தூரிகையோடு சம்பந்தப்படாததால்
கோலம் ஓவியமில்லையா?
ஒவ்வொரு வீட்டிலும்
ஓவியக்காரியாய்
ஒவ்வொரு பெண்ணும்
எந்த வண்ணத்துக்குமில்லாச் சிறப்பு
கோலமாவில்…
எறும்புக்குத் தீனி!
கோலம் வரைவதாய்க்கூட
சொல்வதில்லை
கோலம் ‘போடப்’படுகிறது!
விரல்களின் குரல்கள்
அதிகாலை அவசரத்தில்
வாசலில் அநாதையாய்…
வாகனங்கள் ஏறிச்சென்ற பிறகு
பிய்ந்துபோன சதைத் துண்டங்களாய்
எஞ்சும் கோலப்பிசுறுகள்!
கைகளில் பிறந்து
கால்களில் வதைபடவா?
மார்கழி தொடங்க
மரியாதை கோலங்களுக்கு..!
எல்லோரும் அசூயையாய் ஒதுக்கும்
சாணியுருண்டையில்
யாரும் தலையில் சூடாத
பூசணிப்பூ வைத்து!
தண்ணீர் தெளித்து
தரை மெழுகி
வரையும் கோலத்தை
மிதியடிகளால்
அரைத்துச் செல்பவர்களை
என்னவென்று அழைப்பது?
காதலியின் வார்த்தையாய்
மனைவியின் இயலாமையாய்
மகளின் கோபமாய்
விருந்தின் வரவேற்பாய்
தெய்வீகத்தின் உச்சமாய்
எப்படிப் பார்க்கினும்
ஒரு பெண்ணின் பிரபஞ்சமாய்…
கோலங்கள் –
தரையில் கிடக்கும் மின்கம்பிகள்!
மிதித்தால் அதிர்கிறது
என் இதயம்!
– நா.வே.அருள்
Picture Courtesy: http://alagukolangal.blogspot.in
மிகவும் அருமையான, தேவையான கவிதை. கோலம் என்பது மிகவும் புனிதமானது. கோலங்களை அலட்சியம் செய்பவரைக் கண்டால்,கோபம் தான் வருகிறது.