குழந்தையின் தளர் நடையை இறைஞ்சிப்பெறவே
நடன தேவதை தவங்கிடக்கிறாள்.
குழந்தையின் மழலை மொழியின்முன்
இசையின் சாம்ராஜ்யமே மண்டியிடுகிறது.
குழந்தைக்குத் தெரிந்திருக்கிறது
பந்தினைப் பூமியுருண்டையாக்கவும்
பூமியுருண்டையைப் பந்தாக்கவும்.
நிலாவைக் காட்டிச் சோறூட்டிவிட்டதாக
சாமர்த்தியம் பேசுகிறோம்
குழந்தை
நிலாவை உண்டுவிட்டதை
அறியாத நாம்.
விரட்டியடிக்கப்பட்டு அகதிகளாகிப்போன
வனதேவதையும் கடல் கன்னியும் ஆகாய ராஜனும்
குழந்தைகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்
குழந்தைகள் கட்டிய மணல்வீடு முகாம்களில்
குடியிருக்க.
பெரியவர்கள்
இதயத்தைப் பொம்மையாய் வைத்திருக்கிறார்கள்
குழந்தைகளோ
பொம்மைக்கும் இதயத்தைப் பொருத்திவிடுகிறார்கள்.
பெரியவர்களிடம்
அடம்பிடித்து அழுதுவாங்க
குழந்தைகளுக்கு ஏராளமானவை இருக்கின்றன
பலூன்கள்…சாக்லேட்டுகள்…
ஐஸ் கிரீம்…பொம்மைகள்…
குழந்தைகளிடம் யாசிக்க
பெரியவர்களுக்கு
ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது…
“மனசு”
– நா.வே.அருள்
Image Courtesy: http://edfromct.files.wordpress.com