இரண்டாவது நாவலுக்கு புக்கர் பரிசு!

Image

லேனர் கேட்டன் (Eleanor Catton). இந்த 28 வயது நியூசிலாந்து பெண் எழுத்தாளரின் ‘தி லூமினரீஸ்’ (The Luminaries) நாவலுக்கு இந்த ஆண்டுக்கான ‘மேன் புக்கர் பரிசு’ கிடைத்திருக்கிறது. ‘மிக இளம் வயதில் புக்கர் பரிசு பெற்றவர்’ என்ற பெருமையோடு, ‘புக்கர் பரிசு பெற்ற நூல்களில் மிக அதிகமான பக்கங்களைக் கொண்ட நாவலை எழுதியவர்’ என்ற பெருமையும் இவருக்கு சேர்ந்திருக்கிறது. மொத்தம் 832 பக்கங்கள்!  ‘தி லூமினரீஸ்’, இலேனர் கேட்டனுக்கு இரண்டாவது நாவல். இதை அவர் எழுத ஆரம்பித்த போது 25 வயது. புக்கர் பரிசு பெறும் இரண்டாவது நியூசிலாந்துக்காரர் என்ற புகழும் இவருக்கு சேர்ந்திருக்கிறது. 1985ல் கெர்ல் ஹல்மே (Kerl Hulme) என்ற நியூசிலாந்து பெண் எழுத்தாளர் அவருடைய ‘தி போன் பியூப்பிள்’ என்ற நாவலுக்காக புக்கர் பரிசு பெற்றார்.

1985ல் கனடாவில் பிறந்தார் இலேனர் கேட்டன். வளர்ந்ததெல்லாம் Christ Church என்ற நியூசிலாந்தின் தென் பகுதியில் இருக்கும் தீவுப் பகுதியில்! கேன்டர்பரி பல்கலைக்கழகத்தில் (University of Canterbury) ஆங்கிலம் படித்தார். பிறகு, வெலிங்டன் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். படைப்பிலக்கியத்தில் ஆர்வம், அது தொடர்பான பயிற்சி முகாம்கள், ஃபெலோஷிப் என்று தீவிரமாக இருந்தார். 2008ல் இலேனர் கேட்டனின் முதல் நாவலான ‘தி ரிஹர்சல்’ (The Rehearsal) வெளியானது. 2013ல் ‘தி லூமினரிஸ்’ வெளியானது. 19ம் நூற்றாண்டில் நியூசிலாந்தின் தங்க வயல்களையும் ஜோதிடத்தையும் பின்புலமாகக் கொண்ட நாவல் ‘தி லூமினரிஸ்’. மர்மம், கொலை என்று விறுவிறுப்பு கலந்து கொடுத்திருக்கிறார் இலேனர்.

‘புக்கர் பரிசு’, காமன்வெல்த் நாடுகளில் இருக்கும் எழுத்தாளர்களுக்கும் அயர்லாந்து எழுத்தாளர்களுக்கும் மட்டும்தான் 45 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடைசியாக பரிசு பெறும் எழுத்தாளரும் இலேனர் கேட்டன்தான். அடுத்த ஆண்டிலிருந்து புக்கர் பரிசுக்கு அனைத்து நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.

புக்கர் பரிசுக்கான தேர்வுக்குழு நீதிபதிகளில் ஒருவரான ராபர்ட் மேக்ஃபேர்லேன் (Robert Macfarlane) எழுத்தாளர், விமர்சகர். அவர், இந்த நாவலைப் பற்றி ‘மிகச் சிறந்த நாவல். பிரமாதமான எழுத்து. ஒளிரும் படைப்பு’ என்றெல்லாம் ஒரு பேட்டியில் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

இந்த ஆண்டு புக்கர் பரிசுக்கான லிஸ்ட் மிக முக்கியமானது. போட்டி கடுமையாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். ஜிம் கிரேஸ் எழுதிய ‘ஹார்வெஸ்ட்’, காம் டாய்பின் (Colm Toibin) எழுதிய ‘தி லாஸ்ட் டெஸ்டாமென்ட் ஆஃப் மேரி’, ரூத் ஒஸேகி எழுதிய ‘எ டேல் ஃபார் தி டைம் பீயிங்’, ஜும்பா லாஹிரியின் ‘தி லோ லேண்ட்’, நோவயலெட் புலாவாயோவின் ‘வி நீட் நியூ நேம்ஸ்’ என்று பல நாவல்கள் பரிசீலனையில் இருந்தன. எல்லாமே மிக முக்கியமான நாவல்கள்.

‘‘நாவல் எழுதுவது விசித்திரமான அனுபவம். இவ்வளவுதான் இந்த நாவல், முடிந்துவிட்டது என்று சொல்லவே முடியாது. கடைசி பக்கத்துக்கு அப்புறமும் அது தொடர்ந்து கொண்டே இருக்கும். பலமுறை நான் நாவலின் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டேன் என்று நினைப்பேன். ஆனால், நீண்டு கொண்டே போகும்’’ என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் இலேனர் கேட்டன்.

இலேனருக்கு புக்கர் பரிசுத் தொகையாக 50,000 பவுண்டு கிடைக்கும். தற்போது நியூசிலாந்தில் இருக்கும் ஆக்லேண்டில் வசித்து வருகிறார். இந்த ஆண்டு, உலக அளவில் முக்கிய இலக்கியப் பரிசுகளாகக் கருதப்படும் ‘நோபல்’, ‘புக்கர்’  இரண்டையும் இரு பெண் எழுத்தாளர்கள் பெற்றிருப்பது நல்ல விஷயம். அடுத்த ஆண்டிலிருந்து புக்கர் பரிசு பரவலாக்கப்பட்டிருப்பதும் நல்ல விஷயம்தான். என்றாலும், பல விமர்சகர்கள் ‘இனி புக்கர் பரிசும் அமெரிக்கர்களின் வட்டத்துக்குள் வந்துவிடும்’ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். கவனிக்க வேண்டிய செய்தி.

Photo Credit: http://img2.timeinc.net

– பாலு சத்யா

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s