிவிட்டது. ”இப்படியும் ஒரு பெண்ணானவள் பயங்கூச்சமின்றி கணவனுக்குக் கடிதமெழுதத் துணிவாளா? என்ன மாயா உலகம்! என்ன வேடிக்கைகள்” என்று தனக்குள் வியப்புற்றாள்.

”அன்புமிக்க லீலாவுக்கு உபய க்ஷேமங்கள்

உன்னிடமிருந்து கடிதம் வருமா! என்று எதிர்பார்த்து நிமிடத்திற்கு நிமிடம் துடிக்கிறேன். கடிதம் வந்ததும் ஒரு புறம் சந்தோஷமும் கோபமும் வருகிறது. எனக்கு 500 ரூபாய் சம்பளம் என்பதனால் தாம்தூம் என்று செலவு செய்துவிட்டால் நாளைக்கு நம் குழந்தைகளுககு ஒரு பொறுப்பும் மதிப்புமுள்ள வகையில் நாம் நடக்க வேண்டாமா? இதைச் சொன்னால் ”நாளைக்கு என்பதை நினைக்க நமக்கேது உரிமை? ஆண்டவன் அன்றாடம் நடத்துவதற்குக் காத்திருக்கிறான்” என்று எனக்கே வேதாந்தம் உபதேசித்து எழுதிவிடுகிறாய். உன்னுடைய விருப்பப்படியே உன் நாத்தனாருக்கு மாதம் 20 ரூபாய் அனுப்புகிறேன். தீபாவளிக்கு நீயே புடவைகள் வாங்கி அனுப்பிவிட்டாய். அதற்கும் நான் கோபிக்கவில்லை. பொங்கலுக்கு 50 ரூபாய் அனுப்பு என்று ஆர்டர் போட்டிருக்கிறாய். மூன்று தங்கைகளுக்குமே நான் சம்பாதிப்பதை நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை, பொங்கல், சுமங்கலி ப்ராத்தனை, அம்மா திவசம் என்று செலவு செய்து கொண்டு போனால் எந்த மட்டில் போய் நிற்கும் என்பது எனக்குத் தெரியவே இல்லை. ஆகையால் நீ இவ்விஷயத்தில் அனாவச்யமாகத் தொந்தரவு படுத்தாதே. நீ கேட்டபடி 250 இன்ஷியூரில் அனுப்பியிருக்கிறேன். பாழும் வேலைத் தொந்தரவால் நான் ஒரு ஊரும் நீ ஒரு ஊருமாக இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. கூடிய சீக்கிரம் லீவு வாங்கிக் கொண்டு வருகிறேன். குழந்தைகளுக்கு என் ஆசீர்வாதம்.

இங்ஙனம்

சபாபதி.

”இதற்கு முன்பு படித்த கடிதம் ஒருவிதமான புரட்சியை உண்டுபண்ணியது. இது மற்றொரு விதமான புரட்சியை உண்டுபண்ணியது. இரண்டும் ஒன்றுக்கொன்று எத்தனை வித்யாஸம்! எத்தனை ஆச்சரியம்! என்று திகைத்தாள்.

”உலகமே! உன்னுடைய புதுமையின் போக்குதான் என்ன ஆழமானது!” என்று எண்ணினாள்.

”சிரஞ்சீவி ஸீதாராமனுக்கு ஆசீர்வாதம். உபயக்ஷேமம். உன் கடிதம் கிடைத்தது. உனக்குப் பலதரம் எழுதியிருக்கிறேன். நேரிலும் பலதரம் சொல்லியிருக்கிறேன். யாரிடமிருந்து கடிதம் வந்தாலும் அதற்குப் பதில் எழுதும்போது அந்தக் கடிதத்தை மறுபடியும் ஒருமுறை படித்துவிட்டுத்தான் பதில் எழுத வேண்டும். அப்போதுதான் அதில் என்னென்ன விஷயங்களுக்கு பதில் எழுத வேணுமோ அவைகளை எழுதமுடியும். இதை அடியோடு மறந்துவிட்டுப் படித்த கடிதத்தை அதே இடத்தில் அஜாக்கிரதையாகப் போட்டுவிடுவதால் நான் எழுதியதற்கு எந்தவிதமான பதிலும் கொடுக்காமல் நீ ஏதோ எழுதியிருக்கிறாய். நமக்கு வரும் கடிதங்களில், சாவுக் கடிதங்களை மட்டும்தான் உடனே கிழித்தெறிய வேண்டுமேயன்றி மற்றக் கடிதங்களை பத்திரப்படுத்த வேண்டும். அலக்ஷியமாகப் போடக்கூடாது. இன்று அலக்ஷியமாகத் தோன்றும் கடிதமே பல வருஷங்கள் கழித்து அதுவே அதிமுக்யமாகத் தோன்றலாம். கடிதம் என்பது எதற்காக எழுதுகிறோம் – பொழுது போக்கற்றா எழுதுகிறோம். அவைகளின் கருத்தென்ன? ஒருவர் மூலம் மற்றொருவர் க்ஷேமங்களைப் பரிமாறிக் கொள்ளவும், இன்னும் அனேக விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும்தான் கடிதம் எழுதுகிறோம். முக்கியமான விஷயங்களைக் கவனித்து பதில் கொடுக்காவிட்டால் கடிதம் எழுதியதற்கு என்ன பலன்? கடிதத்தை வைத்துக் கொண்டு பதில் எழுதும் வழக்கம் பலரிடம் கிடையாது. இதன் தவறுதலால் சிலசமயம் மனஸ்தாபங்கள் கூட உண்டாகி விடுகிறது. ‘நான் கேட்டதற்குப் பதிலைக் காணோம். இதென்ன கடிதம்’ என்று மனக்கசப்பு வேறு உண்டாகி விடுகிறது. அதுமட்டுமா? இவர்களுக்கு ஏன் அந்த விஷயம் தெரிய வேண்டும்? நான் லக்ஷ்யப்படவில்லை. இப்படி எல்லாம் நினைப்பதற்கும் அதன் மூலம் சிறிது சிறிதாக மனஸ்தாபங்கள் உண்டாவதற்கும் இடமாகி விடுகிறது. இதன் விளைவு பல இடங்களில் பெரிய சண்டையில் கொண்டு புகுத்தி விடுகிறது. இதை நீ அறிய வேண்டாமா! யாரிடமிருந்து எந்தக் கடிதம் வந்தாலும் அலக்ஷியமாக போடக்கூடாது. சிலர் தங்களுக்கு வரும் கடிதங்களைப் படித்த இடத்திலேயே போட்டு விடுவது, அல்லது பொட்டலம் கட்டிவிடுவது, குப்பையோடு குப்பையாக எறிந்துவிடுவது… இம்மாதிரி செய்கையின் லாபமோ, நஷ்டமோ அப்போது தெரியாது. அம்மாதிரி அஜாக்ரதையாகப் போட்டுவிட்ட கடிதங்கள் கழுகுக் கண்களை உடைய பிறர் கையில் கிடைத்து அவர்கள் அதை சாதகமாகவோ, பாதகமாகவோ உபயோகிக்க வசதி ஏற்பட்டுவிடக்கூடும். அதோடு மட்டுமில்லை;  முக்யமான விஷயங்களை அவர்களறிந்து கொள்ள இடம் ஏற்பட்டுவிடும். இதை நான் ஏதோ கற்பனையும் வேடிக்கையாயும் எழுதியதாக நினைக்காதே. எங்கள் வீட்டிலேயே நடந்த ஒரு முக்யமான சம்பவத்தை உனக்கு எழுதுகிறேன்.

என் சிறிய தங்கைக்கு ஒரு நல்லவரனைப் பற்றி என் சினேகிதர் என் தகப்பனாருக்கு எழுதினார். அவர் கடிதத்தைப் படித்துவிட்டுப் பத்திரப்படுத்தாமல் போட்டு விட்டதற்கு பலன் என்ன ஆயிற்றுத் தெரியுமா? அக்கடிதத்தைப் படித்த எங்கள் எதிர்வீட்டுக்காரர் உடனே முயன்று அந்த வரனைத் தன் மகளுக்கு முடித்துவிட்டார். அதன் பிறகுதான் என் தகப்பனார் கண்ணை விழித்துக் கொண்டார்.

இதே போல் ஏதோ இடத்தில் வேலை காலியாயிருப்பதை எங்க மாமாவுக்கு அவருடைய மாமனார் எழுதியதைப் பிறர் பார்த்து உடனே அந்த வேலைக்கு வேறொருவர் விரைந்து சென்று, தான் புகுந்துவிட்டார். இதுபோல் பலவிதமான விஷயங்கள் இருக்கின்றன. ஆகையால் இனியும் நீ இப்படி அஜாக்ரதையாயிருக்காதே. உன் கல்யாண விஷயமாக நான் எழுதியதற்குப் பதில் போடு; அந்தப் பெண்ணின் தகப்பனார் என்னைத் தொணப்புகிறார். இல்லாவிட்டால் நேரில் அவரையே வந்து உன்னைக் காணும்படி செய்துவிடுகிறேன்.

உன் ப்ரிய நண்பன்,

நடராஜன்

”அடேயப்பா! கடிதங்களின் ரகஸ்யம் இத்தனை இருக்கிறதா? ஐயையோ! அன்று என் சிநேகிதை எழுதிய கடிதத்தை நான் மாடியில் அப்படியே போட்டு விட்டேனே! அது யாரிடமாவது கிடைத்துவிட்டால் அவளைப் பற்றியோ என்னைப் பற்றியோ என்ன நினைப்பார்கள்!” என்று தோன்றியதால் ஓசை செய்யாமல் மாடிக்கு ஓடி அக்கடிதத்தை எடுத்துத் தன் பெட்டிக்குள் பத்திரமாக வைத்தாள். கடிதத்தின் விஷயங்களை கடிதமே அறிவித்து ஜாக்கிரதைப் படுத்தியதை எண்ணி வியப்புற்றாள். உத்தமன் அயர்ந்து தூங்குவதால் மீண்டும் கீழே வந்து வேலையைத் தொடங்கினாள்.

”ஸௌபாக்கியவதி, ராஜலக்ஷ்மிக்கு ஆசீர்வாதம். உபயக்ஷேமங்கள்.

உன்கடிதம் வந்தது. சந்தோஷம். உனக்குப் பேரன் பிறந்தது பற்றி சந்தோஷம். உங்க எஜமானருக்கு வேலை உயர்ந்தது பற்றி சந்தோஷம். நீ வீடு வாங்கப்போவது பற்றி சந்தோஷம். வைர அட்டிகை செய்தது பற்றி சந்தோஷம். மற்றபடி வேறு விசேக்ஷமில்லை.

இப்படிக்கு

கமலா

”இதென்ன கடிதம்! ஒரு வரிக்கு ஒரு சந்தோஷம் என்று எழுதியிருப்பதும் வேடிக்கையாக இருக்கிறதே! உப்புசப்பற்ற இந்தக் கடிதம் ரஸிக்கவே இல்லையே… இதைப் பார்ப்போம்…’’

”ஸேதுவுக்கு அன்பு… க்ஷேமங்கள். உன் கடிதம் கிடைத்தது. இங்கு சவுக்யம். பானுமதி சுகம். ஸீதாகமலா… சுப்ரமண்யன் ராஜா வேணூ சித்தி அத்தே பாட்டி எல்லாரையும் கேட்டதாகச் சொல்லவும்

மோகனா

இக்கடிதம் உணர்ச்சியற்ற கட்டைபோல் தோன்றியதன்றி சுகப்படவில்லை.

”ஸௌபாக்யவதி அம்புஜத்திற்கு ஆசீர்வாதம். உபயக்ஷேமங்கள்.

உனது அன்பு ததும்பும் கடிதம் என்னை ஆனந்த உலகத்திற்கே தூக்கிக் கொண்டு பறந்தது. கடிதம் படிப்பதாக நான் நினைக்கவில்லை. ஏதோ கட்டுரை கதை பாடல் முதலியன படிப்பது போன்ற ருசியே உண்டாகியது. கிராமத்தில் உனக்கு எப்படி பொழுது போகிறது என்றா கேட்கிறாய்? பொழுதைப் போக்குவதற்கான உயர்ந்த வழியை அறிந்து கொண்ட பிறகு அவர்களுக்கு எங்கிருப்பதற்கும் ச்ரமமே தோன்றாது. இதுதான் நான் கண்டறிந்த உண்மை. வேலை செய்யும் நேரம் போக மற்றைய நேரத்தில் பகவன் நாமத்தை பூஜிப்பதில் நான் நிகரற்ற இன்பத்தை அடைகிறேன். பகவத் விஷயங்களை அறியப் பலவித பத்திரிகைகளைப் படிக்கிறேன். அருமையான புத்தகங்களைப் படித்துப் பயனடைகிறேன். இத்தனை விதங்களில் பொழுது போக்குவதற்கு நேரந்தான் போதவில்லை எந்த விதத்திலும் புத்தியைச் செலுத்தாது உட்கார்ந்திருந்தால் பட்டண வாஸத்திலிருந்தாலும் சரி, சொர்க்கத்திலிருந்தாலுங்கூட பொழுது போகாதுதான் வளரும். என்னுடைய வாழ்நாளில் நான் இதுவரையில் பொழுது போகாது தவித்த நாளே கிடையாது. பொழுது போதவில்லையே என்றுதான் அலைகிறேன். கல்யாணமாகிப் புக்ககத்திற்குப் போகும் வரையில் பள்ளிக் கூடப் படிப்பு, சங்கீதப் பயிற்சி, வீட்டில் என் தாயாருக்குச் சகாயமாக ஏதாவது வேலை செய்வது… இதற்கே பொழுது போதாது.

புக்ககம் போனபிறகு குடும்ப வேலையுடன் கணவனுக்கும் மாமியார் மாமனார் முதலியவர்களுக்கும் முக உல்லாஸமாயும், மரியாதையும் நடந்து கொண்டு சிச்ருஷை செய்வதற்கே போது போதாது. கணவருக்கு வேளா வேளைக்கு உடைகளைச் சரிபார்த்து வைப்பதற்கே மணிக்கணக்கில் பொழுது போய்விடும். மாமியாருக்கு பகல் நேரங்களில் அவர் விரும்புகிற பத்திரிகைகள், புத்தகங்கள் முதலியன படித்துக் காட்டுவது, கடிதம் எழுதச் சொல்கிறவர்களுக்குக் கடிதம் எழுதுவது, இதற்கே பொழுது போதாது. அதற்குப்பிறகு என் குழந்தைகளின் பாடு சரியாகிவிடும். குடும்பத்தில் பல ஆட்கள் இருப்பினும் அளவு தெரிந்து வேலை செய்தால் ஓய்வு கூடக் கிடைக்குமா! குழந்தைகள் பெரியவர்களாகிய பிறகு மாமியார் வகித்த வீட்டுப் பொறுப்பு என் தலை மீது விழுந்தது. இதுபோல் எத்தனையோ! இப்போது என்னுடைய பொழுதை நான் ஒரு நிமிஷங்கூட வீணாக்காமல் பகவத் விஷயத்தில் கழிக்கிறேன். அதுவே எனக்குப் பேரின்பமாகவிருக்கிறது. நீ பொழுதே போகவில்லை என்று எழுதியிருப்பது வியப்பாகயிருக்கிறது. உனக்கு சத்தியாய் குழந்தை குட்டிகள் இல்லை என்பதால் பொழுது வளர்வதுபோல் தோன்றலாம்.

சின்னம்மா! நான் சொல்கிறேனே என்று கோபிக்காதே. அரிது அரிது மானிடராவது அரிது என்பது பெரியோரின் வேதவாக்கு. அத்தகைய சிறந்த மானிட வாழ்வின் மகிமையறியாது பொழுதை வீணாகக் கழிக்கக் கூடாது. இப்போது நாம் சுதந்தரமடைந்துவிட்டோம். இனிமேல் ஆங்கில பாஷைக்கு மதிப்பு முன்போல் வளர முடியாது. நம் தேச பாஷை இனி ஹிந்தி பாஷைதான். ஹிந்தியை நீ கற்றுக் கொள்வதில் இறங்கிவிட்டால் அதன் ருசி உன்னை மிகவும் வசீகரிக்கச் செய்துவிடும். பொழுது போகும். ஒரு பாஷையும் வந்ததாகும். அதை நீ பிறருக்கும் போதிக்கலாம்; அதுவே உனக்கு வழிகாட்டிப் பொழுதை வளைத்துக் கட்டிக்கொண்டு போகும். இதர விஷயங்களில் நீ புத்தியை செலுத்தாது உண்பதும் உறங்குவதுமாகவே இருந்தால் எப்படித்தான் பொழுது போகும்? ஹிந்தி புத்தகங்கள் வாங்கியனுப்புகிறேன். பொழுது போக்குவதற்கு நாம் நேரத்தை வகுத்துக் கொள்ள வேண்டுமேயன்றி பொழுது தன்னைத்தான் கடத்திக் கொண்டுபோக மார்க்கம் காட்டாது என்பதை மட்டும் மறக்காதே. நீ சிறிய வயதிலிருந்தது போலவே சோம்பேறியாய் இன்றும் இருக்க முடியாது. அதனால்தான் ‘நீ எப்படி பொழுதை போக்குகிறாய்?’ என்று கேட்டு எழுதியிருக்கிறாய். ஏதோ எனக்குத் தெரிந்ததை எழுதினேன். உன் பதிலிலிருந்துதான் உன் உள்ளத்தின் போக்கை அறியவேணும்.

இங்ஙனம்

சுமதி

இக்கடிதம் உண்மையில் சித்ராவுக்கே புத்திபுகட்ட எழுதியதோ என்று தோன்றியது. ”பொழுது போக்க வகையில்லை” என்று கூடச் சொல்ல இடமிருக்கிறதா! என்கிற உயர்ந்த கருத்தல்லவா இதில் ஜ்வலிக்கிறது. பேஷ். எனக்கும் ஒரு நல்ல படிப்பினையாயிற்று” என்று இவள் கடிதத்தின் ஸாரத்தில் லயித்திருக்கையில் மணி 12 முறை அலறியது கேட்டதும் ”அடாடா! இத்தனை நேரமாகிவிட்டதா?” என்று திடுக்கிட்டவாறு எழுந்து போய் படுத்துக் கொண்டாள். அக் கடிதத்தின் பலன், தானும் ஹிந்தி பாஷையைக் கற்க வேண்டுமென்கிற ஆசையைக் கிளறி விட்டது.

***

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

வை.மு.கோதைநாயகி அம்மாள்

ஆண்டாள் பிரியதர்ஷினி

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஜோதிர்லதா கிரிஜா

சிவசங்கரி

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s