நீதி கிடைத்தது!
1996, ஜூலை. மேற்கு டெல்லியில் வசித்த ஒரு பெண் தன் கணவர் சாதேந்தர் யாதவ், மாமியார் சாந்தி தேவி, மாமனார் நாதுராம் மீது புகார் கொடுத்தார். வரதட்சணை கேட்டு தன்னை சித்திரவதை செய்வதாக வழக்கு. அதற்குப் பிறகு கணவர் பிரிந்தார். வேறு திருமணம் செய்து கொண்டார். வழக்கு நடந்து… மன்னிக்கவும்… தவழ்ந்துகொண்டே இருந்தது. 18 வருடங்களுக்குப் பிறகு டெல்லி நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அந்தப் பெண்ணின் கணவருக்கும் 61 வயதான மாமியாருக்கும் 2 ஆண்டு சிறைத்தண்டனை! இடையில் மாமனார் நாதுராம் இறந்து போனார். நீதி கிடைத்திருக்கிறது. சரி… அதற்காக இம்பூட்டு தாமதமாகவா?
தமிழிசைக்கு கௌரவம்!
காந்தர்வக் குரலுக்குச் சொந்தக்காரர் கர்நாடக இசைப்பாடகி அருணா சாய்ராம். முக்கியமாக தன் கச்சேரிகளில் தமிழ்ப் பாடல்களை அதிகம் பாடி தமிழிசையைப் பரவலாகக் கொண்டு சென்றவர். அதற்காகவே இந்த ஆண்டுக்கான ‘டாக்டர் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் நினைவு விருது’ அவருக்குக் கிடைத்திருக்கிறது. வாழ்த்துகள் மேடம்!
இது… தீர்மானம்!
சமீபத்தில் 113 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் இணைந்து ஒரு தீர்மானத்தில் கையொப்பம் இட்டிருக்கிறார்கள். அது, ‘பாலியல் வன்முறைக்கு எதிரான தீர்மானம்’. இது ஒரு வகையில் முக்கியமான தீர்மானம். பாலியல் வன்முறையை கண்டும் காணாமல் இருக்கும் நாடுகள் இனி அப்படிச் செய்ய முடியாது. அந்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது. ‘இது மட்டுமல்ல… பாலியல் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வுக்காக இங்கிலாந்து அடுத்த ஆண்டு ஒரு மாநாட்டையே நடத்த இருக்கிறது’ என்று அறிவித்திருக்கிறார் இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக். உலக அளவில் தகித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறையைக் குறைக்க இந்தத் தீர்மானங்கள், மாநாடு உதவும் என்றே நம்பலாம்.
தொகுப்பு: பாலு சத்யா
(மேலும் ‘தோழி நியூஸ் ரூம்’ செய்திகளுக்கு அக்டோபர் 16-31 ‘குங்குமம் தோழி’ இதழைப் பார்க்கவும்).