உடற்பயிற்சி நல்லதா? நல்லது. மூளைக்கு நல்லதா? ஆம். மிகவும் நல்லது! இப்படித்தான் பல ஆராய்ச்சியாளர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். உடற்பயிற்சி எப்படி மூளை செயல்பாட்டுக்கு உதவுகிறது, எப்படியெல்லாம் நன்மை செய்கிறது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்திருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. கடுமையான உடற்பயிற்சி செய்யும் போது மூளையில் ‘ஐரிசின்’ (irisin) என்ற மூலக்கூறு உற்பத்தியாகிறது என்று அடையாளம் காட்டியிருக்கிறது அந்த ஆய்வு. அதோடு, அந்த மூலக்கூறு, நரம்புகளைப் பாதுகாக்கிறது என்றும் உறுதியாக எடுத்துச் சொல்லியிருக்கிறது.
இந்த ஆய்வை தலைமை ஏற்று நடத்தியவர் டாக்டர் புரூஸ் ஸ்பீஜெல்மேன் (Dr.Bruce Spiegelman). அமெரிக்காவில் இருக்கும் டானா ஃபார்பர் கேன்ஸர் இன்ஸ்டிடியூட் மற்றும் ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூலில் பேராசிரியர். அவர் தலைமையிலான குழு, ஒரு எலியை வைத்து ஆராய்ச்சி செய்ததில்தான் இந்த உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறது.
உடற்பயிற்சி செய்வதால், செயற்கை முறையில் ரத்தத்தில் இருக்கும் ‘ஐரிசின்’ அளவை அதிகரிக்க முடியும். அது, கற்றல் மற்றும் ஞாபகம் தொடர்பான மரபணுவை செயல்பட வைக்கும் என்றெல்லாம் பட்டியல் போடுகிறது இந்த ஆய்வு. சுருக்கமாக, ‘உடற்பயிற்சி, மூளையில் அறிவாற்றல் தரும் செயல்பாட்டை மேம்படுத்தும். நரம்புத் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும்’ என்று அடித்துச் சொல்கிறார்கள் இந்த ஆய்வை நடத்தியவர்கள். அதாவது, மன அழுத்தம், பக்கவாதம், அல்ஜீமெர்ஸ் நோய் (Alzheimer’s disease) போன்ற நரம்பியல் நோய்கள் நெருங்குவதற்கான வாய்ப்பை உடற்பயிற்சி தடுத்துவிடும் என்கிறார்கள். இந்த ஆய்வு முடிவுகள், ‘செல் மெட்டாபோலிஸம்’ (Cell Metabolism) என்ற இதழில் வெளியாகி இருக்கின்றன.
அறிவாற்றல் கூடும்… நரம்பியல் நோய்கள் நெருங்காது என்பதே நல்ல செய்திதானே! உடற்பயிற்சியைக் கொண்டாடலாம்!
– பா. வினோதினி