இதுதானே பூரணம்?
நவம்பர் 16 அன்று, 100 வயதில் இயற்கை எய்தினார் எழுத்தாளர் பூரணி. அவரது நினைவுகளைப் பகிர்கிறார், அவரது மகள் கவிஞர் க்ருஷாங்கினி…
‘‘எனக்கு அப்போது 9 வயது. திடீரென சொத்து எல்லாம் இழந்து, அடுத்த வேளை சாப்பாடே கேள்விக்குறியான நிலையில் போராட்டமான வாழ்க்கை. ஒரு நாள் க்ரீம் பிஸ்கெட் சாப்பிட வேண்டுமென ஆசை. அம்மா, அண்ணன் என எல்லோரும் கஷ்டத்தில் இருக்கும் போது, யார் க்ரீம் பிஸ்கெட் வாங்கித் தருவார் என்கிற ஏக்கத்தில் அதை ஒரு கதையாக எழுதி, தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டேன். அதை எடுத்துப் பார்த்த அம்மா ரொம்பவும் நெகிழ்ந்து போனார். அதுதான் என்னுடைய முதல் எழுத்து.
அம்மாவின் வழிகாட்டுதல்தான் என்னையும் இலக்கியத்துக்குள் இழுத்தது. சிறு வயதிலேயே வாழ்க்கையை, அதன் யதார்த்தத்தைத்தான் பதிவு செய்ய வேண்டும் என்பதும் புரிந்தது. அம்மாவின் எழுத்துப் பாணியும் எனது எழுத்து வகையும் வேறு வேறு. ஆனாலும், உள்ளது உள்ளபடி எழுதுவதென்பது அம்மாவின் பாடம்தான்.
அம்மா மூன்றாம் தலைமுறையின் பிரச்னைகளைக்கூட எப்படி எடுத்துக் கொண்டார் என்பது எங்கள் எல்லோருக்கும் பெரிய ஆச்சரியம். என் மகள் 3 வயது முதல் பரதக் கலையில் ஈடுபாடு கொண்டிருந்தாள். அவள் திருமணமும் அதைத் துண்டிக்காததாக இருக்க வேண்டும் என எண்ணினோம். ‘பொருளாதாரம் ஒரு பொருட்டல்ல… நாட்டியம் தொடர வேண்டும்’ என்று ஒருவருக்கு மணமுடித்துக் கொடுத்தோம். நாட்டியம் ஆடுபவர் என்பதை இருபதாம் நூற்றாண்டிலும் வேறு வகையில் புரிந்து கொண்டவராக இருந்தனர் அந்த ஆணும், அவரைச் சார்ந்தவர்களும். மேலும், திருமணத்துக்கு ஏற்றவரல்லாத ஒரு ஆண் என்பதையும் நாங்கள் அறியாமல் திருமணம் முடிந்திருந்தது. திருமணம் முடிந்து 10 நாட்களிலேயே இதில் ஏதோ சிக்கல் என்று எங்களுக்குப் புரிய வந்தது. அப்போது நாங்கள் அம்மாவின் எதிர்வீட்டில்தான் குடியிருந்தோம். 3 மாதங்கள் வரை இயல்பாகவே நடந்து கொண்டோம். எங்கள் மகளின் வேதனைகளுக்கு விவாகரத்து ஒன்றே வழியென தீர்மானம் செய்தோம். அம்மா, அண்ணன், அண்ணி என எல்லோரிடமும் சொன்னோம். அம்மா வயதானவர், எப்படி எடுத்துக் கொள்வாரோ என்ற பயமும் பதற்றமும் இருந்தது. சொல்லி முடித்தவுடனேயே அம்மா, ‘எனக்கு முன்னமே சந்தேகம்தான். புதிதாக திருமணமான ஆணின் எந்தச் செயலும் அவனிடமில்லை. இந்த மாதிரி திருமணம் தேவையில்லை’ என்றார். அந்த ஆணைச் சேர்ந்தவர்களை தன் வீட்டுக்கு அழைத்தார். வந்தவர்கள், அம்மா வயதில் பெரியவர், அதனால் அவமானம் கருதி பேத்தியை தங்களுடன் அனுப்பி வைத்து விடுவார் என்ற எண்ணத்தில் பேசினார்கள். அம்மா அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு ‘இப்படியொரு கல்யாணம் நடக்கவில்லை என்றே நினைக்கிறேன். இது கல்யாணமும் இல்லை. என் பேத்திக்கு கையில் கலை இருக்கிறது. அதன் எதிர்காலம் பரந்து கிடக்கிறது. தயவுசெய்து எல்லோரும் எழுந்து வெளியே போங்கள். இது கனவு என்று நாங்கள் நினைக்கத் தொடங்கி வெகு காலம் ஆயாச்சு’ என்றார். அதிர்ந்து விட்டனர். தங்கள் தவறுக்கு மன்னிப்பும் கேட்டனர். ஆனாலும். சமுதாயமும் உறவுகளும் (அம்மாவைத் தவிர) எங்களுக்கு நிறைய பாடம் கற்றுக் கொடுத்தது. அதைத்தொடர்ந்து என் மகளுக்கு வேறொரு நல்ல வாழ்க்கை அமைந்ததும், அதைப் பார்த்து அம்மா மகிழ்ந்து, நெகிழ்ந்ததும் தனிக்கதை. அப்போது அம்மாவுக்கு வயது 86!
என்ன சொன்னார்களோ, என்ன எழுதினார்களோ அப்படியே வாழ்ந்தவர் என் அம்மா. திருமணம் அவரவர் விருப்பம் சார்ந்தது என்பதில் மிகுந்த தெளிவு கொண்டவர். ‘பொருந்தாத போது கழட்டி எறிய வேண்டியதுதானே?’ என்பார். ‘காலுக்கு ஆகாத செருப்பை கழட்டி எறி… எப்பவோ மாட்டிண்டு கழட்டிப் போடற செருப்புக்கே இந்த சுதந்திரம்னா, எப்பவுமே கூட இருக்க வேண்டிய கல்யாணத்துல ஒட்டாம எப்படி இருக்கிறது?’ என்பார்.
100 வயது வரை என்னுடன் இருந்த என் அம்மா, இப்போதும் என்னுடனேயேதான் இருக்கிறார். இருப்பார். தன்னுடைய எழுத்துகள் அத்தனையையும் எனக்கு சொத்தாக விட்டுச் சென்றிருக்கிறார். எழுத்துதான் எனக்கு அம்மா அன்றும் இன்றும் என்றும்…’’
தொகுப்பு: ஆர்.வைதேகி
பூரணியின் சில படைப்புகள்…
வயிறு (சிறுகதை)
அன்று ஒரு காரியமாக என் சினேகிதி கமலா மாமியின் வீடு சென்றேன். அது ஒரு வசதியான குடும்பம். குழந்தைகள் சாப்பிட அமர்ந்திருந்தனர். சமையற்கார அம்மாள் பரிமாற வந்தாள். எனக்கு அவளை அங்கு பார்த்தும் ஒரு ‘ஷாக்’. அவள் எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவள். பெயர் காமாட்சி… ‘காமு’ என எல்லோராலும் அறியப்பட்டவள். அவளும் என்னை அங்கு பார்த்ததும் திகைத்து நின்று விட்டாள். முகத்தில் சற்று வெட்கம் கலந்த சோகம். நான் என்னை சமாளித்துக் கொண்டு, “அடி காமு, நீ எப்படியடி இங்கு வந்தாய்?” என்று கேட்டேன். காமு, “வயிறு இருக்கிறதே!” என்று பதில் சொன்னாள். கமலம் மாமி, “இவரை உங்களுக்குத் தெரியுமா” என்று கேட்டார். “தெரியும், எங்கள் கிராமம்தான். தூரத்துச் சொந்தம்கூட” என்றேன். காமுவின் முகம் மலர்ந்தது.
வீட்டுக்கு வந்த பிறகு, எனக்குக் காமுவின் நினைவாகவே இருந்தது. அவள் தகப்பனார் பஞ்சு சாஸ்திரிகள் வைதீகம். ஏதோ கொஞ்சம் நிலபுலம், இருக்க வீடு என்று இருந்தது. எங்கள் வீட்டில் என் தகப்பனார் செய்யும் சிரார்த்தத்தில் பஞ்சு சாஸ்திரிகளும் ராமசாமி ஐயரும்தான் பிராமணார்த்தம் சாப்பிட அழைக்கப்படுவார்கள். ஏனெனில், என் தகப்பனாருக்கு நன்கு தாங்கிச் சாப்பிடுபவர்களைத்தான் அழைக்கப் பிடிக்கும். (இவர்கள் இருவரும் அப்படிப்பட்டவர்கள்.) கொறிப்பது போல் சாப்பிடுபவர்களை கூப்பிடமாட்டார். ரசித்து, ருசித்து திருப்தியாக அவர்கள் சாப்பிடுவதை என் தகப்பனார் பிரம்மானந்தமாகப் பார்த்துக் கொண்டிருப்பார்.
பஞ்சு சாஸ்திரிகளுக்கு காமு ஒரே மகள். பிள்ளைகள் மூவர். மூவரும் படித்து வேலை பார்த்துக் கொண்டு அவரவர் குடும்பத்தை கவனித்துக் கொண்டனர். சாஸ்திரிகள் அவர்களிடமிருந்து எதுவும் எதிர்பார்க்கவில்லை. காமுவை நல்ல இடத்தில் வரன் பார்த்து, திருமணம் செய்து கொடுத்ததாகக் கேள்விப்பட்டிருந்தேன். பத்து வருடங்களுக்குப் பிறகு இன்று இப்படி சந்திக்க நேர்ந்தது.
சில நாட்கள் சென்றிருக்கும். காமு என் வீட்டுக்கு வந்தாள். ‘‘வா’’ என்றேன்.
“மாமி, அன்று உங்களைப் பார்த்ததும் எனக்கு மனதில் ‘திக்’கென்று ஆகி விட்டது. ஆனால், நீங்கள் மிக சகஜமாக என்னைத் தெரியுமென்றும், நான் உங்கள் உறவினள் என்றும் அந்த அம்மாளிடம் சொன்னது எனக்கு ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. இவ்வளவு வசதி படைத்த நீங்கள் என்னை உறவினள் என்று சொல்லிக் கொள்ள முடிந்தது என்றால் உங்கள் மனசு எவ்வளவு விஸ்தாரமானதாக இருக்க வேண்டும்!”
“இதில் என்னம்மா அதிசயம்? இன்று நீ சமையற்காரியாக இருப்பதனாலேயே உறவு இல்லையென்று போய்விடுமா? சரி, அதை விடு. உன்னை நல்ல இடம் பார்த்துத்தானே உன் தந்தை மணம் செய்து கொடுத்தார், பின் ஏன் இந்த நிலை?”
“புக்ககம் இன்றும் வசதியாகத்தான் இருக்கிறது. ஆனால், எனக்குத்தான் அங்கு வாழக் கொடுத்து வைக்கவில்லை. பத்து வருடம் வாழ்ந்தேன். என்றாலும் ஒரு குழந்தைக்குத் தாயாகும் அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது. கணவர் இறந்தபின் பிறந்தவீடு வரவேண்டியதாகி விட்டது. புக்ககத்தார் எனக்கு ருபாய் 25 ஜீவனாம்சமாகக் கொடுக்கிறார்கள். அப்பா உயிரோடு இருந்தவரை சிரமம் தெரியவில்லை. என் ஜீவனாம்சத் தொகையைக் கூட சேர்த்துத்தான் வைத்தார். அவர் உடல் நலம் கெட்டதும் அந்தப் பணம் வைத்தியச் செலவில் தீர்ந்துபோய் விட்டது. அப்பா சாகும்வரை எட்டிக்கூடப் பார்க்காத பிள்ளைகள் அவர் இறந்த பிறகு நிலத்தை பங்கிட்டுக் கொண்டு போய் விட்டார்கள். ஏதோ பெரிய மனது செய்து வீட்டை விற்காமல் நான் உயிருடன் இருக்கும் பரியந்தம் அதில் வசித்துக் கொள்ள அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அவ்வளவுதான், அதன் பிறகு என்னைப் பற்றி விசாரிப்பது கூடக் கிடையாது. என்ன செய்வது? பிரும்மா தோண்டின வயிற்றை தூர்க்க முடியுமா? சௌகர்யமானவர்களுக்கு சாண் வயிறு என்றால், எனக்கோ சர்வாங்கமும் வயிறாக இருக்கிறது.”
“கமலம் மாமி வீட்டில் உனக்கு வசதியாக இருக்கிறதா?”
“எப்படி இருக்க முடியும்? அந்த வீட்டில் எல்லாம் ரொம்பக் கணக்கு கச்சிதம். அவர்கள் எல்லோரும் சாப்பாட்டைக் கொறிக்கிறவர்களாய் இருக்கிறார்கள். ஆனால், ஹார்லிக்ஸ், பால், பழம் எல்லாம் அவர்களால் சாப்பிடமுடிகிறது. அவர்களெல்லாம் மூன்றே தோசையோடு எழுந்துவிடும்போது நான் மாத்திரம் அதிகம் சாப்பிட முடியுமா? தட்டின் முன் உட்கார்ந்தால் வயிறு நிறைய சாதம் பரிமாறிக் கொள்ள எனக்கே வெட்கமாக இருக்கு. பாடுபட்டும் வயிறார பசிதீர சாப்பிட முடிவதில்லை. ஊருக்கே போய்விடலாம் என்று இருக்கிறேன். வரும் ஜீவனாம்சத்தில் குருணைக் கஞ்சியானாலும் வயிறு நிறைய, சங்கோஜப்படாமல் குடித்துக் கொள்ளலாம் அல்லவா?”
***
பூரணியின் நினைவலைகள்…
முதுமை
‘தாயும் பிள்ளையும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வேறு’ என்பது பழ மொழி. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ரத்த பாசமும் அன்பும் உண்டுதான் என்றாலும், அதைவிடச் சற்று தூக்கலானதுதான் தன் நலன் பேணல். ஒவ்வொரு ஜீவனும் தன் வாழ்வின் பொருட்டுத்தான் உலகில் இயங்குகிறது. தனக்கு மிஞ்சிய பிறகுதான் தான தருமம் செய்யமுடியும். ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் திருமணம், குழந்தைப்பேறு, அவர் களுக்குச் செய்யவேண்டிய வளர்த்தல் படிப்பித்தல் போன்ற கடமைகள் எல்லாம் இயற்கையாக இருக்கிறது. ஆனால், அவர்கள் தமது பெற்றோருக்கு முதுமையில் செய்தல் என்பது கடமைக்காகவே அன்றி இயற்கையானது அல்ல என்றே சொல்லத் தோன்றுகிறது. உலகில் அனைத்து ஜீவராசிகளும் வளர்ந்தபின் தனித்துப் போவதுதான் இயற்கையாக உள்ளது.
உண்மையாகச் சிந்திப்போமானால், நம் குழந்தைகளை நாம் வளர்த்தது போல, அவர்கள் தாங்கள் பெற்றவைகளை வளர்த்து ஆளாக்க நினைப்பது தான் ஞாயம். அதுதான் இயற்கை. ஆனால், மனித குலம் தனக்கென சில விதிமுறைகளை வகுத்துக்கொண்டு, தன்னுடையது பிறருடையது என்னும் பாகுபாட்டை உண்டாக்கிக் கொண்டு செயல்படுவதால் ஏழை, செல்வந்தர் என்பன போன்ற பல இருமைகளை ஏற்றுச் செயல்படத் தேவைப்படுகிறது. பொருளாதார வசதி உள்ள சிலர் தமது முதிய காலத்தில் தாம் பெற்ற மக்களின் கையை எதிர் பார்க்காதவர்களாக இருக்க முடிகிறது. பலரால் அவ்வாறு இருக்க முடிவதில்லை.
வாய்விட்டுச் சொல்ல மனித நாகரிகம் இடம் தராவிட்டாலும் மனதில் சற்று பாரம் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் பொருளாதார உரிமையற்ற வயோதிகப் பெண்களுக்கு இந்த நிலை மிகுந்த சிரமத்தைக் கொடுக்கிறது. முன் அறிமுகமாகாத ஆணாக இருந்தாலும் மணமான பின்பு கணவன் என்ற உரிமையில் தனது சம்பாத்யத்தை செலவு செய்வதில் சிரமம் இருப்பதில்லை. ஆனால், பத்து மாதம் சுமந்து பெற்று, வளர்த்திருந்தாலும் ஒரு தாய்க்கு மகனின் வருமானம் அன்னியமானதே. அதில் உரிமை பாராட்ட முடியாது. அதேபோல, குடும்பத்தில் மூத்தவளாக அவர்களோடு வாழ்ந்து வந்தாலும் சற்று அன்னியமாகி விடுகிறாள். விவேகியாக இருந்தால் உரசல் ஓசைப்படுத்துவது இல்லை. சராசரியான இடங்களில் ஒலியெழுப்பி அபஸ்வரத்தை உண்டாக்கி விடுகிறது. இது போன்ற சூழ்நிலைகளிலிருந்து தப்பிப்பதற்கு அந்த நபர் கலை, இலக்கியம், இசை, ஆன்மீகம் போன்ற எதிலாவது ஈடுபாட்டை வளர்த்துக் கொண்டிருந்தால் நெருக்கடியைச் சமாளிக்க உதவிகரமாக இருக்கிறது. சராசரியாக வாழப் பழக்கப்பட்டவர்கள் அந்தத் தருணங்களில் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். தன்னை ஒரு அகதி போல் உணர்ந்து அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்.
இக்கால தர்மம் பணம் தேடல், சுயநலம் பேணல், என்னும் ஒரு சூழலில் சிக்குண்டு இருக்கிறது. மனித மனங்கள் இயந்திரத் தனமாக மாறி வருகின்றன. சூழ்நிலைகளின் கட்டாயத்தினால் பெண்களும் படிப்பையும் சுய சம்பாத்யத்தையும் விரும்புகிறார்கள். ஆனாலும் இல்லத்தை பராமரிப்பது, வீட்டுக் கடமைகள் போன்றவற்றிலிருந்து விடுபடமுடிவதில்லை. விடிவதற்கு முன் எழுந்து, ‘கிரைண்டர்’ போன்ற பல மின் கருவிகளின் உதவியுடன் தானும் ஒரு இயந்திரமாக மாறி செயல்பட்டால்தான் அவளால் காரியாலயம் செல்ல முடியும் என்ற சூழ்நிலையில், மனதில் அமைதி, நேசம், அன்பு எல்லாம் வெளிப்பட முடியாமல் போய்விடுகிறது. ஆணும் பெண்ணும் ஆய்ந்து ஓய்ந்து காரியாலயத்திலிருந்து திரும்பும் நேரத்தில் அவர்களுக்குள் சோர்வும் அலுப்பும் இருப்பதால் வீடு மௌனத்தில் ஆழ்ந்து கலகலப்பு இன்றி தோற்றமளிக்கிறது. இது போன்ற பல மாற்றங்களால்தான் இந்தியாவிலும் முதியோர் இல்லம் பெருகிவருகிறது.
***
கால மாற்றம்
ஒரு எழுபது வருடங்களுக்கு முன்னால், இருந்த குடும்பஸ்தர்களுக்கு எட்டு, பத்து என்று குழந்தைகள் பிறந்தன. காரணம் குடும்பக் கட்டுப்பாட்டு முறை தெரியாது என்பது மட்டும் அல்ல. அக்காலத்திலும் அதற்கு சில வேறுவிதமான முறைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால், பொதுவாக அந்தக்கால மக்கள் கடவுளையும், பாப புண்ணியத்தையும் நம்பினார்கள். கருக்கலைப்பு மஹா பாபம் என்று கருதினார்கள். ஆனால், செயலும் விளைவும் தவிர்க்க முடியாதது. நமக்கு முன்னோர்கள் விதித்த ஒழுக்க நெறியும், மனக் கட்டுப்பாடும் இல்லாத போது, விளைவை அனுபவித்துத்தான் தீரவேண்டும் என்ற நம்பிக்கையோடு, வறுமையிலும் கூட சகிப்புத்தன்மையோடு குழந்தைகளை வளர்த்தார்கள்.
அந்தக் காலத்தில் ஏதோ ஒரு பத்திரிகையில் ஒரு பாட்டு, “காதலுக்கு வழிவைத்து கர்ப்பத்துக்கு தடை வைத்து” என்பதான தலைப்பில். குழந்தைகள் பெறாமல் மனம்போல் உடலுறவுக்கு வழி கண்டுபிடிக்க வேண்டும் என்னும் பொருள் பற்றி எழுதியிருந்த பாட்டு அது. அன்று அந்தப் பாட்டை எழுதியவர் மீது எனக்கு அசாத்தியமான கோபமும் வெறுப்பும் உண்டானது. ஆனால், எங்களைப் போன்றோரின் எண்ணத்தால் இன்று நம்நாட்டில் தாங்க முடியாத ஜனத்தொகை, வறுமை காரணமாக இருக்க நிழல் வேண்டி ஏரிகளில் எல்லாம் குடிசை. அந்த மக்களின்மீது கொஞ்சம் பரிதாபமும், கொஞ்சம் பணம், ஓட்டு முதலிய ஆசையும் கொண்டு அவர்களுக்கு அதற்கு அனுமதியும், நிலப்பட்டாவும் மின்சார வசதியும் அளித்துவிட்டு, இன்று அசுரத்தனமாக வீடுகளை இடித்தல். இருக்க இடமில்லை, குடிக்க நீர் இல்லை, உண்ண உணவில்லை என்று பாமர மக்களின் தவிப்பு. அன்று கருத்தடையைப் பாபமாகக் கருதிய என் போன்றவர்களே இன்று பேரன் பேத்திகளை முழு மனதோடு தடுத்துக்கொள்ள புத்தி சொல்கிறோம்.
இதே போல்தான், கால மாற்றத்தை உணராமல் கற்பு என்ற போர்வைக்குள் பெண்களை மூடிவைத்து ஆண்களின் சீக்கை வாங்கி அல்லலுற வைப்பதும். ஆண்கள் ஒழுக்கத்துக்குக் கட்டுப்பட மாட்டார்கள் என்னும்போது, பெண்கள் தடுப்பு செய்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும். இதில், கன்னியா சம்சாரியா என்னும் கேள்விக்கே இடமில்லை. சூழ்நிலை பாதகமாக இருந்தால் தற்காப்பு செய்துகொள்வது தப்பல்ல. முப்பது வயதுக்கு மேலும் முதிர் கன்னியாக வாழும் அவலம் இன்று பெண்களுக்கு வாய்த்திருக்கிறது. இந்நிலையில், உத்தியோகம் வேறு பார்க்க நேர்கிறது.
***
கவிதைகள் (எழுதிய காலம் – 1930-45)
நலங்குப்பாடல்
இது தருணம் வருவீரே நாதா
என்னரும் நேசரே
பொன்னெனும் மாலை
தன்னிலே நலங்கிடவே (இ)
மாலையில் மேற்கே மறைந்திடு ரவியுடன்
நீல நிறமுடைய வானில்
கோலமுடைய பக்ஷி ஜாலங்கள் பறந்து
கூட்டினின் அடையுது பாரீர் (இ)
பசிய புல்வெளியில் பசுக்களும் மேய்ந்து
பசி ஒழித்து கன்றை நினைந்து
விசையுடன் வீட்டை நோக்கியே வந்திடும்
வேளையிதே வருவீரே (இ)
பூஜைக்குகந்த நல்ல பூ பழம் தேங்காய்
பூவையர் கரமதில் ஏந்தி
ஆலயம் செல்லும் அற்புத வேளையில்
ஆனந்த நலங்கிடுவோமே (இ)
***
நாகரிக ஓடம்
கணபதியே கலைமகளே இந்தக் கப்பல் செல்ல அருள் புரிவீர். கடுகியே முன் காலமதில் பெண்கள் உடை நகையும் இக்கால மடமயிலார் புடவையுடன் நகை விரைந்துரைக்க வரம் தருவாய்.
முடுகு
சுட்டி பட்டம் ஜடை
சிங்காரம் போச்சு
இஷ்டமுடன் தலையிலே
சிலைடு ரிப்பன் ஆச்சு
புஷ்பங்கள் தலையிலே
தைப்பதும் போச்சு
பிச்சோடா மேல் வளைத்துப்
பூ வைக்கலாச்சு
கம்மலுடன் வாளிகளும்
குண்டலமும் போச்சு
கமலங்களால் செய்த
டோலக்குமாச்சு
புல்லாக்கு நத்து நகை
இல்லாது போச்சு
பேசரியுடன் கிளாவர்
ஆசை நகை ஆச்சு
பசு மஞ்சள் பூசுவது
பழமையாய் போச்சு
பவுடர் முகம் தன்னில்
பூசிடவும் ஆச்சு
உட்கழுத்து அட்டிகை
செயினெல்லாம் போச்சு
மிக்க நகை அணிவதே
மௌடீகமாச்சு
காப்புடன் கொலுசுகளும்
கனத்த நகை போச்சு
கையிலே கடிகாரம்
சன்ன வளையாச்சு
கொட்டடிச் சேலைகளைக்
கட்டுவது போச்சு
புட்டாக்களோடு சரிகை
புடவைகள் உண்டாச்சு
கட்டமொடு காலிறங்கு
சேலைகளும் போச்சு
மட்டமான கார்டு கரை
டிக்கட் கரை யாச்சு
பெரிய கரைப் புடவைகள்
பழமையாய் போச்சு
பார்டரில் பூ புதுச்சேரி சில்காச்சு
பாதசரம் பட்டாடைகள்
பீலிகளும் போச்சு
பாவையர்கள் பாதமதில்
சிலிப்பர் இடலாச்சு
தண்ணீர் குடம் தூக்கும்
தருணியர்கள் இப்போ
டென்னிஸ் விளையாட
கிளப்புகள் உண்டாச்சு
ஏலேலோ இயற்கையதின் தன்மை எப்போழுதும் மாறுதலே
இதையறியா பல பெரியோர் கண்டு இகழுவதும் அறியாமை.
***
போஜனப் பாட்டு
வித விதமான
விசித்திரப் பந்தலில்
இலை விரித்திருக்கு
போஜனம் செய்யவே
ராஜ ராஜாக்களே
நீர் வாரும்!
ஆசனங்களில் அமர்ந்து
ஆசையாய் உண்டிடும்
பளிங்கினால் பல மேஜை
பவளக்காலொடு குரிச்சி
பரிமாறுபவர் கனச் சுத்தம்
பரிசாரகரோ நளன் மட்டம்
பாதாம் கீர் பால் பாயாசம்
பிரமாதம் கேரளப் பிரதமன்
ஏதேதோ பல பரமான்னம்
எப்படிச் சொல்லுவ துபமானம்
சம்பா அன்னம் பூப்போல்
சுவை கூட்டும் பொன் பருப்பு
சாம்பாரும் தயிர்வடையும்
சாப்பிட உடனே வாரும்
கத்தரிக்காய் ரஸவாங்கி
காரமுள்ள கறிவகைகள்
கொத்தவரை அவரை காரட்
கோசுடன் பலபல காய்கள்
அவியல் பொரியல் துவையல்
வறுவல்களில் பல வகைகள்
புவியில் புகழ் படு துருவல்
பொங்கல் சட்னி கொத்சு
பொரிச்ச கூட்டில் ஆறுவகை
புளிச்ச கூட்டில் வேறுவகை
எரிசேரியுடன் புளிசேரி
எத்தனை கேரள வகைகள்
கர்னாடகா பிஸி பேளா பாத்
காரம்குறைந்த ஹுளி சொப்பு
ஆந்திர ஆயிட்டம் பல கண்டீர்
அதுவும் சாப்பிட உண்டு
கருவட வற்றல் குழம்பு
கண்கவர் கலரில் மோர் குழம்பு
கசக்கா பாவற்காய் பிட்டலை
கலந்திருக்கும் அதில் கடலை
பைனாப்பிள் பன்னீர் ரசங்கள்
சைனாக் கிண்ணியில் ஊற்றி
பருகிடுவீர் சுவைத்திடுவீர்
சுறுசுறுப்பாக்கிடும் மனதை
விளாமிச்சை கலந்த குளிர் நீர்
வெந்நீரும் குடித்திட உண்டு
வேண்டியதெதுவோ கேட்பீர்
விரைவாய் கிடைத்திடும் காண்பீர்
ஜிலேபி லட்டு பால் கோவா
குலாப் ஜாமூன் ஹல்வா
தில்லி பாதுஷா சுருள் பூரி
தித்திக்கும் மைசூர் பாகு
நாக்கில் போட்டால் கரையும்
கேக்குகள் எத்தனை வகைகள்
போக்கிட இனிப்பை பஜ்ஜி
பொங்கல் வடை வகை சொஜ்ஜி
மிக்சர் போண்டா சேவை
பிக்சர் பாப்கார்ன் பக்கோடா
சொச்சம் பலப் பல அயிட்டம்
சொல்வது மிகவும் கஷ்டம்
ஆடை தோய்த்த நல்ல தயிரும்
கூடை கூடையாய் பழவகையும்
ஐஸ்ஸுடனே வாசனை நீரும்
நைசாய் உண்டிட வாரும்
கைகளைக் கழுவவும் வெந்நீர்
ஹாங்கரில் கலர்கலர் டவல்கள்
காஷ்மீர் கம்பள விரிப்பு அதில்
சுவையாய் பீடா ட்ரே இருக்கு.
***
நடமாடும் நரகம்!
செல்பேசும் கருவியோடு
கையதுவோ காதினிலே
வாசலிது எனும் உணர்வை
மறந்த நிலை பரவசங்கள்…
யோசித்தல் எனும் செயலால்
எதிர்வருவோர் தெரிவதில்லை.
ஆக்ஸிடென்ட் அதிகரிப்பு,
அரிய உயிர் மதிப்பிழப்பு,
வேகப்பயணம் செய்
வண்டிகளால் உயிர்ச்சேதம்!
தாகத்தைத் தீர்க்கின்ற
குளிர் பானமதிலும் நச்சு!
மோகம் தருகின்ற
விளம்பரங்களில் மயக்கம்!
நாகரீக வாழ்வு தரும்
நாசமதோ கொஞ்சமல்ல!
(2009ல் எழுதப்பட்டது)
கவிதைகள்
ஆற்று வழி
அமராவதி பாயும் அழகியதோர் சிற்றூராம்
சிற்றூரின் ஆற்றுவழி சிந்தனைக்கு ஊற்றுவழி.
அடைத்திருக்கும் வேலியுள்ளே தழைத்திருக்கும் வெற்றிலையோ
மடைதிறக்க அருவியென வயல் நிறைந்து நீர் நிற்கும்
நீரோடு சேர்த்து சிறு மீன் வந்து துள்ளிவிழும்
துள்ளிவிழும் மீன் பிடிக்க தூரத்தே நாரை வரும்.
வெண்கழுத்துப் பொன் கருடன் வானத்தில் வட்டமிடும்.
சங்கெனவே வெண்கொக்கு தவமிருக்கும் நீர்த் தடத்தில்
முள்முருங்கையின் கிளையில் மாணிக்கம் பூத்திருக்கும்
கள்ளக் கரும் காகம் கண்சாய்த்துத் தேன் குடிக்கும்
கிள்ளை அருகில் வரக் காகம் அதைத் துரத்தும்
முள்ளுக் கிடைத்தாழை மஞ்சள்குளித்திருக்கும்
படர்ந்த செடியினிலே பச்சரிசி போல் அரும்பு
அடர்ந்த இலைகளிலே அழகழகாய்ச் செம்புள்ளி
மூக்குத்தி போன்ற மலர் மலர்ந்து மணம்வீசும்
தூக்கத்திலே கனவாய்த் தோற்றம் அளித்திருக்கும்
தங்கரளிப் பூ சிதறி தரைமுழுதும் பாய் விரிக்கும்
செங்கரும்பு பூத்திருக்கும் சாமரம்போல் ஆடிநிற்கும்
தென்னை பிளந்தளிக்கும் தந்தத்தின் பூச்சரங்கள்
அன்னையின் அன்பெனவே அமுதூட்டும் செவ்விளநீர்
பாறையிடை நாணல் பச்சைக்கொடி காட்டும்
கூரை கவிந்ததெனக் கார்முகில்கள் கூடிவரும்
ஆடிப்பெருக்கெடுத்து அழகு நதி பாய்ந்து வரும்
ஓடிவரும் செங்குழம்பில் உருண்டு வரும் பெருமரங்கள்
ஆடிப்பெருக்கினிலே ஆற்றுவழிக் காட்சியிலே
மோடிக்குப் பாம்பெனவே மனம் நிறைந்து தனை மறக்கும்
(கணியூர் அமராவதி ஆறு பற்றிய இக்கவிதை எழுதிய காலம் 1970. அவர் 1960-64 களில் வசித்த கணியூர் என்னும் சிற்றூர் பழநிக்கு அருகில் அமைந்தது.)
***
எழுத்து
கட்டிடத்தின் மாடியில்
கைப்பிடிச்சுவரை அண்டிய
கற்பாறைச் சந்தில்
விழுந்த ஒரு விதை
காலம் கடந்த நாளில்
செடியாக முளைத்துவிட்டது.
***
Image Courtesy:
http://manakkalayyampet.blogspot.in
http://media-cdn.tripadvisor.com
http://blog.gardenmediagroup.com
http://gorkhatimes.wordpress.com/
பூரணியின் காலத்தை வென்ற கதைகளை வாசிக்க…
good