தபால் விநோதம் (பகுதி – 3)
வை.மு.கோதைநாயகி அம்மாள்
12
கடிதங்களின் வினோத கவர்ச்சியின் பயனாக சித்ராவின் முகத்தில் முன்பிருந்த கடுகடுப்பும் சிடுசிடுப்பும் மறைந்து சிரிப்பும் சுறுசுறுப்பும் தாண்டவமாடுவதை அறிந்த உத்தமனின் உள்ளம் பூரித்தது. இப்போதெல்லாம் எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கெல்லாம் சித்ராவே கடிதம் எழுதும் வேலையில் ஈடுபட்டு அதைத் தன் வாழ்க்கை இன்பமாயும், கணவனின் திருப்பணியாயுமே எண்ணினாள். அது மட்டுமில்லை. கணவனுடன் சரிசமமாக ரிஜிஸ்தர் புத்தகங்களில் எழுத வேண்டிய வேலைகளையும் தானே கூடச் செய்ய வேண்டுமென்கிற ஆசை உண்டாகியது.
அன்று அசாத்ய வெயில் கொளுத்துகிறது. வியர்வை சொட்ட உத்தமன் வேலை செய்து கொண்டிருக்க, சித்ரா தானாக உள்ளே சென்று விசிற ஆரம்பித்தாள். இச்செய்கை உத்தமனை பிரமிக்கச் செய்தது. அன்பும் ஆர்வமும் ஜ்வலிக்க அவள் முகத்தை ஏற இறங்க பார்த்தான். ”சித்ரா! வேண்டாம்… உன் கை வலிக்கும். பட்டணவாஸத்திலிருந்தால் ஒரு பித்தானை அழுத்தினால் விசிறி கடகடவென்று சுற்றும். இங்கு பாவம்! கை வலிக்க நாட்டுப்புறத்தானுக்கு ஒரு விசிறியால்…” என்பதற்குள் சித்ரா கோபத்துடன் ”போதும்! இம் மாதிரி என்னைக் குத்திக்காட்டிப் பேச வேண்டாம்… நான் ஏதோ அறியாமையால்… முட்டாள்தனமாக நடந்து கொண்டது பற்றி வருத்தப்படுகிறேன். அந்த அத்தியாயம் அதோடு முடிந்துவிட்டது. என் புத்தி திருந்திவிட்டதால் இனியும் பழைய விஷயங்களையே பேசி என்னைப் புண்படச் செய்ய வேண்டாம். நானும் உங்கள் காரியத்தில்கூட ஏதாவது ஒத்தாசை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏதாவது கொடுங்கள்.
மணியார்டர் பாரங்களை ரிஜிஸ்தரில் பதிவு செய்கிறேன்’…’ என்று அவள் சொல்வதை அவனால் நம்பவே முடியவில்லை.. விறைக்க விறைக்க அவளைப் பார்த்து… ‘‘சித்ரா! நிஜமாகவா… உண்மையாகவா நீ இப்படிப் பேசுகிறாய்!’’ என்று வியப்பே வடிவாய்க் கேட்டான்.
அப்போது யாரோ முக்கியமானவர்கள் பேச வந்ததால் உத்தமன் வாசலுக்கு எழுந்து போனான். அப்போதும் மேஜை மீதிருந்த கடிதங்கள் இவள் கண்களைக் குத்தின.
”கல்யாணிக்கு ஆசீர்வாதம். உபயக்ஷேமம்.
பனைமரத்தடியில் அமர்ந்து பால் குடித்தாலும் கள் குடித்ததாக உலகம் மதிப்பிடும். இந்த உண்மையை நீ அறியாது ‘ஸோஷல், ஸோஷல்’ என்கிற கவசமணிந்து கண்டவர்களுடனும் பழகுவது சரியல்ல. நீ இன்னும் 25 வயதைக் கடக்காத இளங்கொடி என்பதை மறந்தாய் போலும். கல்யாணமாகி தம்பதிகளாகச் சேர்ந்து எத்தகைய வேலையைச் செய்தாலும் அதற்குள்ள மதிப்பும் கண்ணியமும் வேறுதான் என்பதை நீ அறிய வேண்டும். உன் மனத்தில் கல்மிஷமில்லாதிருக்கலாம். ஆனால் உலகம் அதை நம்பாது. ஆகையால் வீண் ஆட்டம் ஆடாதே. பெண்களின் கடமையும் உரிமையும் என்கிற ஒரு அபூர்வமான புத்தகம் ஒன்று உனக்கனுப்பி இருக்கிறேன். அதை நீ தவறாது படித்துப் பயனடைய வேண்டும். நான் உனது பள்ளிகூட உபாத்தியாயினியாயிருந்த சுதந்திரத்தினால் இதை எழுதுகிறேன்; வித்தியாசமாக எண்ணாதே. கணவனுடைய நிழலாகவிருந்து கணவன் மனங்களிக்க உழைப்பதுதான் பெண்களின் தர்மமாகும். இதையறியாதவர்களின் வாழ்க்கை ஸாரமற்ற உப்புசப்பற்ற ஊனவாழ்க்கை போன்றதுதான்.
உன் உபாத்தியாயினி,
மீனாக்ஷி
சித்ராவின் வியப்பு கரைபுரண்டது. தன் கணவனுக்கு தான் கூட ஒத்தாசையாக வேலை செய்ய வேண்டும் என்று முன்வந்துள்ள இதே நிமிஷத்தில் இதே புத்திமதியை போதிக்கும் கடிதமாகவிருப்பதால் பகவானின் லீலைகளின் மதிப்பும் ரகஸ்யமும் அவள் இதயத்தில் பளிச்சென்று தோன்றியது. அவளையறியாது பகவானை வணங்கினான்.
”அன்புள்ள சிவகாமிக்கு ஆசீர்வாதம். உபயயேக்ஷமங்கள்.
உன் பெண்ணுக்கு ஏதோ உடம்பு சரியில்லை. படுத்திருக்கிறாள்; க்ஷயரோகமாயிருக்குமோன்னு தோன்றதுன்னு காமு சொன்னாள். இதைக் கேக்கற போதே என் வயித்துல குபீர்னு சங்கடம் செய்தது. ஏதோ நாலு புள்ளைகள் நடுவிலே மருந்துபோல ஒரே பெண் பிறந்திருக்கு. அதுக்கு ஒரு ஆபத்தும் வராதிருக்க வேண்டுமென்று பயம் அடித்துக் கொள்கிறது. அடியம்மா! சிவகாமூ! பெண்ணை ஜாக்ரதையாக பார்த்துக்கோம்மா! ஒங்க குடும்ப விஷயம் உனக்குத் தெரியுமோ தெரியாதோம்மா! க்ஷயரோகம்னு காதுலே விழும்போதே என்னமோ பண்றது. ஒங்க மாமியார் க்ஷய ரோகத்திலேதான் செத்துப் போயிட்டா. ஒங்க நாத்தனாருக்கும் இதே மாதிரி இந்த வயசிலேதான் க்ஷயரோகம் வந்து ஆறே மாஸத்துல கண்ணெ மூடிண்டூட்டா… ஒங்க மாமியாருக்கு அம்மாகூட க்ஷயரோகத்துலேதான் செத்தாள்… இதெல்லாம் குடும்பத்து தொத்துன்னு சொல்வாம்மா… காசெ காசாக பாக்காமே வயித்தியம் பண்ணு. ஒன் வயிறு நல்லதா இருக்கணும். ஒனக்கு ஒத்தாசைக்கு வேணுமானா எனக்கு எழுதும்மா. நான் வரதுக்குத் தடையே இல்லை.
உன் அத்தை
கோமதி
இந்த அசட்டுக்கடிதம் சித்ராவுக்கு எரிச்சலாகவே இருந்தது. ”போறுமே! கடிதத்திலேயே இத்தனை அழகா எழுதுகிறவளை இன்னும் துணைக்கு வேறு அழைத்துக் கொண்டால் வேறு வினை வேண்டாம். அபசகுனிபோல் எதையாவது சதா சொல்லிக் கொண்டேதான் இருப்பாள். நோயாளிகளுக்கோ, அவர்களைச் சேர்ந்தவர்களுக்கோ, தைரியமும் ஹிதமும் பேசி அவர்களுடைய கவலையைப் போக்குவது லக்ஷணமா?
இப்படி இன்னும் கடுக்காய் கொடுத்துக் கலக்குவது லக்ஷணமா… என்று அந்த பத்திரிகையில், ‘கடிதம் எழுதுவதும் ஒரு கலை’ என்று படித்ததின் உண்மை இப்போது நன்றாகத் தெரிகிறது. ‘இந்த மகாராஜியை வரவழைக்காதிருக்க வேண்டும்!’ என்று தனக்குள் எண்ணியபடியே மற்றொன்றின் மீது படை எடுத்தாள்.
”அன்புள்ள கந்தப்பா!
உன்னுடைய ஆள்மூலம் சகல விஷயங்களையும் அறிந்தேன். உன்னை இத்தனை தூரம் அவமானப்படுத்திய அந்த நாயை நீ சும்மாவிடக் கூடாதுதான். நான் புலன் விசாரித்ததில் அந்த அல்பக் கழுதை மகன் நாளை இரவு வண்டியில் வருகிறானாம். விக்ரமபுரத்து ஜங்ஷனில் சரியாக இரவு 12 மணிக்கு வருகிறது. அரை மைல் தூரத்திலுள்ள ஆலம்பட்டி கிராமத்திற்கு இரவே போகப்போகிறானாம். ஆள்களும் வண்டியும் ஸ்டேஷனுக்கு வருமாம். அவர்களை எப்படியாவது உன் ஆட்கள் மூலம் ஸ்டேஷனுக்கு வராதபடியோ அல்லது ஸ்டேஷனுக்கு வந்த பிறகோ மறைத்துவிடும்படி ஏற்பாடு செய்துவிடு. அவனை வெகு சுலபமாக வேலை தீர்த்துவிடலாம். முடிந்தால் நானும் கூட வருகிறேன். தாமதிக்க வேண்டாம்.
இங்ஙனம்
வீரபத்ரன்
இதுவரை படித்த இத்தனை கடிதங்கள் ஆச்சரியம், வெறுப்பு, அன்பு, கோபம், அலக்ஷியம், பரிகாஸம், ஹாஸ்யம் முதலிய உணர்ச்சிகளைக் கொடுத்தனவேயன்றி இக்கடிதத்தைப் படித்ததும் அவளையறியாது தலை சுற்றியது. பயங்கரமான உணர்ச்சி தோன்றி மார்பு படபடவென்று அடித்துக் கொண்டது. ”இதென்ன கொடுமை! ஆளையாவது வேலை தீர்ப்பதாவது? இன்னதென்றே ஒன்றும் தெரியவில்லையே. நாம் கவரைப் பிரித்துப் பார்த்தது அவருக்குத் தெரிந்தால் கோபிப்பாரோ என்னவோ! இக்கடிதம் விலாசதாருக்குப் போய்ச் சேர்ந்தால் ஏதோ பெரிய அனர்த்தம் விளைந்துவிடும் போலிருக்கிறதே! என்ன செய்வது?” என்று யோசிக்கையில் அவளையறியாது பயத்தினால் ஏதோ சித்திரவதை செய்தது.
இக்கடிதம் ஏதோ பெரிய விபத்தை விளைவிக்கும் கொடிய பாணம் போன்ற கடிதந்தான் என்பது அவளுக்குத் தெரிந்துவிட்டதாகையால் அவள் அதை ஏதோ அசுர தைரியத்துடன் தன் மடிக்குள் சொருகிக் கொண்டாள். வாசலில் சென்ற உத்தமன் வந்திருப்பவருடன் பேசிக்கொண்டே இருந்தான். இதுவரையில் இருந்த உத்ஸாகமோ பரபரப்போ காரணம் தெரியாமல் மறைந்து ஏதோ புதிய வேதனைதான் செய்தது.
13
உத்தமன் வேலைகளை முடித்துக் கொண்டு படுக்கைக்கு வந்தான். சித்ராவின் முகம் ஏதோ மாறுதலை அடைந்திருப்பதை அறிந்த உத்தமன் காரணம் தெரியாமல் மனத்திற்குள்ளேயே சற்று யோசித்தான். ”சித்ரா! இன்னும் தூங்கவில்லையா! ஏன் உன் முகம் ஏதோ ஒரு மாதிரி இருக்கிறது! நான் சாயங்காலமே கவனித்தேன். உடம்பு ஏதாவது சரியில்லையா! எதுவானாலும் நீ பயப்படாமலும் கூச்சமின்றியும் சொல்லு” என்று அன்புடன் அவள் கன்னத்தை வருடியவாறே கேட்டான்.
சித்ராவின் மடியில் கடிதமிருப்பதை அவள் வெகுபாரமாயும் பயங்கரமாயும் எண்ணினாள். இதைக் கணவனிடம் எப்படிச் சொல்வது? என்ன செய்வது? என்று அப்போது நேரில் கேட்டதும் அவனிடமே சொல்லிவிட வேண்டும் என்கிற எண்ணம் உண்டானதால், எழுந்து உட்கார்ந்தாள்.
”முதலில் தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும். உண்மையில் நான் செய்தது குற்றமோ! குற்ற மில்லையோ! அதனால் சில உயிர்களைக் காக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதை நாம் விடக்கூடாது. ஏதோ ஏன் பொழுதுபோக்கிற்கு விளையாட்டாக ஆரம்பித்த ஒரு காரியத்தில் இந்த முக்கியமான விஷயம் கிடைத்துள்ளது” என்று கூறியவாறு மடியில் சொருகியிருந்த கடிதத்தை எடுத்துக் கொடுத்தாள்.
ஏற்கனவே இவள் கடிதங்களைப் படிக்கும் விஷயம் தெரிந்தும் தெரியாதுபோல நடித்தவாறு, ”இதென்ன கடிதம் சித்திரா! உனக்கு வந்ததா… இது வேறு யாருக்கோ அல்லவா வந்திருக்கிறது? அடா அடா! இதை ஏன் நீ பிரித்தாய்?” என்று வியப்புடன் கேட்டான்.
மிகவும் பயந்துவிட்ட சித்திரா, தான் கடிதம் படிக்க ஆரம்பித்ததனால் தன் புத்தி திரும்பியதாயும், கடிதத்தின் மூலம் உலகானுபவம் தனக்குத் தெரிவதாயும், தான் பத்திரிகையில் பார்த்த கட்டுரையை எழுத ஆவலுள்ளவளாயிருப்பதால் அதற்காகவே மேன் மேலும் படித்துவருவதாயும், இக்கடிதம் ஏதோ ஆபத்திருப்பதால் பயமாயிருக்கிறதென்று சகலத்தையும் மடமடவென்று ஒப்பித்துவிட்டாள். உள்ளுக்குள்ளே மனது துடிக்கும் துடிப்பும் பயமும் கண்கள் மூலம் நீர் வடித்து கன்னத்தில் வழிந்து தெரிந்தன.
உத்தமன் அவளை ஆறுதலுடன் பார்த்து, ”சித்ரா! இதற்காகக் கண்ணீர்விடாதே. பிறருக்கு வரும் கடிதத்தை நாம் பார்ப்பது மகா குற்றந்தான். ஆனால் இக்கடிதத்தின் மூலம் நாம் அந்த உயிரைக் காப்பதோடு அத்தகைய துராக்ருத மனிதன் யாரு? யாரிடம் அவன் பழிதீர்க்கப் போகிறான்? என்பதை நாம் ஒருவாறு அறிந்து உதவி செய்யலாம். அழாதே சித்ரா! உன்னுடைய மனம் இத்தனை இளகியது என்றும் பச்சாதாபம் நிறைந்தது என்றும் அறிய எனக்குச் சந்தோஷமாயிருக்கிறது. இக்கடிதத்தை நீ கிழிக்காதே. அப்படியே இருக்கட்டும். கடிதத்தின் வாரிசுதாரர்களுக்கும் அனுப்ப வேண்டாம். இதைப்பற்றி நான் விசாரிக்கிறேன். கடிதங்களே உன்னுடைய மனக்கசப்பை மாற்றி எனக்குப் பேரின்பமளிக்கச் செய்ததால் நான் உன்னைக் கோபிக்கவே இல்லை. உன் மனோ விருப்பப்படியே கட்டுரை எழுத முயற்சி செய்” என்று சமாதானமாயும் மிக்க அன்புடனும் கூறினான்.
மறுதினமே அதிகாலையில் உத்தமன் ஆபீஸ் அறையிலிருக்கையில் கருத்து குட்டையான ஒரு பருத்த மனிதன் கட்டை கட்டையாக நிற்கும் பயங்கரமான மீசையுடன் தபாலாபீஸுக்கு வந்து, ”சார்! என் விலாசத்திற்கு ஏதாவது கடிதமிருக்கிறதா பாருங்கள்” என்றான்.
ஏற்கனவே மனத்தில் வேலை செய்யும் கடிதத்தின் சொந்தக்காரன் இவனாகத்தானிருக்குமோ! என்று ஒரு எண்ணம் மின்னல்போல் தோன்றியது. மனிதனின் முகத்தோற்றமும் குரூரமான பார்வையும் ஏதோ சந்தேகத்தை உண்டாக்கின. அதை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் ”திண்ணைமீது உட்காருங்க சார்! இனிமேல்தான் கட்டை அவிழ்க்கப்போகிறேன். உங்கள் விலாஸம் எது?’’ என்று வினயமாக கேட்டான். ‘‘சோமசுந்தர முதலியார், பச்சமலை கிராமம்’’ என்றதும் உத்தமனுக்கு ஆச்சரியமாகிவிட்டது. தான் நினைத்தது தப்பு. இவன் யாரோ பாவம்! ஸ்வரூபம் இருக்கிற அழகு இதுபோலும் என்று நினைத்தபடியே கடிதத்தைத் தேடினான். ஒரு கல்யாணக் கடிதம் இந்த விலாஸத்திற்கு வந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுடன் அவனிடம் கொடுத்தான்.
வந்த மனிதன் ”நமஸ்காரங்க. நான் போய்வரேன். என் தங்கச்சி மவளுக்குக் கண்ணாளம். இன்னும் கடலாசி வல்லிங்களே, ஒரு வேளை மறந்துகிறந்து பூட்டாங்களா! அல்லது தபால்லே தவறிட்டதா இன்னு நெனைச்சேன். இந்தப் பக்கம் ஒரு வேலையா வந்தேன். நேரேயே கேட்டுகிட்டுப் போவலாம்னு கேட்டேன். வரேனுங்க” என்று கூறியபடியே போய்விட்டான்.
தோற்றத்தினால் மட்டும் எதையுமே நினைக்கக் கூடாது என்கிற தத்துவத்தை அறிந்து வியப்புற்றான். இதுவரையில் கடிதங்கள் சம்பந்தப்பட்டவரையில் அவன் எத்தகைய உணர்ச்சியோ, பயமோ அடைந்ததில்லை. அவைகளைப் பார்க்காததே அதற்கு காரணம். ஏதோ பொழுதுபோக்கிற்காக சித்ரா படிக்க வாரம்பித்ததில் கூட ஒரு துப்பறியும் வேலை கிடைத்து விட்டதையும், ஒரு போராபத்தைத் தடுக்கும் வேலை கிடைத்து விட்டதையும், ஒரு பேராபத்தைத் தடுக்கும் உபகாரமான உபயோகமான காரியம் கிடைத்ததையும் பற்றிச் சந்தோஷமே அடைந்தான். எனினும் இதை வெளியிடாமலேயே ஆபத்தைத் தடுப்பது எப்படி, கடிதத்தை இன்றைய கட்டுகளுடன் கிராமத்துக்கு அனுப்ப வேண்டுமே! என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கையில் ஒரு வைஷ்ணவ பாட்டியம்மாள் வந்து ”ஐயா! காசிப்பட்டு கிராமத்திலே இருக்கும் திருகோகர்ணம் திருவேங்கடதாதா சாரியாருக்குக் கடிதம் ஏதாவது வந்திருக்கா பாருங்கோ” என்றாள்.
உத்தமன் கட்டுகளைக் கிளறி பாட்டியம்மாள் கேட்ட கடிதத்தை எடுத்தான். எல்லாம் நல்லதற்கே! என்கிற பழமொழியை உத்தமன் என்றும் மறக்காதவன். இந்த ஊர் விலாஸத்திற்குத்தான் அவனும் சித்ராவும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் பயங்கர கடிதம் வந்திருக்கிறது என்பது இக்கடித விலாஸத்தைப் பார்த்த உடனே நினைவு வந்ததால் பாட்டியம்மாளை மரியாதையுடன் உட்காரச் செய்து பின், ”பாட்டீ! கடிதம் வந்திருக்கிறது. அவர் உங்கள் மகனா!” என்று கேட்டான்.
பாட்டி, ‘‘என் மகன்தான், அவன் ஊரிலில்லை. ‘அவச்யமான கடிதம் வரும், படித்து விஷயமறியுங்கள்’ என்று சொல்லிவிட்டுப் போனான். சம்பந்தி வீட்டிலிருந்து வரவேண்டும். அதனால் கேட்டேன். எனக்குப் படிக்கத் தெரியாது. தயவுசெய்து படித்துக் காட்டுங்கோ’’.
உத்தமன், ‘‘ஏம் பாட்டீ! உங்கள் கிராமம் ரொம்பப் பெரியதா? பணக்காரர்கள் நிறைய இருக்கிறார்களா? ஊர் நல்ல வசதியா பாட்டீ?’’
கிழவி, ‘‘ஆமாம்! ஊரைப் பார்க்கலே! பிராம்மணா வீடு நாலே நாலுதான். மத்ததெல்லாம் மற்றவா வீடுதான். அதிலும் ஒரு மகானுபாவன் இருக்கான் பாருங்கோ. சோதான்னா சோதாதான். அவனைப் பார்த்தாலே கிராமத்து ஜனங்களுக்கு பயம். அந்த மனிதனைத் தேடிக் கொண்டு கரடுமுரடான வழிகளைத் தாண்டிக் கொண்டு எத்தனை கார்கள் வருகிறது தெரியுமா? அவர்களில் முக்கால்வாசி பேர்கள் சினிமாக்காரர்களாம். சனியன் அதுபோகட்டும். சடிதத்தைப் படியுங்கள்’’.
அப்போது சித்ராவும் அங்கிருந்ததால் தம்பதிகளிருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அந்தப் பார்வையின் ஆழமான கருத்தில் பல ரகஸிய வார்த்தைகள் மவுனமாகவே இருவர் இதயத்திலும் பாய்ந்தன.
உத்தமன், ‘‘ஏன் பாட்டி! அத்தகைய போக்கிரி என்றால் அவனை ஊரார் அடக்காமல் எப்படி சும்மா வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவன் பேரென்ன!’’ என்று கேட்டான்.
பாட்டி, ‘‘கந்தப்பன் என்பது அவன் பேரு. அவனிடம் யாரப்பா எதிரில் போய் பேசமுடியும்? அயோக்யன் என்பதை அறிந்தும் ஒருவராவது அதை எதிரில் சொல்லத் துணியவில்லை. துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதையே நாங்கள் வாழ்க்கையில் அனுஷ்டித்து வருகிறோம். ஊரில் யாருடனும் கூடாதென்பது என் மகனுடைய எண்ணம். அதனால்தான் பேசாமலிருக்கிறான். எனக்கு நேரமாகிறது. ஊருக்குப் போனா முனிசீப்பைப் படிக்கச் சொல்லி விஷயம் தெரிய வேண்டும். படிக்கத் தெரியாத ஜனங்களிலிருந்து பயனேது! சற்று படித்துக்காட்டப்பா’’ என்று கெஞ்சும் பாவனையில் கேட்டாள்.
”சித்ரா! எனக்கு வேலை அவசரமாகவிருக்கிறது. இதை நீயே படித்துக்காட்டு” என்றான் உத்தமன். உடனே சித்ரா படிக்கவாரம்பித்தாள்.
”ஸ்ரீமதே ராமானுஜாய நம!
ஸ்ரீமதித்யாதி எழுந்தருளி இருக்கும் ஸ்வாமியின் தேனே மலரும் திருவடித் தாமரைகளில் அடியேன் சம்மந்தி கோமடம் கிடாம்பி, அழகிய மணவாள தேசிகாச்சாரியார் தண்டன் சமர்ப்பித்த விண்ணப்பம். இவ்விடம் தாஸவர்க்கங்கள் க்ஷேமம். அவ்விடம் நித்திய ததீயாராதனக்ரந்த காலக்ஷேபாதிசங்களுக்கு ஸ்ரீமுகம் க்ருபை செய்தருள பிரார்த்திக்கின்றேன்.’’
இதுவரையில் வைஷ்ணவ பரிபாஷையைக் கரடு முரடான வாசகத்தில் படித்தறியாத சித்ராவுக்கு இதைச் சேர்த்து வாசிக்க வாயில் பதம் சரியாகப் புரளாமல் தத்தித் தடுமாறியும் இடை இடையே சிரித்தவாறும் படித்து ”பாட்டீ! இதென்ன பாஷை. எனக்கொன்றுமே புரியவில்லையே” என்றாள்.
கிழவி: இது ஸ்ரீ வைஷ்ணவ பாஷையடீயம்மா! மெல்ல விஷயத்தைப் படித்துச் சொல்லு. எனக்கு நேரமாகிறது; நான் போகணும் என்றாள். மறுபடியும் சித்ரா படிக்கவாரம்பித்தாள்.
”அடியேனுக்குத் தேவள் எழுதிய ஸ்ரீ முகம் கிடைக்கப்பெற்றுச் சேவித்துக் கொண்டேன். திருக்குடந்தை திருமலாச்சாரியாருடைய திருக்குமாரனான சிரஞ்சீவி திருநாராயணன் தற்போது திருவரங்கத்துக் காலேஜில் படிக்கிறான். பையனின் பரம்பரை குலகோத்திர ஆசாரிய திருவடி சம்பந்தம் அனுஷ்டான வ்யவகாரங்கள் முதலியவற்றை அடியேன் விசாரித்த பிறகே விண்ணப்பித்துக் கொள்கிறேன். லௌகீக விஷயங்களை ஸ்வாமி நேரில் க்ருபை செய்தால் பரிமாறிக் கொள்ளலாம். ஸ்ரீ முகம் ஸாதித்தருள ப்ரார்த்திக்கின்றேன்
இங்ஙனம்
கோமடம் கிடாம்பி
அழகியமணாள தேசிகதாஸன்
‘அப்பாடா!’ என்று ஒரு பெருமூச்சுடன் கடிதத்தை முடித்த சித்ரா கடகடவென்று சிரித்தாள். கிழவியும் கூட சிரித்துக்கொண்டே ”ஒவ்வொரு ஜாதிக்கு ஒவ்வொரு வழக்கம். எங்க ஜாதி வழக்கம் இது. சரி நான் போய் வருகிறேன். நிரம்ப சந்தோஷம்” என்று கூறிச் சென்றாள்.
கிழவி கடிதம் பெற வந்ததில் தங்களுக்கு வேண்டிய விஷயம் கிடைத்தது பற்றி தம்பதிகள் சந்தோஷமும் வியப்பும் அடைந்தார்கள். தபால்கள் அனுப்ப வேண்டிய ரேமாகிவிட்டதால் ‘இக்கடிதத்தை அனுப்புவதா! கிழித்தெறிந்து விடுவதா!’ என்கிற குழப்பம் உத்தமன் மனதில் பலமாக வேலை செய்தது.
14
”சித்ரா! நான் வெளியில் போய்வருகிறேன். நீ தைரியமாய் பயப்படாமலிரு. ஏனென்றால், முடிந்தால்தான் இரவு வருவேன். இல்லையேல் காலையில்தான் வருவேன். உன் துணைக்கு வீடு பெருக்கும் வேலைக்காரியை இருக்கச் சொல்லி இருக்கிறேன்” என்றான்.
சித்ரா, ‘‘அக்கடிதம் விஷயமாக நீங்கள்…’’
உத்தமன்,‘‘உஸ்… உரக்கப் பேசாதே சித்ரா!’’ என்று ரகஸியமாகச் சொல்லும்போது, ”சார்!’’ என்ற குரல் கேட்டு எழுந்து வந்து பார்த்தான். வந்திருப்பது யாரென்று தெரியாததால் மரியாதை செய்து உட்காரும்படி கூறி, ‘’என்ன வேண்டும்?’’ என்று வினயமாகக் கேட்டான்.
வந்தவர், ‘‘எனக்கு தபால் தலைகள், கவர்கள் எதுவும் வேண்டாம். நீங்கள்தான் வேண்டும்’’ என்றார்.
உத்தமனுக்கு தூக்கிவாரிப்போட்டது. ‘ஒருவேளை கிழவி சொல்லிய அந்த மனிதனாகவிருக்குமோ!’ என்று சற்று அச்சத்துடன் பார்த்தான்.
வந்த மனிதர் கடகடவென்று சிரித்தவாறு ”என்ன சார் விழிக்கிறீர்கள்? மரியாதையாய் என்னோடு கூட வருகிறீர்களா அல்லது…’’ என்று பேசுவதைக் கேட்ட சித்ராவுக்குக் குடல் நடுங்கிப் பதறியது. திடீரென்று ஒரு மனிதன் இப்படி வந்து அழைப்பதைப் பார்க்க யாருக்குத்தான் வியப்பாக இருக்காது? அதோடு முன்பின் அறியாதவனாகவிருக்கிறான். ஏற்கனவே அனாவசியமான கடிதத்தினால் ஒரு குழப்பம் வாட்டுகிறது. கிழவி வேறு காலையில் அந்த மனிதனைப் பற்றி விமரிசனம் செய்திருக்கிறாள். இத்தனை பயத்துடன் தம்பதிகள் பதைபதைத்து நிற்பதை முகத் தோற்றத்தினால் அறிந்த அம்மனிதர் ”சார்! இப்படிப்பட்ட பயந்தாங்கொள்ளியை நான் பார்த்ததே இல்லை. நீங்கள்தானா ஒரு பக்கா பேர்வழியைப் பிடித்துத் தரப்போகும் சூரப்புலி? ஐயோ பாவம்! பயப்படவேண்டாம். இதோ இச்சீட்டைப் பாருங்கள். நான் யார் என்பது தெரியும்” என்று ஒரு சீட்டை நீட்டினார்.
”போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏகாம்பரம்” என்று அச்சடித்திருந்ததைப் பார்த்ததும் முகத்தில் அசடு வழியச் சிரித்தவாறு உத்தமன், ”சார்… சார்… தாங்கள் துப்பறியும் இலாகாவைச் சேர்ந்தவர்கள் என்றும், துப்பறியும் ராஜாராம் நாயுடுவிடம் பழகுகிறவர்கள் என்றும் கேள்விபட்டிருக்கிறேன். அந்தத் திறமையை இப்போது எங்களிடமே காட்டி விட்டீர்கள்” என்று சிரித்தான்.
”சார்! சந்தடி செய்யாது கிளம்புங்கள். போவோம், அந்த இடத்திற்கு. முன் ஏற்பாடாக எல்லாம் தயார் செய்து விட்டேன். அம்மா! பயப்பட வேண்டாம். உங்கள் கணவருக்கு எத்தகைய ஆபத்துமின்றி பார்த்துக் கொள்கிறேன். அவர் என்னை நேரே அங்கு வரும்படித்தான் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அவர் இங்கிருந்துத் தனியாக வந்தால் அந்த துஷ்டர்களால் ஏதாவது அபாயம் வருமோ என்ற பயத்தினால் நானே வந்தேன். தைரியமாயிருங்கள்’’ என்று சித்ராவுக்கு தைரியம் கூறிவிட்டு உத்தமனை அழைத்துச் சென்றார்.
சித்ராவுக்கு மட்டும் உள்ளுக்குள் சற்று திக்குதிக்கு என்று பயமாகவே இருந்தது. சற்று நேரம் எதன்மீதும் மனது செல்லாது ஏதோ பிரமை பிடித்தது போல் உட்கார்ந்திருந்தாள். மறுபடியும் மேஜைமீது தவங்கிடக்கும் கடிதங்கள் இவளை அழைத்ததும் அதை அன்புடன் எடுத்து படிக்கலானாள்…
”அருமை நண்பன் அம்பலவாணனுக்கு உபயக்ஷேமங்கள்.
நீ கிராமத்திற்குச் சென்று சரியாக ஒரு மாதமாகிறது. இந்த ஒரு மாத காலத்தில் டாக்டரின் புத்திமதிப்படிக்கு நடந்துகொண்டு சிறிது உடம்பு தேறியிருக்கும் என்று நம்புகிறேன். நான் அடிக்கடி கடிதம் எழுத வேண்டுமென்று நீ கட்டாயப்படுத்துவதால் எழுதுகிறேன். உன்னுடைய பதில் கடிதமோ, பல கேள்விகளை பாணம் போல் தொடுத்து விடுத்திருப்பதால் அவைகளுக்கெல்லாம் பதில் எழுத எனக்கு நேரமே போதவில்லை. ஏதோ சிலவற்றிற்கு எழுதுகிறேன். ‘ஹாஸ்யம் என்பது எத்தனை வழிகளில் இருக்கிறது? எப்படி எப்படி அவைகளை உபயோகப்படுத்தலாம்?’ என்று கேட்டிருக்கிறாய். இதைப் பற்றி நாம் நேரில் பேசினால் மணிக்கணக்காகப் பேசி பழக முடியும். இவைகளை ஒரு குறித்த அளவில் கடிதத்தில் எழுதுவதென்றால் மிக மிக சிரமமாக இருக்கிறது. இருப்பினும் உன்னுடைய விருப்பத்தை மறுக்க நான் பிரியப்படவில்லை.
ஹாஸ்யம் எனப்படுவது ஒரே ரஸமாயினும் அவைகளை அனுபவிக்கும் விதங்கள் பலப்பல வழிகளில் இருக்கின்றன. அதாவது, பார்க்கும் ஹாஸ்யம், படிக்கும் ஹாஸ்யம், கேட்கும் ஹாஸ்யம், நடிக்கும் ஹாஸ்யம், சித்திரத்தில் ஹாஸ்யம், நடையில் ஹாஸ்யம், ஒருவர் செய்ததை, பேசியதை, பாடியதை அப்படியே (இமிடேஷன்) தான் செய்து காட்டுவது ஒரு தினுசு ஹாஸ்யம். இத்தனைக்கும் முக்யமானது – மனிதனின் புத்தி கூர்மையும் சிறந்த அறிவும் அனுபவமும் கூடி நிறைந்திருந்தால்தான் இவைகளைச் சுவைக்க முடியும். செய்ய முடியும். ஹாஸ்யம் என்ற கட்டத்தை இத்தனை விதமான அஸ்திவாரம் போட்டுத்தான் எழுப்ப வேண்டும்.
நான் இப்போது உனக்கு ஒரே ஒரு ஹாஸ்யத்தைத்தான் எழுதப்போகிறேன்; அதாவது அச்சாபீஸ் ஹாஸ்யம் என்பதுதான். அச்சுக் கோர்க்கும் வினோதத்தில் உண்டாகும் ஹாஸ்யம் தங்களை அறியாது உண்டாகும் ஹாஸ்யமாகும். அதைப் பிறர் திரும்பிப் பார்க்கும் போதுதான் அதன் உண்மை ஸ்வரூபம் விளங்கி குலுங்கக் சிரிக்க வைக்கிறது.
அச்சுக் கோர்ப்பவரிடம் நாம் சரியாக பதங்களை எழுதி கொடுத்து விடுகிறோம். அதையவர்கள் ஏதோ மெஷின் போல் எழுத்துக்கு எழுத்து பார்த்து அடுக்கிக் கொண்டு போவார்கள். ஹார்மோனியம் வாசிக்கின்றவர்களின் விரல்கள் எப்படி அந்தந்த ஸ்வரஸ்தானத்தை தானாகவே அழுத்திச் சப்தத்தை எழுப்புகிறதோ அப்படியே இவர்களுடைய பழகிய கைகள் அந்தந்த எழுத்துள்ள அறைகளில் நடனம் செய்து ஜதிஸ்வரங்கம் பாடி நர்த்தனம் செய்யும். அப்படி பழகிய கைகளும் தடம் மாறி ஒன்றுக்கொன்று கை புரண்டு வேறு எழுத்துக்களைக் கோர்ப்பதுண்டு. அவைகளில்தான் ரஸமான ஹாஸ்யம் பதுங்கி கிடந்து தாண்டவமாடுகிறது. இதே வேலையை சற்று கற்றுக்குட்டிகள் செய்தாலோ சொல்லவே வேண்டாம். ப்ரூஃப் பார்க்கிறவர்கள் மூளை கலங்கித்தான் போய்விடும். நான் அச்சாபீஸில் வேலையாயிருப்பதால் இந்த அழகிய ஹாஸ்யத்தை உனக்கு எழுதிகிறேன். நான் ஒன்று எழுதிக் கொடுத்தேன். அது அச்சுக்கோர்த்து வந்ததன் ஹாஸ்யத்தை பாரு…
”ஆத்மநேய அன்பர்களுக்கு, சந்தானம் தாங்கள் வெடித்த சமைப்புத்தாள் கிடைத்தது. மகாமாட்டிற்கு வரமுயலாமைக்கு மன்னிக்கவும். மகாநாடு சிக்க வெள்ளி மரமாக தடைபெற எல்லாம் கொல்ல பறைவனை தாண்டுகிறேன்.’’
நண்பா! ஒரே ஒரு சிறிய கடித்திலுள்ள ஹாஸ்யமே இப்படி என்றால், இன்னும் மேலே படித்துப் பாரு. எத்தனை தமாஷ்கள் இருக்கின்றன என்பதைப் பார்த்து நன்றாகச் சிரிக்கலாம். சிரிப்பே பரம அவுஷதமல்லவா! ஆகையால்தான் எழுதுகிறேன். மேலே பார்த்த கடிதத்தின் வாசகம் என்ன தெரியுமா!
”ஆத்மநேய அன்பர்களே! வந்தனம். தாங்கள் விடுத்த அழைப்புத்தாள் கிடைத்தது. மகாநாட்டிற்கு வர இயலாமைக்கு மன்னிக்கவும். மகாநாடு மிக்க வெற்றிகரமாக நடைபெற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்”….
இவ்வளவுதானா? இன்னும் பாரு.
தமிழ்காட்டு நாய் அகமாய் இகழும் வற்றலே. உமது தாசி மொழிபல எனக்கு மிகவும் உச்சவத்தைக் கெடுத்தது. உமது கடிதத்தை நான் புதயல் கிடைத்தப் பிணம் போல நினைக்கிறேன். உலகத்தில், மாக்கல் எமனை விரும்புவார்கல்? புழுபுதர் படழளைத்தான். எம்பெருவாளுக்கு. நல்ல ருசியுள்ள பல கிழங்களை வாந்தி நைவேத்தியம் செய்தால், புள்ளியம் உண்டு.
மாமனார் காட்டில் எரியும் விபசாரம் கொல்ல முடியாத விஷயமாகும். மங்கணபாத்யம் விழுங்க கருமணம் கறப்பாக நடந்தது. ஏராதமானவர்கல். விநயம் பெய்தார்கள். தம்சதிகாளை உசிர் உதித்தார்கள். அரசுகள் மழுங்கினார்கள். சங்கீத நாணி கடை திறந்தது போன்று தன் சனிய உரலால் காகம் செய்த உ£கை எழுதிமடியாது” இதன் சரியான வாசகமாவது…
தமிழ்நாட்டுத் தாயகமாய்த் திகழும் வள்ளலே! உமது ஆசிமொழிகள் எனக்கு மிகவும் உத்ஸாகத்தைக் கொடுத்தன. உமது கடிதத்தை நான் புதையல் கிடைத்த பணம் போல் நினைக்கிறேன். உலகத்தில் மக்கள் எவனை விரும்புவார்கள்? முழுமுதற் கடவுளைத்தான். எம்பெருமானுக்கு நல்ல ருசியுள்ள பல பழங்களை வாங்கி நைவேத்தியம் செய்தால் புண்ணியமுண்டு.
மாமனார் வீட்டில் புரியும் உபசாரம் சொல்ல முடியாத விதமாகும். மங்கள வாத்தியம் முழங்க திருமணம் சிறப்பாக நடந்தது. ஏராளமானவர்கள் விஜயம் செய்து பரிசுகள் வழங்கினார்கள். சங்கீதராணி மடைதிறந்தது போல் தனது இனிய குரலில் கானம் செய்த அழகை எழுதி முடியாது.
நண்பா! இது போன்ற ஹாஸ்யச் சுவையை எழுதிக் கொண்டே போனால் ஒரு புத்தகமே எழுதித் தள்ளலாம். ஆனால் அதை விதியே என்று பொறுமையுடன் படித்துச் சிரிக்கத்தான் ஆள் வேண்டும். ஆகையால் மற்றொரு கடிதத்தில் வேறுவிதமான ஹாஸ்யத்தை எழுதுகிறேன்.
வேளாவேளைக்குச் சரியான புஷ்டியுள்ள ஆகாரங்களைச் சாப்பிடு. மருந்துகளைத் தவறாது சாப்பிடு. முடிந்தவரையில் உலாவு. நல்ல புத்தகங்களைப் படி. சிரமமில்லாதிருந்தால் ஏதாவது கதை கட்டுரை எழுது. நான் முடிந்தால் வருகிறேன்.
உன் ப்ரிய நேசன்
உமாபதி.
கலங்கித் தவிக்கும் மனத்திற்கு ஆறுதலளித்ததால் அதைப் படித்து சிரித்தாள்.
இவளுக்குத் துணை படுத்துள்ள கிழவி. பல்லில்லாதவள். இரும்பு உரலில் வெத்திலையை நெருக்கி வாயில் அடக்கிக் கொண்டு புகையிலையுடன் ஸ்வாரஸ்யமாய் மென்று உமிழ்ந்து பின்பு சித்ராவைக் கவனித்தாள். அவள் படித்துச் சிரிப்பதைக் கண்டு, ”ஏம்மா! தூக்கம் வரலே… இன்னா சிரிக்கிரே… படுத்துக்கோம்மா. இந்தப் பக்கத்துலேல்லாம் இப்ப கொஞ்ச நாளாய்த் திருட்டு பயம் மிகவும் அதிகமாயிருக்கிறதாம். இந்த வீட்டில் நாம் இரண்டு பேரேதான் இருக்கிறோம்னு தெரிஞ்சு எவனாச்சும் உள்ளே புகுந்துவிடப் போறானே என்று பயமாக இருக்குது. விளக்கே அவிச்சிட்டுப் படுத்துடு. அப்போ ஐயா ஊட்டுலேதான் இருக்கிறாருன்னு நெனச்சுக்குவாங்க” என்று அவள் திடீரென்று ஒரு கலக்கு கலக்கும் பய புராணத்தைச் சொன்னதும் சித்ராவுக்கு முதலில் தூக்கிவாரிப் போட்டது.
சிறிது நேரம் மவுனமாகவே இருந்தாள். பிறகு தைரியத்தை விடாமல், ”கிழவீ! வீண் காபுரா பண்ணாதே. ஐயா மாடியில தூங்கறார். எனக்கு இங்கே மிகவும் அவசரமான வேலை இருக்கிறதால் நான் ராத்திரி முழுதும் தூங்காதுதான் வேலை செய்யப் போகிறேன். எந்தத் திருடனும் இங்கு வரமாட்டான். அப்படி வந்தால் என்னிடம் துப்பாக்கி இருக்கிறது. ஒரே வெடி… அவ்வளவுதான். நீ தொணதொணவென்று பேசி என் வேலையைக் கெடுக்காதே. தெரிந்ததா! தூக்கம் வரவில்லை என்றால் ராமா கிருஷ்ணான்னு ஜபம் பண்ணிக் கொண்டே படுத்திரு” என்று சற்று அதிகார த்வனியுடன் உரக்கக் கூறிவிட்டு மீண்டும் படிக்கவாரம்பித்தாள். எனினும் அவள் மனத்திற்குள் ஏதேதோ விதமான பயம் வேலை செய்து கொண்டிருந்தது.
15
தன் கடமையை வெகுவெகு கிரமமாக நடத்திக் கொண்டு போகும் கடிகாரம் மூன்று முறை அலறிய போதுதான் சித்ரா திடுக்கிட்டுக் கண்விழித்தாள். விளக்கு அப்படியே எரிந்து கொண்டிருந்தது. தபாலில் வந்த புத்தகம் எதையோ படித்துக் கொண்டே, உட்கார்ந்தபடியே மேஜைமீது சாய்ந்து தூங்கிவிட்டாள். பாவம்! எழுந்ததும் ”ஐயோ! மணி மூன்றா அடித்து விட்டது? இன்னும் அவர் வரவில்லையே! ஒருவிதமான விபத்தும் இல்லாதிருக்குமா? பின்னை ஏன் இத்தனை நேரம்!” என்று கலங்கியபடி ஒன்றும் தோன்றாது உட்கார்ந்திருந்தாள்.
தூக்கம் அவளையறியாது முன்பு ஸ்வீகரித்தது. இப்போது அவள் அழைத்தும் காத தூரத்திற்கப்பால் போய் விட்டது. குழம்பி இருந்த தருணம் ஒரு காற்றடித்த வேகத்தில் கடிதங்கள் பறந்து இவள் மீது விழுந்தன. அவைகளை எடுத்து வைக்கப்போகையில் ஒரு கடிதத்தில், ‘நான்காந்தாரம்… என்று… கவலை வேண்டாம்…’ என்கிற வரிகள் கண்களைக் குத்தியதும் கண்கள் தாமாகவே அதைப் படிக்கவாரம்பித்தன.
”அன்புள்ள ஜயா! உபயக்ஷேமங்கள்.
தங்களுக்கு விவாக விஷயமாக ஏதோ என் சகாயம் வேண்டும் என்று கூறியதாகக் கேள்விப்பட்டேன். நான்காந்தாரமாகப் பெண்ணைக் கொடுப்பார்களா, மாட்டார்களா என்று வேறு தாங்கள் பயப்படுவதாகவும் கேள்விப்பட்டேன். அந்த விஷயத்தில் தங்களுக்குக் கவலை என்பது வேண்டவே வேண்டாம். பனஞ்சாவடி கிராமத்தில் பஞ்சநதம் சாஸ்திரிகளுக்கு 50 வயதுக்கு மேலாகிவிட்டது. அவருடைய கிரகசாரம் மனைவிகள் ஒருவர் பின் ஒருவராக நால்வரும் 50 வயதுக்குள் மடிந்தார்கள். ஐந்தாவதாக ஒரு சரியான பெண்ணைப் பார்த்து நானே கல்யாணத்தை முடித்து வைத்தேன். அவர்கள் வெகு அன்யோன்யமாகவே இருக்கிறார்கள். அதுபோல் தாங்களும் ஆனந்தமாக மணந்து சுகப்படலாம். கவலையே வேண்டாம். பூவாம் பேட்டையில் ஒரு பெண் இருக்கிறாள். வயது 16தான் ஆகிறது. அதை இப்போதே முடித்து விடலாம். தாங்கள் அவசியம் என்னை நேரில் வந்து பார்க்கவும். கல்யாணத்தைப் பற்றிய எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம்
இங்ஙனம்
கங்காதர புரோகிதன்
இதைப் படித்ததும் எரிச்சல் எரிச்சலாக வந்தது. ”கிழப் பிணத்திற்குக் கல்யாணமாம், கர்மகதியாம். ஆண்களுக்கு ஒரு சட்டம், பெண்களுக்கு ஒரு சட்டம் போலும். எத்தனை மனைவிகள் செத்தாலும் மறுபடியும் மறுபடியும் விவாகத்தைச் செய்து கொண்டே இருக்கலாமாம். உலகமறியாத வயதில் விதவையாகிவிட்டாலும் அவள் அப்படியே சாகவேண்டுமாம். என் கையில் அதிகாரமிருக்குமானால் இந்தக் கிழங்களை எல்லாம் பிடித்து சிறையிலேயே அடைத்து விடுவேன். கிழப்பாடைகளுக்கு கல்யாணமாம்” என்று வாய்விட்டே முணுமுணுத்தாள்.
”ஸ்ரீராமஜெயம்.
நான் சௌக்கியம். நீ சவுக்கியமா? பக்கத்தாத்து மாமி செத்துப்போயிட்டா. எதித்தாத்து எச்சம்மாவுக்குக் கல்யாணமாம். தம்பி பள்ளிக்கூடம் போறான். தங்கச்சி சமத்தா விளையாடறா. நானும் படிக்கிறேன். ஆத்துலே குடி இருக்கிறாவா சவுக்யம். அங்கே எல்லாரும் சவுக்கியமா? எனக்கு தீபாவளிக்கு கதர் பாவாடை வாங்கினா. உனக்கு வாங்கினாளா?
செல்லம்
குழந்தைகளின் உள்ளம் போலவே அவர்களின் எழுத்தும் இருப்பது கண்டு சிறுநகை பூத்தபடியே மற்றொன்றுக்குத் தாவினாள். அது ஒரு பத்திரிகை ஆபீஸுக்கு அனுப்பியுள்ள சிறுகதையின் எழுத்துப் பிரதி. அதை வெகு ஆவலுடன் படித்தாள். அக்கதையே முற்றிலும் கடிதங்களின் மூலமாகவே எழுதப்பட்டிருப்பதைப் பார்த்து வியப்புடன் கட்டுரை எழுதுவதற்கு இதுவும் ஒரு ஆதாரமாகத் தோன்றியதால் திரும்பத் திரும்பப் படித்தாள்.
நீச்சல் தெரியாதவர்கள் கூட தண்ணீரில் விழுந்து விட்டால் கையில் அகப்படும் துரும்பைக்கூடப் பிடித்துக் கொண்டு தட்டுத்தடுமாறி நீந்திக் கரையேற முயற்சிப்பது போல், எழுத வேண்டும் என்கிற ஆர்வம் மட்டும் மனத்தில் உண்டாகிவிட்டால் எதைப் பார்த்தாலும், எதைப் படித்தாலும், எதைக் கேட்டாலும், எதைப்பற்றி சிந்தித்தாலும் அவைகளைக் கொண்டு கற்பனைச் சோலைகள் அமைக்கவே மனம் தாவி நிற்கும். அதையே சதா நாடி அலையும். இது பிரத்யட்ச அனுபவம். அதே போல் சித்ராவின் ஆசையின் வேகம் அதிகரித்தது.
இதற்குள் மணி 5 முறை அலறியதும் அவளுடைய எண்ணம் குபீர் என்று கணவன்மீது பாய்ந்தது. ”பொழுது விடியும் சமயமாகிவிட்டதே!” என்ற கவலையுடன் வீதிப்பக்கம் எட்டிப் பார்த்தாள். துணை படுத்திருந்த கிழவி டொக்கு, டொக்கு என்று வெத்திலை நொறுக்கிக் கொண்டே ‘‘ஏம்மா! ராவு பூரா தூங்கலியா!’’ என்றாள்.
அதே சமயம், வாசல் கதவைத் தட்டும் சப்தமும் நாலைந்து பேர்கள் பேசுங் குரலும் கேட்டு, சற்று அச்சத்துடனேயே திறந்து பார்த்தாள். தன் கணவன், தன் அத்தையின் மகன், இரவு வந்த இன்ஸ்பெக்டர், இன்னும் சிலர் இருக்கக் கண்டு வியப்புடனும் தன் கணவன் சவுக்கியமாக வந்ததைப் பற்றிய சந்தோஷத்துடனும் உள்ளே நகர்ந்து நின்றபடி… ”அப்பாடா அது மட்டும் வந்து சேர்ந்தீர்களே!” என்று தன் ஆவலைத் தெரிவித்தாள்.
உத்தமன், சும்மாவா வந்து சேர்ந்தோம்! உன் அத்தானின் உயிரையே காப்பாற்றி அழைத்து வந்தோம். கடிதத்தில் குறித்திருந்த பேர்வழி ரேஷன் ஆபீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீமான் சிதம்பரம் அவர்களேதான். வேறு யாருமில்லை. காளிந்தி நதி மடுவில் வெகுகாலமாக காளிந்தி என்கிற கொடிய விஷப்பாம்பு உபத்திரவம் செய்து கொண்டிருந்ததாம். ஸ்ரீ க்ருஷ்ணன் அவதாரம் செய்து அந்த துஷ்ட நாகத்தை அடக்கி அதன் மேலேறி நர்த்தனம் செய்ததாகப் புராணத்தில் படிக்கிறோம். அதை இப்பொழுது பிரத்யட்சமாக உன் அத்தான் கலியுகத்தில் நடத்திக் காட்டிவிட்டார். அந்த துஷ்டனிடம் அணுகவே கிராமத்து ஜனங்கள் பயந்து கொண்டு தவித்ததை அந்த பாட்டியம்மாள் சொன்னாளல்லவா? அத்தகைய மதோன்மத்தனான ராக்ஷஸனைப் பிடித்து லாக்கப்பில் போட்டாயிற்று!” என்று மடமடவென்று ஒப்பித்தான்.
சித்ராவுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. ”என்ன! என்ன! அவனைப் பிடித்தாயிற்றா… அத்தானை எதற்காக அவன் கொல்ல முயன்றான்? அத்தான்! அவனுக்கும் உனக்கும் என்ன சண்டை?” என்று பரபரப்புடன் கேட்டாள்.
சிதம்பரம்: ‘‘அந்த மடையன் யாரோ! எனக்குத் தெரியாது. அவன் மகாபோக்கிரி என்பது மட்டுமிருந்தால் அதொரு வகை. கள்ளமார்க்கெட்டு வியாபாரத்தை வெகு மும்முரமாகச் செய்து வந்தான். அதை நான் கண்டுபிடித்து அவனுக்குச் சரியானபடி தீட்டி வைத்தேன். அந்த ஆத்திரத்தில் அவன் என்னையே ஒழிக்க ஏற்பாடு செய்ததை பகவான்தான் உங்கள் மூலம் தடுத்து உதவினார்’’.
உத்தமன்: ‘‘சித்ரா! இந்த கேஸின் புகழ் உனக்கே சொந்தம். நீதானே ஆற்றங்கரையில் யாரோ பேசிக் கொண்டிருந்ததாக என்னிடம் சொன்னாய். நான் மற்ற ஏற்பாடுகளைச் செய்தேன். அத்தானைக் காப்பாற்றும் பொறுப்பு மாமன் மகளுடையதாயிற்று’’ என்று தானே முன்கூட்டி சித்ராவை கண்களால் எச்சரித்துப் பேசினான்.
மகாயூகசாலியாகிய சித்ரா உடனே புரிந்து கொண்டாள். கடிதத்தின் மூலம் இந்த விஷயத்தை அறிந்ததாக எங்கே நாம் சொல்லிவிடப் போகிறேமோ! என்கிற முன்யோசனையுடன் கூறியதைக் கேட்டு உள்ளுக்குள் மகத்தான சந்தோஷத்தையடைந்தது. ”ஆமாமாம். அந்தப் பெருமை மட்டுந்தானா? நீங்கள் என்னை ஆற்றங்கரைக்கு உலாவ அழைத்துச் சென்றதனால்தான் இந்த ரகஸியத்தை நான் அறிய முடிந்தது? அச்சமயம் ஒரு சினேகிதர் உங்களை மடக்கி பேசிக் கொண்டே சிறிது தூரம் போய்விட்டதால் இந்த ரகஸியத்தை நான் அறிய நேர்ந்தது. அதுவும் எனக்கு ஆங்கிலம் தெரியாது என்கிற இறுமாப்புடன் யாரோ இருவர் ஒரு மரத்து மறைவில் பேசிக்கொண்டதை நான் புரிந்து கொள்ளும் வசதி உண்டாகியது. நல்லவேளையாக எனக்கு ஆங்கிலம் தெரிந்திருந்ததால் இந்த பேராபத்தைத் தீர்க்க முடிந்தது. எல்லாம் பகவானின் அருள்தான்” என்று கூறிவிட்டு காப்பி தயாரிக்க ஓடினாள். தான் ஆராய்ச்சி செய்து எழுத நினைத்த கட்டுரைக்கு இதுவும் ஒரு முக்கியமான ஆதாரமாகக் கிடைத்ததைக் கண்டு பூரித்தாள். அந்த சந்தோஷமே அவளுக்கு ஒரு அபூர்வ உணர்ச்சியை அளித்தது. உத்தமன் வந்தவர்களுடனே பேசிக்கொண்டே வெளியே சென்றதும் சித்ரா வழக்கம்போல் ஒரு கடிதத்தைப் படிக்கவாரம்பித்தாள்.
”அன்புள்ள ராதாவுக்கு உபயக்ஷேமங்கள்.
நீ அனுப்பிய வார, மாதப் பத்திரிகைகளை எல்லாம் படித்தேன். எனக்கென்னவோ அறிவு கிடையாது. ஒரு வரிகூட அழகாக எழுதத் தெரியாது. கற்பனை கிடையாது. ஏன்? கடிதங்கூட அழகாக எழுதத் தெரியாத மொத்துதான். எனினும், கட்டிய வீட்டிற்கு பணிக்கை சொல்வதுபோலும் செய்த சமையலில் குற்றங்கூறுவது போலும், படித்த கட்டுரைகளில், சிறுகதைகளில் குற்றங்குறைகள் சொல்வதற்கு மட்டும் எனக்குத் தெரிந்திருக்கிறது. இக்காலம் சிறுகதையின் சகாப்தமாக இருப்பது உண்மைதான். சிறுகதை என்கிற பெயரில் பலசகோதரிகள் சகோதரர்கள் வெள்ளைக் காகிதத்தைக் கருப்புக் காகிதமாக்கி இருக்கிறார்கள் என்றுதான் நான் சொல்லுவேன். நீ அனுப்பிய அத்தனை பத்திரிகைகளில் நான் படித்த சிறுகதைகளில் சிலதுதான் என் உள்ளத்தைக் கொள்ளைகொண்டது. மற்றவைகளில் சிலவற்றை முதல் இரண்டு பாராக்கள் கூட படிக்கவில்லை. சிலதை பல்லைக் கடித்துக் கொண்டு படித்தேன். என்ன கதைகள் வேண்டியிருக்கிறது? திரும்பத்திரும்ப புளித்த, உளுத்துப்போன பழைய கருத்து பலபேர் எழுதித் தேய்ந்துபோன கருத்துக்களையேதான் அனேகர் எழுதியிருக்கிறார்கள்.
ஒருத்தன் ஒருத்தியைக் காதலிப்பது, காதல் கைகூடாது போவது, காதலி உடனே வாத்தியார் வேலைக்குப் படிக்கக் கிளம்புவது… வரதக்ஷணையின் கொடுமையினாலோ மற்ற எந்தக் காரணத்தினாலோ மனைவியைத் தள்ளிவிடுவது, அவள் உடனே டாக்டருக்குப் படிக்கக் கிளம்பிவிடுவது, கணவனுக்கோ அவனைச் சேர்ந்தவர்களுக்கோ இவளே வைத்தியம் செய்வது… இது போலவே எத்தனைபேர் எழுதுவது? அதுபோனால் தேசசேவை, சத்தியாக்ரகம், ஜெயிலுக்குப் போய்வருவது… இளையாள் மூத்தாள் குழந்தைகளைப் படுத்துவது, புருஷன் நடுங்குவது, தோப்புக்கரணம் போடுவது… கல்யாணத்திற்குப் பணமின்றி கடன் வாங்கிப் பிறகு அதனால் தற்கொலை புரிவது… எல்லாவற்றையும் விட விபரீதம் – காதலிப்பவர்கள் காதல் கைகூடாவிட்டால் ஓடிவிடுவதாம். பிறகு அல்லாடுவதாம். நாகரீகத் தடபுடலில் திளைவது. அதே உச்சாணிக் கிளையில் கதை நர்த்தனமாடுவது.
அப்பப்பா!.. ராதா! எனக்கிந்தமாதிரி தொண தொணவென்று வந்து விஷயமே வருவது – பிடிக்கவில்லை… உலகத்தில் இருப்பவைகளைத் தானே எழுத வேண்டும் என்று நீ கேட்கலாம். எழுதுவதற்கு விஷயம் அனந்தம் இருக்கிறது. அதை காலதேச வர்த்தமானத்தை அனுசரித்து எந்தக் காலத்தில் மக்கள் எதை விரும்புகிறார்கள் என்ற நோக்கத்தையறிந்து அழகுடன் விறுவிறுப்பாக ஜீவகளை ததும்ப துடிக்கத் துடிக்க எழுதினால், அதன் சுவை வேறுதான். பழைய விஷயத்தைக்கூட புதிய மெருகிட்டு அழகோவியமாக எழுதலாம் என்பதுதான் என் துணிபு. ஆகையால் நான் ஏதோ குறைகூறுவதாக எண்ணாதே. உலகம் பழைய உலகந்தான். ஆனால் அது புத்தம்புதிய அலைமோதும் இன்பச் சரக்குளைத்தான் தேடியலைகிறது. பேனா பிடிக்கும் ஒவ்வொருவரும் முதலில் இதை நினைத்துப் பார்க்க வேண்டும். பக்தி, கற்பு, பெரியோரிடம் மதிப்பு, புராதன கொள்கைகளின் சிறந்த லட்சியத்தில் அன்பும் ஆர்வமும், சிலசில மாறுதல்கள் இருப்பினும் பழமையிலுள்ள உண்மைகளைப் பாராட்டல், இதிகாஸம், புராணம் முதலிய நூல்களின் மதிப்பு, சாஸ்திரத்தில் நம்பிக்கை, சத்தியத்தின் உன்னதம்… முதலிய உயர்ந்த விஷயங்களை எந்தக் கதையிலும் ஜீவநாடியாக ஓடவிட்டு எழுதுங்கதைதான் என்றும் சாகாவரம் பெற்று பிரகாசிக்குமேயன்றி, நாகரீகத்தில் தோய்ந்த ஒருத்தி, சாஸ்திரங்களை எதிர்த்து நின்று சீர்திருத்தம் செய்தாள் என்று எழுதி இருக்கும் கதை எனக்கு அடியோடு பிடிக்கவில்லை. நான் ஒரு கர்நாடகம், கட்டுப்பெட்டி. ஆகையால் நான் பழைய உலகத்தின் கொள்கையைத்தான் ஆதரிப்பேன். காலத்தின் அவசியத்தையும் அவசரத்தையும் உத்தேசித்து சில சீர்திருத்தமாறுதல்களையும் வரவேற்பேன். இவைகளைப் படித்து விட்டு என் அபிப்ராயத்தை எழுதுகிறேன். கோபிக்காதே. முக்கியமாக நீ பெற்றோருக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக நட்பு கொள்வதே தப்பு. அதிலும் அவனுடன் ஓடிவிடுவது இன்னும் மகத்தான குற்றம். அப்படி ஓடிய கழுதையை தாய் தகப்பனே திருப்பி அழைத்து வைத்துக் குலாவி, பேரனை முத்தமிடுவதாக எழுதியிருப்பது எனக்கு எரிச்சலே வந்தது. இனிமேல் இப்படி வெள்ளைக்கார நாகரீகத் தீயில் மூழ்கி அந்த பாஷைகளில் உள்ளதைப் படித்து அதன் நிழல்போல் எழுதாதே. நம் நாட்டுக்கும் சமூகத்திற்கும் ஏற்றமுறையில் நீதியும் பக்தியும் தர்மமும் ததும்ப எழுதினால் விருத்திக்கு வர ஏது உண்டாகும். இந்த நிலையில் போனால் சீக்கிரம் பேனாவுக்கு லீவுதான் கொடுக்க வேண்டிவரும். என்மீது கோபிக்காதே.
உன் ப்ரிய,
பங்கஜம்
இக்கடிதத்தைப் படித்ததும் சித்ராவுக்கு உண்டாகிய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ”கடிதமா இது!.. கட்டுரை போலல்லவா இருக்கிறது? தடி எடுத்தவர்களெல்லாம் வேட்டைக்காரர்கள் என்பது போல் பேனாவைப் பிடித்தவர்களெல்லாம் எழுதி வெற்றி பெறமுடியுமா? பேஷ்! இப்படியல்லவா மனத்தைத் திறந்து தைரியமாக கடிதம் எழுத வேண்டும். நாம் எழுதப்போகும் கட்டுரைக்கு கூட இப்படித்தான் விமர்சனம் கிடைக்குமோ?” என்ற குழப்பமும் உண்டாகியது. ”உம்… முயற்சி பயன் தராமலா போகும்? பகவான் விட்ட வழியாகட்டும்” என்ற முடிவுக்கு வந்தாள்.
சித்ரா வெகு சுறுசுறுப்பாக எதையோ மிக்க ஆழ்ந்த கருத்துடன் எழுதிக் கொண்டிருக்கையில் உத்தமன் அங்கு வந்து ”போஸ்ட்… சித்ராதேவி இந்த வீடுதானாம்மா?” என்று கேட்டு கடகடவென்று சிரித்தவாறு போஸ்டு கவர்கள் இரண்டு மூன்றை நீட்டினான். சித்ரா கடிதத்தை வாங்கிக் கொண்டு ” மிகமிக வந்தனம் போஸ்ட் மாஸ்டர் சார்” என்று கூறியவாறு உடனே படிக்கவாரம்பித்தாள்.
”ஸௌபாக்கியவதி சித்ராவுக்கு ஆசீர்வாம். உபயக்ஷேமங்கள்.
உன்னிடமிருந்து கடிதமே காணாததால் உன் தாயார் மிகவும் கவலைப்படுகிறாள். எங்கள் மீதுள்ள கோபத்தினால்தான் நீ இப்படியிருக்கிறாய் என்பதை உன் மவுனத்தைக் கொண்டே தெரிந்து கொண்டோம். உன் மனது இன்னமும் பழைய உணர்ச்சியிலே இருப்பதால், அதே வேதனையுடன் உனக்கு உடம்புக்கு வந்துவிடப் போகிறதே என்று நாங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில் உன் அத்தான் சிதம்பரத்தினிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அவனுடைய பேராபத்தை நீங்கள்தான் தடுத்துக் காப்பாற்றியதாயும், நீ இன்னும் சில மாதங்களில் தாயார் என்கிற ஸிம்மாஸனத்தில் ஆரோகணிக்கப் போவதாயும், எங்களையும் பாட்டனார், பாட்டியார் என்கிற பட்டத்தைச் சூட்டி மகிழ்விக்கப் போவதாயும் எழுதியிருந்தான். இதைப் பார்த்து நாங்கள் அபரிமிதமாகப் பூரித்துப் போனோம். இந்த சுபச்செய்தியை நீங்களிருவருமே எங்களுக்கு தெரிவிக்காதிருப்பதால் மாப்பிள்ளை கூட கிராம வாழ்க்கையை உன்னோடு சேர்ந்து வெறுப்பதாக நாங்களறிந்தோம். உன்னை இச்சமயம் எங்களிடம் அழைத்து வைத்துக்கொள்வதுதான் முறை. தனியாக விட்டுவைப்பது சரியல்ல. ஆகையால் இப்பொழுது இங்கு ஒரு கம்பெனியில் வேலை காலியாயிருக்கிறதாம். அதற்கு 250 ரூபாய் டிபாஸிட்டு கட்ட வேண்டுமாம். எப்படியாவது கடனாவது வாங்கி அதைக் கட்டி உன் கணவனை இங்கேயே அழைத்துக் கொள்ள உத்தேசித்து விட்டேன். மாப்பிள்ளையிடம் அந்த விஷயத்தைக் கூறி அந்த கிராமத்து தபாலாபீஸ் வேலையை ராஜினாமா செய்து விட்டு வந்துவிடச் சொல்லு. இனிமேல் உன் மனம் சந்தோஷமாயிருக்குமென்று நம்புகிறேன். உங்கள் பதிலை எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறேன். அதைப் பார்த்தபிறகுதான் நான் கடன் வாங்கிக் கட்ட வேண்டும். உடனே பதில். உன் தாயார் இதே கவலையாயிருப்பதால் தாமதமின்றி கடிதம் எழுது.
இங்ஙனம் உன்
தகப்பனார்
இதைப் படித்ததும் கடகடவென்று சிரித்தாள். இச்சிரிப்பொலியைக் கேட்ட உத்தமன் ”என்ன சித்ரா! காதுக்குள் கணீர் என்று ரீங்காரம் செய்யும்படிச் சிரிக்கிறாய்? என்ன விசேக்ஷம்? உங்கப்பா, அம்மா வரப் போகிறார்களா என்ன?” என்று ஆவலுடன் கேட்டான். சித்ரா பதில் சொல்லாமல் அன்பைக் கக்கும் ஆழமான பார்வையுடன் கடிதத்தை உத்தமனிடம் கொடுத்தாள்.
உத்தமன் அதைப்படித்துவிட்டு ‘‘ஓகோ! இதான் இத்தனை குஷியாய்ச் சிரிக்கிறாயா… பேஷ்… ராஜிநாமா எழுதிவிடட்டுமா! என்ன சித்ரா! நீ என்னவிருந்தாலும் தசைக்காரிதான். உனக்குமேல் சுக்ரதசை உன் குழந்தைக்கு அடிக்கப்போகிறது. அதனால்தான் பிறப்பதற்கு முன்பே தாயாராரின் மனோபீஷ்டத்தைப் பூர்த்திசெய்யப் போகிறதாக்கும். பலே! பலே!’’ என்று கண்ணைச் சிமிட்டியவாறு பார்த்தான்.
வெட்கத்தினால் சித்ராவின் முகம் சிவந்து தலை குனிந்தது. பதிலே பேசவில்லை. அந்த நிலையின் அழகு உத்தமனை பிரமிக்கச் செய்தது. இருவருக்கும் நிசப்தமான மவுனமே குடிகொண்டது. உத்தமனே சற்று பிரமை தெளிந்தவனாய்… ”சித்ரா… பதில் உடனே எழுதி உன் தாயாரை சந்தோஷப்படுத்து. நான் இன்றே ராஜிநாமாச் செய்துவிடுவதாக ஆபீஸுக்கு கடிதம் எழுதி விடட்டுமா?’’ என்றான்.
தான் இதுவரையில் செய்த அசட்டுத்தனத்தை எண்ணி வெட்கியவளாய் அன்புடன் உத்தமனைப் பார்த்து… ”ஏதோ! தெரியாத்தனமாக நான் நடந்து விட்டதை மன்னிக்கக் கோருகிறேன். பட்டினத்து வேலையும் வேண்டாம். கடன் வாங்கி டிபாஸிட்டும் கட்ட வேண்டாம். எனக்கு இனி இதை விட்டுப் போகவே ப்ரியமில்லை என்பதை நீங்களே அப்பாவுக்கும் எழுதி விடுங்கள். இனியும் பழைய விஷயத்தை வைத்துக் கொண்டு பரிகாஸம் செய்யாதீர்கள்.’’
இந்த வார்த்தை உத்தமனை பேரானந்தத்திலாழ்த்தியதால், ”பலே, சித்ரா! இந்த ஒருவார்த்தையே நான் எதிர்பார்த்தேன். சரி… மற்ற கடிதங்களைப் படிக்காமல் நான் தடை செய்கிறேன். நீ படித்துக் கொள்ளு!” என்று கூறிச் சென்றான். பூரித்த உள்ளத்துடன் கடிதத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தாள்.
”ஸௌபாக்கியவதி சித்ராவுக்கு, மாமி ஆசீர்வாதம். உபயக்ஷேமம்.
உங்கள் குலம் விளங்க ஒரு மாணிக்கம் பிறக்கப் போவதாகவும் அதை உன் தாயாருக்குக் கூட வெளியிடவில்லை என்றும் அத்தான்தான் உன் தகப்பனாருக்கு எழுதியதாகவும் உங்கம்மா கடிதம் எழுதியிருக்கிறார். அதைப் பார்த்து நாங்களடையும் சந்தோஷம் சொல்ல முடியாது. இன்னும் இரண்டு நாளில் நான் அங்கு வருகிறேன். உடம்பை ஜாக்ரதையாகப் பார்த்துக் கொள்ளு. உத்தமனுக்கு ஆசீர்வாதம்…
உன் மாமி
அத்தான் ஒரு பெரிய விளம்பரக்காரன் போலிருக்கிறது. ஆபத்து நீங்கிப் போகிறவன் இது வேறு விதை விதைத்துக் கொண்டே போகிறானோ! என்று முணுமுணுத்தவாறு மற்றொரு கடிதத்தைப் பிரித்தாள்.
”இதுவும் அத்தான் சொல்லியதாக யாராவது எழுதியிருக்கிறார்களோ என்னவோ? நல்ல அத்தான்… கையெழுத்தென்ன புதிதாக இருக்கிறது! அத்தானின் மனைவியே எழுதியிருக்கலாமோ?
”அடீ கொலைபாதகீ! கள்ளி! நீயும் உன் கணவனும் ஏதோ பெரிய சாம்ராஜ்யக் கோட்டையைப் பிடித்து விட்டதுபோல் துள்ளுகிறீர்கள்! கந்தப்பனைப் பிடித்து விட்டதால் உங்கள் ஆயுளும் இதோடு முடிந்து விட்டது என்று நினைக்காமல் துள்ளிக் குதிக்க வேண்டாம். ஒரு கந்தப்பன் மறைந்தால் ஓராயிரம் கந்தப்பன்கள் உங்களை எமலோகத்திற்கு அனுப்புவதற்குக் காத்திருக்கிறோம் ஜாக்ரதை. உங்கள் இறுமாப்பின் நேரம் முடிந்துவிட்டது.”
என்கிற மொட்டைக் கடிதத்தின் முதல்வரியை படிக்கும்போதே சித்ராவின் தலையில் சம்மட்டியாலடிப்பது போன்ற ஒரு வேதனை உண்டாகி மூளையே கலங்குவது போலிருந்தது. முற்றிலும் படிப்பதற்குள் பயத்தினால் மூச்சே நின்றுவிடும் போலாகி அவளையறியாது, ‘‘கூ!’’வென்று கூச்சலிட்டாள். உத்தமன் இந்த பயங்கரக் கூச்சலை கேட்டு ஓடி வந்தான்.
சித்ராவின் சரீரமே கிடுகிடுவென்று நடுங்கி வியர்வை வெள்ளம் ஆறுபோல் பொங்கி வழிவதால் உத்தமன் சித்ராவைத் தூக்கி மடியில் கிடத்திக்கொண்டு துடைத்தவாறு, ”என்ன சித்ரா!” என்று பதைபதைக்கக் கேட்டான். அவள் கையிலிருந்த கடிதத்தைக் காட்டி சமிக்ஞை செய்தாள்.
அதைப் படித்த உத்தமனும் அலறிவிட்டான். ”ஐயோ! இதென்ன பயங்கரம்! இளங்கர்ப்பிணியை இப்படுமோசமான கடிதம் என்ன செய்துவிடுமோ தெரியவில்லையே!” என்று கதிகலங்கினான். தானும் அதைரியமாயிருப்பதை அறிந்து அவள் பின்னும் கவலைப்படப்போகிறாளோ என்கிற பயத்துடன், தான் மிக்க தைரியசாலியாக இருப்பது போல் நடித்து, ”சித்ரா! சித்ரா! இதோ பாரு… பூ… இந்த அல்பக் கடிதத்திற்கா இத்தனை பயப்படுகிறாய்? இவன் என்ன நம்மை விழுங்கிவிடும் பூதமா! சித்ரா! பயப்படாது தைரியமாக எழுந்திரு. இக்கடிதத்தையே போலீஸாருக்கு அனுப்பி நான் தக்கபடி நடவடிக்கை எடுக்கச் செய்கிறேன்” என்று வெகு அன்புடன் கூறுகையில் வாசற்கதவை இடிக்கும் சத்தங்கேட்டதும் மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல் சித்ரா அலறியவாறு எழுந்து ”ஐயோ! கதவைத் திறக்க வேண்டாம். யார் என்று கேட்டுத் தெரிந்துகொண்டு திறவுங்கள்’’ என்று உத்தமனின் கைகளைப் பிடித்துக் கொண்டு தடுத்தாள்.
இதற்குள், ”சார்… மிஸ்டர் உத்தமன்!” என்று சிதம்பரமும் இன்ஸ்பெக்டரும் கூப்பிடுவதைக் கேட்டு சற்று தெளிவடைந்து கதவைத் திறந்தான். சித்ராவின் நிலை கலங்கிய அலங்கோலத்தைக் கண்டதும்… ”பார்த்தீர்களா சார்! அந்த முட்டாள் கழுதை ஆள்களுக்கு நேராக எழுதாமல் என் மனைவிக்கும் இதே மாதிரி எழுதினான். இன்ஸ்பெக்டர் பெரிய புலி என்பதையும், அவர் தமக்கு மேல்மட்ட துப்பறியும் ராஜாராம் நாயுடுவிடம் பழகிய பெருச்சாளி என்பதையும் அந்த அல்பன் எங்கு கண்டான்? இன்ஸ்பெக்டர் மனைவிக்கும் வந்தது’’… என்று சிதம்பரம் சொல்வதை உத்தமன் இடைமறித்து, ‘‘அட… இன்ஸ்பெக்டர் மனைவிக்குக் கூடவா வந்தது! ஐயோ பாவம்! அவர்கள் கூட சித்திராவைப் போல் அலறினார்களா! உங்கள் மனைவி எப்படி சமாளித்தார்கள்” என்றான்.
சிதம்: ‘‘என் மனைவிக்கு ஜுரமே வந்துவிட்டதப்பா! நான் இதே கடிதத்தைத் தூக்கிக் கொண்டு இவரிடம் ஓடி வந்தேன். ”ஒரு கலக்கத்தைக் கொண்டு காணப்போனால் இரு கலக்கத்தைக் கொண்டு எதிரே வந்தார்களாம்” என்பது பழமொழி. அதுபோல் அங்கு நான் கம்ப்ளைண்டு கொடுக்கச் சென்றால் அவரும் அதே கடிதத்தை வைத்துக் கொண்டு காடிசியளித்தார். சிரித்துச்சிரித்து பயமும் மறைந்துவிட்டது. இவருக்கா யுக்தியும் யோசனையும் சொல்ல வேண்டும்? உடனே இந்தக் கடிதம் எழுதிய ஆசாமிகளையும் பிடிப்பதற்குச் சரியான ஏற்பாடும் செய்தாயிற்று. எங்களுக்கு நேற்றே கடிதம் வந்துவிட்டது. ஒருவேளை இங்கும் வந்திருக்குமோ, இளங்கர்ப்பிணிக்கு அதனால் ஏதேனும் பாதகம் உண்டாகுமோ! என்கிற பயத்தினால் இங்கு முதலில் வந்தோம்.’’
உத்தமன்: ‘‘நல்ல காரியம் செய்தீர்கள். சற்று முன்பு சித்ரா மூச்சே போனது போலாகிவிட்டாள். அது சரிதான், இந்த அயோக்கியக் கூட்டங்கள் யாரு? கண்டுபிடித்தாயிற்றா!’’
இன்ஸ்பெக்டர்: ஏதோ ஒருவாறு கண்டுபிடித்தாயிற்று. நல்லவேளையாக நான் எங்கும் வெளியில் போகாது வீட்டிலிருக்கையில் கடிதம் வந்தது. பிரயாசைப்படாமலேயே கடிதம் எந்த ஊர் தபாலாபீஸிலிருந்து வந்தது என்பதைக் கண்டு கொண்டு உடனே என் குரு நாயுடுகாருவிடம் சென்று சில முக்கியமான யோசனைகளைக் கேட்டு எனது முக்கிய கையாட்கள் இரண்டு பேர்களை அழைத்துக்கொண்டு அந்த ஊருக்குச் சென்று புலன் விசாரித்து அந்தக் கந்தப்பனுக்கு யார் யார் சினேகிதம் என்பதையறிந்து அவர்களும் அவ்வூரில் திருட்டுத்தனமாக அரிசி வியாபாரம் செய்வதையும் தக்க சாட்சிகளுடன் கண்டுபிடித்துக் கையும் மெய்யுமாகப் பிடித்துவிட்டேன். இனி அதுவிஷயத்தைக் கண்டு சற்றும் பயப்பட வேண்டாம். சில தினங்களுக்கு இந்த வீட்டில் போலீஸ் பாராவும் போட்டு வைக்கிறேன் என்று சொல்லித் தேற்றிவிட்டுச் செல்வதற்காகத்தான் வந்தேன். நாங்கள் போய் வருகிறோம்.’’
சித்ரா சற்று சமாதானம் அடைந்து வந்தவர்களுக்குப் பலகாரம், காப்பி கொண்டு உபசரித்தாள். அவ்விருவரும் விடைபெற்றுக் கொண்டு உடனே சென்றுவிட்டார்கள்.
”ஒரு க்ஷண நேரத்திற்குள்ளே எப்படி ஒரு பெரிய பூகம்பம்போல் ஒரு புறம் பயங்கரமும் மறுபுறம் ஒரு சாந்தியும் உண்டாகிவிட்டது! எல்லாம் ஈசன் செயல்தான்” என்றான் உத்தமன். ‘‘ஈசன் செயல் மட்டுமில்லை. தபால் வினோதத்தின் பலன்கள் என்று கூறிச் சிரித்தாள் சித்ரா. அச்சிரிப்பில் வெற்றியின் பெருமிதம் பிரகாசித்தது.
16
”சித்ராதேவீ! போஸ்டு” என்று இரண்டு கவர்களைக் கொடுத்தான் உத்தமன். அன்று அந்த பயங்கரத்திற்குப் பிறகு தனக்கு வரும் கடிதங்களைப் பிரித்துப் பார்ப்பதற்கும் ஒருவிதமான பயமும் கவலையும் உண்டானதால்… ”எனக்குக் கடிதமா! நீங்களே படியுங்கள். எனக்கு பயமாயிருக்கிறது” என்றாள். உத்தமனே படிக்கவாரம்பித்தான்.
”அறிவிற் சிறந்த அம்மையே! வணக்கம் பல பல. உபயக்ஷேமங்கள். தாங்கள் வெகு முயற்சியுடனும், ஆராய்ச்சியுடனும் அனுப்பிய ‘கடிதம் எழுதுவதும் ஒரு கலைதான்’ என்கிற வெகு சிறந்த கட்டுரையை படித்து ஏகமனதாக அக்கட்டுரையே முதல் பரிசுக்குரியது என்று தீர்மானித்துள்ள ஆனந்தகரமான செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கவே இந்த லிகிதம் எழுதப்படுகிறது. எங்கள் ஸ்வதந்தராதேவி பத்திரிகைக்குத் தாங்கள் நிரந்தரமாக பெண்கள் பகுதியை ஏற்று நடத்தும்படிக் கோருகிறோம். அதற்கு மாதம் 100 ரூபாய் கொடுக்கப்படும். பரிசு பெற்ற இக்கட்டுரை முதல் தேதி பத்திரிகையில் வெளிவரும். பரிசு வழங்கும் விழாவைப் பிறகு அறிவிப்போம். தயவு செய்து அன்று எங்கள் ஊருக்கு வந்து விழாவைச் சிறப்பித்து பரிசுத் தொகையை வாங்கிக் கொள்ளவும்.
தயவு செய்து தங்களுடைய புகைப்படத்தை உடனே அனுப்ப வேண்டுமாய்க் கோருகிறோம். அனேகவித மேற்கோள்களுடனும் பலரகமான கடிதங்களின் ஆதாரங்களுடனும் தாங்கள் எழுதிய கட்டுரை ஒரு அனுபவக் களஞ்சியமாகவும், பாடம் கற்பிக்கும் ஆசானாகவும் இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை. உங்களுக்கு கமிட்டியின் சார்பாகவும் பத்திரிகையின் சார்பாகவும் வந்தனத்தைத் தெரிவிக்கிறோம்.
துரைராஜ்
இதைப் படித்து முடிப்பதற்குள்ளேயே உத்தமனின் ஆனந்தமும் கட்டுமீறிய உற்சாகமும் காட்டுவெள்ளம் போல் பொங்கிப் பெருகியதால் ஒரே தாவலில் சித்ராவைத் தூக்கிக் கொண்டே குதித்து விட்டான். அவளுடைய கன்னங்கள் சிவக்க… ‘‘பலே பேஷ்… சித்ரா… இந்த அளப்பரிய ஆனந்தக் கடிதம் என்னை தேன் குடித்த நரிபோல் செய்துவிட்டது. கிராமத்து வாழ்க்கையும், கிராமத்து உத்யோகஸ்தனாகிய கணவனின் அன்பும் இனி உனக்கு வெறுப்பாகத் தோன்றாதல்லவா? கிராமத்துத் தபால் வினோதத்தின் முடிவு உன்னை எத்தனை உச்சாணிக் கிளையில் உயர்த்திவிட்டது பார்த்தாயா?’’ என்று அபரிமிதமான பூரிப்புடன் கூறினான்.
சித்ராவுக்குச் சந்தோஷம் சொல்லமுடியாது பொங்கியது. ”எல்லாம் உங்களுடைய அனுக்ரகந்தான்!” என்ற வார்த்தைகள் மட்டும் புஷ்பம் உதிர்வது போல் உதிர்ந்தன.
இந்த நித்யமங்கள கல்யாண வைபவக்காட்சியை ஜன்னலால் பார்த்துப் பரமானந்தமடைந்த சித்ராவின் மாமியும் தாயாரும் பூரித்துப் புளகிதமடைந்து தாமே ஓடிச் சென்று சித்ராவை வாழ்த்தி திருஷ்டிக் கழித்தார்கள். பெரியோர்களின் அன்பில் சித்ராவின் உள்ளம் ஐக்யமானது. அதைவிட ஆனந்தம் வேறு என்ன இருக்கிறது?
(நிறைந்தது)
***
காலத்தை வென்ற கதைகள் மற்றவை…