சமீபத்திய புதுவரவுகளில் த்ரில்லர் ப்ளஸ் காமெடியில் கலக்கிக் கொண்டிருக்க்கிறது ‘யாமிருக்க பயமே’ திரைப்படம். இந்தப் படத்தை ‘பெண்கள் ஸ்பெஷல்’ என்றே குறிப்பிடலாம். அதற்கு அழுத்தமான காரணமும் உண்டு. தியேட்டரில் பெண்கள் கூட்டம்… இந்தத் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னாலும் சில பெண்கள்! யெஸ்… ஒரு சினிமாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பவற்றில் நடனம், சவுண்ட் இன்ஜினியரிங், மேக்கப், காஸ்ட்யூம் ஆகியவற்றுக்கு முக்கிய பங்கு உண்டு. ‘யாமிருக்க பயமே’ திரைப்படத்தில் இந்த நான்கு துறைகளிலும் முன் நின்று செயல்பட்டவர்கள் பெண்களே! அவர்களின் அபார உழைப்பு ஒவ்வொரு ஃப்ரேமிலும் அப்பட்டமாகத் தெரிகிறது. தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள் இந்த நான்கு பேரும். அவர்களை சந்தித்தோம். அவரவர் சார்ந்த துறைக்கு வந்த பின்னணி, முன்னேற்றம், எதிர்காலத் திட்டம் அத்தனையையும் விரிவாகப் பேசுகிறார்கள்…
விஜி சதீஷ் (கோரியோகிராபர்)
கலா, பிருந்தா போன்ற பெண் நடன இயக்குநர்கள் வரிசையில் ‘யாமிருக்க பயமே’ மூலம் தடம் பதித்திருப்பவர் விஜி சதீஷ். திரைத்துறையில் பல வருடங்களுக்கு ஜொலிக்க வேண்டும்… சாதிக்க வேண்டும் என்பது இவரது கனவு. குரூப் டான்ஸராகி, பிறகு அசிஸ்டென்ட் கோரியோகிராபராக வேலை பார்த்து படிப்படியாக முன்னுக்கு வந்து இப்போது கோரியோகிராபர் ஆகியிருக்கிறார். சின்னி பிரகாஷ், பிருந்தா, கல்யாண், ஷோபி என பல நடன இயக்குநர்களிடம் அசிஸ்டென்ட் கோரியோகிராபராக பணிபுரிந்திருப்பவர். அந்த அனுபவம் அவருக்கு இப்போது கை கொடுத்திருக்கிறது. அவருடைய பேச்சில் உற்சாகமும் துள்ளலும் கொப்பளிக்கிறது.
‘‘நாடகத் துறை சார்ந்தது என் குடும்பம். அப்பா பார்த்திபன் டான்ஸ் மாஸ்டராக இருந்தவர். அவருக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம போயிடுச்சு. குடும்பத்துல கஷ்டம்… வேற வழியில்லாம 13 வயசுல டான்ஸ் ஆட வந்தேன். சினிமாவுல என்னோட முதல் என்ட்ரிக்கு கை கொடுத்தவர் ராஜூ சுந்தரம் மாஸ்டர். அவரோட குரூப்ல ஆடினதுதான் என் பயணத்துக்கான முதல் விதை. ‘கண்ணெதிரே தோன்றினாள்’ படத்துல குரூப் டான்ஸராக ஆடினேன். என் மேல எனக்கே அபாரமான நம்பிக்கை. ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்துல வர்ற ‘ஓ சென்யோரிட்டா…’ பாட்டுல ராஜூ சுந்தரம் மாஸ்டர் கூட நானும் சேர்ந்து ஆடினேன். அதுக்கப்புறம் தொடர்ந்து நிறைய படங்கள்… 15 வருஷமா அசிஸ்டென்ட் கோரியோகிராபராக வேலை பார்த்துகிட்டு இருந்த நான் முதல் முறையாக ‘யாமிருக்க பயமே’ மூலமாக கோரியோகிராபர் ஆகியிருக்கேன். எனக்கான அங்கீகாரத்தை இந்தப் படம் கொடுத்திடுச்சு!’’ உணர்ச்சிவயப்பட்டதில்கண்கள் படபடக்கின்றன விஜிக்கு.
‘கோ’ படத்தில் அசிஸ்டென்ட் டைரக்டர் ஆக இருந்த டி கேதான் ‘யாமிருக்க பயமே’ படத்தின் இயக்குநர். அவரது நட்பு ‘கோ’படத்தில் பணியாற்றிய போது விஜிக்குக் கிடைத்திருக்கிறது. நட்பின் அடிப்படையில் இயக்குநர் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார் விஜி. இந்தப் படத்தில் ஹீரோ கிருஷ்ணாவின் முதல் பாடலான ‘நானே ராஜா’, ஃப்ளாஷ்பேக்கில் வரும் ‘வெள்ளைப் பந்து’ பாடல் விஜி கோரியோகிராபி செய்தவை.
‘‘யாமிருக்க பயமே படத்தோட ஷூட் முழுக்க உத்தரகாண்ட் பக்கத்துல இருக்கும் நைனிடால்ல நடந்துச்சு. மக்கள் கூடுற இடத்துல ஷூட்டிங். ஆரம்பத்துல கொஞ்சம் பதட்டமா இருந்தாலும் சமாளிச்சுட்டு வேலை பார்த்தேன். டைரக்டர் கதையைச் சொல்லும்போதே மனசுக்குள்ள டான்ஸுக்கான ஸ்டெப்ஸை யோசிச்சுட்டு இருப்பேன். அந்த ஃப்ளாஷ்பேக் பாட்டுக்கு நல்ல ரெஸ்பான்ஸ்… மனசுக்கு நிறைவாக இருக்கு. இப்போ ‘காலகட்டம்’, ‘ஆந்திராமெஸ்’, ‘மீகாமன்’னு நிறைய படங்கள்ல கோரியாகிராபி பண்ண வாய்ப்புக் கிடைச்சிருக்கு. சினிமாவுக்குள்ள எந்த இலக்கும் இல்லாம உள்ளே வந்தேன். இப்போ நான் சார்ந்த துறையில சாதிக்கணும்கிற ஆசை அதிகமாகியிருக்கு. அதுக்காக எவ்வளவு வேணும்னாலும் உழைப்பை கொடுக்கத் தயாராக இருக்கேன்’’என்கிறார் விஜி.
லலிதா ராஜ் (ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மேக்கப் ஆர்டிஸ்ட்)
பூனையைக் கூட யானையாக்கும் வித்தை தெரிந்தவர்கள் ஒப்பனைக் கலைஞர்கள். திகில் படங்களுக்கு அவர்களின் பங்களிப்பு மிக அவசியம். ஓரிரு வினாடிகளுக்குத் தோன்றும் ஒரு முகம் அடி வயிற்றில் பீதியைக் கிளப்பிவிடும் அளவுக்கு அவர்களுடைய வேலை அவ்வளவு சுத்தமாக இருக்கும். அந்த வேலையை வெகு சிறப்பாகச் செய்து ஒட்டுமொத்த யூனிட்டின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார் லலிதா ராஜ்.
‘‘நான் படிச்சதெல்லாம் அமெரிக்காவுல. அங்கே நிறைய மேடை நிகழ்ச்சிகள் நடக்கும். ஸ்டேஜுக்கு சின்னச் சின்னதா டெக்கரேட்டிவ் வேலையும் பண்ணிக் கொடுத்திருக்கேன். படிப்பு முடிஞ்சதும் வேலையும் அமெரிக்காவுலேயே கிடைச்சது. அந்த வேலையை விட்டுட்டு சென்னைக்கு வந்தேன். ஒரு கார்ப்பரேட் கம்பெனியில வேலை பார்த்தேன். ஆனாலும் அந்த வேலை மனசுக்கு திருப்தியாக இல்லை. அடுத்து என்ன பண்ணலாம்கிற தேடுதல் நாளுக்கு நாள் அதிகமாகிட்டே இருந்தது. நாலு வருஷத்துக்கு முன்னாடி என்னோட ஃப்ரெண்டு ஒருத்திக்கு கல்யாணம் முடிவாகியிருந்தது. அவளுக்கு மேக்கப் போட்டுக்கப் பிடிக்காது. மேக்கப்பே போடாம கல்யாண மேடைக்குபோகப் போறேன்னு சொல்லிட்டு இருந்தா. நான் அவளை கன்வின்ஸ் பண்ணினேன். ‘நான் உனக்கு மேக்கப் போட்டு விடறேன். அப்புறம் பாரு’ன்னு சொன்னேன். கல்யாணத்தன்னிக்கு அவளுக்கு மேக்கப் போட்டுவிட்டேன். என் தோழிக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. நான் எதிர்பார்த்ததை விட நிறையபேர்கிட்ட இருந்து அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அதுக்கப்புறம் சில போட்டோகிராபர்ஸ் நட்பு கிடைச்சது. அவங்களோட சேர்ந்து பல போட்டோ ஷூட்ல வேலை பார்க்கற வாய்ப்புக் கிடைச்சது. அப்படி எடுத்த படங்கள்ல பத்திரிகை அட்டைப்படங்கள்ல வர்ற புகைப்படங்களும் அடக்கம். அதுல என்னோட பங்களிப்பும் இருந்தது எனக்கு சந்தோஷமா இருந்தது. ‘WE’, ‘இன்பாக்ஸ்’, ‘ஃபெமினா’ போன்ற பிரபல பத்திரிகைகளின் அட்டைப்படங்களுக்கு போஸ் கொடுக்குற செலிபிரிட்டீஸ்க்கு மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக வேலை பார்த்தேன். அப்பதான் மேக்கப் பற்றி முழுமையாக கத்துக்கணும்கிற ஆசை வந்துச்சு. குறிப்பா, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மேக்கப் பற்றி படிக்கணும்னு ஆசை. லண்டன்ல அந்த கோர்ஸ் கத்துக் குடுக்குறாங்கன்னு கேள்விப்பட்டேன். லண்டன்ல இருக்குற டெலமார் அகாடமியில சேர்ந்தேன். ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மேக்கப் பற்றிய ஆறுமாச கோர்ஸ் படிச்சேன். ஒரு நடிகர் தன்னோட ஸ்கின்னை எப்படி பராமரிக்கணும்கிறதுல தொடங்கி ஃபைட் சீன்ல ரத்தம் வர்ற மாதிரி எப்படி காட்டுறதுங்கறது வரைக்கும் அங்கே சொல்லிக் கொடுத்தாங்க. படிச்சு முடிச்சுட்டு இங்கே வந்தேன். நல்ல வாய்ப்புகளை தேடிட்டு இருந்தேன். என் ஃப்ரெண்ட் பாலாஜி மோகன் மூலமாக இயக்குநர் டி கேவோட அறிமுகம் கிடைச்சது. த்ரில்லர் மூவிங்கறதால நிறைய வொர்க் பண்ணவேண்டி இருக்கும்னு சொன்னாங்க. பேய் முகத்துக்கு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் பண்ணினது புது அனுபவம். பேய் முகத்தை செஞ்சு ஒருநாள் இரவு முழுக்க அப்படியே பாதுகாப்பா வச்சுடணும். அடுத்த நாள் காலையில அந்த முகத்தை எடுத்து, பேயா நடிக்கிற ஆர்டிஸ்ட் முகத்துல ஒட்டணும். அதை ஒட்டறதுக்கே 5 மணி நேரம் ஆகும். போட்ட மேக்கப்பை கலைக்க 2 மணி நேரம்! ஷூட்டிங்ல நிறைய பேர் அந்த முகத்தைப் பார்த்து மிரண்டுட்டாங்க. ஹீரோயின் ரூபாமஞ்சரி ஒரு சீன்ல உண்மையாவே பயந்து அலறிட்டாங்க. இதுதான் என் திறமைக்குக் கிடைச்ச வெற்றின்னு தோணிச்சு. ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மேக்கப்பை கத்துக்கிட்டு, சரியாகச் செய்யறது தனிக்கலை. அந்தத் திறமை எனக்கு இருக்கறதை பெருமையாக நினைக்கிறேன். மேக்கப் போடுறதுக்கு முன்னாடி அதை முதல்ல எனக்கு போட்டு டெஸ்ட் பண்ணி பார்த்துட்டுதான் மத்தவங்களுக்கு போடுவேன். என்னோட முதல் அறிமுகமே த்ரில்லர் படமாக அமைஞ்சது என் அதிர்ஷ்டம்… சவாலான அனுபவம். இன்னும் நிறைய படங்கள்ல வேலை பார்க்கணும்… பார்க்கிற வேலையை சிறப்பா செய்யணுங்கிற ஆசை அதிகமாகியிருக்கு’’ என்கிறார் லலிதா ராஜ்.
வீணா சங்கரநாராயணன் (காஸ்ட்யூம் டிசைனர்)
‘யாமிருக்க பயமே’ படத்தில் காஸ்ட்யூம் டிசைனராக இன்னுமொரு புதிய அறிமுகம் வீணா சங்கர நாராயணன். ஃபேஷன் டெக்னாலஜி மாணவியான இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் டெக்ஸ்டைல் டிசைனர் ஆக வேலை பார்த்தவர். இது தவிர நிறைய விளம்பரங்களுக்குப் பணிபுரிந்த அனுபவமும் இவருக்கு உண்டு. சினிமாத்துறையில் நுழைந்த சந்தோஷமும் கிடைத்த பாராட்டும் அவருடைய குரலில் தெரிகிறது.
‘‘சினிமாவில் காஸ்ட்யூம் டிசைனர் ஆகணும்கிற கனவோடதான் இந்தப் படிப்பையே தேர்ந்தெடுத்தேன். படிப்பு முடிஞ்சதும் அடுத்தடுத்து நிறைய வேலைகள் கிடைச்சது. ‘சுந்தரி சில்க்ஸ்’ போன்ற பிரபல நிறுவனங்களுக்கான விளம்பரப் படங்கள்ல வேலை பார்த்தேன். காஸ்ட்யூம் டிசைனர் ஜூல்ஸ் மேடம்கிட்ட அசிஸ்டென்ட்டாக சேர வாய்ப்பு கிடைச்சது. அவங்களோட சேர்ந்து ‘ஆஹா கல்யாணம்’ படத்துல வொர்க் பண்ணினேன். இப்போ தனியாக காஸ்ட்யூம் டிசைனராக வேலை பார்க்க வாய்ப்புக் கிடைச்சிருக்கு. ‘யாமிருக்க பயமே’ல ரூபாமஞ்சரியோட காஸ்ட்யூம் நல்லாயிருக்குன்னு நிறைய பேர் பாராட்டறாங்க. அதே போல கிருஷ்ணாவோட காஸ்ட்யூம், படத்துல பேய்க்கான காஸ்ட்யூம் எல்லாமே நான் டிசைன் பண்ணினதுதான். இப்போ ‘தரமணி’ படத்துல வொர்க் பண்ணிட்டு இருக்கேன். தொடர்ந்து நிறைய படங்கள் பண்ணணும்னு ஆசை. எனக்கு கௌதம் மேனன் சார் படங்கள்ல வர்ற டிரெஸ்சிங் சென்ஸ் ரொம்பப் பிடிக்கும். ஒரு ஆர்டிஸ்ட்டுக்காக தனியாக டிசைன் பண்றதை விட படத்துல வர்ற கேரக்டருக்கு ஏத்த மாதிரி காஸ்ட்யூம் டிசைன் பண்ணக் கத்துக்கணும்’’என்று அழுத்தமாகச் சொல்கிறார் வீணா.
கீதா எம்.குரப்பா (சவுண்ட் இன்ஜினியர்)
‘இந்தியாவின் முதல் பெண் சவுண்ட் இன்ஜினியர்’ என்ற பெருமையை பெற்றிருப்பவர் கீதா எம்.குரப்பா. ‘யாமிருக்க பயமே’வில்இவருடைய பணி, படத்துக்கு பெரும் பலத்தை சேர்த்திருக்கிறது. பொதுவாக, ஹாரர் படங்களில் தேவையான ஒலி கொஞ்சம் கூடுதலாக போனால் கூட பார்வையாளர்கள் மத்தியில் நெகட்டிவ் ரெஸ்பான்ஸ் வந்துவிடும். ஆனால், சரியாக சவுண்ட் மிக்ஸ் செய்து படத்தை ஹிட் அடிக்க வைத்திருக்கிறார் கீதா.
‘‘என்கிட்ட டி கே வந்து கதை சொன்னப்போ இது காமெடிப்படமாஇல்லை த்ரில்லர் படமான்னு குழம்பிட்டு இருந்தேன். எதுவாக இருந்தாலும் நாம சரியாக செஞ்சுடணும்னு நினைச்சு வேலையில இறங்கினேன். இதுவரைக்கும் 400 படங்களுக்கு மேல வொர்க் பண்ணியிருக்கேன். ஏற்கனவே ராம்கோபால் வர்மாவின் ‘Deyyam’, தமிழ்ல வந்த ‘வில்லா‘ உள்ளிட்ட ஹாரர் படங்கள்ல வொர்க் பண்ணிய அனுபவம் இருந்ததால என்னால இந்தப் படத்துலயும் ஈஸியா வேலை பார்க்க முடிஞ்சது. இந்தப் படத்துல டால்பி டெக்னாலஜியை பயன்படுத்தியிருக்கோம். அதனால ஆடியன்ஸ்கிட்ட இந்தப் படத்துல வர்ற சின்னச் சத்தம் கூட சரியா போய்ச் சேர்ந்திருக்கு. பொதுவாக ஒரு படத்துக்கு சவுண்ட் இன்ஜினியரிங் வேலைகளை முடிக்க 30 நாட்கள் ஆகும். ஆனா, இந்தப் படத்துக்கான வேலைகளை 22 நாட்கள்ல முடிச்சிட்டேன். ராத்திரி, பகல் பார்க்காம உழைச்சதோட பலனை தியேட்டர்ல மக்கள் கைத்தட்டி ரசிக்கறதின் மூலமா அனுபவிக்கிறேன். இந்தப் படத்தில் பெண்களின் பங்களிப்பு கணிசமா இருக்கறது சந்தோஷமா இருக்கு. பெண்கள் எல்லாத்துறையிலயும் கால் பதிக்கணும்கிறது என்னோட ஆசை. அது நிறைவேறிடும்கிற நம்பிக்கை இப்போ எனக்குப் பிறந்திருக்கு’’உற்சாகமாகச் சொல்கிறார் கீதா.
– எஸ்.பி.வளர்மதி
படங்கள்: சதீஷ்