ஒரு தோழி பல முகம்
நான்…
அண்ணனும் சித்தப்பா பிள்ளைகளும் ஆங்கிலவழிக் கல்வி படிக்க பக்கத்து ஊருக்குப் போனார்கள். நான் மட்டும் அடம்பிடித்து உள்ளூர் அரசுப் பள்ளியில் சேர்ந்தேன். அந்த நாளை இன்றுவரை எண்ணி மகிழ்கிறேன். கிராமத்தில் பிறந்த பெண்ணாகிய நான் சுய விருப்பத்துடன் எடுத்த முதல் முடிவு அது… அதில் எனக்குப் பெருமை. பிள்ளைகளின் விருப்பங்களுக்கு மதிப்பளிக்கும் பெற்றோர் என்றும் தோற்பதில்லை.
பள்ளி…
நான் பெரிய அறிவுச்சுடர் இல்லை… படிப்பு ஒரு சுமையாகவும் இருந்ததில்லை. எத்தனையோ ஆசிரியர்களைக் கடந்து வந்திருந்தாலும் எல்லோருக்கும் ஓர் ஆசிரியர் மனதோடு கடைசி வரை கூடவே வருவார்… எனக்கும் அப்படியே. ஈரம் சொட்டும் ஜடை போட்டு, காட்டன் புடவையில் கம்பீரமாகப் பாடம் நடத்தும் ‘ஜெனட்’ டீச்சரே என் முதல் ஆளுமை. தன்னம்பிக்கையும் அர்ப்பணிப்பும் ஒருங்கே பெற்ற பெண் தேவதை… திடமிக்க வீர தேவதை.
ஆசை…
சிறியது முதல் பெரியது வரை நீள்கிறது ஆசைப் பட்டியல். டீக்கடை பெஞ்சில் அமர்ந்து தேநீர் சுவைக்க வேண்டும்… நயாகரா அருவியை படகில் நெருங்கி அதன் சாரலை முகத்தில் ஏந்த வேண்டும்! என் கல்லூரித் தோழிகள் லதா, பானு, வள்ளி, முத்துக்கண்ணு, புனிதா ஆகியோரை ஒருமுறையேனும் சந்திக்க வேண்டும், முத்தமிட்டு அழ வேண்டும். மனதின் அடி ஆழத்தில் உறைந்து போயிருக்கிறது இந்தத் தீராத ஆசை. அனைத்தையும் நம் காலடியில் கொண்டு வந்து கொட்டும் விஞ்ஞானம் என் தோழிகளுடனான கண்ணாமூச்சி விளையாட்டில் தோற்றிருக்கிறது.
பிடித்தவை…
ஆறாம் வகுப்பில் மேடையில் சொதப்பிய முதல் நடனம் தொடங்கி இன் ஓரளவுக்குத் தேர்ந்த ஆட்டம் வரை என்னைக் கொண்டாட்ட மனநிலையுடன் வைத்திருக்கிறது. என் பிள்ளைகளோடு சேர்ந்து ஆடுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இருப்பதில்லை. பாடல்… கேட்கவும் பாடவும் ரொம்பப் பிடிக்கும். கலைகளைக் கற்பதற்கு வாய்ப்பற்ற இடங்களிலும் ஆர்வம் நம்மைக் கைவிடுவதில்லை. தன் போக்கில் பாடிக்கொண்டிருக்கும் பறவைக்கு ராகம், தாளம் பற்றி என்ன அக்கறை?! ஆடலிலும் பாடலிலும் என்னையே கரைத்துக் கொள்ளும் வலிமையும் மென்மையும் நிரம்பிய ஒரு வகையான சுதந்திரி நான்.
வாசிப்பு…
மிகத் தாமதமாக என்னை வந்தடைந்த வாசிப்புப் பழக்கம் திறந்து காட்டிய உலகம் அற்புதமானது. சுஜாதா, பாலகுமாரனில் தொடங்கிய வாசிப்பு புதிய சிந்தனைகளையும், மாறுபட்ட அணுகுமுறைகளையும் தேடி வாசிக்கும் ஆர்வத்தைத் தந்திருக்கிறது. அதுவே என்னையும் கொஞ்சம் எழுதிப் பார்த்து மகிழவும் தூண்டியிருக்கிறது. ஆனாலும் வாசிப்பதில்தான் அலாதிப் பிரியம். சிறந்த இலக்கியங்கள் ஒரு தேர்ந்த வாசகனுக்காக நூற்றாண்டுகள் கடந்தும் காத்திருக்கின்றன. நான் தத்தெடுத்துக் கொண்ட மிக அற்புதக் குழந்தைகளாக புத்தகங்களைக் கருதுகிறேன். சுஜாதா, இன்றைய சுஜாதாவாக மிளிர்வதற்குக் காரணமான ஆசான்கள் புத்தகங்களே!
எழுத்து…
பழைய நோட்டுப் புத்தகத்தில் கிறுக்கல் கவிதைகளை எழுதத் தொடங்கினேன். விழுந்து எழுந்து மீண்டும் முயன்ற என் முதல் கவிதை ஒரு பெண்கள் பத்திரிகையில் வெளியானது. அந்த நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு, கவிதை, சிறுகதை, கட்டுரை என்று எழுதத் தொடங்கிய என்னை நண்பர்கள், இணைய, அச்சுப் பத்திரிக்கைகள் அனைவரும் ஊக்கப்படுத்தியே வருகின்றனர். என்னைத் தேடிக் கண்டெடுத்து, ‘குங்குமம் தோழி’ என் பாதையில் இன்னொரு படிக்கல்லை வழங்கியிருக்கிறது. ஊக்கமூட்டும் அத்தோழிக்கு நன்றி.
பிடித்த நாவல்…
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ மிகப் பிடித்தமான நாவல். அந்த நாவலில் ஆண்கள் அனைவரும் கிட்டத்தட்ட ஒரே குணத்தோடு இருக்கும் போது, பெண்கள் அனைவரும் வெவ்வேறு விதமான குணங்களுடன் வளைய வருகிறார்கள். ஒரு பெண்ணே குடும்பத்தின் இயங்கு சக்தியாக இருப்பவள் என்று மார்கேஸ் பெண்களையே நாவல் முழுக்க முன்னிறுத்தியிருக்கிறார்.
திரைப்படம்…
சிறு வயது முதலே சினிமா பார்ப்பதென்றால் மிகுந்த விருப்பம். கதை காட்சிகளாக விரிவதைப் பார்ப்பது கொண்டாட்டம். பாலச்சந்தர் படங்களை விரும்பிப் பார்ப்பேன். சமீபத்தில் என் மனம் கவர்ந்த படம் ‘Desert Flower’. வாரீஸ் டைரிஸ் என்ற பெண்ணின் வாழ்க்கைப் போராட்டத்தையும் விளம்பரத்துறையில் அவர் போராடி வென்ற கதையையும் சொல்கிறது.
வாழ்க்கை…
வாழ்க்கையை கொஞ்சம் விசாலமான பார்வையுடன் எதிர்கொள்ளத் தெரிந்தால் அது மிக அற்புதமானது. அடுத்தவருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது மேலும் நம்மை பதட்டப்படுத்துமேயன்றி ஒருபோதும் நம்மை ஒரு படி முன் நகர்த்தவோ, சந்தோஷம் கொள்ளவோ விடாது. துயரங்களைத் தலைக்கு வைத்துப் படுப்பதை ஓரளவுக்கேனும் நிறுத்தினாலே நிம்மதி தானாக வரும்.
சமையல்…
ஆரோக்கியமான சமையலின் மேல் ஒரு பெண் அக்கறை கொண்டால் மட்டுமே வீடு முழுமைக்கும் அது போய்ச் சேரும். சமையலில் எண்ணெயை குறைத்துப் பயன்படுத்துவது, கொழுப்பு மிகுந்த உணவைத் தவிர்ப்பது, நார்ச் சத்து உள்ள உணவை அதிகம் சேர்ப்பது போன்ற மிகச் சில மாற்றங்களைச் செய்தாலே போதும்.
ஓர் எளிய சமையல் குறிப்பு…
பீர்க்கங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை கையளவு உரித்து வைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அதில் பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் இரண்டையும் தேவைக்குச் சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும். பின் அதே எண்ணெயில் நறுக்கிய பீர்க்கங்காய், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பாத்திரத்தை மூடி பச்சை வாடை போக வேகவிடவும். வதக்கிய காய், மிளகாய், சிறிதளவு புளி, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான துவையல் தயார்.
திருமண வாழ்க்கை…
திருமணம் முடிந்து முதல் முறையாக பெங்களூர் வந்த போது ஏதோ சுற்றுலாவுக்கு போனது போல இருந்தது. ‘இவ்வளவு தூரம் அழைத்துக் கொண்டு போகிறார்களே’ என்று வியந்து, வேடிக்கை பார்த்தபடி வந்து கொண்டிருந்தேன். என் கணவரிடம்தான் அரிச்சுவடி கற்பது போல வாழ்க்கையைக் கற்றுக்கொண்டேன். என் சிறுபிள்ளைத்தனங்களைப் பொறுத்துக் கொண்டு இன்றுவரை நல்லதொரு ஆசானாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இரு பிள்ளைகளுடன் சேர்த்து நானும் அவருக்கு மூன்றாவது குழந்தை!
ஆரோக்கியம்…
பெண்கள் திருமணத்துக்குப் பிறகு ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வதில்லை. எல்லாப் பெண்களுக்கும் கட்டாயம் காலையில் நடைப்பயிற்சி அவசியம். வாய்ப்பு இருந்தால் யோகா கற்றுக் கொள்வது நலம். நம் தோழிகளுக்கு ஓர் அறிவுரை… வீணாகப் போகிறதே என்று மிச்சம் மீதிகளை சாப்பிடாதீர்கள்… அளவாக சமைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
எண்ணம்…
- ‘திருமணமாகி பிள்ளைகளும் ஆச்சு… இனி என்ன இருக்கு?’ என்று எண்ணாமல் சிறு மகிழ்வையும் கொண்டாடும் மனசு மட்டுமே தேவை. எல்லாம் நலமாகும்.
- சின்னச் சின்ன விஷயங்களைக் கொண்டாடிப் பாருங்களேன். பெரிய பெரிய சந்தோஷங்கள் நம்மைத் தேடி வருவதை உணர்வீர்கள்.
- உடல் ஆரோக்கியத்தைப் பேணவும், பிள்ளைகளோடு ஆட்டம், பாட்டு என்று மகிழ்ந்திருக்கவும், திறமைகளை தயங்காமல் வெளிக்கொணரவும், தன்னம்பிக்கையோடு வலம்வரவும் என்றும் விருப்பத்தோடு செயல்படுங்கள் தோழிகளே.
படிக்க…