ஒரு தோழி பல முகம்
சண்முக வடிவு
* நான்…
கிராமத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தில் முதல் பெண்ணாகப் பிறந்து வளர்ந்தவள். சிறு வயதிலேயே திருமணம்… பட்டப் படிப்பு, யோகப் பயிற்சி, அழகுக்கலை, இயற்கை வைத்தியம், நீச்சல், இருசக்கர வாகனம் மற்றும் கார் ஓட்டக் கற்றுக் கொண்டது அனைத்தும் திருமணத்துக்குப் பிறகுதான். ஓவியம், கைவினைத் தொழிலில் விருப்பம் உண்டு. எழுதவும் நல்ல எழுத்தை வாசிக்கவும் பிடிக்கும். உடல், மன ஆரோக்கியம் பேணுவதில்… வாழ்க்கையை அதன் போக்கில் ரசித்து வாழ்வதில்… முடிந்தவரை என்னைச் சுற்றி எப்போதும் ஒரு பாசிட்டிவ் அதிர்வுகள் இருக்குமாறு பார்த்துக் கொள்வதில் விருப்பம் உள்ளவள்.
* தத்துவம்!
வாழ்க்கை, ரோஜா மலர்ப் பாதை அல்ல. இன்ப, துன்பங்களின் கலவை. துன்பம் வரும்போது புலம்பிக் கொண்டிருந்தால், சூழல் இன்னும் இறுக்கமாகும். So what..? What next..? என்று தாண்டிப் போய்க்கொண்டே இருக்க வேண்டும். அடுத்தவரோடு ஒப்பிட்டு, நம் நிம்மதியைக் குலைத்துக் கொள்வதில் எனக்கு ஒருபோதும் உடன்பாடு கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை, வெவ்வேறு திறமைகள் இருக்கின்றன. நம் வேலையில் மட்டுமே நம் கவனம் இருந்தால், தேவையின்றிப் புறம் பேசுதல் குறையும்… மன நிம்மதியும் பாதுகாக்கப்படும்.
* சுற்றுச்சூழல் சிந்தனை
நாம் மட்டுமல்ல… அடுத்த தலைமுறையும் நலமோடு வாழ சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மிகவும் அவசியம். தண்ணீரை, மின்சாரத்தை சிக்கனமாகச் செலவழித்தல், பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தைக் குறைத்தல், கண்ட இடங்களில் குப்பைகளை வீசாமல் சுகாதாரம் பேணுதல், முடிந்தவரை பசுமை காத்தல் என இந்த பூமியை அழகாக வைத்துக் கொள்ள நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டியது இன்றைய அவசரத் தேவை.
* யோகா… என்ன, எதற்கு?
உடல், மனம், ஆன்மா மூன்றையும் ஒருங்கிணைப்பதே யோகக்கலை. அதாவது, யோகாசனம், மூச்சுப் பயிற்சி, தியானம் மூன்றையும் உள்ளடக்கியது. உடலையும் மனதையும் வலுவாக்க ஆசனங்கள்… நுரையீரலின் கொள்ளளவை முழுவதும் பயன்படுத்தி அதிக ஆக்சிஜனை உள்ளிழுக்க மூச்சுப் பயிற்சி… மனதை லேசாக்கி ஒருமுகப்படுத்த தியானம். இன்றைய அவசர யுகத்தில் எல்லாவற்றுக்கும் போட்டி, நிதானமின்மை. அதனால் மன அழுத்தமும் கவனச்சிதறலும் உண்டாகின்றன. மன அழுத்தம் உடலையும் பாதிக்கும். யோகாவை முறையாகப் பயின்று, பயிற்சி செய்தால் இவை சரி செய்யப்படும். ஆசனங்கள் உடலை வலுவாக்குகின்றன, இளமையைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகின்றன. மூச்சுப் பயிற்சியும் தியானமும் மனதை தூய்மைப்படுத்தி, கவனிக்கும் திறனையும், புத்திக் கூர்மையையும் அதிகரிக்கச் செய்கின்றன.
முந்தைய காலத்தில் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறை இருந்தது. பகிரவும் மகிழவும் மனித உறவுகளின் நேசம்… மன இறுக்கம் இல்லாத, இருந்தாலும் இறக்கி வைக்க சுற்றிலும் சொந்தங்கள். இன்று யாரோடும் நின்று பேச யாருக்கும் நேரமில்லை… பகிர்தல் இல்லாமல் இறுகிப்போன மனதோடு பாவப்பட்ட மனிதர்கள். அந்தக்கால வாழ்க்கை முறையில் உடலுழைப்பு அதிகம் இருந்தது… உணவு செரித்தது… உடலுறுப்புகள் ஆரோக்கியமாக இருந்தன. இன்று எல்லாவற்றிலும் இயந்திரங்களின் ஆக்கிரமிப்பு. சமையலறையிலும் சாதனங்கள்… மிக்ஸி, கிரைண்டர், கேஸ் அடுப்பு, குக்கர், மைக்ரோவேவ் அவன்! வாசலைவிட்டு இறங்கினால் வாகனம். இவை வேலைகளை சுலபமாக்கி இருக்கலாம். பதிலுக்கு நம் உடல், மன ஆரோக்கியத்தை பறித்துக் கொண்டன. உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர் எல்லாவற்றிலும் மாசு… நம் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி விட்டது. தினமும் யோகக்கலைக்காக ஒதுக்கும் நேரம், நம் ஆரோக்கியத்துக்கு சேர்த்து வைக்கும் வைப்பு நிதி போன்றது.
* ஆரோக்கிய உணவு
ஆரோக்கிய உணவுகள் விலை உயர்ந்தவை என்ற தவறான கருத்து நிலவுகிறது. கம்பு, ராகி, சோளம் போன்ற தானியங்கள், கீரைகள், அந்தந்தப் பருவத்தில் அதிகம் விளையக்கூடிய காய் மற்றும் பழவகைகளை விலை அதிகம், கட்டுப்படி ஆகாது என்று சொல்லி ஒதுக்கிவிட முடியாது. காபி, டீ, ஹார்லிக்ஸ், பூஸ்ட் போன்ற பானங்களைவிட ராகிக்கூழுக்கும் கம்பங்கூழுக்கும் அதிகம் செலவாகப் போவது இல்லை. ஓட்டலில் சாப்பிடும் சிக்கன் சூப்பைவிட கொள்ளு ரசத்துக்குக் கூடுதல் செலவில்லை. கோக், பெப்சியைவிட இளநீர் எல்லாவிதத்திலும் உடம்புக்கு நல்லது. பட்டை தீட்டி, பாலீஷ் போட்ட அரிசியைவிட மட்டை அரிசி விலை குறைவே. கற்றாழையும் கற்பூரவல்லியும் கிள்ளி வைத்தாலே தழைக்கும். மணி ப்ளான்ட் செடியோடு ஒரு பசலைக் கீரைக் கொடியையும் படர விடலாம். வீட்டு முன்புறத்தில், தொட்டியில், மொட்டை மாடியில் என்று கிடைத்த இடத்தில், காயும் கீரையும் விளைவிப்பவர்கள் இருக்கிறார்கள். மருத்துவருக்குக் கொடுக்கும் பணத்தை காய்கறியும் பழங்களும் வாங்க செலவு செய்வோமே! ஆரோக்கியத்துக்காக செலவழிப்பது பணமானாலும் நேரமானாலும் அது விலை மதிப்பில்லாத சேமிப்பு.
சாதனை!
ஏதாவது ஒரு துறையில் உலகப் புகழ் பெற்றால்தான் நாம் சாதனைப் பெண்மணிகள் என்று அர்த்தம் இல்லை. சந்தோஷ தருணங்களுக்காகக் காத்திருக்காமல் எந்தச் சூழலிலும் அவற்றை உருவாக்கிக் கொண்டு… பகைமை உணர்வை மனதில் தேக்காமல் உதறிவிட்டு… கிடைத்திருக்கும் பாசிட்டிவான விஷயங்களைப் பட்டியலிடக் கற்றுக்கொண்டு… எதுவும் நிரந்தரமில்லை என்பதை உணர்ந்து கொண்டு… சுற்றி இருப்போரிடம் முடிந்தவரை சுமுகமாக இருந்து கொண்டு… துவளும் பொழுது யாரையும் அதிகமாகச் சார்ந்து அவதிப்படாமல் / படுத்தாமல்… அவரவருக்கான பொறுப்பை சரிவரச் செய்து, சக மனிதரோடு இசைந்து வாழும் ஒவ்வொரு பெண்ணும் சாதனைப் பெண்மணியே!
* பிடித்தவை
இசை, மழை, மழலை, புல், பூ, காடு, மலை, மரம் எல்லாமே பிடிக்கும். லேசான மழைத் தூறலில் இளையராஜா இசையைக் கேட்டபடி, தனியாக வண்டியோட்டியபடி பயணம் செய்வது மிகவும் பிடிக்கும்.
* இயல்பு
கொஞ்சம் சென்டிமென்டல் கேரக்டர். அழுகையோ, ஆனந்தமோ 100%. அழுதோ, சிரித்தோ முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவேன். துயரப் பொழுதுகளை அடுத்தவர் தோளில் சுமத்துவதை அறவே வெறுப்பவள்.
* எழுத்து
பாலகுமாரன், சுஜாதா, கல்கி, சாண்டில்யன், தமயந்தியின் சிறுகதைகள் பிடிக்கும். பெருமாள் முருகனின் யதார்த்தமான எழுத்து நடை பிடிக்கும். முகநூலிலும் பிளாக்கிலும் எழுதும் ஈரோடு கதிரின் எழுத்து மிகவும் பிடிக்கும்.
* பிரியமானவர்களிடம் பிடித்தது
இந்திரா காந்தியின் தைரியம்… அன்னை தெரசாவின் அன்பு… இளவரசி டயானாவின் எளிமை… எங்கள் பகுதியில் இளநீர்க்கடை வைத்திருக்கும் ஈஸ்வரியம்மாவின் தன்னம்பிக்கையும் எந்த நேரமும் மலர்ந்த முகத்தோடு வேலை பார்க்கும் பண்பும்…
* வாழ்க்கை உந்துசக்தி
மிக இளம் வயதில் திருமணம் முடித்து, கையில் ஒரு குழந்தையும் வயிற்றில் ஒன்றுமாக இருந்த போது தன் கணவனை ஒரு விபத்தில் பறிகொடுத்தார் என் தங்கை. பிறகு குழந்தைகளை அம்மாவிடம் விட்டுவிட்டு பிளஸ் டூ படித்தார். மிகுந்த எதிர்ப்புகளுக்கு இடையில் மருத்துவப் படிப்பை முடித்தார். ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றியபடி தன் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கித் திருமணமும் செய்து வைத்தார். ஒரு தபஸ்வினி போல் வாழ்ந்து வரும் என் தங்கையைத்தான் நான் துவளும் பொழுதுகளில் நினைத்துக் கொள்வேன்.
* கொளுத்தும் கோடை..?
‘குளு குளு’ தர்ப்பூசணி… கோடைக்கேற்ற நுங்கும் பதநீரும்… பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் பானத்தைவிட சுத்தமான, ஆரோக்கியமான இளநீர்… வெள்ளரி, முலாம்பழம்… அருமையான கம்பங்கூழ்… இஞ்சி, சீரகம், கறிவேப்பில்லை சேர்த்த மோர்… வெம்மை தெரியாமல் இருக்க பருத்தி ஆடை… வெயிலில் அணிந்து செல்லக் குளிர்க் கண்ணாடி… பவர்கட் வந்தால் பனை ஓலை விசிறி… குழந்தைகள் விடுமுறையில் இருப்பதால் நாம் போக இருக்கும் வெளியூர்ப் பயணம்… மற்றும் நம் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் என்று கோடையில் அனுபவிக்க இத்தனை நல்ல விஷயங்கள் இருக்க, வரவேற்போம் கோடையை, ‘அச்சச்சோ வெயில்… அம்மம்மா வெயில்’ என்று புலம்பாமல்.
* நட்பு
பொழுது போக்குக்கு என்றுதான் முகநூலில் நுழைந்தேன். நிறையக் கதவுகள் திறந்தன. எழுதும் ஆர்வத்துக்கு மிகப் பெரும் வடிகாலாக அது அமைந்தது. முகநூல் தோழமைகளிடம் யோகா, ஆரோக்கிய உணவு வகைகள் என்று பலவற்றைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது.
* என் எழுத்தில் எனக்குப் பிடித்தவை
-உதிர்த்தல் இன்றித் துளிர்த்தல் ஏது..?
-நன்றி சொல்லி நலமாக வாழ நாலாயிரம் காரணங்கள் இருக்கையில்… தேடித் தேடிக் குறைபட்டு குமுறிக் கொண்டு இருப்பானேன்..? குற்றம் பார்க்கின், சுற்றம் என்பதும் இல்லை சுகமான வாழ்வும் இல்லை.
-ஆயிரங்களில் காசு கொடுத்து ஆண்ட்ராய்ட் போன் வாங்கலாம்… ஆப்பிள் போன் வாங்கலாம்… ஆசையாக அழைத்துப் பேசும் அன்பான உறவுகளை அல்ல!
-வசிக்கிறோம்… சரி… வாழ்கிறோமா என்பதுதான் கேள்வி..!
-சிலர் ‘‘அய்யோடா… இன்னிக்கு நான் ரொம்ப சிரிச்சுட்டேன்… கண்டிப்பா அழற மாதிரி ஏதாவது நடக்கப் போகுது… போதும்பா நான் சிரிச்சது’’ ன்னு சொல்லி சிரிப்பை நிறுத்திப்பாங்க. அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாதுங்க. சிரிக்கறதை நிறுத்திட்டா மட்டும் அழ வேண்டிய சூழல் வராம மாயமா மறைஞ்சு ஓடிப் போயிடுமா என்ன? அட! வந்தா வரட்டும்! அப்ப அழுதோ, அழாமயோ சமாளிச்சுப்போம். சிரிக்கக் கிடைக்கும் சந்தர்ப்பங்களைத் தவற விடலாமோ? மலராய் மலர்வோம்… மனம் விட்டுச் சிரிப்போம்.
-கல்யாண வீடுகளிலே பஃபேக்கு சாப்பிடப் போறதே பிடிச்சதை மட்டும் அளவா வாங்கி சாப்பிடத்தானே? அங்கேயும் கண்டதையும் தட்டிலே வாங்கி நிரப்பி… அநியாயமாக் குப்பையில் ஏன் கொட்டணும்? நீங்க வீணாக்குற உணவு இன்னொருவரின் பசி என்பதை புரிஞ்சு கொள்ளணும் நாம்!
-நடந்தோ தவழ்ந்தோ கடந்து கொண்டுதான் இருக்கிறோம்… கடக்கத்தானே வேண்டும்? இரவல் கால்கள் எவரும் தருவதில்லைவாழ்க்கைப் பாதையில்.
-ஒரு பிரச்னைக்குப் பத்துக் கோணத்தில் தீர்வுகள் யோசித்து வைத்து… ‘‘அப்பாடா…!’’ என்று ஆசுவாசிக்கையில், நாம் முற்றிலும் எதிர்பார்க்காத பதினோராவது கோணத்தில் இருந்து ஒரு குழப்பம் வந்து ‘‘க்கிக்கிக்கீ…’’என்று பல்லைக் காட்டுகிறது. ம்ம்… வரட்டும் வரட்டும். சங்கடமாக நினைத்தால் சலிப்புதான் மிஞ்சும். சவாலாக நினைத்தால்..? புதிர் தீர்க்கும் சுவாரஸ்யம்தானே..? So what..? What next..?
Image courtesy:
http://tamalapaku.blogspot.in/
wikimedia.org/wikipedia/commons/
http://a1gaurav.files.wordpress.com/
http://nizhalvalai.blogspot.in/
http://imgsrv.gardening.ktsa.com/
படிக்க…