ஹோமை வியாரவல்லா
இந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் ஹோமை வியாரவல்லா. 13 வயதிலேயே அவருக்குப் புகைப்பட ஆர்வம் வந்தது. 13 வயதிலேயே திருமணம் நடந்தது. பிறந்த (1913 டிசம்பர் 9) ஆண்டிலும் 13 உண்டு. அவரது கார் எண்ணிலும் 13 உண்டு (டிஎல்டி 13). அதனால்தான் அவருக்கு ‘டால்டா 13’ என்ற செல்லப்பெயர். துரதிர்ஷ்ட எண்ணாகக் கருதப்படும் 13, இப்பெண்மணியை மிகப்பெரிய சாதனையாளராகவே மாற்றியிருக்கிறது!
குஜராத்தில் உள்ள நவசாரியில் பிறந்தார் ஹோமை. மும்பையிலும் டெல்லியிலும் கல்வி பயின்றார். ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் பணிபுரிந்த மானக்ஷாவுடன் திருமணம். கணவருக்கு புகைப்படம் எடுப்பதில் தணியாத தாகம். அவருடைய புகைப்படங்கள் பிரபல நாளிதழ்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்து, பாராட்டுகளைப் பெற்றன. ஏற்கெனவே புகைப்படங்கள் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த ஹோமைக்கு கணவரின் ஊக்கம் உற்சாகத்தை அளித்தது. இருவரும் சேர்ந்து புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கினர்.
அதுவரை ஆண்களின் உலகமாக இருந்த புகைப்படக்கலையில் முதல் பெண் புகைப்பட நிருபராக உதயமானார் ஹோமை. அவர் எடுத்த புகைப்படங்கள் பெரிதும் பேசப்பட்டன. இந்திய விடுதலைக்கு முன்பே ஹோமை அரசியல் கூட்டங்கள், தலைவர்கள், போராட்டங்கள், முக்கிய நிகழ்ச்சிகள் என எல்லாவற்றிலும் பங்கேற்றார். ஆயிரம் வார்த்தைகளில் சொல்வதை, அவருடைய ஒரு புகைப்படம் எளிதாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிடும்!
1947 ஆகஸ்ட் 15… மௌன்பேட்டன் பிரபு இந்தியாவை விட்டுக் கிளம்பியபோது எடுத்த புகைப்படம், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் புகைப்படம், மகாத்மா காந்தியின் இறுதிச் சடங்கில் எடுத்த புகைப்படங்கள், லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தியும் ஜாக்கி கென்னடியும் இருக்கும் புகைப்படம், முதல் குடியரசு தின அணிவகுப்பு படங்கள் என்று ஹோமையின் புகழை இன்றளவும் ஏராளமான புகைப்படங்கள் உலகுக்குச் சொல்லிக்கொண்டிருக்கின்றன!
ஒல்லியான உருவம், குட்டையாக வெட்டப்பட்ட முடி, எளிமையான பருத்திப் புடைவை… இவைதான் ஹோமையின் அடையாளங்கள். இவருடைய வெட்டப்பட்ட கூந்தலைப் பார்த்துதான், இந்திரா காந்தி தனது கூந்தல் அமைப்பையும் மாற்றிக் கொண்டார். அதையே இறுதி வரை கடைபிடிக்கவும் செய்தார்.
இந்தியாவின் சிறந்த புகைப்படக்காரராகவும் பெண்களுக்கு முன்மாதிரியாகவும் இருந்த ஹோமையா, திடீரென புகைப்படங்கள் எடுப்பதை நிறுத்திக்கொண்டார். கணவரின் திடீர் மரணமும், அப்போது நிலவி வந்த சூழலுமே காரணங்களாக அமைந்தன. புகைப்படக்காரர்களுக்குக் கிடைத்து வந்த மரியாதை குறையும் சூழல் ஏற்பட்டதும் ஹோமை விலகிவிட்டார்.
1982ல் வதோரா சென்று மகனுடன் தங்கினார். கேன்சரால் பாதிக்கப்பட்ட மகனும் இறந்து போனார். தனியாளாக வீட்டுவேலைகள், தோட்ட வேலை, கைவேலை என்று எல்லாவற்றையும் செய்துகொண்டார். தன்னுடைய பழைய காலங்களை சந்தோஷமாக நினைத்துப் பார்த்து உற்சாகம் பெற்றார். யாருக்கும் தொந்தரவு தராமல், எளிய வாழ்க்கை வாழ்ந்த ஹோமை 98வது வயதில் மரணம் அடைந்தார்.
– சஹானா
ஹோமையின் உலகப் புகழ்பெற்ற படங்கள் சில…
ஒரு குழந்தைகள் தினத்தில் ஜவஹர்லால் நேரு சில குழந்தைகளுடன்…
***
1947, ஜூன் 2. ஆல் இந்தியா காங்கிரஸ் கமிட்டி கூட்டம். இந்திய – பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவாக உயரும் கைகள்… இந்தக் கூட்டத்தின் அடிப்படையில்தான் தேசப் பிரிவினை செய்யப்பட்டது. ஹோமையைப் பொறுத்தவரை இது கொந்தளிப்பை ஏற்படுத்திய ஓர் நிகழ்வு!
***
சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றார் டாக்டர் ராஜேந்திர பிரசாத். அந்தப் பதவி ஏற்பு நிகழ்வுக்குப் பின் டெல்லி விஜய் சவுக் பகுதியில் சாரட்டில் வலம் வந்தார்.
***
1950, ஜனவரி 26. டெல்லி நேஷனல் ஸ்டேடியத்தில் நடந்த முதல் குடியரசு தின அணிவகுப்பு. இந்நிகழ்வுக்குப் பிறகு அணிவகுப்புகள் இந்தியா கேட்டுக்கு மாற்றப்பட்டன. இந்த அணிவகுப்பு மரியாதை நிகழ்வில் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
***
1948. சக்கரவர்த்தி சி.ராஜகோபாலாச்சாரியார் கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்ற பிறகு, நேருவின் அமைச்சரவையைச் சேர்ந்தவர்கள் மதிய உணவு சாப்பிடுகிறார்கள். அமர்ந்திருப்பவர்கள் ரஃபி அஹமத் கித்வாய், பல்தேவ் சிங், மௌலானா ஆசாத், நேரு, சர்தார் வல்லபபாய் படேல், ராஜகுமாரி அம்ரித் கௌர், ஜான் மத்தாய், ஜெகஜீவன் ராம், காட்கில், நியோகி, டாக்டர் அம்பேத்கர், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, கோபாலசுவாமி ஐயங்கார், ஜெயராம் தாஸ் தௌலத்ராம்.
***
சீன அதிபர் ஸோ என்லாய் (Zhou Enlai) இந்தியாவுக்கு வருகை தந்த போது எடுத்த படம். உடன் நேரு, தலாய் லாமா!
***
ஒரு போட்டோ செஷனில் இந்திரா காந்தியை மற்ற புகைப்படக்காரர்களுடன் புகைப்படம் எடுக்கும் ஹோமை வியாரவல்லா…
***
1948, ஜூன். ராஷ்ட்ரபதி பவனில் மவுன்ட்பேட்டன் பிரபு, தன் கவர்னர் ஜெனரல் பதவியில் இருந்து விடை பெறுகிறார்…
***
1951. இந்தியா கேட், டெல்லி. குடியரசு தின அணிவகுப்பு.
***
1947. காந்தி, கான் அப்துல் கஃபர் கானுடனும் தன்னுடைய மருத்துவர் சுசிலா நாயருடனும் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்துக்கு வருகிறார். இந்த கூட்டத்தில்தான் தேசப் பிரிவினை முடிவு செய்யப்பட்டது.
***
1950. ஜவஹர்லால் நேரு, டெல்லி நேஷனல் ஸ்டேடியத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் அமைதிப் புறாவைப் பறக்க விடுகிறார்.
***
1956. தலாய் லாமா, பஞ்சன் லாமா பின் தொடர இந்தியாவுக்கு வருகிறார்.
***
ஹோமையின் கேமராவுக்கு போஸ் கொடுக்கிறார் நேரு… பின்னணியில் உள்ள போர்டு வாசகம் கவனத்துக்குரியது!
***
ஹோசிமின் இந்தியாவுக்கு வருகை தந்த போது…
***
ஒரு பார்ஸி குடும்பம்…
***
1930களின் பிற்பகுதி. மும்பை கடற்கரை. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகளைக் கடலில் கரைக்கும் பெண்கள்…
***
1930. மும்பை, ஜே.ஜே.ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ்… ஒரு மாடலை அமர வைத்து ஓவியப் பயிற்சி செய்யும் மாணவர்கள்.
***
ஹோமை வியாரவல்லாவின் வகுப்புத் தோழி ரோஹனா மோகல்…
***
மும்பை துறைமுகத்தில் சில பயணிகள்…
***
Image Courtesy:
http://iconicphotos.wordpress.com
alkazi collection of photography