செல்லக் குழந்தை தத்தித் தத்தி நடந்து வருவதை எந்தப் பெற்றோர்தான் ரசிக்க மாட்டார்கள்?
அதை ஊக்கப்படுத்துவதற்காக ஒரு பேபி வாக்கரையும் வாங்கி விடுவார்கள். குழந்தை, வாக்கரின் வளையத்துக்குள் புகுந்து கொள்ளும். ஸ்கேடிங் செய்வது மாதிரி வீடு பூராவும் வளைய வரும். அந்தக் காட்சி, பார்க்க ரம்மியமாகத்தான் இருக்கும்.
ஆனால், அந்தக் குழந்தைக்கு பிற்காலத்தில் ஏற்படும் விபரீதங்களைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
பேபி வாக்கர், குழந்தைகளின் கால்களின் கீழ்ப்பாகத் தசைகளை வலுப் படுத்துமே ஒழிய, கால்களின் மேல் பாகத்தையோ அல்லது இடுப்பில் உள்ள தசைகளையோ வலுப்படுத்தாது. குழந்தை நன்றாக நடப்பதற்கு இடுப்பில் இருந்து கால்கள் வரையில் உள்ள தசைகள் வலுப்பட வேண்டியது மிக மிக அவசியம். வீட்டில் அனாயசமாக உலா வருவதற்கு வாக்கர் உதவலாம். ஆனால், குழந்தைகள் தாங்களாகவே தசைகளை ஒருங்கிணைத்து பேலன்ஸ் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு, குழந்தைகள் இயற்கையாகவே விழுந்து, எழுந்து நடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த பேபி வாக்கரால் சில அபாயங்களும் உள்ளன. நாம் கவனிக்காத போது, குழந்தை மாடிப்படிகளில் உருளவோ, படிக்கட்டைத் தாண்டி வெளியோ போகவோ வாய்ப்புகள் உள்ளன. அந்தக் காலத்தில் குழந்தைக்கு ‘நடை வண்டி’ (மூன்று சக்கர வண்டி) வாங்கிக் கொடுப்பார்கள். குழந்தை அதை ஓட்டிக் கொண்டே வலம் வரும். அது அது ஆரோக்கியமான பயிற்சியாக குழந்தைக்கு இருந்த்து. இன்றைக்கு நடை வண்டிக்கு எங்கே போவது என்கிறீர்களா? இன்னமும் தமிழகத்தின் சில ஊர்களில் நடைவண்டி கிடைக்கத்தான் செய்கிறது. கிடைக்காதவர்கள்,கனமான பொம்மைக் கார் ஒன்றை வாங்கிக் குழந்தைக்குக் கொடுக்கலாம்… அதைத் தள்ளச் சொல்லிக் கற்றுக்கொடுக்கலாம். பேபி வாக்கருக்கு இது எவ்வளவோ மேல்! குழந்தையின் கையிலிருந்து கால் வரை உள்ள தசைகள் வலுப்பெறும். அவர்களும் ராஜ கம்பீரமாக நடை பயில்வார்கள்.
– உஷா ராமானுஜம்
Image courtesy:
http://www.newbornbabyzone.com/