தோழி நியூஸ் ரூம்!

கௌரவக் குடியுரிமை! 

Image

மைதிக்கான நோபல் பரிசு தொடங்கி, இந்தியா வழங்கும் ‘சர்வதேச புரிதலுக்கான ஜவஹர்லால் நேரு விருது’ (Jawaharlal Nehru Award for International Understanding) வரை எத்தனையோ விருதுகளைப் பெற்றவர் ஆங் சான் சூகி. மியான்மரின் எதிர்க்கட்சித் தலைவர். அப்படி பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பாக அவருக்கு வழங்கப்பட்ட விருதுகளில் ஒன்று, ‘ரோம் நகரில் வசிப்பதற்கான கௌரவக் குடியுரிமை’. 1994ல் இந்தக் குடியுரிமை ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்டாலும் அவரால் அதைப் பெற முடியவில்லை. காரணம், பல ஆண்டுகளாக அவர் வீட்டுச் சிறையில் இருந்தார். சமீபத்தில் (அக்டோபர் 27), அந்தக் குடியுரிமையை நேரில் சென்று பெற்றுக் கொண்டார் ஆங் சான் சூகி. ரோம் நகர மேயர் தன் ட்விட்டர் பக்கத்தில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்… ‘’19 வருடங்களுக்கு முன்னால் வழங்கப்பட்ட இந்த விருது, கடைசியில் சுதந்திரம் பெற்ற பெண்மணிக்கு போய்ச் சேர்ந்திருக்கிறது’’.

2007ம் ஆண்டு கனடா அரசும், ஆங் சான் சூகிக்கு தங்கள் நாட்டின் கௌரவக் குடியுரிமையை வழங்கியிருக்கிறது. ரோம் நகரின் கௌரவக் குடியுரிமையோடு நின்றுவிடவில்லை சூகியின் பயணம். இத்தாலியின் மற்றொரு பெரிய நகரமான போலோக்னா (Bologna) குடியுரிமையையும் பெற இருக்கிறார்.

ரோம் நகரில் பேசியபோது ஆங் சான் சூகி இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்… ‘‘நான் ஸ்பெஷலாக எதையும் செய்துவிடவில்லை. அப்படியான வாய்ப்புகள் என் வாழ்க்கையில் அமைந்தனவே தவிர, நான் தியாகம் ஒன்றும் செய்துவிடவில்லை’’.

தடைகளைத் தாண்டியவர்கள்!

Image

டந்த வாரம் சனிக்கிழமை சவூதி அரேபியாவில் அது நடந்தது. சவூதியில் பெண்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளில் முக்கியமான ஒன்று, பொதுவெளியில் கார் ஓட்டுவதற்கான தடை. அது சட்டத்துக்குப் புறம்பானது. குற்றம். அதை மீற முடிவெடுத்தார்கள் சில பெண்கள். அதற்கான பிரசாரம் சில நாட்களுக்கு முன்பாக இணையதளத்தில் அறிவிப்பாக வெளியானது. சில பெண்கள் தாங்கள் கார் ஓட்டும் புகைப்படத்தையும் கூட வெளியிட்டிருந்தார்கள். ‘வாருங்கள் பெண்களே கார் ஓட்டுவோம்!’ என்ற அந்த அறிவிப்பு எத்தனையோ பெண்களின் கவனத்தை ஈர்த்தது. சிலர் மட்டும் அதை செயல்படுத்த முடிவெடுத்தார்கள். அப்படி கார் ஓட்டிய 16 பெண்களைப் பிடித்து அபராதம் விதித்திருக்கிறது சவூதி காவல்துறை. அதோடு, அந்தப் பெண்களின் தந்தை, கணவர், சகோதரர், பேரன் போன்ற காப்பாளர்களிடம் ஒரு கையொப்பமும் பெறப்பட்டிருக்கிறது. ‘அரசாங்கத்தின் சட்டத்தை மதிப்போம்’ என்று எழுதி கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள் அவர்கள்.  

பெண்கள் கார் ஓட்டப் போகிறார்கள் என்று தெரிந்ததுமே, சில பெண்களுக்கு உள்துறை அமைச்சகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. ‘கார் ஓட்ட மாட்டோம்’ என்று சத்தியம் செய்யச் சொல்லியிருக்கிறது. அதோடு, ‘பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்கள், அதற்கு ஆதரவாக இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற எச்சரிக்கையும் விடப்பட்டது. அதையும் மீறித்தான் பெண்கள் கார் ஓட்டியிருக்கிறார்கள்.

சவூதியில் கிட்டத்தட்ட 17,000 பெண்கள் ‘நாங்கள் கார் ஓட்ட அனுமதிக்க வேண்டும்’ என்று அரசுக்கு ஒரு விண்ணப்பமும் விடுத்திருக்கிறார்கள். இன்னும் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. அதற்கான, அடையாளப் போராட்டம்தான் சமீபத்தில் நடந்த நிகழ்வு என்கிறார்கள். கார் ஓட்டிய பெண்களிடம் கிட்டத்தட்ட 300 ரியால் அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் ரூபாய்.

உரிமைக்குரல்! 

Image

சில சமயங்களில் எதிர்க் குரல் கொடுத்தால்தான் நீதி கிடைக்கிறது. பொறுமைசாலிகள், காலமெல்லாம் என்ன கஷ்டம் என்றாலும் சகித்துக் கொண்டே வாழ வேண்டியதுதான். சமீபத்தில் எதிர்க்குரல் கொடுத்த ஒரு பெண்ணின் குடும்பத்திற்கு நீதி கிடைத்திருக்கிறது.

தெற்கு மும்பையில் இருக்கும் மலபார் ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் ஷா. அவர், அவர் மனைவி, இரண்டு குழந்தைகள் எல்லோருமாக ஒரு தனியார் ஸ்லீப்பர் பஸ்ஸில், சூரத்திலிருந்து மும்பைக்குப் பயணம் செய்திருக்கிறார்கள். அது, சூரத்தைச் சேர்ந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்து. நான்கு டிக்கெட்டுக்குப் பயணக் கட்டணமாக 1,600 ரூபாய் கொடுத்திருக்கிறார் பிரதீப். இரவுப் பயணம். பஸ்ஸில் ஏறிய பிறகு அதன் நிலைமையைப் பார்த்து அரண்டு போனார் பிரதீப்பின் மனைவி. அவ்வளவு அழுக்கு. இருக்கைகளுக்கு மேல் இருந்த விளக்குகள் எரியவில்லை. விளக்கைப் போட வேண்டிய ஸ்விட்ச் உடைந்து கிடந்தது. ஜன்னல் கண்ணாடியில் ஓட்டைகள். போதாததற்கு சில உடைந்த ஜன்னல் கண்ணாடித் துண்டுகள் அவர்கள் அமர வேண்டிய இருக்கையில் விழுந்து கிடந்தன. இதுவாவது பரவாயில்லை… இரவு 11:30க்குக் கிளம்ப வேண்டிய பேருந்து, 1:20க்குத்தான் கிளம்பியது. ஒவ்வொரு 15-20 நிமிடங்களுக்கும் பஸ் நிறுத்தப்பட்டது. வழியில் நிற்கிறவர்களையெல்லாம் ஏற்றினார்கள். ஏறியவர்கள், இவர்களின் இருக்கைக்கு அருகே நின்று, இவர்கள் மேலேயே சாய்ந்து விழுந்தார்கள்.

மனைவி சொன்னதன் பேரில், டிரைவரிடமும் அவரின் உதவியாளரிடமும் போய் புகார் கொடுத்தார் பிரதீப்.

‘‘என்ன இப்போ… கண்ணாடியிலே ஓட்டைதானே… கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க. ராத்திரி நேரம்… எப்படி இருந்தாலும் கொஞ்ச நேரத்துல தூங்கப் போறீங்க… அப்புறம் எதுக்கு லைட்டு? உங்களுக்குத்தான் சீட்டு இருக்குல்ல… அப்புறம் எதுக்கு மத்தவங்களைப் பத்திக் கவலைப்படுறீங்க? அவங்க எங்கேயோ, எப்பிடியோ சாஞ்சு தூங்கிட்டுப் போறாங்க…’’ என்று எகத்தாளமாக பதில் கிடைத்திருக்கிறது.

பிரதீப்பும் அவர் மனைவியும் ஜன்னல் ஓட்டைகளை ஒரு பேப்பரைக் கொண்டு அடைத்திருக்கிறார்கள். இதைவிடக் கொடுமை ஒன்று நடந்திருக்கிறது. பிரதீப்பின் மனைவிக்கு இயற்கை உபாதை. அவர் சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதற்காக வழியில் நிறுத்தச் சொல்லி டிரைவரிடம் கேட்டிருக்கிறார் பிரதீப். ‘‘அதெல்லாம் நிறுத்த முடியாது. நாங்க வழக்கமா ஒரு ஓட்டல்ல சாப்பிடுறதுக்கு நிறுத்துவோம். அங்கே போய்க்கச் சொல்லுங்க. வேணும்னா, ஒரு பிளாஸ்டிக் கவர்ல போகச் சொல்லுங்க’’ என்று அசிங்கமாக பதில் வந்திருக்கிறது.

ஊருக்குத் திரும்பிய பிரதீப் சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். எந்த பதிலும் இல்லை. வேறு வழியில்லாமல், மும்பை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகினார். பிரதீப்பும் அவர் குடும்பமும் அடைந்த வேதனைக்கு பிராயசித்தமாக டிக்கெட் தொகையோடு 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடும் வழங்க உத்தரவிட்டிருக்கிறது நுகர்வோர் நீதிமன்றம்.

Photo Courtesy: http://cdn.lightgalleries.net/ and http://cdn-wac.emirates247.com

தொகுப்பு: பாலு சத்யா

(மேலும் ‘தோழி நியூஸ் ரூம்’ செய்திகளுக்கு நவம்பர் 1-15 ‘குங்குமம் தோழி’ இதழைப் பார்க்கவும்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s