ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்… சிறுதானிய உணவகம்!

10406746_1443493422586108_6480229173682198535_n

‘உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துகளும் கிடைக்கும்’, ‘நீரிழிவு பிரச்னைக்கான வாய்ப்பைக் குறைக்கலாம்’, ‘கொழுப்புச் சத்தைக் குறைக்கலாம்’, ‘மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம்’, ‘கேன்சர் நோய் வராமல் தடுக்க முடியும்’… எப்படி? தானியங்களை சுழற்சி முறையில் உட்கொள்வதால்!

சிறுதானியங்களின் மகத்துவத்தை உணர்த்தும் அர்த்தம் பொதிந்த இந்த வாசகங்களை வெறுமனே அறிவுரையாக மட்டும் சொல்லிவிடாமல் நடைமுறைப்படுத்தி, நிரூபித்தும் வருகிறார் லட்சுமி… உடுமலைப் பேட்டையில் ‘ஆரோக்யம் – இயற்கை மற்றும் பாரம்பரிய உணவகம்’ என்கிற சிறுதானிய உணவு விடுதியை நடத்தி வரும் இவர் ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி!

10300271_1443493745919409_2459276033068071820_n

உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கிறது ‘ஆரோக்யம் இயற்கை மற்றும் பாரம்பரிய உணவகம்’. ஐந்து மேசைகள், நாற்காலிகள்… 20 பேர் உட்கார்ந்து சாப்பிடக் கூடிய சிறிய உணவு விடுதி. சுவரெங்கும் சிறுதானியங்களின் முக்கியத்துவம், பயன், அவற்றிலுள்ள சத்துகள் அனைத்தும் வண்ண எழுத்துகளில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. உணவகத்துக்கு வரும் குழந்தைகள் விளையாட விளையாட்டுக் கருவிகள் ஒருபுறம், மற்றொருபுறம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் சிறுதானியங்கள், அவை தொடர்பான புத்தகங்கள் என அந்த இடமே வித்தியாசமான சூழலை ஏற்படுத்துகிறது. இங்கே பணிபுரியும் அத்தனை பேரும் பெண்கள்!

10468359_1443493615919422_1349460631703228093_n10418262_1443493535919430_5443805577336662061_n10509678_1443493905919393_7999180408903767029_n

‘‘இப்படி ஓர் உணவகத்தை நடத்த வேண்டும் என்கிற எண்ணம் எப்படி வந்த்து?’’ என்று ஒற்றைக் கேள்வி கேட்டால் விரிவாக பதில் சொல்கிறார் லட்சுமி.

‘‘முதல்ல சிறுதானிய உணவுகள் மேல ஈடுபாடு எப்படி வந்துச்சுன்னு சொல்லிடறேன். நானும் என் கணவர் மணிகண்டனும் அடிக்கடி ‘வானகர’த்துக்குப் போய் அய்யா நம்மாழ்வாரைப் பார்ப்போம். அவரோடப் பேசப் பேச சிறுதானியங்களின் முக்கியத்துவம் புரிய ஆரம்பிச்சுது. அப்புறம் வீட்ல அடிக்கடி சிறுதானிய உணவுகளை விதவிதமா செஞ்சு பார்த்தோம். ரொம்ப நல்லா வந்தது. இதை மத்தவங்களுக்கும் அறிமுகப்படுத்தலாமேன்னு தோணிச்சு. சின்னதா ஒரு உணவகம் ஆரம்பிக்க முடிவு செஞ்சோம். உடுமலைப்பேட்டை டவுன்ல சொந்த வீடு ஒண்ணு இருக்கு. அதை உணவு விடுதிக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் ஆல்டர் பண்ணினோம். நான், என் மாமியார் தவிர 6 பெண்கள் வேலை பார்க்கறாங்க. எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. பையன் ஏழாவது படிக்கிறான். பொண்ணு ஒண்ணாவது படிக்கிறா. ரெண்டு பேரையும் காலையில ஸ்கூலுக்கு அனுப்பற வேலை இருக்கு. அதோட என் கணவர் கோயம்பத்தூர்ல வேலை பார்க்கிறார். அதனால காலையில உணவகத்தைத் திறக்க முடியலை. மதியம் சாப்பாடு, ராத்திரி டிபன். 12 மணிக்கு கடைக்கு வந்துடுவேன். சாயந்தரம் வேலை விட்டு வந்து என் கணவர் கொஞ்சம் உதவியா இருப்பார்’’ என்கிறார் லட்சுமி.

சிறுதானிய உணவுகள் சமைக்க எப்படிக் கற்றுக் கொண்டார் லட்சுமி? ‘‘ஆர்வம் வந்துட்டதால சிறுதானிய உணவுகள் தொடர்பா எங்கெல்லாம் சொல்லித் தர்றாங்கன்னு விசாரிச்சேன். அப்போதான், ‘கோவை வேளாண் பல்கலைக்கழக’த்துல சிறுதானிய உணவுகள் தொடர்பாக இரண்டு நாள் கோர்ஸ் இருக்கறது தெரிஞ்சுது. அங்கே கத்துகிட்டேன். அப்புறம், ‘சிறு குறு தொழில் மையம்’ நட்த்தின 10 நாள் வகுப்புல கலந்துகிட்டு, கத்துகிட்டேன். இந்த உணவுகள் தொடர்பாக அடிப்படை ஐடியா கிடைச்சுது. சமைக்க ஆரம்பிச்சுட்டேன். அனுபவம் இன்னும் ஏராளமா கத்துக் கொடுத்துச்சு’’. ஆர்வம் இருந்தால் எதையும் கற்றுக் கொள்ளலாம் என்பதில் தெளிவாக இருக்கிறார் லட்சுமி.

IMG_3541

சரி… லட்சுமியின் ஆரோக்ய உணவகத்தில் என்னவெல்லாம் கிடைக்கும்? ‘‘மதியத்துக்கு சாப்பாடு… நாட்டுப் பொன்னி அரிசி, வரகு, கம்புல செஞ்ச சாதம். திணையரிசி பாயசம், கீரைக்கூட்டு… நாட்டுக் காய்களை மட்டும் பயன்படுத்தி செஞ்ச சாம்பார்… தூதுவளை, வல்லாரை போன்ற மூலிகை ரசம். உடம்புக்கு நல்லதில்லைங்கறதுனால நாங்க தயிர் பரிமாறுவதில்லை… மோர்தான். தொட்டுக்க ஊறுகாய் கிடையாது. கீரைக் கூட்டு, பொரியல்… அதே மாதிரி அப்பளமும் கிடையாது. ராத்திரி டிபனுக்கு மைதா சேர்க்காத கோதுமை பரோட்டா, சீரகம் தூவின சப்பாத்தி… அதுக்கு சைட் டிஷ்ஷா வெஜிடபிள் குருமா, சோயா குருமா, சுண்டல் குருமான்னு ஏதாவது ஒண்ணு இருக்கும். சிறுதானியங்களில் செய்யப்பட்ட இட்லி, தோசை, பொங்கல் உண்டு… மாப்பிள்ளை சம்பா அரிசி, குதிரைவாலி அரிசி, வரகு, சாமைல செஞ்ச தோசை… தொட்டுக்க தேங்காய் சட்னி, பிரண்டை சட்னி, நிலக்கடலை சட்னி, புதினா சட்னி, புளி சட்னின்னு ஏதாவது இருக்கும். அப்புறம்… கோதுமை, கம்பு, ராகில செஞ்ச இடியாப்பம். சாமைல செஞ்ச குஸ்கா, திணை கிச்சடி, பெருநெல்லிக்காய் ஜூஸ், கீரை சூப், ஆவாரம்பூ டீ, உரம் போடாம வளர்த்த பப்பாளி… பப்பாளி தினமும் கிடைக்கும். சாமை ஆப்பம், தொட்டுக்க தேங்காய்ப் பால். தேங்காய்ப் பால்ல சர்க்கரை போடமாட்டோம். கரும்புச் சர்க்கரைதான் போடுவோம். கெமிக்கல் இல்லாம கருப்புக் கலர்ல இருக்கும் பால்…’’ ரெசிபிகளை லட்சுமி அடுக்கிக் கொண்டே போக சிறுதானிய உணவுகளில் இத்தனை வெரைட்டியா என நமக்கு மலைப்பாக இருக்கிறது.

சாப்பாடு, டிபன் தவிர சிறுதானியங்களில் செய்யப்பட்ட ஸ்நாக்ஸும் இங்கே கிடைக்கிறது. தினை முறுக்கு, கம்பு முறுக்கு, குதிரைவாலி முறுக்கு, சாமை முறுக்கு, வரகு கார சேவு, எள் உருண்டை, கடலை உருண்டை, ஜவ்வரிசி லட்டு என கார, இனிப்பு வகைகள்… ‘‘இங்கே சிறுதானியங்களை விற்கிறோம். அதை வாங்க வர்றவங்களுக்கு எப்படி செய்யறதுன்னு சொல்லியும் தர்றோம்’’ என்கிறார் லட்சுமி.

இந்த சிறுதானிய உணவகத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருக்கிறதாம்? ‘‘ரொம்ப நல்லா இருக்குன்னும் சொல்ல முடியாது. மோசம்னும் சொல்ல முடியாது. லாபம் பெருசா இல்லை. ஆனா, நாங்க லாபத்துக்காக இந்தத் தொழிலைப் பண்ணலையே..! என்ன… முன்னாடி தனியா வந்து சாப்பிட்டுட்டுப் போனவங்க, இப்போ குடும்பத்தோட வந்து சாப்பிட ஆரம்பிச்சிருக்காங்க…’’ புன்னகை சற்றும் குறையாமல் சொல்கிறார் லட்சுமி.

ஒரு நல்ல நோக்கத்தோடு லட்சுமி நடத்தும் இந்த உணவகத்தில் விலையும் அதிகமில்லை. மதிய சாப்பாடு 55 ரூபாய். அதையே பார்சலாக வாங்கிச் செல்வதென்றால் 60 ரூபாய்!

– பாலு சத்யா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s