ஸ்டார் தோழி – 3

ஒரு தோழி பல முகம்

Image

நித்யா கந்தசாமி

* நான்…

மனதைரியம்… நுனிநாக்கு ஆங்கிலம்… பலதரப்பட்ட மனிதர்களோடு எளிதில் பழகும் குணம்… பரந்த மனப்பான்மை… வந்தாரை வாழவைக்கும் சிறப்புக் குணம்… ஒரு பெருநகரத்தில் பிறந்து, வளர்ந்த பெண்ணுக்கே உரிய அத்தனை குணநலன்களும் என்னுள் உறைந்திருக்கின்றன. கிடைத்த வாழ்க்கையை வரமாக மாற்றுவது நம் கையில்தான் இருக்கிறது என நம்புபவள். பெற்றோர், கணவர், குழந்தைகள், பள்ளி, படிப்பு, நண்பர்கள் என கிடைத்த எல்லாவற்றையும் சிறந்ததாகக் கருதுபவள்.

* பிடித்த ஊர்

திருமணத்துக்குப் பின் கணவரின் வேலை இடமாற்றல் காரணமாக ஊர் ஊராகச் செல்கிறோம். இருப்பினும் தாயின் மடியாக, தேடி வந்து என்னை ரீசார்ஜ் செய்துக் கொள்ளும் இடம் என்றும் நேசிக்கும் சென்னை!

* பள்ளி வாழ்க்கை

இத்தனை வருட தன்னம்பிக்கை வாழ்க்கையின் அடித்தளமாக நான் கருதுவது படித்த ஆங்கிலோ இந்தியப் பள்ளியை! படிப்பில் சுட்டி! சாரணர் இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம், ஆங்கில இலக்கிய கிளப் அத்தனையிலும் ஆக்டிவ் மெம்பர். பத்தாம் வகுப்புத் தேர்வில் பள்ளியில் முதலிடம்… நான்கு பாடங்களில் முதல் மதிப்பெண்! அதற்காக தங்க மெடலுடன் 11 சிறப்பு பரிசுகளைப் பெற, 12 முறை மேடையேறி இறங்கிய நாளை அவ்வப்போது ரீவைண்ட் செய்து பார்த்து மகிழ்வேன்.

* வாழ்க்கை

அதன் போக்கில் வாழ நினைப்பவள். பணத்தைக் காட்டிலும் மனிதர்களைச் சம்பாதிப்பதில் விருப்பம் அதிகம். அன்புதான்  பலமும் பலவீனமும். நிபந்தனை ஏதுமின்றி மற்றவர்கள் மீது நான் செலுத்தும் அன்பு யாரையும் வசப்படுத்திவிடும். பொருளாதார முன்னேற்றம், நேர்மையான உழைப்பின் அடிப்படையில் படிப்படியாக ஏற்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவள்!10155061_703195719736939_4196281582181820736_n

* என்னிடம் எனக்குப் பிடித்தவை…

வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லா வயதினருடனும் பழகுவது… அவர்கள் உலகத்துக்குள்ளேயே நுழைந்து சந்தோஷப்படுவது… சிரிக்கச் சிரிக்கப் பேசுவது! என் அருகாமை, பழகும் மனிதர்களின் மனதில் சந்தோஷ அலையடிக்கச் செய்கிறது என்பதில் எனக்கு பெருமிதம் உண்டு!

* இவர்களிடமிருந்து விலகி இருப்பவள்…

சுயநலவாதிகள், குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள், வாழ்வின் ஓட்டத்தில் தங்களை அப்டேட் செய்து கொள்ளாத பழமைவாதிகள், பொறாமைப்படுபவர்கள்.

* குடும்பம்

தோழமையாக வாய்த்த பெற்றோர், சகோதரன், அண்ணி… அப்பாவும் அம்மாவும் சுவாரசியமான மனிதர்கள். நல்ல புரிதலுடன் எங்களை சிறப்பாக வளர்த்து ஆளாக்கிய அருமையான தம்பதிகள். அவர்களிருவரும்தான் என் ரோல் மாடல்… உறவுகளை அரவணைப்பதில், எதையுமே பாசிட்டிவ்வாக அணுகுவதில்! வாழ்க்கைக் கல்வியை எங்களுக்கு தனியாகக் கற்றுக்கொடுத்ததில்லை… வாழ்ந்து காட்டுகிறார்கள்! கணவர் ரமேஷ் அருமையான மனிதர். குடும்பம் அவருடைய பாசச் சக்கரத்தின் அச்சாணி. நேர்மையான உழைப்பாளி… அக்கறையாக எங்களை கவனித்துக் கொள்வதில் அவருக்கு நிகர் அவரே!

* பெருமிதங்கள்

என் இரு பெண்கள் நிவேதா, ப்ரீதா… படிப்பிலும் பண்பிலும் கெட்டிக்காரர்கள். முந்தைய பிறவிகளில் கடவுளுக்குத் தேனாபிஷேகமாக செய்திருப்பேனோ என்னவோ, தேனினும் இனிய குரலால் என்னை மயக்கும் அழகிகள். படிப்பைவிட தனிநபர் ஒழுக்கமே முக்கியம் என்பதை நாங்கள் போதிக்காமலேயே கடைப்பிடிப்பவர்கள். நிஜமாகவே என் பெண்கள்,  ‘Owner’s pride, nehibours’ envy’தான்!

* புகுந்த வீடு

தாய் வீட்டுக்குப் போய்விட்டுத் திரும்பும்போதை விட புகுந்த வீட்டிலிருந்து கிளம்பும் போதுதான் பை கனக்கும்… கண்கள் பனிக்கும். கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் ருசியை அங்குதான் அனுபவிக்கிறேன். வெள்ளந்தியான அந்த மனிதர்களின் பாசத்தில் மூச்சு முட்டும். என்னைத் தலையில் தாங்கும் அவர்களை என்றென்றும் மனதில் தாங்கிக்கொண்டே வருகிறேன்.

* ரசித்துச் செய்பவை…

சமையலும் குழந்தை வளர்ப்பும். என் சமையல் குரு மல்லிகா பத்ரிநாத்… சமையலறையை அலங்கரிப்பதும் அவருடைய புத்தகங்களே!

mallikabadrinath

விருந்து என்றால் ஒரு கம்பளீட் மெனு எழுதி வைத்து, பார்த்துப் பார்த்து முழு ஈடுபாட்டுடன் சமைப்பேன்… அதனாலேயே ‘சிறந்த ஹோஸ்ட்’ பட்டம் கொடுத்திருக்கிறார்கள் உற்றாரும் உறவினரும். ‘குழந்தை வளர்ப்பில் களிமண்ணைக்கூட அழகிய பொம்மையாக்கும் வித்தை கைவரப் பெற்றவள்’ என்கிறார்கள் தெரிந்தவர்கள். இது அதிகமோ என்று தோன்றும். ஆனால், முதல் ஐந்து வருட குழந்தைப் பருவத்தின் முக்கியத்துவத்தைத் தாய்மார்கள் உணர வேண்டும் என்கிற ஆசை எனக்கு உண்டு.

* ஸ்பெஷலிஸ்ட்!

சூப் மற்றும் மில்க் ஷேக் செய்வதில்! செய்முறை சொல்லவா..?

Image

கேரட், பீன்ஸ் மற்றும் கோஸ்/காளான்/பேபி கார்ன் – இதில் ஏதாவது ஒன்றோ அல்லது அனைத்தையுமோ சிறிது வெண்ணெயில் வதக்கவும். தேவையான நீர், உப்புச் சேர்த்து வேகவிடவும். அதில் ஒரு டீஸ்பூன் கார்ன் ஃப்ளார் மாவை அரை கப் நீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும். கொதித்ததும் மிளகுத் தூள் சேர்த்தால் ‘வெஜ் க்ளியர் சூப்’ ரெடி.

Image

நீருக்கு பதில் பால் சேர்த்தால் ‘க்ரீம் ஆஃப் வெஜிடபிள் சூப்’!

Image

அதே போல இனிப்புச் சேர்த்து, குளிர்ச்சியூட்டப்பட்ட பாலில் வாழைப் பழமோ, ஆப்பிளோ, சப்போட்டாவோ அல்லது மாம்பழமோ, ஏதேனும் ஒரு பழத்தை மிக்ஸியில் விப் செய்தால் மில்க் ஷேக். ரூ 80 வரை செலவு செய்து ஓட்டல்களில் பருகும் மில்க் ஷேக்கை சிக்கனமாக இப்படி வீட்டிலேயே தயார் செய்யலாம்.

* செலவழிப்பதில் எப்படி?

கஞ்சத்தனத்துக்கும் சிக்கனத்துக்கும் மெல்லிய இழை வேறுபாடு உண்டு. எவ்வளவு அதிகமாக பணம் சம்பாதித்தாலும், அதை பார்த்துப் பார்த்து சரியாகச் செலவு செய்ய வேண்டும் என நினைப்பவள் நான். மாதச் செலவுகளை வகை பிரித்து, முறையாகச் செலவழிப்பேன். படிக்கும் காலத்திலிருந்தே கணக்கு எழுதி வைக்கும் பழக்கத்தைக் கடைபிடிக்கிறேன். சிக்கனம் என்பது பணம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல… ஒரு பொருளை தேவையான அளவே பயன்படுத்துவதும் சிக்கனமே.

Image

நீரோ, மின்சாரமோ… இருக்கிறதே என்று வீணாக்குவது பிடிக்காத ஒன்று. எங்களுடைய மின்கட்டணத்தை கணவரின் அலுவலகம்தான் செலுத்துகிறது. என்றாலும், மின்சாரத்தை சிக்கனமாகத்தான் செலவழிக்கிறோம். ஃப்ளாட்டில் மெயின்டெனன்ஸ் சார்ஜ் கொடுக்கிறோமே என்பதற்காக குழாயில் 24 மணி நேரமும் வரும் நீரை வீணடிப்பதில்லை. இந்த உணர்வை குழந்தைகளுக்கும் பணியாட்களுக்கும்கூட வலியுறுத்துகிறேன்.

* பிடித்தவை…

நகைச்சுவையுணர்வு கொண்டவர்கள்… அப்படிப்பட்டவர்களோடு நாளெல்லாம் பேசுவது…

நல்ல இசை எந்த மொழியில் இருந்தாலும் கேட்பது… பாடுவதும்தான்.

ரொமான்டிக் மனநிலையில் கவிதைகள் எழுதுவது, வாழ்க்கை அனுபவங்களை சுவைபட எழுதுவது…

படிப்பு, இசை, நடனம், ஓவியம், கைவினை, நாடகம், சினிமா, அரசியல் என சூரியனுக்கு கீழுள்ள அத்தனை விஷயங்களும்… காரணம், ஒரு விஷயத்தைத் தெரியாது என்று சொல்லக்கூடாது என நினைப்பவள்!

* எழுத்து

பள்ளிக் காலங்களில் மாய்ந்து மாய்ந்து வாசித்தது மில்ஸ் அண்ட் பூன், சிட்னி ஷெல்டன், இர்விங் வாலஸ், அயன் ரேண்ட்… தமிழில் என்னைக் கவர்ந்தவர்கள் சுஜாதா, பிரபஞ்சன், மாலன். மிகவும் கவர்ந்தவர்கள் கி.ராஜநாராயணனும், பாலகுமாரனுமே! கி.ரா.வின் வட்டார வழக்கு தமிழ் மயக்கும்.

Image

கல்லூரிக் காலங்களில் கூட்டத்தைக் கூட்டி தமிழ் வாசிக்கத் தெரியாத தோழிகளுக்கு பாலகுமாரனின் கதைகளை வாசித்துக் காட்டுவேன். உள்ளம் கவர் கள்வன்’ நாவலில் காதலைப் பற்றின தெளிவையும், ‘ஆனந்த வயல்’ நூலில் தாம்பத்தியத்தைப் பற்றிய புரிதலையும் என்னுள் ஏற்படுத்தியவர் பாலகுமாரன்… ஆதர்ச எழுத்தாளர். அவர், இன்று சமூக வலைத்தளத்தில் என் பதிவுகளுக்கு என்றேனும் பின்னூட்டமிடும் கணங்கள் எனக்கு பொக்கிஷத் தருணங்கள்!

* நட்பு

என் நட்பு வட்டம் பெரிது. பள்ளி, கல்லூரி, உறவுகளாக மட்டும் இல்லாமல் நண்பர்களாக இருக்கும் நட்புறவுகள், இதுவரை வாழ்ந்த ஊர்களில் வசிக்கும் நண்பர்கள், ஃபேஸ்புக் நண்பர்கள் என வட்டம் வட்டமாக ஒரு பெரிய அன்பு வட்டத்துக்குள் நான். என் சுகங்களில் சந்தோஷித்து, துக்கங்களில் தோள் கொடுக்கத் தயாராக நிற்கும் நட்புகள்தான் இதுவரை சம்பாதித்த உண்மையான சொத்து. என்னை உயிர்ப்போடு வைத்திருப்பதில் அவர்களுக்கே முதலிடம்.

* கற்பித்தல்

பொறியியல் (சிவில்) பட்டதாரி. அம்மா ஆசிரியை என்பதாலோ என்னவோ, தெரிந்ததையெல்லாம் பிறருக்கு கற்றுத் தர வேண்டும் என்ற ஆசை உள்ளுக்குள் கனன்றபடி இருக்கிறது. ‘ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது யாருக்காவது, எதையாவது கற்பித்தால்தான் அன்றைய தினத்தை உபயோகமாக செலவழித்தேன்’ என நினைப்பேன்… நிம்மதியாக உறங்குவேன். அந்த அளவுக்கு டீச்சிங் பைத்தியம். முன்பு குடியிருந்த ஊர்களில் ஹோம் மேக்கர்ஸ்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளும், சமையல் கலை வகுப்புகளும் நடத்தியிருக்கிறேன். முகநூலில் ‘ஷேக்ஸ்பியர் இங்கிலீஷ் கிளாஸ்’ குரூப்பையும், ‘கிச்சன் கலக்கல்ஸ்’ குரூப்பையும் நடத்தி வருகிறேன். மாலை நேரங்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு கணக்கு வகுப்பு எடுப்பதில் இனிமையாகக் கழிகின்றன. குழந்தை வளர்ப்பு, மனநலம், கைத்தொழில் செய்ய வழிகாட்டுதல், ஆளுமை வகுப்புகள் என ஆசிரியக் குணம் போனிலும், முகநூலிலும், ‘வாட்ஸ்அப்’பிலுமாக தினம் தினம் தொடர்கிறது.

* சினிமா 

Image

ஒரு திரைப்படத்தை டைட்டில் கார்டிலிருந்து பார்க்க வேண்டும் என நினைப்பேன். ‘ரிதம்’, ‘முகவரி’, ‘காதலுக்கு மரியாதை’, ‘பார்த்திபன் கனவு’ என மீண்டும் மீண்டும் பார்க்கும் நீட் மூவீஸ் லிஸ்ட் பெரியது. கமல், சூர்யா என் ஃபேவர்ரைட்ஸ். கமலின் ‘வசூல்ராஜா’வும், ‘பஞ்சதந்திர’மும் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதேயில்லை.

* இசையும் நானும்

அன்றன்றைய மனநிலைக்கேற்ப இளையராஜாவையும் ரசிப்பேன்… ஏ.ஆர் ரஹ்மானையும் ரசிப்பேன். சில நேரத்தில் எல்லாவற்றையும் அணைத்துவிட்டு, கணவரையும் மகள்களையும் பாடச் சொல்லி மகிழ்வேன். இசைசூழ் உலகம் எனது.

* ரசித்து உண்பது… 

Image

கேழ்வரகு கூழ்தான் ஆல்டைம் ஃபேவரைட். சம்மரில் ஒரு குண்டான் கூழைக் காய்ச்சிப் புளிக்க வைத்து, அதில் தயிர், பொடியாக நறுக்கிய வெங்காயம், வறுத்த வேர்க்கடலையைக் கலந்து சொம்பு சொம்பாகக் குடிப்பேன். தொட்டுக் கொள்ள கீரைத்தண்டு, கத்தரிக்காய், கருவாடு போட்ட குழம்பு. ஸ்ஸ்ஸ்ஸ்… சொர்க்கம் தேடி வேறு எங்குமே போக வேண்டாம்.

* பயணம்

கணவரும் நானும் திட்டமிட்டிருக்கிறோம்… மகள்களை நன்கு படிக்க வைத்து, அவர்களுக்கான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த பிறகு நம் நாட்டில் உள்ள சிறப்பு மிக்க இடங்களுக்கும், பிறகு வெளிநாடுகளுக்கும் டூர் போக மாஸ்டர் ப்ளான். அதற்காகவே ஆரோக்கியத்தை நன்கு பேணிக்காத்து வருகிறோம்.

* கவர்ந்த பெண் ஆளுமைகள்…

Image

ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல், இந்திரா காந்தி, வங்காரி மத்தாய், மலாலா… இவர்களோடு கத்தியின்றி ரத்தமின்றி தினந்தோறும்  சமூக முன்னேற்றத்துக்காக, தன் முகம் காட்டாமல் பாடுபடும் எண்ணற்ற பெண்கள்.

* பிடித்த ஆசிரியர்கள்

பள்ளித் தலைமையாசிரியை திருமதி சிந்தியா இக்னேஷியஸ் மற்றும் ஏழாம் வகுப்பு ஆசிரியர் பால் சாமுவேல்… ‘Don’t LBH’ என்று பாடங்களை புரிந்து படிக்க அறிவுறுத்தியவர்கள்.(LBH = Learning by Heart)

* மனசு

அன்பு செலுத்துவதிலும் தவிர்க்க இயலாத காரணங்களால் வெறுத்து ஒதுக்குவதிலும் எக்ஸ்ட்ரீம். என்னை நானே சீர்தூக்கிப் பார்த்து இந்த இரு எல்லைகளையும் உடைத்து சமமானதொரு நிலைக்கு வர தினமும் முயற்சி செய்கிறேன்.

* எனக்குப் பிடித்த என் வரிகள்..

– பெண்களை ஃபிகராகப் பார்க்கும் காலம் போய் சக உயிராகப் பார்க்கும் காலம் எப்போ வரும்?

– நண்பன் செத்த சொடுமையைவிட நட்பு செத்த கொடுமைதான் கொடிதினும் கொடிது.

– முகஞ்சுளிக்க வைக்கும் வாடைகள் நாசியை அடையா வண்ணம் காத்துக் கொள்வது அவரவர் மூக்கின் திறன்.

– காதலிக்க ரெண்டு மனசு மட்டும் இருந்தா போதும். ஆனா, காதலிச்சவங்களையே கல்யாணம் பண்ணணும்னா கண்டிப்பா ரெண்டு பேரோட மனசுலயும் நல்ல பக்குவம் இருந்தாக வேண்டும்.

* சமையலறை டிப்ஸ்…

– சமையலறை டைல்ஸ்களின் மேல் ‘Food Wrap’ ஃபாயில்களை செல்லோடேப்பில் ஒட்டி வைத்தால், எண்ணெய் கறைகள் படியாமல் டைல்களைப் பாதுகாக்கலாம். 15 நாட்களுக்கொருமுறை மாற்றலாம்.

– கல் நகைகளை மெல்லிய துணியில் கட்டி இட்லி பானையில் ஸ்டீம் செய்தால் எண்ணெய் கறை நீங்கும்.

– வீட்டிலேயே பனீர் செய்யும் போது, பனீர் வடித்த நீரையே உபயோகித்து கிரேவி செய்தால் ருசியும் சத்தும் கிடைக்கும்.

– கோஸ், காலிஃப்ளவர் வேக வைக்கும் போது கெட்ட வாடை அடிக்காமலிருக்க நீரில் ஒரே ஒரு சொட்டு வினிகரைச் சேர்க்கவும்.

– நெஞ்சு கரித்தால் ஒரு ரொட்டித்துண்டை சீரகத் தூளோடு மென்றால் உடனடி பலன் கிடைக்கும்.

Image

000

Image Courtesy:

http://chilli2cherry.com/

http://www.savvyvegetarian.com/

http://balaji153.hubpages.com/

http://www.bookandborrow.com/

http://icdn.indiaglitz.com/

http://www.myindiarecipes.com/

http://hindi.oneindia.in/

 

படிக்க…

ஸ்டார் தோழி – 1

ஸ்டார் தோழி – 2

3 thoughts on “ஸ்டார் தோழி – 3

 1. ரொம்ப நல்லாயிருக்கு நித்யா…. உங்களோட பேசற மாதிரியே இருந்தது… நட்புக்களிடம் நீங்க காட்டும் உரிமையும் அன்பும் தெரிந்தது உங்க எழுத்துக்களில், புகுந்த வீட்டிலிருந்து திரும்பும் போது பை நிறைய கனமும் மனசு நிறைய அன்பும்… இது ரொம்ப பிடிச்சது… சமையலறை குறிப்புக்கள் அருமை… வாழ்த்துக்கள் நித்யா.. இன்னும் நிறைய எழுதுங்கள்….குங்குமம் தோழிக்கு நன்றி

 2. பன்முகம் கொண்ட ஆளுமையுள்ள அருமையான தோழியின் பதிவு

  எனக்கு பிடித்த வரிகள் :::

  மனசு;;;

  ரொம்ப கஷ்டம் இதுதான் என்பது என்னுடை அனுபவம்

  அன்பு எல்லைகளை உடைத்து சமமானதொரு நிலைக்கு

  வர தினமும் முயற்சி செய்கிறேன்…..ரொம்ப கஷ்டம்……

  ரசித்து உண்பது…::::

  எனக்கும் ஆசை .கஞ்சி மட்டும் போதும்

  கற்பித்தல்:::

  ஷேக்ஸ்பியர் இங்கிலீஷ் கிளாஸ் = நான் + 2 வரைக்கும் தமிழ் மீடியம்

  இந்த குரூப் ல என்ன கோத்து விடுங்க

  கொஞ்சம் இங்கிலீஷ் கற்றுகொள்கிறேன்

  நட்பு ::

  உங்களுக்கு தலை வணங்குகிறேன்

  செலவழிப்பதில் எப்படி? :::

  உங்களுக்கு தலை வணங்குகிறேன்

  சிக்கனம் என்பது பணம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல…

  ஒரு பொருளை தேவையான அளவே பயன்படுத்துவதும் சிக்கனமே.

  இவர்களிடமிருந்து விலகி இருப்பவள்…

  இந்த மாதிரி மனிதர்களை கண்டுபிடிப்பது

  ரொம்ப கஷ்டம் ஆச்சே ..எப்படி கண்டு பிடிபிங்க

  என்னிடம் எனக்குப் பிடித்தவை…

  உங்களிடம் இதுவும் எனக்கு பிடித்தது …..ஸல்யூட்

  பணத்தைக் காட்டிலும் மனிதர்களைச் சம்பாதிப்பதில்

  விருப்பம் அதிகம். அன்புதான் பலமும் பலவீனமும்

  இதுவும் எனக்கு பிடித்தது …..ஸல்யூட்

  பாரதி கனவில் கண்ட புதுமை பெண் என்று சொல்லலாமா ??

  வாழ்த்துக்கள் தோழி …வாழ்க வளமுடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s