திருமணமா… வியாபாரமா?

Image

போர்… ஆயிரக்கணக்கானவர்களை ஊனமாக்கும். பல ஆயிரம் பேர்களின் உயிர்களைக் காவு வாங்கும். எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். சில நேரங்களில், அதன் விளைவுகள் பலரின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிப் போட்டுவிடும். இப்போது, சிரியாவைச் சேர்ந்த பெண்களுக்கு அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

மேற்கு ஆசியாவில் இருக்கும் குட்டி நாடு சிரியா. சமீப காலமாக அங்கே உள்நாட்டுப் போர். ஒரு பக்கம் தன் அப்பாவி மக்கள் மேலேயே விஷ வாயுத் தாக்குதல் நடத்தும் அரசு. இன்னொரு பக்கம், சிரியா மீது படையெடுக்கப் போவதாக மிரட்டும் அமெரிக்கா. அமெரிக்காவுக்கும் சிரியாவுக்கும் இடையில் சமாதான முயற்சியில் இறங்கியிருக்கும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள்… ஆனாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக அகதிகளாக வெளியேறியபடிதான் இருக்கிறார்கள். குறிப்பாக பெண்களும் குழந்தைகளும்! வாழ வழியில்லை…. வயிற்றுக்குச் சோறில்லை. இவர்களில் பெண்களைக் குறி வைக்கிறது ஒரு கும்பல். வெளிப் பார்வைக்கு அவர்கள் திருமணத் தரகர்கள். உண்மையில் அவர்கள் செய்வது பெண்கள் வியாபாரம்.

‘பக்கத்து நாடுகளுக்கு இடம் பெயரும் சிரியப் பெண்கள், பணக்கார சவூதி அரேபிய ஆண்களுக்கு மனைவி என்கிற பெயரில் பாலியல் அடிமையாக அந்தக் கும்பலால் விற்கப்படுகிறார்கள்’ என்கின்றன பத்திரிகைச் செய்திகள். போரால் வறுமைக்குத் தள்ளப்பட்ட பல குடும்பங்கள், தங்கள் வீட்டுப் பெண்களை அவர்களாகவே ‘திருமணம்’ என்கிற பெயரில் விற்பதும் நடக்கிறது.

இந்த வியாபாரத்தில், வயதான சவூதி ஆண்கள்தான், சிரிய இளம் பெண்களை வாங்க போட்டி போடுகிறார்கள். அதற்காக எவ்வளவு பெரிய தொகையைத் தரவும் தயாராக இருக்கிறார்கள். ‘இப்படிப்பட்டவர்கள் ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொள்வதில்லை. பல பெண்களை பணம் கொடுத்து வாங்கி, திருமணம் செய்து கொள்கிறார்கள்’ என்கிறது செய்திக் குறிப்பு. சில பெண்கள் பலமுறை வாங்கி, விற்கப்படுவதும் நடக்கிறது. காரணம், வயதான ஆண்கள் சிலருக்கு சில வாரங்களிலேயே அந்தப் பெண்கள் போரடித்துப் போய்விடுகிறார்களாம். சில நேரங்களில், விற்கப்பட்ட பெண், இளமையைத் தொலைத்துவிட்டு வீட்டுக்கே திரும்புவதும் நடக்கிறது. ஆனால், குறைந்த விலைக்கு மறுபடியும் குடும்பத்தினராலேயே வேறொருவருக்கு விற்கப்படுகிறாள் அந்தப் பெண்.

சிரியாவைச் சேர்ந்த ஓர் அகதி பத்திரிகைக்குப் பேட்டி அளித்தபோது இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்… ‘‘என் மகள், தன் குடும்பத்துக்காக தன்னையே தியாகம் செய்திருக்கிறாள். எங்கள் நாட்டில் சண்டை மட்டும் மூளாமல் இருந்திருந்தால், நான் என் பெண்ணை ஒரு சவூதி அரேபியருக்குத் திருமணம் செய்து கொடுத்திருக்க மாட்டேன். ஆனால், சிரியாவில் நாங்கள் எல்லோருமே ஏழைகளாக, கையில் காசு இல்லாமல் இருக்கிறோமே… நாங்கள் என்ன செய்ய?’’

அந்த சிரிய அகதியின் மகளுக்கு 17 வயது. அந்தச் சின்னஞ்சிறு பெண்ணை மணந்து கொண்ட சவூதி அரேபியருக்கு வயது 70. இப்படிப்பட்ட ஒரு கல்யாணச் சந்தையில் அந்தப் பெண் விலை போனது கொடுமை. அதற்கு ஒப்புக் கொண்ட அந்தப் பெண்ணின் துணிச்சல் திடுக்கிட வைத்தாலும், அந்த அளவுக்கு அவளின் குடும்பம் வறுமையில் மூழ்கியிருப்பதை நினைத்தால் வேதனை எழுகிறது. கெட்ட எண்ணமும் இளித்த முகமுமாக டாலர்களை இரைக்கத் தயாராக இருக்கும் சில தனவான்கள் இருக்கும் நிலையில் அந்தப் பெண்ணின் தந்தையும்தான் என்ன செய்வார்?

விலை… அது இன்னொரு கொடுமை. 100 டாலர்களுக்கும் குறைவான தொகைக்கு பல பெண்கள் விற்கப்படுகிறார்கள். மணப்பெண்ணாக விற்கப்படும் பெண்களின் வயது 12லிருந்து 21 வரை. அவர்களை மணம் செய்து கொள்கிற ஆண்களின் வயது 40, 50, 60, 70. ஒரு சிரியப் பெண்ணுக்கு நான்கு முறை திருமணம் நடந்திருக்கிறது. அந்தப் பெண்ணின் வயது 15. இந்த அவலத்துக்கெல்லாம் காரணம் சண்டை. நமக்கு ஒன்றுதான் சொல்லத் தோன்றுகிறது. சண்டையே உனக்கு ஒரு சாவு வராதா?

– பாலு சத்யா

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s