குளிர்… அம்மாடி!
ஏற்கனவே குளிர் வதைக்க ஆரம்பித்துவிட்டது. இந்த நேரத்தில் உலகிலேயே அதிகக் குளிரான பகுதியை அடையாளம் காட்டி மேலும் உடம்பை உதற வைத்திருக்கிறது ஒரு செய்தி! அமெரிக்காவின் நாசாவைச் சேர்ந்த சாட்டிலைட், கிழக்கு அண்டார்ட்டிகாவில் இருக்கும் ஒரு இடத்தைப் படம் பிடித்து அனுப்பியிருக்கிறது. பனிக்கட்டிகளால் உறைந்து கிடக்கும் அந்தப் பிரதேசத்தின் சீதோஷ்ண நிலை மைனஸ் 93.2 டிகிரி செல்சியஸ். இதற்கு முன் அதே அண்டார்ட்டிகாவில் குளிர் தொடர்பாக ஓர் ஆய்வை செய்தது ரஷ்யாவின் ‘வோஸ்டாக் ரிசர்ச் ஸ்டேஷன்’. ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டி, ‘இதுதாம்ப்பா உலகத்துலயே ரொம்ப குளிரான இடம்’ என்றது. அங்கே நிலவிய வெப்பநிலை 89.2 டிகிரி செல்சியஸ். இது நடந்தது 1983ம் வருடத்தில். இப்போது 93.2 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியிருக்கிறது. குலை நடுங்கும் குளிர்… நம்பித்தான் ஆகவேண்டும்!
அடங்காதா அமில மழை?
லூதியானாவில் மீண்டும் ஒரு தாக்குதல்… பெண் மீது ஆசிட் வீச்சு. அதுவும் மணப்பெண் மீது! அவர் பர்னாலாவைச் சேர்ந்தவர். திருமணக் கனவுகளுடன் தன்னை அழகுபடுத்திக் கொள்வதற்காக லூதியானா, சாராபா நகரில் உள்ள ஒரு பியூட்டி பார்லருக்குச் சென்றிருக்கிறார். தன் சகாக்களுடன் உள்ளே நுழைந்த ஓர் இளைஞன் அந்தப் பெண் மீது ஆசிட்டை வீசிவிட்டு, ஓடிப் போயிருக்கிறான். போனவன், ஒரு கடிதத்தையும் விட்டுச் சென்றிருக்கிறான். அதில் அவனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் உறவு இருப்பதாக எழுதியிருந்தது. போலீஸ் விசாரணையில் அது பொய் என்பது தெரிய வந்திருக்கிறது. வழக்கை திசை திருப்புவதற்காக அந்தக் கடிதம். உண்மையில், ஆசிட் வீசியவன் கூலிக்காக இந்தப் பாதகத்தைச் செய்தவன். மாப்பிள்ளையின் குடும்பத்தின் மேல் கோபம் கொண்ட மற்றொரு உறவினரின் குடும்பம்தான் இந்தச் சம்பவத்துக்குப் பின்னணியில் இருந்திருக்கிறது. இது தொடர்பாக அந்த இளைஞன் உட்பட ஆறு பேரை கைது செய்திருக்கிறது காவல்துறை. மிக ஆபத்தான நிலையில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அந்தப் பெண். ஆசிட் விற்பனைக்குக் கெடுபிடி… பல புதிய விதிமுறைகள்… அரசுத் தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் பெண்கள் மீதான இது போன்ற கொடூர தாக்குதல் இன்னும் குறைந்தபாடாக இல்லை. என்ன செய்யப் போகிறோம்?
விலையில்லா உயிர்கள்!
அதிர்ஷ்டவசமாக… இந்தச் சம்பவத்தை அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, ஆப்கானிஸ்தானில் ஒரு பெண் காவல்துறையால் காப்பாற்றப்பட்டிருக்கிறார். குண்டஸ் மாவட்டம்… டாஷ்ட்-ஐ-ஆர்ச்சி பகுதி… தலிபான்களின் ஆட்சி நடக்கும் பிராந்தியம். ஒரு பெண்ணின் மீது கணவனுக்கு எரிச்சல்… கோபம்… ஆத்திரம். எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். தலிபான்களிடம் மனைவி மீது புகார் தருகிறான். ‘என்னை ஏமாற்றிவிட்டாள்’. அவ்வளவுதான்… பெண்ணுக்கு தண்டனை கொடுக்கத் தயாராகிறது தலிபான் படை. என்ன தண்டனை? உயிரோடு கல்வீசித் தாக்கிக் கொல்லும் மரண தண்டனை. இரக்கமுள்ள அந்தப் பெண்ணின் உறவினர்கள் யாரோ காவல்துறைக்குத் தகவல் தர, அந்தப் பெண் காப்பாற்றப்பட்டிருக்கிறாள். காவல்துறை வந்ததும் தலைமறைவான தலிபான்களுடன் கணவனும் ஓடிப் போயிருக்கிறான். அந்தப் பெண் இப்போது காவல்துறையின் பாதுகாப்பில் இருக்கிறார். இந்தக் கற்கால கொடுமைகளை நிறுத்தவே முடியாதா?
உடற்பயிற்சி… உறுதி!
டிமென்ஷியா (Dementia). முதுமைக் காலத்தில் வரும் மறதிக் குறைபாடு. தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இந்தக் குறைபாடு வராது என்று நிரூபித்திருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. டிமென்ஷியாவை தடுக்கும் முக்கியமான ஐந்து விஷயங்கள்… உடற்பயிற்சி, புகைப்பிடிக்காமல் இருப்பது, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடல் எடையைக் குறைவாக வைத்திருப்பது, மதுப்பழக்கத்தைத் தவிர்ப்பது! இந்தப் பழக்கங்களில் நான்கு அல்லது ஐந்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பவர்களுக்கு அறிவாற்றல் குறைபாடும் டிமென்ஷியாவும் 60 சதவிகிதம் வருவதற்கு வாய்ப்பில்லை என்பதை ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறது இந்த ஆய்வு. அதே நேரத்தில் இதையெல்லாம் கடைப்பிடிக்காதவர்களுக்கு நீரிழிவு பிரச்னை, இருதயக் கோளாறுகள், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் 70 சதவிகிதம் இருக்கிறதாம். ‘‘ஆரோக்கியமான வாழ்வியல் முறை பல நன்மைகளை உடலுக்குத் தருகிறது. மருத்துவ சிகிச்சை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விட உடற்பயிற்சி மிக நல்லது. உடல் ஆரோக்கியத்தைப் பேணுவது ஒரு தனி மனிதனின் பொறுப்பு. ஆனால், பலபேர் ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளைக் கடைப்பிடிப்பதில்லை என்பதுதான் வருத்தப்படக்கூடிய விஷயம். அதுவும் எங்கள் ஆய்வில் தெரிந்திருக்கிறது.’’ என்று சொல்கிறார் இந்த ஆய்வைத் தலைமை ஏற்று நடத்திய அமெரிக்கர் பீட்டர் எல்வுட்.
பேய்கள் உலாவும் பள்ளிகள்!
பாகிஸ்தானில் இருக்கும் பள்ளிக்கூடங்களை ‘பேய்ப் பள்ளிகள்’ (Ghost Schools) என்றுதான் வர்ணிக்கின்றன பல பத்திரிகைகள். சுண்ணாம்பு அடிக்கப்பட்டு பளிச்செனத் தெரியும் பள்ளிகளில் பலவற்றில்கூட பாடம் நடத்தப்படுவதில்லை. இருப்பதிலேயே வயதில் மூத்த சிறுமியோ, சிறுவனோ மற்ற குழந்தைகளை அதட்டி, மிரட்டிக் கட்டுப்படுத்தும் காட்சிதான் தினமும் அரங்கேறுகிறது. முக்கிய காரணம், ஆசிரியர்கள் இல்லை. தெற்கு பாகிஸ்தானில் உள்ள ‘சான்சர் ரெத்தார்’ கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்… ‘எங்கள் குழந்தைகளுக்கு எதுவும் தெரியவில்லை. அவர்களுடைய பெயரை எழுதத் தெரியவில்லை. அதற்கான அர்த்தமும் தெரியவில்லை. ஆரம்பக் கல்விக்கான அடிப்படை எழுத்தைக் கூட அவர்கள் தெரிந்து வைத்திருக்கவில்லை’. அரசும் அதிகாரிகளும் இந்தப் பிரச்னையைத் தீர்க்க எந்த ஆர்வமும் காட்டவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. அரசு, பள்ளிகளுக்கு ஒதுக்கும் பணம் செலவிடப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டாலும் அதிகாரிகளின் கைகளுக்குத்தான் போய்ச் சேர்கின்றன என்கிறார்கள் பொது மக்கள். சில பள்ளிகளில் வேறொரு கொடுமை… பெயருக்குத்தான் கல்வி நிறுவனங்களே தவிர மாணவர்கள் யாரும் சேர்க்கப்படுவதில்லை. அந்தப் பள்ளிகளில் வேலை(!) பார்க்கும் ஆசிரியர்களுக்கு வீட்டுக்கே சம்பளப் பணம் போய்ச் சேர்ந்துவிடுகிறதாம். ‘பாகிஸ்தானில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்பக் கல்விக்குக் கூட அனுப்பப்படுவதில்லை’ என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பு ஒன்று. கடந்த ஆண்டு, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், பள்ளிகள் என்ற பெயரில் இயங்கும் கல்வி நிறுவனங்களை சோதனை செய்ய உத்தரவிட்டது. கடந்த நவம்பரில் பள்ளிகளை ஆய்வு செய்த முடிவுகளும் அறிக்கையாக வெளி வந்தது. அதில்தான் ‘பெயரளவு கல்வி நிறுவனங்கள்’ என்கிற அதிர்ச்சிகரமான உண்மை வெளி வந்திருக்கிறது. ‘எத்தனை மலாலாக்கள் தோன்றினாலும், அரசும் அதிகாரிகளும் மனது வைக்கவில்லை என்றால், கல்வி முன்னேற்றம் என்பது பாகிஸ்தானில் ஏற்பட வாய்ப்பே இல்லை’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். பாகிஸ்தான் பள்ளிகளில், வராத ஆசிரியர்களுக்காக காத்திருக்கிறார்கள் பிள்ளைகள்.
தேவை பாதுகாப்பு!
‘இந்தியாவில், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அதிகரித்திருக்கிறது’. இதைச் சொன்னது பத்திரிகையோ, சமூக ஆர்வலரோ அல்ல… மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கிருஷ்ணா தீரத். பாராளுமன்றத்தில், எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் அவர் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த 3 வருடங்களில், இது தொடர்பாக பெண்கள், மகளிர் ஆணையத்துக்கு அளித்த புகார்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார். தேசிய மகளிர் ஆணையம், ‘ஒவ்வொரு துறையிலும் புகார்களை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறது. இதையும் பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம்’ என்று உறுதியளித்திருக்கிறார் மத்திய அமைச்சர் கிருஷ்ணா தீரத்.
தொகுப்பு: பாலு சத்யா