நோபல் பரிசு! உலகம் முழுக்க இருக்கும் எத்தனையோ எழுத்தாளர்களின் பெரும் கனவு. அது கிடைப்பதென்பது பெரிய அங்கீகாரம். வாழ்நாள் முழுக்க கரைந்து, உருகி, நிகழ்வுகளையும் கதைகளையும், கற்பனையையும் வார்த்தைகளாக வடித்ததற்குக் கிடைக்கும் பெரும் கௌரவம். உண்மையில் அந்தப் பரிசை ‘அதிர்ஷ்டம்’ என்றுகூட வர்ணிக்கலாம். உலகமெங்கும் இருக்கும் பல்லாயிரக்கணக்கான எழுத்தாளர்களில் ஒருவருக்குத்தான், அதுவும் ஆண்டுக்கொருமுறைதான், அந்தப் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை அள்ளிச் சென்றிருக்கிறார் கனடாவைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆலிஸ் முன்ரோ (Alice Munro).
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற 13வது பெண் எழுத்தாளர் ஆலிஸ். அப்படி ஒன்றும் பிரமாதமான குடும்பம் கிடையாது. அப்பா ராபர்ட் எரிக் லெய்ட்லா, சாதாரணமான கடல்வாழ் உயிரினங்களை வளர்த்து விற்பனை செய்பவர். அம்மா, ஆன் கிளார்க் லெய்ட்லா ஒரு பள்ளி ஆசிரியை. இந்தத் தம்பதிக்கு 1931ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி பிறந்தார் ஆலிஸ் முன்ரோ. மிக இளம் வயதிலேயே எழுத ஆரம்பித்துவிட்டார். ‘தி டைமென்ஷன்ஸ் ஆஃப் எ ஷேடோ’ என்கிற ஆலிஸின் முதல் கதை பிரசுரமானபோது அவர், வெஸ்டர்ன் ஆன்டாரியோ பல்கலைக்கழகத்தில் (University of Western Ontario) படித்துக் கொண்டிருந்தார். வீட்டுச் சூழல், வேலை பார்த்தபடியே படிக்கும் நிலையை அவருக்கு ஏற்படுத்தியிருந்தது. அந்த நேரத்தில், ஆலிஸ் ஹோட்டலில் பரிசாரகராக, புகையிலைத் தோட்டத்தில் வேலை பார்ப்பவராக, ஒரு நூலக குமாஸ்தாவாக என்று என்னென்னவோ வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். எப்படியோ வெஸ்டர்ன் ஆன்டாரியோ பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றார்.
1951ம் ஆண்டு ஜிம் முன்ரோ என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் சேர்ந்து விக்டோரியா நகரத்தில் ஒரு புத்தகக் கடையைத் தொடங்கினார்கள். அதற்கு ‘முன்ரோ புக்ஸ்’ என்று பெயரும் வைத்தார்கள். அந்தப் புத்தகக் கடை இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆலிஸின் முதல் சிறுகதைத் தொகுப்புக்கே அமோக வரவேற்புக் கிடைத்தது. 1968ல் வெளியான ‘டான்ஸ் ஆஃப் தி ஹேப்பினஸ்’ கனடாவின் உயரிய இலக்கிய விருதான ‘கவர்னர் ஜெனரல்ஸ் விருது’ பெற்றது. தொடர்ந்து எழுதினார். ‘தி நியூ யார்க்கர்’, ‘தி அட்லாண்டிக் மன்திலி’, ‘கிராண்ட் ஸ்ட்ரீட்’, ‘தி பாரீஸ் ரிவ்யூ’ போன்ற பிரபல பத்திரிகைகளில் அவருடைய சிறுகதைகள் வெளியாயின. மேலும் இனிமேல் எழுதக் கூடாது என்று அவர் முடிவெடுத்தாலும் அவருடைய பேனாவும் சிந்தனையும் அவரை விட்டபாடில்லை. 2009ம் ஆண்டு ‘டூ மச் ஹேப்பினஸ்’ என்ற அவருடைய சிறுகதைத் தொகுப்பு வெளியானது.
ஆலிஸின் ‘தி பியர் கேம் ஓவர் தி மவுன்டெய்ன்’ பிரபல பெண் இயக்குநர் சாரா பொல்லேவால் திரை வடிவம் பெற்று, ‘அவே ஃப்ரம் ஹெர்’ என்ற திரைப்படமாக வெளியானது. டொரன்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அந்தப் படம் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், விருது கிடைக்கவில்லை. 2009ம் ஆண்டு இலக்கியத்தில் அவருடைய வாழ்நாள் சாதனைக்காக புக்கர் பரிசு வழங்கப்பட்டது. அதே 2009ல் அவருக்கு உடல்நிலை சற்று மோசமானது. இதய நோயாலும், புற்று நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார். அந்தச் சூழ்நிலையிலும் டொரன்டோவில், ஒரு பத்திரிகைப் பேட்டியில், ‘பாலியலின் இருவிதமான மனப் போக்குகளைப் பற்றி எழுதுவதுதான் என் அடுத்த கரு’ என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆலிஸுக்கு நான்கு பெண் குழந்தைகள் பிறந்தன. அதில் இரண்டாவதாகப் பிறந்த பெண் குழந்தை, பிறந்த 15 மணி நேரத்தில் இறந்து போனது. 1972ல் தன் கணவர் ஜிம் முன்ரோவிடம் இருந்து விவாகரத்துப் பெற்றார் ஆலிஸ். 1976ல் ஜெரால்ட் ஃப்ரெம்லின் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். 2013, ஏப்ரலில் ஃப்ரெம்லின் மரணமடைந்தார்.
ஆலிஸ், மூன்று முறை கனடாவின் ‘கவர்னர் ஜெனரல்ஸ் விருது’ பெற்றவர். இதுவரை அவருடைய 14 சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அவருடைய எழுத்துகள், பிரபல ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவின் படைப்புகளைப் போல வலிமையானவை என்று பல விமர்சகர்களால் வர்ணிக்கப்பட்டவை. 82 வயதில் அவருக்குக் கிடைத்திருக்கிறது இலக்கியத்துக்கான நோபல் பரிசு. அதைப் பெற மிகவும் தகுதியானவர் ஆலிஸ். கடந்த வருடம்தான் ஆலிஸ் இப்படி அறிவித்திருந்தார்… ‘எழுதியது போதும் என நினைக்கிறேன். என் பேனாவைக் கீழே வைக்கப் போகிறேன்’. இந்தப் பரிசு 82 வயதிலும் அவருக்குப் புதிய உத்வேகத்தைக் கொடுக்கும் என நம்புவோம். ஆலிஸ், நிறைய எழுத வேண்டும்!
– பாலு சத்யா